Friday, 23 October 2020

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பற்றிய ஆவணப்படம்

 Evgeny Afineevsky அவர்கள் உருவாக்கியுள்ள "Francesco" ஆவணப்படம்


சமுதாய மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் Kinéo என்ற திரைப்பட விருது, Evgeny Afineevsky அவர்கள் உருவாக்கியுள்ள "Francesco" ஆவணப்படத்திற்கு வழங்கப்படுகிறது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"Francesco" என்ற தலைப்புடன், ஒரு புதிய ஆவணப்படம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப் பற்றி உருவாக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாழும் இரஷ்ய நாட்டவரான Evgeny Afineevsky அவர்கள் உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம், உரோம் நகரில் நடைபெறும் திரைப்பட விழாவில் அக்டோபர் 21, இப்புதனன்று திரையிடப்பட்டது.

முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தை பிரான்சிஸ் ஆகியோருடன் Evgeny Afineevsky அவர்கள் மேற்கொண்ட பல்வேறு நேர்காணல்களின் தொகுப்பாக உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில், இன்றைய நெருக்கடி நிலையை திருத்தந்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது இவ்வுலகை அச்சுறுத்திவரும் கொள்ளைநோய், திருஅவையை நெருக்கடிக்கு உள்ளாக்கிய பாலியல் கொடுமை என்ற புகார், உலகில் நிலவும் இனவெறி, சிரியா, உக்ரைன் ஆகிய நாடுகளில் நிலவும் போர்கள், Rohingya மக்கள் அடைந்துவரும் துன்பங்கள் ஆகியவற்றை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எவ்விதம் எதிர்கொண்டு வருகிறார் என்பது, இத்திரைப்படத்தில் கூறப்பட்டுள்ளது.

சமுதாய மற்றும் மனிதாபிமான பிரச்சனைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் Kinéo என்ற திரைப்பட விருது, Evgeny Afineevsky அவர்கள் உருவாக்கியுள்ள "Francesco" ஆவணப்படத்திற்கு, அக்டோபர் 22, இவ்வியாழனன்று வழங்கப்படுகிறது.

2016ம் ஆண்டு, உக்ரைன் நாட்டின் அவலங்களை மையப்படுத்தி Evgeny Afineevsky அவர்கள் உருவாக்கிய "Winter on Fire" என்ற ஆவணப்படம், ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது என்பதும், 2018ம் ஆண்டு, சிரியா நாட்டை மையப்படுத்தி, Afineevsky அவர்கள் உருவாக்கிய "Cries from Syria" என்ற ஆவணப்படம் மூன்று Emmy விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கன.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...