பிறரைத் தீர்மானிக்கும் பொறுப்பைக் கொடுத்தது யார்?
நாம் ஒவ்வொருவரும், தன்னைப் பற்றிக்கூட தீர்ப்பிடக்கூடாது. அதற்கு மாறாக, மற்றவர் நம்மைப் பற்றிச் சொல்லும் தீர்ப்புக்களிலே நம் வாழ்வை முடக்கிவிடாமல், ஆண்டவன் கொடுத்துள்ள திறமைகளைக் கண்டுணர்ந்து முன்னேற முயற்சிப்போம், மனதில் உறுதியுடன்
மேரி தெரேசா: வத்திக்கான்அமெரிக்காவில் ஆரம்பப் பள்ளி ஒன்றில், இசை ஆசிரியராகப் பணியாற்றிய ஒருவர், மாலை நேரங்களில், இசையில் ஆர்வமுள்ள சிறார்க்கு, பியானோ, ஆர்கன், வயலின் போன்ற இசைக்கருவிகள் மீட்டுவதற்குக் கற்றுக்கொடுத்து வந்தார். அந்த ஆசிரியர், தனது ஏழ்மை நிலையால், இந்த மாலைநேர வகுப்புக்கு கட்டணமும் வாங்கினார். அந்த வகுப்பில் ஏறத்தாழ எட்டு வயது மதிக்கத்தக்க, ராபி என்ற ஓர் ஏழைச் சிறுவனையும் கொண்டுவந்து சேர்த்தனர். ஒவ்வொரு நாளும் ஒரு பழைய காரில் அவனது அம்மா வந்து இறங்கி, மகனை இறக்கிவிட்டு, கையசைத்துச் செல்வார். முதல்நாள் வகுப்பில் அந்த ஆசிரியர் சிறுவன் ராபியிடம், பியானோ கற்றுக்கொள்வதற்கு இது சரியான வயது. இன்னும் பத்து ஆண்டுகள் சென்று நீ பெரியவனாக வளரும்போது, பெரிய இசைக்கலைஞனாக வர வாய்ப்புள்ளது என்று உற்சாகப்படுத்தினார். அன்று ஆசிரியர் சொன்ன அறிவுரைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த ராபி, அதெல்லாம் எனக்குத் தெரியாது டீச்சர், ஆனால் நான் பியானோ வாசிப்பதை என் அம்மா கேட்கவேண்டும், அதுதான் எனது ஆசை என்று சொன்னான். வகுப்பும் ஆரம்பமானது. வகுப்பு தொடங்கி பத்து பதினைந்து நாள்கள் ஆகியிருக்கும். ராபியிடம் இசைஞானம் இருப்பதாகவே ஆசிரியருக்குத் தெரியவில்லை. ஒரு மாதம் ஆகியது. ராபியிடம் முன்னேற்றம் எதுவுமில்லை. பெரிய பெரிய இசைஞானிகளாக மாறுகிற எனது வகுப்புச் சிறாரையும், இசைஞானமே இல்லாத சிறாரையும் பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த வகுப்பில், இசைஞானமே இல்லாத சிறாரை வரிசைப்படுத்தினால், ராபிதான் முதலில் வருவான் என்று அந்த இசை ஆசிரியர் நினைத்தார், எனவே ஒருநாள் ராபியிடம், தம்பி, நீ படித்து பயனில்லை என அவனது நிலைமையை விவரித்தார் ஆசிரியர். அப்போது ராபி, டீச்சர், நான் இசைக்கருவி மீட்டுவதை, எனது அம்மா ஒருநாள் கேட்கவேண்டும், எனது ஆசையெல்லாம் அதுதான் எனச் சொன்னான். ராபி தொடர்ந்து இசை வகுப்புக்கு வந்துகொண்டிருந்தான். நான்கைந்து மாதங்கள் சென்று, ராபி திடீரென வகுப்புக்கு வருவதை நிறுத்திவிட்டான். இசை ஆசிரியரும் ராபி பற்றி கவலைப்படவே இல்லை. நல்ல முடிவுதான் எடுத்திருக்கிறான் என்று அவர் நினைத்துக்கொண்டார்.
