Sunday, 1 December 2013

செய்திகள் - 30.11.13

 செய்திகள் - 30.11.13
------------------------------------------------------------------------------------------------------

1. சிரியாவில் வன்முறை நிறுத்தப்பட திருத்தந்தை பிரான்சிஸ் மீண்டும் அழைப்பு

2. திருத்தந்தை பிரான்சிஸ் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோவிடம் : உலகுக்கு நம் பொதுவான சான்று அவசியம்

3. திருத்தந்தை பிரான்சிஸ், புற்றுநோய்ச் சிறார் சந்திப்பு

4. திருத்தந்தை பிரான்சிஸ் : அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வு ஆண்டு 2015

5. அனைத்துலக இறையியல் பணிக் குழுவின் ஆண்டுக் கூட்டம்

6. வளர்இளம் பருவத்தினர் மத்தியில் HIV நோய்க் கிருமிகளின் பாதிப்பைத் தடுக்க முயற்சிகள் தேவை, யூனிசெப்

7. இந்தியாவில் மூன்றில் ஓர் இளையோர்க்கு வேலை இல்லை

8. சிரியாவில் இடம்பெறும் சண்டை ஒரு தலைமுறைச் சிறாரின் வாழ்வை அழிக்கின்றது, ஐ.நா.

9. சிறு வயது திருமணத்தைத் தவிர்க்க தேசிய பெண் குழந்தை தினம் பரிந்துரை

------------------------------------------------------------------------------------------------------

1. சிரியாவில் வன்முறை நிறுத்தப்பட திருத்தந்தை பிரான்சிஸ் மீண்டும் அழைப்பு

நவ.30,2013. சிரியாவில் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள் எப்பொழுதும் தனது நினைவில் இருப்பதாகவும், தங்களின் வாழ்வையும், தங்களின் அன்புறவுகளையும் இழந்தவர்களை எப்பொழுதும் நினைத்துச் செபிப்பதாகவும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமையில் வாழும் கிரேக்க மெல்கித்தே வழிபாட்டுமுறை கத்தோலிக்கரில் 300 பேரை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் இச்சனிக்கிழமையன்று சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், சிரியாவில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு
செபம் மற்றும் ஒப்புரவின் வலிமையை நாம் உறுதியாக நம்பியருக்கிறோம் எனக் கூறினார்.
சிரியாவில் வன்முறையை நிறுத்துவதற்குப் பொறுப்பானவர்களுக்கு மீண்டும் நாம் அழைப்புவிடுப்போம் என உரைத்த திருத்தந்தை, சிரியாவில், ஏற்கனவே மிக அதிகமான அழிவுகளைக் கொண்டுவந்துள்ள சண்டைக்கு நீதியும் நிரந்தரமானதுமான தீர்வை உரையாடல் மூலம் அவர்கள் கண்டுணரட்டும் எனவும் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு கிறிஸ்தவர்களில் பலர் உலகின் பல பாகங்களில் வாழ்ந்து வருவதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இக்கிறிஸ்தவர்கள் தங்களின் மெல்கித்தே வழிபாட்டுமுறையின் மனித மற்றும் ஆன்மீக மரபுகளில் ஊன்றியிருக்குமாறும் கேட்டுக்கொண்டார்.  
புனித பேதுருவின் சகோதரராகிய புனித அந்திரேயாவின் விழாவான இந்நாளில், கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபையினர் அனைவரையும் சிறப்பாக நினைப்பதாகத் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோவிடம் : உலகுக்கு நம் பொதுவான சான்று அவசியம்

