Tuesday, 26 May 2020

போராட்டம் என்ற நூல்

போராட்டம் என்ற நூல்  பஞ்சாபில் பொது இடத்தில் இசைக் கலைஞர்கள்

கோவிட்-19 காலத்தில், பணியாற்றும் அனைத்து நலப்பணியாளர்கள், மருத்துவமனை சார்ந்த மற்ற பணியாளர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் போன்ற அனைவரும் தற்போது, உழைக்கும் கடவுள்களாக, மனித தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர்
மேரி தெரேசா: வத்திக்கான்
முடியாது என்று நினைத்த பல விடயங்கள் இப்போது நடந்து வருகின்றன. மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. துறை சார்ந்து, அறம் தவறியவர்களாக, சில திரைப்படங்களில் காட்டப்பட்ட மருத்துவர்களும், காவல்துறையினரும்தான், தற்போது உயிரைப் பணயம் வைத்து முன்வரிசையில் எங்கும் நிற்கிறார்கள். அவர்கள் அதிகம் வராத செய்திகளில், இப்போது அவர்கள் மட்டுமே வருகிறார்கள். இதுவரை நிமிர்ந்து ஏறிட்டுப் பார்க்கப்படாத துப்பரவுத் தொழிலாளர்களின் கால்களில், பாதபூஜைகள் செய்யப்படுகின்றன. சுவீடனில் ஒருவர், தான் சேர்த்து வைத்த பணத்தையெல்லாம் தெருவில் வீசியிருக்கிறார், ஆனால் அந்தப் பணத்தை எடுப்பதற்கு ஆள் இல்லை. நகரத்தில் இருந்த தன் மகனை அழைத்து வருவதற்காக, ஒரு தாய் தனியாக இருசக்கர வாகனத்தில் ஏறத்தாழ 1,400 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு ஊருக்கு அழைத்து வந்துள்ளார்... அடுத்த அத்தியாயத்தை தற்போது இயற்கை எழுதிக்கொண்டிருக்கிறது. உலகம் தன்னைத்தானே தூய்மைப்படுத்த ஆரம்பித்துவிட்டது. நாகரீகம் என்ற பெயரில் நாம் மறந்த பண்புகள் எல்லாவற்றையும், ஒரேயொரு கிருமி நமக்குத் திருப்பித் தந்துவிட்டது...  வத்திக்கான் வானொலியின் அன்பு இதயங்களே, இத்தகைய வரிகளை இந்நாள்களில் சமூக ஊடகங்கள் மிக அதிகமாகவே வெளியிட்டு வருகின்றன.
ஒரேயொரு நுண்கிருமி பரவல் காரணமாக, உலகெங்கும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு, மற்றும், சமூக விலகல் சூழல், வேலையின்மை, நிதிப்பிரச்சனை, செய்துவந்த வேலை பறிபோகும் நிலை, மனச்சோர்வு, பயம், பதற்றம், எரிச்சல், சலிப்பு, பணிச்சுமை அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில் உளவியல் மருத்துவர்கள் சிலரின் பதிவுகள் வாழ்வில் நம்பிக்கையூட்டுகின்றன. உளவியல் ஆலோசகர் சித்ரா அரவிந்த் அவர்கள் கூறுவது இதுதான். “கொரோனா கிருமித் தொற்றுப் பிரச்சனைக்குத் தீர்வு நம் கையில் இல்லை என்பதையே நாம் முதலில் புரிந்துகொள்ளவும் ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இருந்தபோதிலும், இந்த நேரத்தில் நாம் நம்பிக்கையை இழக்காமல் உடன்பாட்டுச் சிந்தனைகளோடு, நேர்மறை எண்ணங்களோடு இருப்பது, நம் உடல் மற்றும், மன நலனுக்கு மிகவும் அவசியம். வாழ்வே நம்பிக்கையில்தானே செல்கிறது. எனவே நல்லது நடக்கும் என்ற நல்ல சிந்தனையில் வளருவோம்.”  சித்ரா அரவிந்த் அவர்கள், இவ்வாறு வாழ, சில வழிமுறைகளையும் சொல்லியிருக்க. உளவியலாளரான, கப்புச்சின் துறவு சபை அருள்பணியாளர் L.K.சுரேஷ் ராஜ் அவர்கள், வாழ்வெனும் போராட்டத்தில், அதிலும், இப்போது, உலகின் பெரும் பகுதி நாடுகள், ஒரு கிருமியை ஒழிப்பதற்கு மேற்கொள்ளும் போராட்டத்தில் எப்படி வாழ்வது என்பதற்கு நம்பிக்கையூட்டும் தகவல் ஒன்றை, யூடியூப்பில் அருமையாகப் பதிவுசெய்திருக்கிறார்.
