Tuesday, 26 May 2020

உணவில் உப்பை காணமுடியாது, சுவையை மட்டுமே உணரலாம்

உணவில் உப்பை காணமுடியாது, சுவையை மட்டுமே உணரலாம் கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ்

மாணவன் என்பவன், கொக்கைப் போலவும், கோழியைப் போலவும், உப்பைப் போலவும் மட்டுமல்ல, கேள்விகளால் தெளிவுபெற விரும்புபவனாகவும் இருக்க வேண்டும்.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்து, ''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான். அதற்கு சாக்ரடீஸ், ''மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப்போல இருக்க வேண்டும். உப்பைப்போல இருக்கவேண்டும். உன்னைப்போல இருக்கவேண்டும்'' என்றார்.
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான்.
''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்யவேண்டும். கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாங்கள் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்'' என்றார்.
''எல்லாம் சரி, உன்னைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன்.
''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெறவேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்கவேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...