Tuesday, 27 October 2020

விசுவாசத்தை வளர்க்க அன்னை மரியா குறித்த ஆய்வுகள்

 மரியின் ஊழியர் சபை குடும்பத்தினர்


அன்னையரின்றி இவ்வுலகிற்கு வருங்காலம் இல்லை, ஏனெனில், பொருள் இலாபங்கள் நமக்கு வருங்காலத்தை உறுதிசெய்வதில்லை, மாறாக, ஓர் அன்னையே தன் அனைத்துக் குழந்தைகளுக்கும் நம்பிக்கையையும், ஒரே குடும்பம் என்ற உணர்வையும் தருகிறார் - திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆண்டவரின் அடிமையாம் (லூக்.1:38) அன்னை மரியாவின் எடுத்துக்காட்டைப் பின்பற்றி வாழுமாறு,  மரியின் ஊழியர் சபை பிரதிநிதிகள், உரோம் நகரிலுள்ள மரியானும் பாப்பிறை மரியியல் நிறுவனத்தின் பேராசிரியர்கள், மற்றும், மாணவர்கள் அனைவரையும் தான் வாழ்த்துவதாக, அக்டோபர் 24, இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்,

'மரியானும்' எனும் பாப்பிறை மரியியல் நிறுவனம் பாப்பிறை நிறுவனமாக அங்கீகரிக்கப்படதன் 70ம் ஆண்டு நிறைவையொட்டி, ஏறத்தாழ 200 பேரை, திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கில் சந்தித்து தன் வாழ்த்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிறுவனம் துவக்கப்பட்ட காலத்திலிருந்தே, மரியின் ஊழியர் சபையினரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளதையும் நினைவுகூர்ந்தார்.

கன்னி மரியா குறித்த ஆய்வுகள், இன்றைய திருஅவைக்கும், உலகுக்கும், மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன என்பதை நாம் அறிவோம், ஏனெனில், அன்னை மரியா குறித்த ஆய்வுகள், விசுவாசத்தையும் வாழ்வையும் குறித்த கல்வியாகும் என மரியின் ஊழியர் சபையினரிடம் தெரிவித்த திருத்தந்தை,  இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஏட்டில் Lumen Gentium பகுதியின் எட்டாம் பிரிவில், அன்னை மரியா குறித்து, மிக விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

திருஅவையின் மீது பல நூற்றாண்டுகளாக படிந்திருந்த தூசியை அகற்றி, அதன் செறிவை வெளிச்சத்துக்குக் கொணர எவ்வாறு இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் உதவியதோ, அதைப் போன்றே, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்க ஒளியில் நாம், அன்னை மரியா குறித்த மறையுண்மையின் இதயத்திற்குச் சென்று, அவர் பற்றிய வியப்புக்களை மீண்டும் கண்டுகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை, பெண் என்ற இரு கூறுகள், மரியன்னை குறித்து விவிலியத்தில் கூறப்பட்டுள்ளதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'என் ஆண்டவரின் தாய்' (லூக்.1:43) என புனித எலிசபெத், அன்னை மரியாவை நோக்கிக் கூறியதையும், மரியன்னையைச் சுட்டிக்காட்டி, 'இதோ உன் தாய்' (யோவான்19:27) என புனித யோவானிடம் இயேசு கூறியதையும் எடுத்தியம்பினார்.

தன் வாழ்வையும் ஆவியையும் நமக்கு வழங்கிய அந்த இறுதிவேளையில், அவரின் பணிகள் முழுநிறைவடைய, நம்மோடு இணைந்து நடந்து உதவ, தன் தாயை, அதாவது, உலகின் தாய்களில் எல்லாம் உயரிய தாயை நமக்கு இயேசு அளித்தார் எனவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனை தன் வயிற்றில் சுமந்ததன் வழியாக, அவரை நமக்கெல்லாம் சகோதரராக தந்த அன்னை மரியா அவர்கள், இவ்வுலகம், உடன்பிறந்த உணர்வில் வாழவேண்டும் எனவும், அனைவரின் பொது இல்லமாக இந்த உலகம் விளங்கவேண்டும் எனவும் விரும்புகிறார் எனவும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை மரியா நம் தாய் என்பதாலேயே, அவரை, அசிசியின் புனித பிரான்சிஸ் அதிகம் அதிகமாக அன்புகூர்ந்தார் என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித குடும்பத்தை, அக்கறை, பகிர்வு, மற்றும், தன்னையே வழங்குதல் என்ற பண்புகளின் உதவியுடன் ஒன்றிணைத்து வைத்திருக்கும், வாழ்வின் மென்மை உணர்வுகளை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க வைக்கும் தாய்மைப் பண்பு நமக்குத் தேவைப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

அன்னையரின்றி இவ்வுலகிற்கு வருங்காலம் இல்லை, ஏனெனில், பொருள் இலாபங்கள் நமக்கு வருங்காலத்தை உறுதிசெய்வதில்லை, மாறாக, ஓர் அன்னையே தன் அனைத்துக் குழந்தைகளுக்கும் நம்பிக்கையையும்,  ஒரே குடும்பம் என்ற உணர்வையும் தருகிறார் எனவும் கூறினார் திருத்தந்தை.

உடன்பிறந்த உணர்வு நிலையுடன் நடைபோடும் 'மரியானும்' பாப்பிறை கல்விக் கழகம், ஏனைய கல்வி நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து உழைப்பதுடன், கிறிஸ்தவ ஒன்றிப்பு, மற்றும், பல்சமய உரையாடல்களுக்கு பங்காற்றி வருவதையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை மரியா ஒரு தாய் என்பதை விளக்கியபின், அன்னை மரியா ஒரு பெண் என்ற இரண்டாம் கூறு குறித்தும் விளக்கமளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராக' (கலா.4:4) என புனித பவுலின் மடலில் கூறப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, புதிய ஏவாளாம் அன்னை மரியா எவ்வாறு கானா முதல் கல்வாரி வரை, மனித குல மீட்புக்காக உழைத்தார் என்பதை நினைவூட்டினார்.

கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தவர்களை (தி.வெ.12:17) பாதுகாக்கும் பொருட்டு, கதிரவனை ஆடையாக அணிந்த பெண்ணாக அன்னை மரியா சித்தரிக்கப்பட்டிருப்பதை திருவெளிப்பாட்டு நூலில் காண்கிறோம் என்பதையும் சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அன்னை மரியா ஒரு தாயும் பெண்ணும் என்ற இரு கோணங்களில், மரியின் ஊழியர் சபை அங்கத்தினர்களிடம் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்களுக்கு, திருஅவையில், மேலும் சிறந்த இடம் வழங்கப்படவேண்டும் என்பதை நாட, நாம் அழைக்கப்பட்டுள்ளோம் எனவும் கூறி, அனைவருக்கும் தன் ஆசீரையும் வழங்கினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...