ஆறு மாதங்கள் சென்று, தன் வகுப்பு மாணவர்களின் இசைத் திறமைகளை பொதுவில் காட்டுவதற்காக, ஓர் அரங்கேற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தார், இசை ஆசிரியர். ராபி வாழ்ந்த வீடு உட்பட அனைத்துச் சிறார் வீடுகளுக்கும் அவர் அழைப்பிதழ்களை அனுப்பினார். உடனே ராபி, இந்த நிகழ்வில் கட்டாயம் நான் பங்கேற்பேன் என்று, பதில் மடலும் அனுப்பினான். ஆசிரியர் எவ்வளவோ மறுத்தும் அவன் விடுவதாயில்லை. அரங்கேற்றம் நடைபெறவிருந்த நாளுக்கு முந்தியநாள் முன்னோட்டம் பார்க்கும் நிகழ்வுக்கும் ராபி வரவில்லை. அதனால் ஆசிரியர் ஒரு முடிவுக்கு வந்தார். அந்நிகழ்வில் கடைசியாக ராபியை மேடையில் ஏற்றி, திரையை உடனடியாக மூடிவிடவேண்டியதுதான் என்று அவர் தீர்மானித்திருந்தார். அந்த நாளும் வந்தது. நிகழ்ச்சி ஆரம்பமானது. சிறார் ஒவ்வொருவராக வந்து தங்கள் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர். பலத்த கரவொலிகளையும் பெற்றனர். அப்போதெல்லாம் ராபி வரவில்லை. கடைசிக் கட்டத்தில் அழுக்குச் சட்டையுடன் ஓடோடிவந்த ராபி மேடை ஏறினான். நான் உலக இசைஞானிகளில் மிகப்பெரிய இசைமேதையின் இசை ஒன்றை இசைக்கப் போகிறேன் என்று, அவன் பியானோவைத் தொட்டான். அடுத்து ஆறரை நிமிடங்களுக்கு அரங்கமே அமைதியில் உறைந்திருந்தது. ஆசிரியருக்கு ராபி வாசித்தது, அவன் வாசிப்பது போலவே இல்லை. ஏனெனில் அவனுக்கு பியானோ வாசிப்பது சுத்தமாகத் தெரியாது என ஆசிரியர் நினைத்திருந்தார். ராபி வாசித்து முடித்ததும், அரங்கமே அதிரும்வண்ணம் அவனுக்கு கைதட்டல் கிடைத்தது. ஆசிரியர் மேடைக்கு ஓடிவந்து ராபியை அணைத்து உச்சி முகந்தார், தேம்பித் தேம்பி அழுதார். ராபி என்னால் நம்பவே முடியவில்லை என்றார் ஆசிரியர். அப்போது ராபி அனைவரையும் பார்த்துச் சொன்னான்
நான் ஏன் இப்படி அழுக்கான ஆடையுடன், தலைவாராமல் இங்கு வந்தேன் என்று நீங்கள் எல்லாரும் நினைக்கலாம். இன்று காலையில்தான் என் அம்மா இறந்துபோனார். மேலும் என் அம்மாவுக்குப் பிறவியிலேயே காதுகேட்காது. ஆனால் நான் பெரிய இசைக்கலைஞனாக வரவேண்டுமென்ற ஆசை மட்டும் அவருக்கு இருந்தது. நான் எதை வாசித்தாலும் அவர்களுக்கு கேட்காது. ஆனால் இன்று என் அம்மா ஆண்டவரிடம் சென்றுவிட்டார்கள். அதனால் அவர்களுக்கு இன்று நிச்சயம் காதுகேட்கும். அந்த நம்பிக்கையில்தான் இப்போது பியானோ வாசித்தேன். எனது இந்த இசையையும் என் அம்மா கேட்டு இரசித்திருப்பார்கள்.
இவ்வாறு ராபி சொன்னதும் அரங்கத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ராபி, அப்பா இல்லாமல் வளர்ந்தவன். இப்போது அவனுக்கு அம்மாவும் இல்லை. அந்த இசை ஆசிரியர் ராபியை அணைத்தபடியே, அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்களிடம் இவ்வாறு சொன்னார். அடுத்தவர் பற்றி தீர்மானிப்பதற்கு நாம் யார்? அந்தப் பொறுப்பை இயற்கை நம்மிடம் எப்போது கொடுத்தது? பிறரைத் தீர்மானிக்கும் பொறுப்பை நமக்குக் கொடுத்தது யார்? எந்த குழந்தையும், பெரிய ஆளாக அல்லது மதிப்புக்குறைந்த ஆளாக வளரும் என்பது யாருக்குத் தெரியும்? ஏன், நாம் இவ்வுலகைவிட்டு மறைந்தபின்னரும்கூட, அந்தக் குழந்தை பெரிய மரமாக வளரலாம், வளராமலும் இருக்கலாம். எது எப்படி நடக்கும் என்பது யாருக்குத் தெரியும்?
முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன்
இது அமெரிக்காவில் நடந்த உண்மை நிகழ்வு என்று, முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள், மனதில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் ஆற்றிய ஓர் உரையில் இதைப் பகிர்ந்துகொண்டார். ஒருவரைப் பற்றி தவறாகப் புரிந்துகொள்ள ஒரு விநாடி போதும். ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறந்ததற்கான காரண காரியத்தைப் புரிந்துகொள்வதற்கு நம் வாழ்நாள் முழுவதும்கூட போதாமல் போகலாம். யாரைப் பற்றியும் அவசரமாக முடிவு எடுப்பதற்குமுன், நாம் ஒரு சில விநாடிகள் சிந்தித்துப் பார்ப்போம். இறைவனும் இயற்கையும் மிக அதிக அறிவாளிகள். இவர்கள் உருவாக்கிய எதுவுமே வீணாகப் போகாது. ஜெயந்தஸ்ரீ அவர்களின் இந்தப் பகிர்வை, யூடியூப் ஒன்றில் கேட்டபோது, அவர் இன்னும் ஓர் ஆழமான, அருமையான கருத்தையும் பதிவுசெய்திருந்தார். அதாவது, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எல்லாரையும் பற்றி உயர்வாகப் பேசுவதோடு, உண்மையாகப் பேசுவதையும் ஒரு கொள்கையாகவே வைத்துக்கொள்ளுங்கள். காரணம் என்னவெனில், நம்மில் பலர், மற்றவர்களை, மிக எளிதாக, ஏன் அவசரம் அவசரமாகக்கூட தவறாகப் புரிந்துகொள்ளுகிறோம். ஆனால், சரியாகப் புரிந்துகொள்ள வாய்ப்புக் கிடைக்கும்போது, அந்த நபரிடம் சென்று, நான் உங்களை இவ்வாறு தவறாகத் தீர்மானித்துவிட்டேன் என்று நாம் மன்னிப்புக் கேட்பதும் இல்லை. இதெல்லாம் சாதாரணமாக நடக்கக்கூடியதுதான் என்று, நமக்கு நாமே நியாயம் சொல்லிக்கொள்கிறோம். கடவுள், இந்த உலகில் நம் எல்லாரையும் ஏதோ ஒரு காரணத்திற்காகப் படைத்திருக்கிறார். அது நமக்குப் புரிகிறதோ புரியவில்லையோ, ஆனால் அவர் நம்மை மிக அழகான காரணத்திற்காகப் படைத்திருக்கிறார். இந்த ஒரு பார்வையோடு, நம் கண்களை அகலத் திறந்து பார்த்தால், நாம் வாழ்கின்ற இந்த உலகம் இன்னும் ஒளிமயமாகத் தெரியும்.
தன்னைப் பற்றிக்கூட தீர்ப்பிடக்கூடாது
“பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள் (லூக். 6,37)” என்று, இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், “பிறரைத் தீர்ப்பிடுவது மாபாதகம். மற்றவர் பற்றி தீர்ப்பிடுவதற்கு நான் யார்? ஒவ்வொருவரும் மற்றவரைத் தீர்ப்பிடுவதற்கு முன்னர், அவர்களின் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்கவேண்டும் என்று” பலமுறை சொல்லியிருக்கிறார்.
பெரியோர்களின் அறிவுரைகளும் இதுதான். பிறரைக் குறைகூறும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. பிறரைப் பற்றிக் குறைகூறுவதற்குமுன், தன் நிலை என்னவென்று, ஒருமுறைக்கு இரண்டு முறை சிந்திப்பதே, சிறந்த மனிதருக்கு அழகு. அடுத்தவரை குறைகூறுமுன் உன்னுள் இருக்கும் குறைகளை உற்றுநோக்கினால், உன் உயிருள்ளவரை, வாய்பேசாதாவனாகவே இருந்துவிடுவாய். அதேநேரம், நீ எங்கு போனாலும், என்ன செய்தாலும், உன்னைப் பற்றிக் குறைகூற நாலுபேர் இருக்கத்தான் செய்வார்கள். உன்னைக் குறைகூறும் அளவுக்கு அவர்கள் நல்லவர்களும் அல்ல, அதைக்கேட்டு கவலைப்படும் அளவுக்கு நீ மோசமானவனும் அல்ல என்றும் பெரியவர்கள் சொல்லியுள்ளனர். ஆதலால், மற்றவர் பற்றி தீர்ப்பிடுவதற்குமுன் ஒரு நிமிடம் நம்மைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம். யாரைத் தீர்ப்பிடுகிறோமோ அவர் இடத்தில் நம்மை நிறுத்திப் பார்ப்போம். மேலும், நாம் ஒவ்வொருவரும், தன்னைப் பற்றிக்கூட தீர்ப்பிடக்கூடாது. அதற்கு மாறாக, மற்றவர் நம்மைப் பற்றிச் சொல்லும் தீர்ப்புக்களிலே நம் வாழ்வை முடக்கிவிடாமல், ஆண்டவன் கொடுத்துள்ள திறமைகளைக் கண்டுணர்ந்து முன்னேற முயற்சிப்போம், மனதில் உறுதியுடன்.
No comments:
Post a Comment