Tuesday, 26 May 2020

நல்லதையே கற்றுத்தருபவர் அன்னையர்

நல்லதையே கற்றுத்தருபவர் அன்னையர் Anna Maria Jarvis,  அன்னை தினம் சிறப்பிக்கப்பட காரணமாக இருந்தவர்.

தியாகம், கருணை, துணிவு போன்ற, தாய்மைப் பண்புகளை நம் வாழ்வில் வெளிப்படுத்துவதும், அன்னையரை சுமையெனக் கருதி முதியோர் இல்லங்களில் சேர்க்காமலும், தனிமையில் தவிக்கவிடாமலும், அவர்கள் இறுதிவரை மனம் குளிர வாழ்வதே, அன்னையர்க்கு நாம் ஆற்றும் நன்றியாகும்
மேரி தெரேசா: வத்திக்கான்

இந்த கொரோனா கொள்ளைநோய் காலத்தில் வகுப்புகள், வேலைகள், கட்டணம் செலுத்துதல் போன்ற பல, இணையதளம் வழியாக நடைபெற்று வருகின்றன. இச்சூழலில், உலகில், மிக கடினமான வேலை ஒன்றுக்கு, தொலைப்பேசி வழியாக நேர்முகம் ஒன்று நடைபெற்றது. நேர்முகம் இப்படி தொடங்கியது. இது ஒரு சாதாரண வேலை அல்ல, மேலாண்மையியல் இயக்குனர் பணிக்கு ஆள் தேர்வு நேர்முகம் இது.  இந்த வேலையில் பொறுப்புகளும், தேவைப்படுபவைகளும் மிக அதிகம். இந்த வேலைக்கு முதலில் தேவைப்படுவது எப்போதும் இயங்கிக்கொண்டே இருப்பதாகும். அதாவது ஏறத்தாழ எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கவேண்டும். எப்போதும், தொடர்ந்து குனிந்து நிமிர்ந்து தன்னையே வருத்திக்கொண்டும் இருக்கவேண்டும். உடல் அளவிலும் மனத்தளவிலும் மிகவும் உறுதியுடையவராய் இருக்கவேண்டும். இவ்வாறு ஒரு வாரத்தில் 150 மணி நேரம் முதல், கணக்கின்றி நிற்க வேண்டும். சொல்லப்போனால், ஒரு நாளில் 24 மணி நேரம், ஒரு வாரத்தில் ஏழு நாள்கள் இவ்வாறு வேலை செய்யவேண்டும்.
இவ்வாறு பேட்டியாளர் சொன்னவுடன்,  இந்த வேலையில் இடையிடையே ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்தானே? என்று வேலைக்கு விண்ணப்பித்தவர்களில் ஒருவர் கேட்டார். உடனே அவர், இல்லை இல்லை, இடைவெளியே கிடையாது. ஓய்வெடுக்க நேரமே கிடையாது என்று பதில் சொன்னார். சரி, இது சட்டப்படி அங்கீகாரம் பெற்ற வேலையா? என்று மற்றொருவர் கேட்க, ஆமாம் என்று சொன்னாநார் பேட்டியாளர். மதிய உணவு எடுத்துக்கொள்ளலாம் அல்லவா என்று, மற்றொருவர் கேட்க, ஆமாம், ஆனால் அவர் வேலை செய்யும் இடத்திலுள்ள மற்றவர்கள் உணவு உண்டபின்னரே, அவரும் உணவு உண்ணலாம் என்றார். இதைக் கேட்டவுடன் இந்த வேலை முட்டாள்தனமானது என்று சொன்னார் கேள்வி கேட்டவர். அப்போது பேட்டியாளர், இதற்கு மிகச்சிறப்பான திறமைகள் தேவைப்படுகின்றன. மருத்துவம், நிதி மற்றும் சமையல் கலையில் பட்டயம் வாங்கினவர்கள் தேவை. இந்த வேலைக்குச் சேருகின்றவர்கள், வேலையில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சில நேரங்களில் வேலைசெய்யும் இடத்தில் இரவு முழுவதும்கூட உறங்காமல் இருக்க நேரிடும். குழப்பமான சூழலில் வேலை செய்யக்கூடியவராயும் அவர் இருக்கவேண்டும், அவர் தன் வாழ்வையே தியாகம் செய்ய வேண்டியிருக்கும், விடுமுறை கிடையாது, உண்மையில், கிறிஸ்மஸ் போன்ற விழாக் காலங்களில் வேலைப்பளு இன்னும் அதிகமாக இருக்கும். அந்நேரங்களில் அவர் மலர்ந்த முகத்துடன் வேலை செய்யவேண்டும். இவ்வாறு பேட்டியாளர் விளக்கியதும், இது மிகவும் கொடூரமானது. முட்டாள்தனமானது. தூக்கத்திற்கு நேரம் கிடையாது. 365 நாள்களும் வேலை செய்யவேண்டும். ஊதியமும் கிடையாது. இவ்வாறு இந்த வேலையை யாருமே இலவசமாகச் செய்ய மாட்டார்கள். இது மனிதமற்றது... என்று, வேலைக்கு விண்ணப்பித்த ஒவ்வொருவரும் கூறினர். அப்போது பேட்டியாளர், உண்மையில் தற்போது அந்த வேலையில் கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்கள் தங்களோடு இருப்பவர்களுக்கு ஆற்றும்பணி அளவிட முடியாதது. இவர்களே அன்னையர் என்று தனது தொலைப்பேசி பேட்டியை முடித்தார்.  அதைக்கேட்ட மற்றவர்கள், உண்மைதான், அவர்கள் அன்னையர், அன்னையர் என்று திரும்பத் திரும்பக் கூறி மகிழ்ந்தனர்.
