Friday, 23 October 2020

"நான் அரசன்... அதனால் தான்"

 குழுமமாக இருக்கும் குரங்குகள்


"நீ அந்தக் குரங்குகளுக்கு அரசன். பின் ஏன் இப்படி அவர்களுக்காக உன் உயிரைக் கொடுக்கிறாய்?" என்று மனிதன் கேட்டபோது. "நான் அவர்களுக்கு அரசன். அதனால் தான்." என்று சொல்லி, அந்த அரசக்குரங்கு உயிர் துறந்தது.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

குரங்குகளின் அரசனாக இருந்த ஒரு பெரும் குரங்கு, உடல் வலிமையில் மட்டுமல்ல, அன்பாலும், அறிவாலும் உயர்ந்து விளங்கியது. அதன் புகழை விரும்பாத ஒரு சில குரங்குகளும், அந்தக் கூட்டத்தில் இருந்தன.

ஒரு நாள், மனிதப் படையொன்று குரங்குகளை வேட்டையாட வருகின்றது எனக் கேள்விப்பட்டதும், அந்தக் காட்டைவிட்டு, அடுத்த காட்டுக்கு, எல்லாக் குரங்குகளையும் பத்திரமாக அழைத்துச்சென்றது, அந்த அரசக்குரங்கு. போகும் வழியில், ஆழமான ஒரு பள்ளம். குரங்குகள் அதைத்தாண்ட முடியாதென உணர்ந்த அரசக்குரங்கு, அந்தப் பள்ளத்தின் இரு ஓரங்களையும் இணைக்கும் பாலமாக தன் உடலை அமைத்தது. எல்லாக் குரங்குகளும், அரசக்குரங்கின் உடல்மீது நடந்துசென்றன.

அரசக்குரங்கின் மேல் பொறாமைகொண்ட குரங்குகளில் ஒன்று, இதுவே தகுந்த தருணம் என்று நினைத்து, கூர்மையான ஒரு குச்சியைக் கையில் எடுத்துக்கொண்டு, அரசக் குரங்கின் உடல்மீது நடந்து சென்று, அதன் இதயத்தை, அந்தக் கூரிய குச்சியால் குத்திப் பிளந்தது. வலியால் துடித்த அந்த அரசக்குரங்கு, தன் பிடியைத் தளர்த்தவில்லை. தன்னைக் குத்திய அந்தக் குரங்கு உட்பட, எல்லாக் குரங்குகளும் பத்திரமாகக் கடந்து சென்றபின், மயக்கமுற்று, அந்தப் பள்ளத்தில் விழுந்தது.

குரங்குகளை வேட்டையாட வந்த மனிதப்படையின் தலைவன், நடந்ததனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார். மயங்கி விழுந்த குரங்கைக் காப்பாற்ற முயன்றார். மயக்கம் தெளிந்து எழுந்த அரசக்குரங்கிடம், "நீ அந்தக் குரங்குகளுக்கெல்லாம் அரசன். பின் ஏன் இப்படி அவர்களுக்காக உன் உயிரைக் கொடுக்கிறாய்?" என்று கேட்டார். "நான் அவர்களுக்கு அரசன். அதனால் தான்." என்று சொல்லி, அந்த அரசக்குரங்கு உயிர் துறந்தது.

No comments:

Post a Comment