Sunday, 1 December 2013

செய்திகள் - 29.11.13

செய்திகள் - 29.11.13
------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ்: அறிவு ஒரு கொடை, கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு ஏற்றவிதத்தில் சிந்திக்கின்றனர்

2. திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரை மன்னிப்பதற்கு ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம்

3. இலத்தீன் அமெரிக்கா உலகுக்குத் தனது மேலான பங்களிப்பை வழங்க முடியும், கர்தினால் Filoni

4. ஈராக், சிரியா கிறிஸ்தவர்களுக்காக முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தினமும் செபம்

5. இலங்கையில் ஓர் அருள்பணியாளருக்கு மிரட்டல் : ஆயர் கவலை

6. பொருளாதார ஏமாற்றத்தால் துன்புறும் மக்களின் எண்ணிக்கை உலகில் அதிகரிப்பு

7. ஊட்டச்சத்துப் பற்றாக்குறைச் சிறாருக்குச் சிகிச்சை வழங்குவது குறித்த ஐ.நா.வின் புதிய வழிகாட்டிகள்

8. நிலவில் துளசி செடி: நாசா மையத்தின் திட்டம்

------------------------------------------------------------------------------------------------------


1. திருத்தந்தை பிரான்சிஸ்: அறிவு ஒரு கொடை, கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு ஏற்றவிதத்தில் சிந்திக்கின்றனர்

நவ.29,2013. கிறிஸ்துவைப் பின்செல்லுகிறவர், அறிவைமட்டும் பயன்படுத்தாமல், தனது இதயத்தையும், தனக்குள் இருக்கும் ஆவியையும் பயன்படுத்திச் சிந்திக்கின்றனர், இவ்வாறு சிந்திக்காவிடில், வரலாற்றில் கடவுளின் பாதையை அவரால் புரிந்துகொள்ள இயலாது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  
இவ்வெள்ளிக்கிழமை காலையில் வத்திக்கான் புனித மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய சிறிய மறையுரையில் கிறிஸ்தவராகச் சிந்திப்பதை மையப்படுத்தி சிந்தனைகளை வழங்கினார்.
கிறிஸ்தவர்கள், இந்த உலகு விரும்பும் வலுவற்ற, ஒரே மாதிரியான எண்ணங்களைப்  பின்பற்றாமல், கடவுளின் மக்கள் என்ற முறையில் சுதந்திரமான எண்ணங்களைக் கொண்டவர்களாய் இருக்கின்றனர், கடவுளுக்கு ஏற்றவிதத்தில் அவர்கள் சிந்திக்கின்றனர் என்றும் கூறினார் திருத்தந்தை.
கடவுள் இத்தகையவராய் இருக்கவேண்டுமென்பதைப் புரிந்துகொள்ளாமல் இருந்த எம்மாவுஸ் சீடர்களோடு பேசியபோது, இயேசு அவர்களை, அறிவிலிகளே, மந்த உள்ளத்தினரே என்று அழைத்தார் என்றும், தாம் கூறியவைகளைச் சீடர்கள் புரிந்துகொள்ளாமல் இருந்தபோது இயேசு அவர்கள்மீது கோபப்படவில்லை, ஆனால், அவ்வாறு இருப்பதாகத் தன்னைக் காட்டிக்கொண்டார் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
நமது வாழ்வில், நமது இதயத்தில், உலகில், வரலாற்றில், இந்த நொடிப்பொழுதில் என்ன நடக்கின்றது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டுமென்று இயேசு விரும்புகிறார், இவையெல்லாம் காலத்தின் அறிகுறிகள் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நடப்பது என்ன என்பதை புரிந்துகொள்வதற்கு நாம் சுதந்திரமாகச் சிந்திப்பவர்களாக இருக்குமாறு இயேசு அழைக்கிறார் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இதற்கு நம் ஆண்டவரின் உதவி நமக்குத் தேவை என்பதால் அவரிடம் அருள் வேண்டுவோம் எனவும், காலத்தின் அறிகுறிகளைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான அறிவென்னும் கொடையை தூய ஆவி தருகிறார் என்றும் இத்திருப்பலியில் மறையுரையில் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் : பிறரை மன்னிப்பதற்கு ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம்