ஒருமுறை ஓர் அப்பாவும், அவரது மகனும் பட்டம் விட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். அந்தப் பட்டத்தின் நூல் அப்பாவின் கையில் இருந்தது. பட்டம் இன்னும் உயர உயரப் பறக்க வேண்டும் என்பதற்காக, அப்பா, அந்த நூலை இடையிடையே இழுத்தார். அவர் இழுக்க இழுக்க, அந்தப் பட்டம் உயர உயரப் பறந்தது. ஆனால் அப்பாவின் செயல் மகனுக்கு எரிச்சலூட்டியது. அவன் அப்பாவிடம், “அப்பா, எனக்கு இந்தப் பட்டத்தை மேலே மேலே பறக்க விடணும் என்ற ஆசை, ஆனா, நீங்க இதைப் பறக்கவிடாம, நூலைக் கையில பிடிச்சிருக்கீங்களே” என்று எரிச்சலோடு சொன்னான். உடனே அப்பா அந்த நூலை மகன் கண்முன்னாலேயே இரண்டாக அறுத்து விட்டார். அவ்வளவு நேரம் உயர உயரப் பறந்துகொண்டிருந்த அந்தப் பட்டம், மகனின் கண்முன்னாலேயே கீழே விழுந்தது. அதைப் பார்த்த மகன் அதிகமாக வருந்தினான். அப்போது அப்பா மகனிடம், “தம்பி, இவ்வளவு நேரம் இந்தப் பட்டத்தை உயரப் பறக்கவிடாமல் தடை செய்தது இந்த நூல் என்றுதானே நீ நினைத்தாய், அது உண்மை அல்ல, இந்த நூல் இருந்த காரணத்தினால்தான் பட்டம் உயர உயரப் பறந்தது” என்று விளக்கினார்.
ஆம். நம் வாழ்வும் இந்தப் பட்டம் போன்றது. அதைத் தாங்கிப் பறக்க வைத்துக்கொண்டிருக்கும் நூல், நம் வாழ்வின் பிரச்சனைகளும் கவலைகளும், போராட்டங்களும்தான். எப்போது நமக்குப் பிரச்சனைகளும் போராட்டங்களும் இல்லாமல் போகிறதோ, அப்போது நம் வாழ்வு எனும் பட்டம் உயரப் பறக்க முடியாது. இதைத்தான் சார்லஸ் டார்வின் என்பவர் தன் பரிணாமக் கொள்கையில் சொல்கிறார் – இந்த உலகத்திலுள்ள எல்லா உயிரினங்களும் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக்கொள்ள போராடிக்கொண்டே இருக்க வேண்டும். ஒருவேளை அந்த உயிரினம் போராடாமல் இருந்தாலோ, அந்தப் போராட்டத்திற்கான சூழ்நிலை இல்லாமல் போனாலோ, அந்த உயிர் தானாக அழிந்துவிடும் என்று சொல்கிறார். இது அறிவியலில் மட்டுமல்ல, உளவியல் உண்மையும்கூட. நாம் உடல்நலத்துடன் மனநிம்மதியுடன் வாழ, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்றால், போராட்டம் என்ற நூல் நமக்குத் தேவைப்படுகின்றது. இப்போதுள்ள கொரோனா கொள்ளை நோய் சூழலையும்கூட, ஒரு களமாக நினைக்க வேண்டுமேயொழிய நம்மை அழிக்கப்போகின்ற ஒரு பெரிய துன்பமாக நினைக்கக் கூடாது. இந்தக் களத்தில் போராட்டம் என்பது நிச்சயம் தேவையானது, அதற்கான வழிவகையையும், யுக்தியையும், முறையையும் நாம் கண்டறிய