அன்னை தினம்
மே 10, இஞ்ஞாயிறன்று, இந்தியா, இலங்கை உட்பட, உலகில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறப்பிக்கப்பட்ட அன்னை தினத்திற்கென,  இந்த  யூடியூப் நேர்காணலை, வாட்சப்பில், ஓர் அருள்சகோதரி பதிவுசெய்திருந்தார். கோவிட்-19 சமுதாய விலகல் சூழலில் நாம் வாழ்ந்து வந்தாலும், இஞ்ஞாயிறன்று அன்னை தின வாழ்த்துக்களை மறக்காமல் பகிர்ந்துகொண்டோம். அன்னை தினம் என்பதையே அறியாமல் இருந்த அன்னையர்க்கும்கூட, குழந்தைகள், நல்வாழ்த்துச் சொல்லி அன்னையரை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளனர். அந்த அளவுக்கு, அன்னையர், நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் தனியிடத்தைப் பெற்றிருக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் 2ம் ஞாயிறு, அன்னை தினமாக சிறப்பிக்கப்படுகிறது. அன்னைக்கென வருடத்தின் ஒரு நாளை அர்ப்பணிக்கும் எண்ணம், 19ம் நூற்றாண்டில் உதயமானது. அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த Anna Maria Jarvis (மே 1, 1864 – நவ.24, 1948) என்பவரே, அன்னை தினம் சிறப்பிக்கப்பட காரணமாக இருந்தவர்.
அன்னை தினத்தில், எல்லா நிலைகளில் உள்ளவர்களும் தங்கள் அன்னயரின் பாசத்தை நினைத்து நன்றி சொல்கின்றனர். அவர்களின் பாதங்களைத் தொட்டு வணங்கி ஆசீர் பெறுகின்றனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், தன் அம்மாவை நினைத்து உருக்கமுடன், தன் முகநூலில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார். தனது 14 குழந்தைகளில் பதினொன்றை இழந்த, என் தாய் கல்யாணி அவர்களின் இளைய மகனாக நான் வளர்ந்தேன். நெருக்கடிக்கு மத்தியில், எல்லா இடையூறுகளையும் தாண்டி முன்னேற அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். என் அம்மாவுக்காக, அவர் அருகில் இருந்து எப்போதும் நூல்களை சப்தமாகப் படிப்பேன். இதுவே எனக்கு வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தியது. இதுவே, பின்னாளில் அரசியலில் நுழையவும் அடித்தளமாக அமைந்தது. அந்த வாசிப்புப் பழக்கம் அரசியலைக் கற்க எனக்கு உதவியது. உண்மையில், எனது அரசியல் வாழ்வில், ஓர் அடித்தளத்தை அமைப்பதற்கான மன வலிமையை எனது தாய் எனக்குக் கொடுத்தார். எனது அரசியல் வாழ்வுக்கே அடித்தளம் என் அம்மாதான்.
நாம் வாழ்வில் என்ன கற்றுக் கொண்டோம்
நாம் வாழ்வில் என்ன கற்றுக் கொண்டோம்? என்ன கற்றுக் கொடுக்கிறோம்? என்பது பற்றி, எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள், தன் படைப்புகள் ஒன்றில், இவ்வாறு பதிவு செய்துள்ளார். ஒரு கால் இல்லாத இளைஞன் ஒருவன், தன் அம்மாவுடன் வாழ்ந்து வந்தான். கால் இல்லாத குறையும், தனிமையும் அவனை வாட்டின. ஒரு சமயம், அவன் அம்மாவோடு பேருந்தில் போகும்போது பெண்கள் அமரும் இருக்கையில் உட்கார்ந்தான். ஒரு பெண்மணி அவனைக் கண்டபடி திட்டினார். உடனே அவன் எழ, அவனுக்கு ஒரு கால் இல்லாததைப் பார்த்து, திட்டியவள் 'மன்னிக்கவும்’ என்று சொன்னார். அது அவனது மனதை மிகவும் வாட்டியது. ஒரு கட்டத்தில் அவன் தற்கொலை செய்ய முடிவெடுத்து, வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த இரயில் தண்டவாளத்தில் போய் படுத்துக்கிடந்தான். இரயில் வந்த நேரம் அது. அப்போது பிச்சையெடுக்கும் தொழுநோயாளி ஒருவர், அந்த இளைஞனைப் பார்த்து ஓடிவந்து காப்பாற்றினார். பின், பக்கத்தில் இருந்த ஒரு கல் மண்டபத்துக்கு அவனை அழைத்துச்சென்று, அந்த இளைஞனிடம் இவ்வாறு சொன்னார்...
