Tuesday, 26 May 2020

மனச்சான்றின் வலிமை

மனச்சான்றின் வலிமை மனச்சான்றின் குரல்

அந்த மாணவனை அழைத்துக் கேட்டபோது, அந்த பணப்பையை தான் எடுக்கவில்லை என உறுதியாக மறுத்துவிட்டான். அந்த பெண்மணியும் எதுவும் சொல்லவில்லை. அதற்குப்பின் அவனது மனசாட்சி அவனைத் துரத்தி துரத்தி விரட்டியது
மேரி தெரேசா: வத்திக்கான்
கிராமத்திலிருந்து வந்த இளைஞன் ஒருவன், சென்னை போன்ற மாநகரம் ஒன்றில் கல்லூரியில் சேர்ந்தான். அவனுக்கு அப்பா இல்லை. அவனது அம்மா கல் உடைத்து, பீடி சுற்றி, தன் மகனையும் மகளையும் படிக்க வைத்துக்கொண்டிருந்தார். எனவே அந்த மாணவன், பகுதி நேர வேலை ஒன்றிலும் சேர்ந்தான். ஒவ்வொரு நாளும் மாலையில், வீடு வீடாகச் சென்று உணவு பொட்டலங்களைக் கொடுத்துவந்தான். ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் பணத்தில் தனது படிப்பு, வாடகை, மற்றும், இதரச் செலவுகள் போக, மீதி ஏறத்தாழ 600 ரூபாயை தன் அம்மாவுக்கும் அனுப்பி வந்தான். இவ்வாறு அவன் ஒருநாள் இரவு உணவை, முதல் மாடியில் வாழ்ந்த ஒரு பெண்மணி வீட்டில் கொடுத்துவிட்டு திரும்புகையில், படிக்கட்டில் ஒரு பணப்பை கிடந்தது. சுற்றிலும் பார்த்துவிட்டு அதை எடுத்து, ஓரிடத்தில் ஒளித்து வைத்தான். பின் அதை எடுத்துக்கொண்டுபோய் தான் வாடகைக்கு இருக்கும் அறையிலுள்ள மற்ற மாணவர்களுக்குத் தெரியாதவாறு, தனது பையில் அதை மறைத்து  வைத்தான். அச்சமயத்தில், அவனது பகுதிநேர வேலைக்கு இரண்டுசக்கர மோட்டார் வாகனம் ஒன்று வாங்குவதற்கு அவனுக்கு பணம் தேவைப்பட்டது. இப்படியிருக்க, அந்த பணப்பையை தொலைத்த அந்தப் பெண்மணி வீட்டில் எங்கும் தேடினார். ஏனெனில் அவர் அன்றுதான் ஒரு இலட்சம் ரூபாயை ஒரு முக்கிய செலவுக்காக வங்கியிலிருந்து எடுத்து வந்திருந்தார். அவர் வழக்கமாகப் பயணிக்கும் ஆட்டோ ஓட்டுனரிடம் கேட்டார். அன்று அவர் பணம் எடுத்த வங்கி அலுவலகரிடம் கேட்டார். காவல்நிலையத்தில் புகார் கொடுக்குமாறு மற்றவர்கள் வலியுறுத்தினர். அவர் வீட்டில் விசிடி புகைப்பட கருவி பொருத்தப்பட்டிருந்ததால், அந்தப் பையை எடுத்தவர் அந்த கல்லூரி மாணவன்தான் என்பதை உறுதிசெய்தார். பின், அந்த மாணவனை அழைத்துக் கேட்டபோது, அதை தான் எடுக்கவில்லை என உறுதியாக மறுத்துவிட்டான். அந்த பெண்மணியும் எதுவும் சொல்லவில்லை. அதற்குப்பின் அவனது மனசாட்சி அவனைத் துரத்தி துரத்தி விரட்டியது. அந்த பையை எடுத்து, காவல்நிலையம், கடல், குப்பை போன்ற பல இடங்களில் வீசினான். ஆனால் அது அவன் கையைவிட்டு விலகவே இல்லை. அவனது பயம்நிறைந்த முகத்தைப் பாரத்த அவனது நண்பனும் காரணம் கேட்டான். கடைசியாக அவன் அந்தப் பெண்மணியிடம் வந்து தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புகேட்டான். அப்போது அந்தப் பெண்மணி அவனிடம், அதை எடுத்த காரணத்தைக் கேட்டார். அவனின் நிலையை கேட்டறிந்த அவர், தம்பி தவறு என் பக்கமும் உள்ளது. எனது கவனக்குறைவும் ஒரு காரணம் என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டார். பின்னர், தான் ஒரு வருடமாக பாதுகாத்துவந்த தனது இறந்த கணவரின் வாகனச் சாவியை அவனிடம் கொடுத்தார். அவன் அதை பணம் கொடுக்காமல் வாங்க மறுத்தான். எனவே, அந்தப் பெண்மணி,  அவன் வாகனம் வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த கொஞ்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டார். அவனும் மன நிம்மதியுடன் புதிய வாழ்வைத் தொடங்கினான். (மனம் என்ற குறும்படத்தின் சுருக்கம்)

No comments:

Post a Comment