Friday, 23 October 2020

எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க

 புத்தமத துறவி


வேர்ப் பகுதிக்கு தண்ணீர் ஊற்றினால், அது மற்றப் பகுதிக்கும் தானாகவே போய்விடும். அதேபோல் எல்லாருக்கும் சேர்த்து பிரார்த்தனை செய்தால்,அது போகவேண்டிய இடத்திற்கு எல்லாம் போய்ச் சேரும்

மேரி தெரேசா: வத்திக்கான்

அக்காலத்தில் வாழ்ந்துவந்த துறவி ஒருவர், எந்த தெய்வத்தை நோக்கியும், ஒரு இரண்டு நிமிடம் இறைவேண்டல் செய்தால், அடுத்த நிமிடமே, அந்த வேண்டுதலின்படி, எல்லாமே நடக்குமாம். அந்த துறவி பற்றி கேள்விப்பட்ட அந்த நாட்டு மன்னர், அந்த துறவியிடம் சென்று, ஞானியாரே, நீங்கள் எதை நினைத்து பிரார்த்தனை செய்தாலும் அது நிறைவேறும் என்று கேள்விப்படுகிறேன். அதனால் தாங்கள் எனக்காக, எனது மனைவிக்காக, எனது மகனுக்காக, மகளுக்காக, இந்த நாட்டு குடிமக்கள் அனைவருக்காகவும் கடவுளைப் பிரார்த்திக்கவேண்டும் என்று பணிவோடு கேட்டார். மன்னர் சொன்னதைக் கேட்ட துறவி சிரித்துக்கொண்டே, நான் பிரார்த்தனை செய்தால் இப்படியெல்லாம் நடக்கும் என்பதுகூட எனக்குத் தெரியாது, ஆனால் நீங்கள் சொல்வதால் நான் ஆண்டவனை நோக்கி மன்றாடுகிறேன் என்றார். பின்னர் அந்த துறவி மன்னருடைய அரசவைக்கு வந்து, அங்கு ஒரு மூலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு தெய்வத்தின் திருவுருவம் முன்பாக விளக்கேற்றி, ஆண்டவா, இந்த நாட்டில் எல்லாரும் நன்றாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து முடித்தார். அதைக் கேட்ட மன்னருக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தது. நான் துறவியிடம் ஒவ்வொருவருக்காகவும் பிரார்த்தனை பண்ணவேண்டும் என்று, எவ்வளவு விளக்கமாகச் சொன்னேன், ஆனால் அவரோ ஒரே வரியில் பிரார்த்தனையை முடித்துவிட்டாரே, இதற்காகவா நான் தனியாகப் போய் அவரிடம் இத்தனை விண்ணப்பங்களை வைத்தேன் என்று நினைத்து வருத்தப்பட்டார். மன்னர் முகத்தில் தெரிந்த கவலையைப் பார்த்த துறவி, சிரித்துக்கொண்டே, மன்னரே, நீர் உம் மனதில் என்ன நினைக்கின்றீர் என்பது புரிகிறது, உங்கள் அரண்மனை தோட்டத்திற்கு என்னை அழைத்துக்கொண்டுப் போங்கள் என்று சொன்னார். அங்கு இருவரும் சென்றனர். அந்த அழகான தோட்டத்தில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கின. ஆனால், அந்த தோட்டத்தில், ஒரு செடி மட்டும் நீர் ஊற்றி இரண்டு நாள்கள் ஆனது போல் வாடி வதங்கி இருந்தது. உடனே துறவி மன்னரிடம், கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரச் சொல்லுங்கள் என்றார். உடனடியாக கொண்டுவரப்பட்ட தண்ணீரை மன்னரிடம் கொடுத்து, அந்தச் செடிக்கு அதை ஊற்றச் சொன்னார். மன்னரும் அந்தச் செடியில் வாடி வதங்கியிருந்த இலைகள், உதிர்ந்துபோகும் நிலையிலிருந்த மலர்கள் மேல் ஊற்றாமல், மண்ணோடு உறுதியாக நிற்கக்கூடிய வேர்ப் பகுதியில் ஊற்றினார். அதைப் பார்த்த துறவி மன்னரிடம், வாடிப் போயிருக்கும் மற்ற பகுதிகளுக்கு ஊற்றாமல், வேர்ப் பகுதிக்கு, எதற்காக ஊற்றினீர்கள் என்று கேட்டார். அதற்கு மன்னர், வேர்ப் பகுதிக்கு ஊற்றினால், அது மற்றப் பகுதிக்கும் தானாகவே போய்விடும்தானே என்றார். அப்போது துறவி சிரித்துக்கொண்டே, எல்லாருக்கும் சேர்த்து நான் பண்ணிய பிரார்த்தனை, போகவேண்டிய இடத்திற்கு எல்லாம் போய்ச் சேரும்தானே என்று பதிலுக்குக் கேட்டார். இந்த கதையை வாசித்தபோது, எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பதேயல்லால் வேறொன்று அறியேன் பராபரமே என்ற (வள்ளலார்) வரிகள் நினைவுக்கு வந்தன.

No comments:

Post a Comment