Tuesday, 26 May 2020

பூமியில் விழும் கீறல்கள், படைத்தவர் மீதும்..

பூமியில் விழும் கீறல்கள், படைத்தவர் மீதும்.. 2020ம் ஆண்டு பூமி நாள்

நாம் காயப்படுத்தியிருக்கும் பூமியும், சுற்றுச்சூழலும், முழு அடைப்பு காலத்தில் குணமாகியிருப்பதை உணர்கிறோம். இந்த முழு அடைப்பு நீங்கியதும், மீண்டும், நாம், பூமியையும், சுற்றுச்சூழலையும், காயப்படுத்தப்போகிறோமா?
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
இந்து மதப் பாரம்பரியத்தில் சொல்லப்படும் ஓர் அழகிய கதை இது:
சிறுவன் கணேசன், ஒரு நாள், தெருவில் சென்ற ஒரு பூனைக்குட்டியைக் கண்டான். அதனுடன் விளையாடுவதாக எண்ணிக்கொண்டு, அப்பூனைக்குட்டியின் காதுகளையும், வாலையும் இழுத்தான். அப்பூனையின் முகத்தில் கீறி, அதன் தலைமுடியை இழுத்து நேராக்க முயன்றான். அருகில் கிடந்த ஒரு பிரம்பை எடுத்து, பூனைக்குட்டியின் முதுகைக் காயப்படுத்தினான். வலியில் அலறியபடி, பூனைக்குட்டி, ஓடி மறைந்தது.
சிறுவன் கணேசன் வீடு திரும்பியதும், தன் அன்னையைக் கண்டு அதிர்ச்சியடைந்தான். அவனது தாயின் முகத்தில் கீறல்கள் இருந்தன. அவரது தலைமுடி அலங்கோலமாய் கிடந்தது. அவரது முதுகில் பிரம்படியால் உண்டான காயங்கள் இருந்தன. அவர் வேதனையில் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தார்.
அதிர்ச்சியடைந்த சிறுவன் கணேசன், தாயிடம் சென்று, "அம்மா, உங்களை யார் இந்நிலைக்கு உள்ளாக்கியது?" என்று கேட்க, அம்மா, வலியைப் பொறுத்துக்கொண்டு, "நீதான் மகனே" என்று கூறினார்.
"என்ன சொல்கிறீர்கள்? நான் ஒருபோதும் அப்படி செய்யமாட்டேன்" என்று, அதிர்ச்சியிலும், கோபத்திலும், கத்தினான் கணேசன்.
"சிறிது நேரத்திற்கு முன், ஒரு பூனைக்குட்டியிடம் நீ எவ்விதம்  நடந்துகொண்டாய் என்பது நினைவிருக்கிறதா?" என்று தாய் கேட்டார்.
தான் அடித்து விரட்டிய பூனைக்குட்டியின் சொந்தக்காரர்தான் அம்மாவை அடித்துவிட்டார் என்று எண்ணிய கணேசன், "எங்கே அந்த ஆள்? சொல்லுங்கள்" என்று மீண்டும் கத்தினான்.
அம்மா அவனிடம் பொறுமையாக, "கணேசா, நான் உனக்கு மட்டும் தாயல்ல. இந்த பூமியின் அனைத்து உயிர்களுக்கும் நான் தாய். மிகச் சிறிய உயிரினத்திற்கு நீ செய்வதையெல்லாம் எனக்கேச் செய்கிறாய்" என்று கூற, கணேசன் தன் தவறை உணர்ந்து, கண்ணீர் சிந்தினான்.
பூமியின் மீது விழும் கீறல்கள், பூமியைப் படைத்த ஆண்டவன் மீது விழும் காயங்கள். ஏப்ரல் 22ம் தேதி, பூமி நாளின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பித்தோம். அன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "நம் பொதுவான இல்லமான பூமிக்கோளம், நாம் தாறுமாறாக சீரழிப்பதற்கென தரப்பட்டுள்ள விற்பனைப்பொருள் கிடங்கு அல்ல. இந்த பூமியையும், அங்கு வாழும் நலிவுற்றோரையும் பேணிக்காப்போமாக" என்ற சொற்கள், இடம்பெற்றன.
கொரோனா தொற்றுக்கிருமிக்கு அஞ்சி. நம்மில் பலர், இல்லங்களில் சிறைப்பட்டிருக்கும் நேரத்தில், நாம் இதுவரை காயப்படுத்தியிருக்கும் பூமியும், சுற்றுச்சூழலும், ஓரளவு குணமாகியிருப்பதை உணர்கிறோம். இந்த முழு அடைப்பு நீங்கியதும், மீண்டும், நாம், பூமியையும், சுற்றுச்சூழலையும், இதே அளவு காயப்படுத்தப்போகிறோமா என்பது, நமக்கு முன்னிருக்கும் முக்கியக் கேள்வி.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...