வேண்டுமே தவிர, இந்தப் போராட்டத்தால் நாம் அழிந்துபோய் விடுவோம் என்று எதிர்மறையாக நினைக்கக் கூடாது. நம்மால் எந்த போராட்டத்தையும் வெற்றிகொள்ள முடியும் என்பதை மனத்தளவில் நினைக்க வேண்டும். அது நம் ஒவ்வொருவராலும் இயலும். ஏனெனில் நாம் பிறக்கும்போதுகூட முப்பதுகோடி உயிரினங்களோடு சண்டைபோட்டுத்தான் இந்த உடலாகவும், உயிராகவும் மாறியிருக்கிறோம். அப்படிப்பட்ட போராட்டத்தை எதிர்கொண்ட நமக்கு, இப்போதைய கொள்ளை நோய்க்கெதிரான போராட்டம் அவ்வளவு பெரிதானதல்ல.  கவியரசு வைரமுத்து அவர்கள்கூட, சுடும்வரை நெருப்பு, சுற்றும்வரை பூமி, போராடும் வரை மனிதன் என்று சொல்லியிருக்கிறார். எனவே இந்தப் போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று நினைத்துப் போராடுவோம், வெற்றி என்பது நமக்கு உறுதி. வாழ்வு எனும் பட்டத்தை எப்போதும் பறக்க வைப்போம். இவ்வாறு கப்புச்சின் துறவு சபை அருள்பணியாளர் L.K.சுரேஷ் ராஜ் அவர்கள், பதிவு செய்திருக்கிறார்.
வாழ்வென்னும் படகு, நம்பிக்கை எனும் கடலில்தானே பயணிக்கிறது. இந்த நெருக்கடி காலத்திலும் தங்களைப் பற்றி, தங்களின் வருங்காலத்தைப் பற்றி கவலைப்படாமல், கருணையுள்ள இதயங்கள் பல ஆற்றி வரும் அரும்பணிகள் பற்றி ஊடகங்கள் பாராட்டி வருகின்றன. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த, தாஜம்முல் பாஷா, முஷம்மில் பாஷா ஆகிய இரு சகோதரர்கள் அந்நகரில் உள்ள, தங்களுக்குச் சொந்தமான 25 இலட்சம் ரூபாய் மதிப்புகொண்ட நிலத்தை நண்பருக்கு விற்று, ஏழைகளுக்கு இப்போது உணவளித்து வருகின்றனர். பாஷா சகோதரர்கள் இவ்வாறு சொல்கின்றனர். ``நாங்கள் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து கோலாரில் பாட்டி வீட்டிற்கு வந்தோம். நாங்கள் உணவின்றி துன்புற்றபோது சீக்கியர், இஸ்லாம், இந்து போன்ற அனைத்து மதத்தவரும் எங்களுக்கு உணவளித்தனர். சாதி, மதப் பாகுபாடின்றி மனிதநேயத்தோடு எங்களுக்கு உதவியதால், அதே பண்பால் நாங்கள் இதனைச் செய்து கொண்டிருக்கிறோம், எல்லா குடும்பங்களுக்கும் மூன்று வேளையும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்" என்று அவர்கள் கூறியுள்ளனர். பாஷா சகோதரர்கள், பன்னிரண்டாயிரத்துக்கும் அதிகமான நபர்களைக்கொண்ட 2,800-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்களை வழங்கியிருக்கின்றனர். ஏறக்குறைய இரண்டாயிரம் மக்களுக்கு, தினசரி உணவு அளித்து வருகின்றனர்.