நவ.30,2013. இவ்வுலக சமுதாயத்தையும் கலாச்சாரத்தையும் மேம்படுத்துவதற்கு, கிறிஸ்தவம் தனது பங்களிப்பை அளிக்கும்போது அது நியாயமாய் நடத்தப்படவும்,  கிறிஸ்தவர்கள் தங்களது விசுவாசத்தை பொதுவில் கடைப்பிடிப்பதற்கு அவர்களுக்கு இருக்கும் உரிமையை எல்லா இடங்களிலும் பாதுகாக்கவும் அனைத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் உறுதியான ஒத்துழைப்பு அதிகம் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித அந்திரேயாவின் விழாவான இச்சனிக்கிழமையன்று கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ், உலகின் பல பாகங்களில் பாகுபாட்டை எதிர்நோக்கும் கிறிஸ்தவர்களையும், சில சமயங்களில் தங்கள் விசுவாசத்துக்காக இரத்தம் சிந்தும் கிறிஸ்தவர்களையும் புனித அந்திரேயாவின் மறைசாட்சி வாழ்வை நினைவுகூரும் இந்நாள் நினைக்க வைக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை, போர், பசி, வறுமை மற்றும் கடும் இயற்கைப் பேரிடர்களால் நெருக்கடி நிலையில் வாழும் மக்களையும் இந்நாளில் நினைத்துப்பார்க்கும் அதேவேளை, உரையாடல், மன்னிப்பு, ஒப்புரவு ஆகிய மூன்றுமே மோதல்களுக்குத் தீர்வை வழங்கும் எனவும் கூறியுள்ளார் திருத்தந்தை.
மத்திய கிழக்கு கிறிஸ்தவர்களின் நிலை குறித்தும், அக்கிறிஸ்தவர்கள் தங்களின் தாயகங்களில் வாழ்வதற்கான உரிமை குறித்தும் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ கொண்டுள்ள அக்கறையை தான் அறிந்துள்ளதாகவும், இப்பகுதியின் அமைதி, ஒப்புரவுக்காகவும், மக்களின் நியாயமான உரிமைகள் ஏற்கப்படவும் நாம் தொடர்ந்து உழைப்போம் எனவும் அச்செய்தியில் உறுதி கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.  
கான்ஸ்டான்டிநோபிள் சென்றுள்ள திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை வாசித்தளித்தார்.
புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவான ஜூன் 29ம் தேதியன்று கான்ஸ்டான்டிநோபிள் பிரதிநிதிகள் குழு வத்திக்கான் வருவதும், புனித அந்திரேயாவின் விழாவான நவம்பர் 30ம் தேதியன்று வத்திக்கான் பிரதிநிதிகள் குழு கான்ஸ்டான்டிநோபிள் செல்வதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ், புற்றுநோய்ச் சிறார் சந்திப்பு 

நவ.30,2013. இரத்த புற்றுநோய் மற்றும் பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்ட போலந்து நாட்டின் Wroclaw நகர்ச் சிறாரை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உங்களின் தாங்க முடியாத வேதனைகளை இறைவன் அறிகிறார், உங்களின் செபங்கள் மற்றும் வேதனைகளால் நீங்கள் திருஅவைக்கு நிரம்பச் செய்ய முடியும் என இச்சிறாரிடம் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், அவர்கள் ஒவ்வொருவரையும் முத்தமிட்டு வாழ்த்தி ஆசீர்வதித்தார்.
இச்சிறார் இங்கு வந்ததற்காகவும், திருஅவைக்காக அவர்கள் செபிப்பதற்காகவும் நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை.
மேலும், நாம் ஒவ்வொருவரும், வானகத்தந்தையின் கனிவு மற்றும் மன்னிப்பைத் தழுவிக்கொள்ளுமாறு திருஅவை அழைக்கிறது என இச்சனிக்கிழமையன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இன்னும், உரோம் பல்கலைக்கழக மாணவர்களுடன் மாலை திருவழிபாடு நடத்துவது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்சனிக்கிழமை நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளது.
வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இம்மாலை வழிபாடு நடைபெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வு ஆண்டு 2015

நவ.30,2013. 2015ம் ஆண்டு, அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்கென அர்ப்பணிக்கப்படும் என, இவ்வெள்ளிக்கிழமை காலையில் ஆண் துறவு சபைகளின் 120 அதிபர்களை வத்திக்கான் உலக ஆயர்கள் மாமன்ற அரங்கில் சந்தித்தபோது அறிவித்தார்  திருத்தந்தை பிரான்சிஸ்.
கடந்த புதன் முதல் இவ்வெள்ளிவரை உரோமையில் 82வது பொதுப் பேரவையை நடத்திய இந்த அதிபர்களுக்கு சிறிய உரையாற்றிய பின்னர், கேள்வி பதில் போன்ற கலந்துரையாடல் நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ், மறைமாவட்ட வாழ்வை துறவற சபைகள் எவ்வாறு வளப்படுத்த முடியும் என்பது பற்றி விளக்கினார்.
மூன்றுமணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில் தனது கருத்துக்களை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களுக்குப் பணி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்குமாறு தங்களின் துறவு சபைகளின் உறுப்பினர்களை ஊக்கப்படுத்துமாறும் இந்த அதிபர்களைக் கேட்டுக்கொண்டார்.
அந்தந்த இடங்களில் வாழும் மக்கள் தங்களின் அன்றாட வாழ்வில் திருஅவையின் போதனைகளை நன்கு கடைப்பிடிப்பதற்கு அம்மக்களுடன் உரையாடல் நடத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை, துறவு சபைகளின் உருவாக்குதல் குறித்தும் பேசினார்.
இச்சந்திப்பின் இறுதியில், 2015ம் ஆண்டு, அர்ப்பணிக்கப்பட்ட துறவு வாழ்வுக்கென அர்ப்பணிக்கப்படும் என அறிவித்ததோடு, துறவு சபைகளின் விசுவாசம் மற்றும் சேவைக்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. அனைத்துலக இறையியல் பணிக் குழுவின் ஆண்டுக் கூட்டம்

