Saturday, 23 May 2020

வேலிகள் அல்ல, பாலங்கள் அமைப்போம்

வேலிகள் அல்ல, பாலங்கள் அமைப்போம் மூங்கில் கழிகளால் உருவாக்கப்பட்ட பாலம்

பள்ளங்களைத் தோண்டி, வேலிகளை எழுப்பி இவ்வுலகத்தை துண்டாக்கியது போதும். இனி நமக்குத் தேவையானவை, பாலங்கள்!
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்
அண்ணனும், தம்பியும் அருகருகே இருந்த நிலங்களில் பயிரிட்டு வந்தனர். பல ஆண்டுகள் ஒற்றுமையாய் வாழ்ந்த இவ்விருவருக்கும் இடையே தோன்றிய ஒரு கருத்து வேறுபாடு, பெரும் மோதலாக மாறியது. ஒரு நாள், தம்பி, ஒரு 'புல் டோச'ரின் உதவிகொண்டு, இரு நிலங்களுக்குமிடையே, ஆழமான ஒரு பள்ளத்தை உருவாக்கினார்.
அடுத்தநாள், அண்ணன் வீட்டிற்கு ஓர் இளைஞர் வந்தார். தனக்கு தச்சு வேலை தெரியும் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவ்விளைஞர், தனக்கு ஏதாவது வேலை தரும்படி அண்ணனிடம் விண்ணப்பித்தார். அண்ணன் அவரிடம், "அதோ, அங்கு தெரிகிறதே, அது என் தம்பியின் வயல். அவனையோ, அவன் வயலையோ நான் பார்க்க விரும்பவில்லை. வீட்டுக்குப் பின்புறம் நான் அடுக்கிவைத்துள்ள கட்டைகளைக் கொண்டு, என் நிலத்திற்கும் அவனுடைய நிலத்திற்கும் இடையே உயரமான வேலியை எழுப்பிவிடு" என்று சொன்னார். இதைச் சொன்னபிறகு, அண்ணன் ஊருக்குள் சென்றார். வந்த இளைஞரும் தன் வேலையைத் துவக்கினார்.
மாலையில் அண்ணன் வீடு திரும்பியபோது, அவருக்கு ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. ஒரு வேலியை எழுப்புவதற்குப் பதில், இரு நிலங்களுக்கும் இடையே இருந்த பள்ளத்தை இணைத்து, ஒரு பாலத்தைச் கட்டியிருந்தார், இளைஞர். அந்தப் பாலத்தின் மறுபுறம் வந்து நின்ற தம்பி, அண்ணனைப் பார்த்து, "அண்ணா, என்னை மன்னித்துவிடு. நான் இவ்வளவு செய்தும், நீ இந்த பாலத்தைக் கட்டியிருப்பது, உன் நல்ல உள்ளத்தைக் காட்டுகிறது" என்று கூறியபடி அண்ணனைச் சந்திக்க ஓடிவந்தார். அண்ணனும், தம்பியும் அந்தப் பாலத்தின் நடுவே, ஒருவர் ஒருவரை தழுவிக்கொண்டனர்.
அவ்வேளையில், அண்ணனிடம் விடைபெற வந்த இளைஞரிடம், அண்ணன், "நீங்கள் செய்யவேண்டிய பணிகள் பல இங்கே உள்ளன. எனவே, இன்னும் சில நாட்கள் இங்கேயே தங்கவும்" என்று கூறினார். அதற்கு அந்த இளைஞர், "இங்கு தங்க எனக்கும் ஆசைதான். ஆனால், நான் கட்டி முடிக்கவேண்டிய பாலங்கள் இன்னும் பல உள்ளன" என்று சொல்லி, விடைபெற்றுச் சென்றார்.
பள்ளங்களைத் தோண்டி, வேலிகளை எழுப்பி இவ்வுலகத்தை துண்டாக்கியது போதும். இனி நமக்குத் தேவையானவை, பாலங்கள்!

No comments:

Post a Comment