உடுப்பியில், ஒரு தகரக் குடிசையில் வாழ்ந்துகொண்டு, மீன் விற்று வாழ்க்கை நடத்தி வரும் சாரதம்மா என்ற பெண்மணி, தனது வீட்டைச் சீரமைப்பதற்காகச் சேமித்து வைத்திருந்த முப்பதாயிரம் ரூபாயில், எழுநூறு கிலோ அரிசி வாங்கி, ஏழை மக்கள் 150 பேருக்கு அவற்றைப் பகிர்ந்தளித்துள்ளார். இப்படிச் செய்வதற்கு எப்படியம்மா மனது வந்தது என்று ஒருவர் கேட்டபோது, “மனதுதான் சார் கடவுள்” என்று, உயர்ந்த உள்ளம் சாரதம்மா அவர்கள், பளிச்சென பதில் சொல்லியிருக்கிறார்.
அகமதாபாத் நகரைச் சேர்ந்த ஸ்மிரிதி தாக்கர் என்பவர், இந்தியாவின் முதல் கோவிட்-19 பிளாஸ்மா நன்கொடையாளர் என்ற புகழைப் பெற்றுள்ளார். ஸ்மிரிதி அவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அதன் பின்னர், தனது வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இதையடுத்து மருத்துவர்கள் அவரைத் தொடர்புகொண்டு பிளாஸ்மா சிகிச்சைமுறை குறித்து கூறியுள்ளனர். பிளாஸ்மா சிகிச்சை முறை, கொரோனா கிருமித் தொற்று நோயாளிகளைக் குணப்படுத்த ஓரளவு கைகொடுக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், ஸ்மிரிதி அவர்கள் பிளாஸ்மா தானம் வழங்கியுள்ளார். பிளாஸ்மா என்பது, இரத்த அணுக்களை ஏந்திச் செல்லும் திரவம். கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளியின் இரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு உடலில் செலுத்தும் முறைதான் பிளாஸ்மா சிகிச்சைமுறை. இம்முறையில், நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் உள்ள எதிர்ப்பு புரதத்தைப் பயன்படுத்தி, சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் எதிர்ப்புசக்தி அதிகரித்து, கொரோனாவுக்கு எதிராகப் போராட, அவர்களது உடல் தயாராகிறது என்று சொல்லப்படுகிறது.
பதட்ட உணர்வு ஆபத்தானது என்று உணர்ந்து, அச்சத்தைத் தவிர்த்து, நேர்மறைச் சிந்தனைகளைப் பரப்புவோம். சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, மற்றவரின் பணிச்சுமையைக் குறைப்போம். இல்லாதவரை நினைத்து சிக்கன வாழ்வை மேற்கொள்வோம். வாழ்வு எனும் பட்டத்தில், எப்போது போராட்டம் எனும் நூல் அறுந்துபோகின்றதோ, அப்போது நம் வாழ்வு எனும் பட்டம் உயரப் பறக்க முடியாது என்பதை உணருவோம். நம்பிக்கையில் நகர்வதே வாழ்வு. நம்பிக்கையுடன் வாழ்ந்து, மற்றவரையும் வாழ வைக்கும் உயர்ந்த உள்ளங்களை வாழ்த்துவோம். வருகிற வெள்ளியன்று உழைப்பாளர் நாள் சிறப்பிக்கப்படுகின்றது. உழைக்கும் மக்கள் எல்லாருக்கும், சிறப்பாக, இந்த கோவிட்-19 காலத்தில், தங்கள் உயிரையும், குடும்பத்தையும், உறவுகளையும் பற்றிச் சிந்திக்காது பணியாற்றும் அனைத்து நலப்பணியாளர்கள், மருத்துவமனை சார்ந்த மற்ற பணியாளர்கள், காவல்துறையினர், தொற்றுக்கான ஆபத்து, மற்றும், வேதிய நச்சுப்பொருள்கள் உள்ள பல்வேறு பகுதிகளிலும் பணியைத் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போன்ற அனைவரும் தற்போது, உழைக்கும் கடவுள்களாக, மனித தெய்வங்களாகப் போற்றப்படுகின்றனர். இவர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்து வாழ்த்துவோம். அவர்களின் குடும்பங்களுக்காகச் செபிப்போம்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...