Friday 23 October 2020

மனித வர்த்தகத்தை தடுத்துநிறுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள்

 மனித வர்த்தகம்


மனித உறுப்புக்களைத் திருடி வர்த்தகம் செய்வதற்காக, மனித வர்த்தகம் இடம்பெறுகின்றது. இத்தகைய குற்றங்கள், கொள்கைகள், கல்வித் திட்டங்கள் போன்றவை வழியாக, தடுத்து நிறுத்தப்படவேண்டும் - OSCE அமைப்பில் அருள்பணி Urbańczyk

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உலக அளவில் ஏறத்தாழ நான்கு கோடிப் பேரைப் பாதித்துள்ள மனித வர்த்தகம் என்ற குற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் மிகவும் முக்கியம் என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

OSCE எனப்படும் ஐரோப்பாவில் பாதுகாப்பு மற்றும், ஒத்துழைப்பு அமைப்பில், திருப்பீடத்தின் பரிதிநிதியாகப் பணியாற்றும் அருள்பணி Janusz Urbańczyk அவர்கள், மனித வர்த்தகம் மற்றும், ஏனைய வடிவில் இடம்பெறும் அடிமைமுறைகள் உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளன என்றும், இவற்றை ஒழிப்பதற்கு, மனித சமுதாயம்    மிகவும் தீவிரம் காட்டவேண்டும் என்றும் கூறினார். 

அக்டோபர் 15, இவ்வியாழனன்று,  OSCE அமைப்பின் நிரந்தர அவை நடத்திய கூட்டத்தில் உரையாற்றிய அருள்பணி Urbańczyk அவர்கள், உலகில் மனித வர்த்தகத்திற்குப் பலியாகியுள்ள நான்கு கோடிக்கு அதிகமான மக்களில், ஒரு கோடிப் பேர், 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதும், எட்டு வயதுக்குட்பட்ட 20 பேரில் ஒருவர், பாலியலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், மிகவும் கவலை தருகின்றன என்று கூறினார். 

பாதிக்கப்படும் இவர்களைப் பாதுகாப்பதற்கு, OSCE அமைப்பு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைப் பாராட்டிப் பேசிய அருள்பணி Urbańczyk அவர்கள், மனித வர்த்தகர்களில் சிலரே, குற்றவியல் நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படுவதை, பாதிக்கப்பட்டோர் காண்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டார். 

மனித உறுப்புக்களைத் திருடி வர்த்தகம் செய்வதற்காக, மனித வர்த்தகம் இடம்பெறுகின்றது என்றும், இது, OSCE அமைப்பிலுள்ள நாடுகளிலும் இடம்பெறுகின்றன  என்றும் கூறிய அருள்பணி Urbańczyk அவர்கள், கொள்கைகள், கல்வித் திட்டங்கள் போன்றவை வழியாக, இத்தகைய குற்றங்களை தடுத்து நிறுத்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தனது புதிய திருமடலில், மனித வர்த்தகம், மனித சமுதாயத்திற்கு வெட்கத்தைக் கொணர்ந்துள்ளது என்றும், உலகளாவிய கொள்கைகள் இதனை இனிமேலும் சகித்துக்கொண்டிருக்கக் கூடாது என்றும், திருத்தந்தை கூறியிருப்பதையும், அருள்பணி Urbańczyk அவர்கள் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...