Tuesday, 26 May 2020

விதையாகும் கதைகள்: நன்றியுடன் இறைவேண்டல்

விதையாகும் கதைகள்: நன்றியுடன் இறைவேண்டல் சிங்கம்

பிரச்சனைகள் வரும்போது அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து நன்றியுணர்வோடு பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் பிரச்சனைகளுக்கு கிடைக்க வேண்டிய தீர்வை, கடவுள் உங்கள் வழியாகவே நிறைவேற்றுவார்
 மேரி தெரேசா: வத்திக்கான்
அமைச்சர்கள் சிலருடன் வேட்டைக்குச் சென்ற அரசர் ஒருவர், களைத்துப் போய் ஒரு மரத்திற்கடியில் படுத்தார். திடீரென்று ஒரு சிங்கம் அவர்களை நோக்கி வந்தது. அதைப் பார்த்த அமைச்சர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு அரசரை தனியே விட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். அரசர் மட்டும் தனியே இருந்தார். சிங்கம் தன்னை நோக்கி வருவதைப் பார்த்து அலறினார் அரசர். அந்நேரத்தில், எங்கிருந்தோ வந்த காட்டுவாசி ஒருவர் சிங்கத்தை நோக்கி அம்பு எய்தார். சிங்கம் இறந்துவிட்டது. அரசரின் உயிரும் காப்பாற்றப்பட்டது. அளவில்லா ஆனந்தம் அடைந்த அரசர், அந்த காட்டுவாசியைத் தன்னருகில் அழைத்து, கட்டி அணைத்து, உனக்கு பொன் வேண்டுமா, பொருள் வேண்டுமா, இந்த அரசில் பாதி வேண்டுமா, என்ன வேண்டுமானாலும் கேள்  என்று கூறினார். எனக்கு எதுவும் வேண்டாம் என்று காட்டுவாசி பலமுறை மறுத்தும், அரசர் விடுவதாய் இல்லை. எனவே காட்டுவாசி அரசரிடம், சரி, எனது வீட்டுக்கு ஒரேயொருமுறை மட்டும் வந்து செல்லுங்கள் என்று சொன்னார். அப்படியா, எனது பிறந்த நாளையே உனது வீட்டில் கொண்டாடுகிறேன் என்றார் அரசர். இதையறிந்த அமைச்சர் ஒருவர், அரசர் பிறந்தநாளைக் கொண்டாடும் இடம் மண் குடிசையாக இருக்கக் கூடாது என்று நினைத்து, காட்டுவாசியின் வீட்டை மாளிகையாக மாற்றியமைத்தார். அந்த அமைச்சருக்குப் போட்டியாக மற்ற அமைச்சர்களும், தங்கச் சரிகை வேட்டிகள், தங்கம், வெள்ளியாலான பாத்திரங்கள் உணவுத்தட்டுகள் போன்ற பலவற்றால் காட்டுவாசியின் வீட்டை நிரப்பினர். அவர் வீட்டுக்குச் செல்லும் மண்பாதையை, தார் சாலையாக மாற்றினர். ஆம். இந்த காட்டுவாசி, அரசரிடம் இவற்றையெல்லாம் கேட்கவில்லை. கேட்காத அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. அதேபோல் நாமும் கடவுளிடம், இதைக் கொடு, அதைக் கொடு என்று பட்டியல் போடாமல், நீர் என் இதய இல்லத்துக்குள் வாரும் என்று ஒருமுறை அழைத்துப் பார்ப்போம். அப்போது அந்த காட்டுவாசிக்கு கிடைத்ததுபோல் அத்தனையும் கிடைக்கும். இதுதான் பிரார்த்தனை. இதுதான் இறை வேண்டல். ஓர் ஆன்மீகவாதி சொல்கிறார் - பிரார்த்தனையில் நன்றியுணர்வு இருந்தால் நாம் கேட்கும் நியாயமான வேண்டுதல்கள் நிச்சயம் கைகூடும். எனவே, நன்றியுணர்வோடு கடவுளை மனத்திற்குள் அழைப்போம். பிரச்சனைகள் வரும்போது அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து நன்றியுணர்வோடு பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் பிரச்சனைகளை, கடவுள் உங்கள் வழியாகவே தீர்த்து வைப்பார். எத்தனை பெரிய பிரச்சனையாக இருந்தாலும், அதை உங்களைத் தவிர வேறு யாராலும் தீர்த்து வைக்க முடியாது. இதைச் சுட்டிக்காட்டுவது பிரார்த்தனை என்று.

No comments:

Post a Comment