நவ.30,2013. வருகிற டிசம்பர் 2 முதல் 6 வரை வத்திக்கானில் அனைத்துலக இறையியல் பணிக்குழுவினர் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஒரே கடவுள் கொள்கை, கிறிஸ்தவ கோட்பாட்டுச்சூழலில் திருஅவையின் சமூகக் கோட்பாடுகள், விசுவாச உள்ளுணர்வு குறித்த பிரச்சனைகள் ஆகிய மூன்று தலைப்புகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் இக்கூட்டத்தின் இறுதி நாளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்திப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறையியல் பணிக்குழுவின் தலைவரான விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத் தலைவர் பேராயர் Gerhard Ludwig Müller அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தை இப்பணிக்குழுவின் செயலரான தொமினிக்கன் சபையின் அருள்பணி Serge-Thomas Bonino நடத்துவார். அருள்பணி Bonino, விசுவாசக்கோட்பாட்டுப் பேராயத்தின் ஆலோசகராகவும் உள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. வளர்இளம் பருவத்தினர் மத்தியில் HIV நோய்க் கிருமிகளின் பாதிப்பைத் தடுக்க முயற்சிகள் தேவை, யூனிசெப்

நவ.30,2013. 2005ம் ஆண்டிலிருந்து 8 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகளின் வாழ்வு HIV நோய்க் கிருமிகளின் பாதிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளவேளை, வளர்இளம் பருவத்தினர் மத்தியில் இந்நோய்க் கிருமிகளின் பாதிப்பு அதிர்ச்சியூட்டும் விதத்தில் இருப்பதாக, யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல நிறுவனம் கூறுகிறது.
டிசம்பர் 1, இஞ்ஞாயிறன்று உலக எய்ட்ஸ் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி புதிய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள யூனிசெப் நிறுவனம், 2005க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில், 10க்கும் 19 வயதுக்கும் இடைப்பட்ட வயதினரின் எய்ட்ஸ் நோய்த் தொடர்புடைய இறப்புகள் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக்  கூறுகிறது.
2005ம் ஆண்டில் 5,40,000 குழந்தைகள் HIV நோய்க் கிருமிகளால் தாக்கப்பட்டிருந்தனர். இவ்வெண்ணிக்கை 2012ம் ஆண்டில் 2,60,000மாக இருந்தது எனவும் யூனிசெப் நிறுவன ஆய்வறிக்கை கூறுகிறது.
புதிய எச்.ஐ.வி. தொற்று இல்லாதபுறக்கணித்தல் இல்லாத மற்றும் எய்ட்ஸ் மூலம் இறப்பில்லாத நிலையை ஏற்படுத்துதல்என்ற மையக் கருத்தில் இவ்வாண்டின்  உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும், எய்ட்ஸ் நோயைத் தடுக்க அனைவரும் தன்னார்வ இரத்தப் பரிசோதனை செய்திட வேண்டும் என தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதாரம் : UN

7. இந்தியாவில் மூன்றில் ஓர் இளையோர்க்கு வேலை இல்லை

நவ.30,2013. இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வரும் கல்வி வளர்ச்சிக்கு ஏற்ப வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்து வருகிறது என மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஆய்வு தெரிவிக்கிறது.
இளையோர் வேலைவாய்ப்பு-வேலைவாய்ப்பின்மை,2012-2013 என்ற தலைப்பில், சண்டிகாரிலுள்ள தொழில் அமைச்சகப் பிரிவு நடத்திய ஆய்வில், நாடு முழுவதும் உள்ள பட்டதாரி இளையோரில் மூன்றில் ஒருவர் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் இளையோரிடையே உள்ள வேலைவாய்ப்பு குறித்து எடுக்கப்பட்ட  கணக்கெடுப்பில்,  15 வயது முதல் 29 வயதுக்குட்பட்ட இளையோரிடையே அதிகளவில் வேலை வாய்ப்பின்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்பி்ன்மையின் விகிதம் கிராமப்புறங்களில் 36.6 விழுக்காடாகவும், புறநகர் பகுதிகளில் இதன் விகிதம் 26.5 விழுக்காடாகவும் காணப்படுகிறது. அதேநேரத்தில் எவ்விதக் கல்வியறிவு இல்லாத 15க்கும் 29 வயதுக்கும் உட்பட்ட இளையோரிடையேயான வேலைவாய்ப்பின்மை 3.7 விழுக்காடாகவும்  காணப்படுகிறது.
கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் முதல் 2013ம் ஆண்டு மே வரையில் இது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசம், மாவட்டங்கள் என ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 354 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதி்ல் 82 ஆயிரத்து 624 வீடுகள் புறநகர்ப் பகுதிகளில் இருந்தும், 50 ஆயிரத்து 730 வீடுகள் கிராமப்புறங்களிலும் கணக்கில் கொள்ளப்பட்டது.

ஆதாரம் : PTI

8. சிரியாவில் இடம்பெறும் சண்டை ஒரு தலைமுறைச் சிறாரின் வாழ்வை அழிக்கின்றது, ஐ.நா.

நவ.30,2013. சிரியாவில் இடம்பெறும் சண்டை ஒரு தலைமுறைச் சிறாரின் வாழ்வை அழிக்கின்றது என, ஐ.நா. வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்று எச்சரிக்கின்றது.
பள்ளிக்குச் செல்லும் வயதுடைய சிரியா நாட்டுச் சிறார், அண்டை நாடுகளுக்குச் அகதிகளாகச் சென்று கல்வி கற்காமலும், கட்டாயமாக வேலைக்குச் செல்லும் நிலையிலும் உள்ளனர் எனவும் அவ்வறிக்கை கூறுகின்றது.
லெபனன் மற்றும் ஜோர்டனில் ஏறக்குறைய மூன்று இலட்சம் சிரியா நாட்டுச் சிறார் பள்ளிக்குச் செல்லாமல் அகதிகளாக வாழ்கின்றனர் எனவும், லெபனனில் உள்ள சிரியா நாட்டுச் சிறாரில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் பள்ளிக்குச் செல்லவில்லையெனவும் ஐ.நா. கூறியுள்ளது.
சிரியாவின் சண்டையில் 11 ஆயிரத்துக்கு அதிகமான சிறார் கொல்லப்பட்டுள்ளனர் என, இலண்டனை மையமாகக் கொண்ட ஒரு கருத்துக்கணிப்பு மையம் கூறியுள்ளது. 

ஆதாரம் : UN

9. சிறு வயது திருமணத்தைத் தவிர்க்க தேசிய பெண் குழந்தை தினம் பரிந்துரை

நவ.30,2013. சிறு வயது திருமணங்களைத் தவிர்க்கவும், இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் ஜனவரி, 24ம் தேதியை தேசிய பெண் குழந்தை தினமாக அனுசரிக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு இந்திய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறு வயது திருமணம்  வட மாநிலங்களிலும் அதிகளவில் நடப்பதால், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, மத்திய அரசு இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சிறு வயது திருமணங்களை முக்கிய பிரச்சனையாக, மாநில அரசுகள் எடுத்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறு வயது திருமணங்களால் குழந்தைகள் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிக்கப்படும் நிலையை மாற்ற வேண்டும். பெண்ணுக்குத் திருமணத்திற்கான வயது 18 என்ற போதிலும், 18ல் இருந்து, 29 வயதுக்குள் திருமணம் நடத்தினால்தான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெண் குழந்தைகள் வெற்றி பெற முடியும். ஆண்களுக்கு, 21 வயது என்ற போதிலும், 21 முதல், 29 வயதுக்குள் திருமணம் நடந்தால்தான், அவர்களது எதிர்காலம் சிறப்படையும். இத்தகையக் கருத்துகள் குறித்த விழிப்புணர்வை இளம்பருவத்தினரிடம் ஏற்படுத்த வேண்டும்.
சிறு வயது திருமணங்களைத் தவிர்க்க, மாவட்ட அளவில் சிறப்பு அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்றவை அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சில நாட்களுக்குமுன், சென்னை, சோழவரத்தில், பிளஸ் 2 மாணவிக்கு நடக்க இருந்த திருமணத்தை, சமூக நலத்துறை அதிகாரிகள், தடுத்து நிறுத்தியுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்திலும், சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம், அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தினமலர்

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...