"நான் ஒரு தொழுநோயாளி. எப்படி இருக்கேன்னு பார்த்தியா. இப்படித்தான் அன்னைக்குக்கூட, ரயில்ல விழப்போன ஒரு கொழந்தையக் காப்பாத்தினேன். அந்தம்மா வந்து கொழந்தைய வாங்கிட்டு நன்றி சொல்லாம என்னைத் திட்டிட்டுப் போனாங்க. அவ்வளவு அருவருப்பா இருக்கேன் நான். அப்படிப்பட்ட நானே உயிரோட இருக்கும்போது. உனக்கெல்லாம் என்ன? கால் இல்லாதது ஒரு பெரிய குறையா?...’ என அறிவுரை கூறி அந்த இளைஞனின் நம்பிக்கையை தூண்டி விட்டார். அதனால் அந்த ஒரு கால் இல்லாத இளைஞன், தற்கொலை முயற்சியை விட்டுவிட்டு வாழ்வின்மீது புதிய நம்பிக்கைகளோடு தூங்கினான். காலையில் எழுந்து பார்த்தால், இரயில் தண்டவாளத்தில் யாரோ விழுந்து இறந்துகிடந்தார். அது தன் மகன்தான் எனப் பயந்து, அவனது அம்மா ஓடி வந்தார். அப்போது அந்த இளைஞன், "அம்மா... நான் இருக்கிறேன் அம்மா..." என கத்திக்கொண்டே தன் அம்மாவிடம் வந்தான். ஆனால், அங்கே அந்த தொழுநோயாளி இறந்துகிடந்தார். முந்தைய இரவு அந்த இளைஞன் தூங்கிய பிறகு, அந்த தொழுநோயாளி, இப்படிப்பட்ட ஒருவனே இந்த சமுதாயத்தில் வாழத் துணிச்சலின்றி சாக நினைக்கிறான். நாம் இவ்வளவு அவமானங்களுக்கு நடுவிலே இப்படி வாழ்கிறோமே" என சிந்தித்ததினாலே தண்டவாளத்தில் குதித்திருப்பார். இறந்துகிடந்த தொழுநோயாளியைப் பார்த்து அந்த இளைஞன் சொன்னான், "அம்மா...! அவர் எனக்கு வாழக்கற்றுக் கொடுத்தார். நான் அவருக்கு சாவதற்குக் கற்றுக்கொடுத்துவிட்டேன்...!" என்று கதறி அழுதான்.
ஆம். நம் வாழ்வின் அர்த்தமே, நாம், நம்மோடு வாழ்கின்ற மனிதர்களுக்கு எதைக் கற்றுத் தரப்போகிறோம் என்பதில்தான் இருக்கிறது. எனவே நல்லதையே கற்றுத்தருவோம்.
அன்னையர்க்கு நன்றி
இவ்வாறு நல்லதையே கற்றுத்தருகின்றவர்கள் அன்னையர். இவர்கள், கருவறையிலே நல்ல பாடத்தைத் துவங்கி விடுகின்றனர். தியாகம், கருணை, துணிவு போன்ற, தாய்மைப் பண்புகளை நம் வாழ்வில் வெளிப்படுத்துவதும், அன்னையரை சுமையெனக் கருதி முதியோர் இல்லங்களில் சேர்க்காமலும், தனிமையில் தவிக்கவிடாமலும், அவர்கள் இறுதிவரை மனம் குளிர வாழ்வதே, அன்னையர்க்கு நாம் ஆற்றும் நன்றியாகும். தன் வயிற்றில் பத்து மாதம் சுமக்காமல், நல்லதையே கற்றுக்கொடுக்கும் மற்றும், நற்பணியாற்றும், தாயுள்ளம் கொண்ட அனைவருக்கும் நன்றி சொல்வோம். கோவிட்-19 நெருக்கடியான காலகட்டத்தில், தொற்றுநோய்க்கு அஞ்சாமல், 24 மணி நேரமும் கொரோனா நோயாளிகளை, இமைபோல் காக்கும் அன்னையர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் பணியாளர்கள் அனைவருமே அன்னையர்தான்.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், மே 10, இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில், இன்று பல நாடுகளில் அன்னை தினம் சிறப்பிக்கப்படுகிறது, அனைத்து அன்னையரையும் நன்றியுடனும், பாசத்துடனும் நினைவுகூர்கிறேன், அவர்கள் எல்லாரையும், நம் விண்ணகத் தாயான அன்னை மரியாவின் பாதுகாப்பில் அர்ப்பணிக்கிறேன், விண்ணகம் சென்றுள்ள அன்னையர் அனைவரையும் நினைக்கிறேன் என்று கூறினார். இவ்வேளையில் அன்னையர் அனைவருக்கும் நாம், நன்றி சொல்வோம்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...