Saturday, 23 May 2020

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்திய புத்தர்

எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்திய புத்தர் இயற்கை அழகின் நடுவே புத்தர் சிலை

அன்னப்பறவையை அம்பு எய்து கொல்ல முயன்றவருக்கா?, அல்லது, சாக இருந்த பறவைக்கு சிகிச்சை அளித்துக் காக்க முயன்றவருக்கா? அன்னப்பறவை யாருக்குச் சொந்தம்?
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனரின் அன்பு மகனான சித்தார்த்தர், இயற்கையை இரசிப்பதில் ஆர்வம் மிக்கவராக இருந்தார். ஒருநாள் சித்தார்த்தர் அரண்மனை தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தபோது அவருடைய காலடியில், அன்னப்பறவை ஒன்று, உடலில் அம்பு துளைத்த நிலையில் வந்து விழுந்தது. அன்னப்பறவையை அந்த நிலையில் கண்டதும் சித்தார்த்தரின் மனம் துடித்தது. படபடப்போடு அதனைக் கையில் எடுத்தார். அன்போடு அன்னப்பறவையை தடவிக் கொடுத்து, மெதுவாக அதனுடைய உடலில் தைத்திருந்த அம்பினை வெளியில் எடுத்தார். அரண்மனைத் தோட்டத்திலிருந்த பச்சிலைகளை பறித்து கசக்கி காயத்தில் பூசினார். அப்போது அங்கே சித்தார்த்தரின் அத்தை மகன் தேவதத்தன் கையில் வில் அம்போடு வந்தார்.
‘சித்தார்த்தா, வானத்தில் கூட்டமாகச் சென்ற அன்னப்பறவைகளில் இந்த பறவையை, நானே அம்பு எய்து வீழ்த்தினேன். இந்த பறவை எனக்கே சொந்தம். ஆதலால் இதனை என்னிடம் கொடு.’ என்று கேட்டார்.
‘அம்பு துளைத்து காயம் அடைந்து, என்னுடைய காலடியில் விழுந்த இப்பறவையை, நான் காப்பாற்றி உள்ளேன். ஆதலால் இப்பறவையை நான் உன்னிடம் கொடுக்க இயலாது’ என்று சித்தார்த்தர் பறவையை கொடுக்க மறுத்து விட்டார்.
உடனே தேவதத்தன் சுத்தோதனரிடம் சென்று, தான் அம்பு எய்து வீழ்த்திய அன்னப்பறவையை சித்தார்த்தர் கொடுக்க மறுப்பதாக புகார் கூறினார். சித்தார்த்தரும் நடந்த நிகழ்வுகளை தனது தந்தையிடம் கூறினார்.
சுத்தோதனர் தேவதத்தனிடம், ‘நீ அன்னப்பறவையை அம்பு எய்துகொல்ல முயன்றாய். சித்தார்த்தனோ சாக இருந்த பறவைக்கு சிகிச்சை அளித்து உண்ண நீரும் உணவும் கொடுத்து காக்க முயன்றான். பறவையின் உயிரைக் காப்பாற்றியவனுக்கே அப்பறவை சொந்தம். ஆதலால் அன்னப்பறவை சித்தார்த்தனுக்கு உரியது’ என்று கூறினார்.
சித்தார்த்தரும் சிறிது காலம் தன்னுடைய பராமரிப்பில் அன்னப்பறவையை வைத்திருந்து காயம் ஆறியதும், வானத்தில் அப்பறவையை பறக்க விட்டார்.
அன்னப்பறவையிடம் கருணையுடன் நடந்துகொண்ட சித்தார்த்தரே, பின்னாளில் எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்திய, கௌதம புத்தர் ஆனார்.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...