ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
நியூ யார்க் நகரில், ஐ.நா. நிறுவனத்தின் தலைமையகத்தில் நடைபெற்றுவரும் 75வது அமர்வில், திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்றுவரும் பேராயர் Gabriele Giordano Caccia அவர்கள், வறுமை ஒழிப்பு, படைப்பைப் பாதுகாத்தல், மற்றும் பன்னாட்டு தீவிரவாதம் ஆகிய தலைப்புக்களில் மூன்று உரைகளை வழங்கியுள்ளார்.
அக்டோபர் 12 மற்றும் 13 ஆகிய இருநாள்களில், பேராயர் காச்சா அவர்கள் வழங்கிய உரைகளில், வறுமை ஒழிப்பு பற்றி பேசியவேளையில், வறுமை என்ற சவுக்கடி, இவ்வுலகம் சந்தித்துவரும் பெரும் சவால் என்றும், கோவிட் 19 கொள்ளைநோய், இந்தப் பிரச்சனையை இன்னும் ஆழமாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
உலகில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளும், ஒதுக்கிவைக்கும் போக்கும் வறுமையை வெகுவாக வளர்த்துள்ளன என்று குறிப்பிட்ட பேராயர் காச்சா அவர்கள், வேலைவாய்ப்பை இழப்பது, சமுதாய பாதுகாப்பின்மை ஆகிய குறைபாடுகள் இந்த துன்பத்தை மேலும் கூட்டியுள்ளன என்று கூறினார்.
அனைவருக்கும் தரமான, சமமான கல்வி வழங்கப்படுவது, வறுமை என்ற தொடர் சங்கிலியை உடைக்கும் முதல் முயற்சி என்று குறிப்பிட்ட பேராயர் காச்சா அவர்கள், தற்போதைய கொள்ளைநோய், தரமான, சமமான கல்விக்கு எதிரான திசையில் இவ்வுலகை இழுத்துச் செல்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தக் கொள்ளைநோயிலிருந்து விடுதலை பெறுவதற்கு, மக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ உதவிகளில், வறுமை மீண்டும் ஒரு பெரும் பிளவை உருவாக்கியுள்ளது என்பதை, பேராயர் காச்சா அவர்கள் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
படைப்பைக் காத்தல் என்ற கருத்தில் பேராயர் வழங்கிய இரண்டாவது உரையில், அனைத்துலக சமுதாயம் ஒருங்கிணைத்த முடிவுகள் எடுத்து, ஒன்றுபட்டு செயல்பட்டால் மட்டுமே நாம் தற்போது சந்தித்துவரும் படைப்பின் சீரழிவு என்ற ஆபத்திலிருந்து விடுதலை பெறமுடியும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.
படைப்பையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது வெறும் நடைமுறைச் செயல்களால் மட்டும் இயலக்கூடிய விடயம் அல்ல, மாறாக, அது, நீதியையும், நன்னெறியையும் சார்ந்த மனமாற்றம் குறித்த விடயம் என்பதை பேராயர் காச்சா அவர்கள் தன் இரண்டாவது உரையில் எடுத்துரைத்தார்.
மனித மாண்பையும், உரிமைகளையும் பெருமளவில் சிதைத்துவரும் பன்னாட்டு தீவிரவாதம், வாழ்வைக் குறித்து சிறிதும் பொருள்படுத்தாமல் செயல்படுகிறது என்றும், இந்தப் போக்கினால் பெருமளவு பாதிக்கப்படுவோர், குற்றமற்ற பொதுமக்கள், அதிலும் குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் பேராயர் காச்சா அவர்கள் வழங்கிய மூன்றாவது உரையில் கூறினார்.
No comments:
Post a Comment