Tuesday, 27 October 2020

அருள்பணி ஸ்டான் சுவாமி விடுதலை செய்யப்பட திருஅவை, ஐ.நா.

 அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின்  விடுதலைக்காக...


அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மிகவும் அருமையான அன்பான மனிதர், அவரை பயங்கரவாதத்தோடு தொடர்புபடுத்தி கைதுசெய்திருப்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை - கர்தினால் கிரேசியஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மாவோயிஸ்ட் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டார் என்ற பொய்க் குற்றச்சாட்டில், மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 83 வயது நிரம்பிய இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், விடுதலை செய்யப்படவேண்டும் என்று, இந்திய கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர், ஐக்கிய நாடுகள் நிறுவனம் உட்பட பல்வேறு அமைப்புகள், இந்திய நடுவண் அரசை வலியுறுத்தியுள்ளன.

அக்டோபர் 24, இச்சனிக்கிழமை காலையில் இணையதளம் வழியாக திருப்பலி நிறைவேற்றிய, இந்திய ஆயர் பேரவைத் தலைவரும், மும்பை பேராயருமான கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள், பழங்குடியினத்தவர் மற்றும், தலித் மக்கள் ஆகியோரின் நல்வாழ்வுக்காக அரும்பணியாற்றிவந்த அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று, உருக்கமாகச் செபிக்க கேட்டுக்கொண்டார்.

ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் வாழ்ந்த இயேசு சபை இல்லத்தில் தான் தங்கியிருந்த அனுபவத்தை, மறையுரையில் பகிர்ந்துகொண்ட கர்தினால் கிரேசியஸ் அவர்கள், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், மிகவும் அருமையான, அன்பான மனிதர் என்றும், பயங்கரவாதத்தோடு அவரைத் தொடர்புபடுத்தி கைது செய்திருப்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லை என்றும் கூறினார்.

அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் உடல் நலனுக்காகவும், அவர் விரைவில் விடுதலை செய்யப்படுவதற்காகவும் இறைவனை  மன்றாடுவோம் என்றும், கர்தினால் கிரேசியஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.

மேலும், ஐக்கிய நாடுகள் நிறுவனமும், பல்வேறு இந்திய எதிர்க் கட்சித் தலைவர்களும், மனித உரிமை அமைப்புக்களும், அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்திருப்பதோடு, அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளன.

இதற்கிடையே, அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் வயது மற்றும், அவரைத் தாக்கியுள்ள பாரக்கின்சென் நோய் காரணமாக, விண்ணப்பிக்கப்படிருந்த பிணையல் மனுவை நீதிமன்றம் நிராகரித்து, அவரை மறுபடியும் சிறைக்கு அனுப்பியுள்ளது. (AsiaNews)

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...