Monday, 2 December 2013

நெல்லையில் அடுத்த உலகத் தமிழ் மாநாடு

நெல்லையில் அடுத்த உலகத் தமிழ் மாநாடு

Source: Tamil CNN
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்திய தனிநாயகம் அடிகளார் பணியாற்றிய திருநெல்வேலியில், அடுத்த உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும் என தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு நிறைவு விழாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு கலை விழா சனிக்கிழமை இரவு விழாக் குழு செயல்-தலைவர் ஜோமிஸ் அடிகள் தலைமையில் பாளையங்கோட்டையில் நடைபெற்றது.
வரவேற்புக் குழுச் செயலர் அ. சேவியர் வரவேற்றார். விழாவில் தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழா சுடர்ஒளியை திறனாய் வாளரும், எழுத்தாளருமான தி.க. சிவசங்கரன், அருட்சகோதரி ஏ. மார்க்ரெட்மேரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தனிநாயகம் அடிகளார் ஒலி நாடாவை கவிஞர் தேவேந்திரபூபதி வெளியிட, அதனை புலவர் ஆ. சிவசுப்பிரம ணியன், எம்.கே.எம். முகம்மதுஷாபி, ம. மோயீசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். தனிநாயகம் அடிகளார் நூல் தொகுதியை அமெரிக்காவைச் சேர்ந்த முனைவர் பிரான்சிஸ் சவரிமுத்து வெளியிட, சேவியர் கல்லூரி அதிபர் டேனிஸ் பொன்னையா பெற்றுக்கொண்டார்.
நூற்றாண்டு விழாப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு திறனாய்வாளர் தி.க. சிவசங்கரன், அருட் சகோதரி மார்க்ரெட்மேரி ஆகியோர் பரிசுகள் வழங்கினர். முனைவர் கு. ஞானசம்பந்தன், அறிஞர் நா. முகம்மது கருத்துரை ஆற்றினர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முதல் நான்கு உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகளை நடத்திய தனிநாயகம் அடிகளார் பணியாற்றிய வடக்கன்குளம் அமைந்துள்ள திருநெல்வேலியில் அடுத்த உலகத் தமிழ் மாநாட்டை நடத்த வேண்டும். மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடிகளார் பெயரில் இருக்கை நிறுவ வேண்டும்.
தனிநாயகம் அடிகளாரின் படைப்புகளை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாடத் திட்டமாக இடம்பெறச் செய்ய வேண்டும். அவரது படைப்புகள், நூல்களை அரசுடமையாக்க வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் நிதியில் அடிகளார் பெயரில் திருச்சியில் இயங்கும் இதழியல் கல்லூரி மற்றும் தமிழ் ஆராய்ச்சி நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.
நெல்லையில் தமிழிசைப் பல்கலைக்கழகம் நிறுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வித் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். தமிழ் மொழி குறித்து ஆய்வு மேற்கொண்ட பேராயர் கால்டுவெல்லின் 200-ஆவது ஆண்டு நிறைவு விழாவை அரசு நடத்த வேண்டும்.
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுகளின் முடிவுகளின் முழு அறிக்கையை வெளியிட வேண்டும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்தினையும் தன்னகத்தே கொண்ட திருநெல்வேலி மாவட்டம், அரிய மூலிகைகளைக் கொண்ட பொதிகை மலை, நாகரிகம் வளர்த்த தாமிரவருணி நதியைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனிநாயகம் அடிகளார் நினைவாக தபால் தலை வெளியிட வேண்டும். திருநெல்வேலி மாநகராட்சி பொருட் காட்சித் திடலில் தனிநாயகம் அடிகளார் நினைவுத் தூண் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment