Friday, 23 October 2020

நல்ல நோக்கம் இல்லையெனில்...

 ஆறு அருகே மரம்


நல்ல நோக்கமில்லாத மனிதருக்கு, எவ்வளவு அதிகாரம் கிடைத்தாலும், எவ்வளவு திறமை இருந்தாலும் அவை வீண்தான்

மேரி தெரேசா: வத்திக்கான்

இளவரசர் ஒருவர் ஆற்றில் குளிக்கப் போகும்போது தன் பணியாளர்களைத் தேவையில்லாமல் திட்டிக்கொண்டே போனார். அன்று ஆற்றில் வெள்ளம் அதிகமாக இருந்ததால், அது இளவரசரை அடித்துக்கொண்டு போயிற்று. அவ்வேளையில் அந்த பணியாளர்களும், இளவரசரைக் காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அலறியபடி ஆற்றின் போக்கில் போய்க்கொண்டிருந்த இளவரசரருக்கு, பற்றிக்கொண்டு கரையேற ஒரு மரக்கிளை கிடைத்தது. அதை அவர் பற்றிக்கொண்டார். அக்கிளையில் ஒரு முயலும், எலியும், பூனையும் நனைந்தபடி இருந்தன. இவர் அவற்றைக் கண்டுகொள்ளாமல் இன்னொரு பக்கம் கிளையை இறுகப் பற்றிக்கொண்டார். அவ்வழியே வந்த வேடர் ஒருவர், அந்தக் கிளையில் கயிற்றை வீசி இழுத்து, எல்லாரையும் காப்பாற்றினார். மயங்கிக் கிடந்த இளவரசரை தன் வீட்டுக்குத் தூக்கிவந்து, அவர் எழுந்ததும் அவருக்கு உணவு கொடுத்தார் வேடர். பசியால் உணவை வேக வேகமாக உண்டு முடித்த இளவரசர், பசியாறியதும் ஓவென்று அழுதார். வேடர் காரணம் கேட்டபோது, ‘‘கேவலம் இந்த முயல், பூனை, எலி ஆகியவற்றுடன் என்னையும் சரிக்குச் சமமாக அமர வைத்து உணவு பரிமாறிவிட்டாயே. நான் யார் தெரியுமா? என்று கோபத்தில் சீறினார் இளவரசர். அதற்கு வேடர், ‘‘இளைஞனே! நீ மரக்கிளையைப் பற்றும்போது இம்மூன்று உயிர்களும் உனக்கு முன்னரே அக்கிளையில் அமர்ந்திருந்தன. அப்போது நீ கௌரவம் பார்த்து கிளையைப் பிடிக்காமல் இருந்திருக்கலாமே. நீ பசியுடன் கண் விழித்தபோதும் இந்த மூன்றும் உன்னருகேதான் இருந்தன. அப்போது நீ இதே காரணத்தைச் சொல்லி சாப்பிட மறுத்திருக்கலாமே. உனக்குப் பிரச்சனை வரும்போது மட்டும் கௌரவத்தை ஒதுக்கி வைக்கிறாய். உனது பிரச்சனை தீர்ந்து நிம்மதியாக இருக்கும்போது கௌரவம் பார்த்து பிறரை ஒதுக்குகிறாய். இது எவ்வளவு கெட்ட குணம். வாழ்க்கையில் நீ எவ்வளவு திறமைகளை வளர்த்திருந்தாலும், எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், நல்ல நோக்கமும் எண்ணமும் இல்லையென்றால் அவையெல்லாம் வீண்’’ என்றார் வேடர். தன் தவறை உணர்ந்த இளவரசர், வேடரிடம் மன்னிப்பு கேட்டு திருந்தினார்.

நல்ல நோக்கமில்லாத மனிதருக்கு, எவ்வளவு அதிகாரம் கிடைத்தாலும், எவ்வளவு திறமை இருந்தாலும் அவை வீண்தான்! (நன்றி வாட்சப் நண்பர் குழு) 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...