Friday 23 October 2020

உலக அமைதிக்காக, பன்னாட்டு, பல்சமயக் கூட்டம்

 அமைதி விளக்கை ஏற்றிவைக்கும் அரசுத்தலைவர் Sergio Mattarella


அமைதி வேண்டி நடத்தப்பட்ட கூட்டத்தில், கோவிட்-19 கொள்ளைநோய் மற்றும் போர்களில் இறந்தோரை நினைவுகூர்ந்து, ஒரு நிமிட அமைதி காத்ததற்குப்பின், அமைதி அறிக்கை வாசிக்கப்பட்டது

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

1986ம் ஆண்டு, திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்கள் உலகின் பல்வேறு மதத்தலைவர்களுடன், அமைதிவேண்டி, அசிசி நகரில் மேற்கொண்ட ஒரு பல்சமய கூட்டத்தைத் தொடர்ந்து, சான் எஜீதியோ என்ற பிறரன்பு அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும், அமைதிக்காக வேண்டும் இறைவேண்டல் நாளை ஏற்பாடு செய்து வந்துள்ளது.

"எவரும் தனியாகக் காப்பாற்றப்படுவதில்லை. அமைதி மற்றும், உடன்பிறந்த உணர்வு" என்ற தலைப்பில், இவ்வமைப்பினர், இவ்வாண்டு அக்டோபர் 20 இச்செவ்வாயன்று, 34வது இறைவேண்டல் நாளை, உரோம் நகரில் உள்ள Campidoglio குன்றில் ஏற்பாடு செய்திருந்தனர்.

கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயோ, இங்கிலாந்து ஆங்லிக்கன் சபையின் கான்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, ஆகியோருடன், இந்து, முஸ்லீம், சீக்கிய  சமயத்தலைவர்கள் கலந்துகொண்ட இந்த இறைவேண்டல் கூட்டத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், கோவிட்-19 கொள்ளைநோய் மற்றும் போர்களில் இறந்தோரை நினைவுகூர்ந்து, ஒரு நிமிட அமைதி காத்ததற்குப்பின், அமைதி அறிக்கை வாசிக்கப்பட்டது.

வழக்கமாக, இந்த இறைவேண்டல் முயற்சியில் 50 நாடுகளைச் சேர்ந்த மதத்தலைவர்கள் கலந்துகொள்வது வழக்கம் என்றாலும், இவ்வாண்டு, கோவிட்-19 கொள்ளைநோயின் தாக்கத்தால், பல்வேறு மதத்தலைவர்கள், இணையத்தின் வழியே பங்கேற்றனர்.

இக்கூட்டத்தின் இறுதியில், அனைத்து மதத்தலைவர்களும் இணைந்து அமைதி அறிக்கையில் கையெழுத்திட்டு வெளியிட்ட வேளையில், அவர்கள் ஒவ்வொருவரும் அமைதி விளக்கையும் ஏற்றி வைத்தனர்.

மதத்தலைவர்களுடன் இணைந்து, பல்வேறு நாட்டைச் சேர்ந்த இளையோர், தங்கள் பாரம்பரிய உடைகளில் மேடையில் தோன்றி, அவர்களும் விளக்கேற்றி வைத்தனர்.

பல்வேறு நாடுகளின் தூதர்களும், பிரதிநிதிகளும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட இத்தாலிய அரசுத்தலைவர், Sergio Mattarella அவர்களும், இந்த விளக்கேற்றும் நிகழ்வில் பங்கேற்றார்.

இறுதியில், அனைவரும் ஒருவருக்கொருவர், அமைதியைப் பகிர்ந்துகொள்ளும் அடையாளமாக,  கரங்களைக் கூப்பி வணக்கம் தெரிவித்தபின் கலைந்து சென்றனர்.

2016ம் ஆண்டு, அசிசி நகரில் நடைபெற்ற இந்த அமைதி இறைவேண்டல் நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டார் என்பதும், இவ்வாண்டு, மார்ச் 27ம் தேதி, காலியாக இருந்த வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நடத்திய சிறப்பு Urbi et Orbi வழிபாட்டில் "எவரும் தனியாகக் காப்பாற்றப்படுவதில்லை. நாம் அனைவரும் ஒரு படகில் பயணம் செய்கிறோம்" என்று கூறிய சொற்கள், இவ்வாண்டு நடைபெற்ற இறைவேண்டல் வழிபாட்டிற்கு மையக்கருத்தாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கன. (Zenit)

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...