நவ.29,2013. பிறரை மன்னிப்பது கடினம். எனவே, ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம். இதன்மூலம் நாம் எப்பொழுதும் பிறரை மன்னிக்க இயலும் என, இவ்வெள்ளிக்கிழமையன்று, தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருப்பீடப் பொருளாதார நிர்வாகச் சீர்திருத்தம் குறித்த அவைக்குத் தனது பிரதிநிதியாக, பேரருள்திரு Alfred Xuerebஐ நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்தின் பொருளாதார மற்றும் நிர்வாகத் துறைகளின் சீர்திருத்தத்தை மேற்பார்வையிடுவதற்கு ஒரு சிறப்புக் குழுவையும், வத்திக்கான் வங்கி எனப்படும் சமயப் பணிகள் நிறுவனத்தை மேற்பார்வையிடுவதற்கு ஒரு குழுவையும் இவ்வாண்டில் உருவாக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்விரு குழுக்களின் பணிகளை மேற்பார்வையிட்டு அவை குறித்தத் தகவல்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு வழங்குவார் பேரருள்திரு Alfred Xuereb.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. இலத்தீன் அமெரிக்கா உலகுக்குத் தனது மேலான பங்களிப்பை வழங்க முடியும், கர்தினால் Filoni

நவ.29,2013. நற்செய்தி இன்னும் அறிவிக்கப்படாத பகுதிகள், அண்மையில் நற்செய்தியை அறிந்த பகுதிகள், இன்னும் போதுமானஅளவு நற்செய்தியைப் பெறவில்லை என உணரப்படும் பகுதிகள் ஆகியவற்றில் நற்செய்தியை அறிவிக்க வேண்டியது அனைத்துத் தலத் திருஅவைகளின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டினார் கர்தினால் Fernando Filoni.
வெனெசுவேலா நாட்டின் Maracaiboல் 4வது அமெரிக்க மறைபோதக மாநாடு மற்றும் 9வது இலத்தீன் அமெரிக்க மறைபோதக மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய, திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Filoni, விசுவாசமும், மக்களுக்கு நற்செய்தி அறிவிப்பும் இக்காலத்தில் பெரும் சவால்களை எதிர்கொள்கின்றன எனவும் குறிப்பிட்டார்.
இலத்தீன் அமெரிக்காவிலிருந்து முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  திருத்தந்தை பிரான்சிஸ் மறைபோதக நடவடிக்கைகள் பற்றியும், மறைபோதகத் திருஅவையின் முதல்பணி நற்செய்தியை அறிவிப்பது என்பதையும் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார் என்றுரைத்தார் கர்தினால் Filoni.
அமெரிக்கத் திருஅவை, நற்செய்தி அறிவிப்பில் இன்னும் அதிகம் தனது பங்களிப்பை அளிக்க முடியும் எனவும், ஏழ்மையின் பல வடிவங்கள் நிலவும் இக்கண்டத்தில் தனது விசுவாசத்தைப் பகிர்ந்துகொளள இயலா அளவுக்கு யாரும் ஏழை கிடையாது எனவும் இம்மாநாட்டில் கூறினார் கர்தினால் Filoni

ஆதாரம் : Fides

4. ஈராக், சிரியா கிறிஸ்தவர்களுக்காக முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தினமும் செபம்

நவ.29,2013. ஈராக், சிரியா மற்றும் கீழை நாடுகளிலுள்ள கிறிஸ்தவர்களுக்காகத் தான் தினமும் செபிப்பதாக முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தெரிவித்ததாக, கல்தேய வழிபாட்டுமுறையின் முதுபெரும் தலைவரும், பாக்தாத் பேராயருமான இரபேல் லூயிஸ் சாக்கோ கூறினார்.
வத்திக்கானில் கீழை வழிபாட்டுமுறை பேராயம் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் கீழை வழிபாட்டுமுறைகளின் முதுபெரும் தலைவர்களும் பேராயர்களும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்தித்தது குறித்து ஆசியச் செய்தி நிறுவனத்திடம் பேசிய முதுபெரும் தலைவர் சாக்கோ இவ்வாறு தெரிவித்தார்.
மத்திய கிழக்கு மற்றும் கீழை நாடுகளின் கிறிஸ்தவர்கள் குறித்து திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் அக்கறையோடு விசாரித்ததாகவும், அக்கிறிஸ்தவர்களுக்காகத் தான் தினமும் செபிப்பதாகவும் கூறியதாகத் தெரிவித்தார் முதுபெரும் தலைவர் சாக்கோ.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஈராக் நாட்டுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு தான் அழைத்ததாகவும் கூறினார் முதுபெரும் தலைவர் சாக்கோ.

ஆதாரம் : AsiaNews

5. இலங்கையில் ஓர் அருள்பணியாளருக்கு மிரட்டல் : ஆயர் கவலை

நவ.29,2013. இலங்கையின் கிழக்கு மாநிலத்தில் திருகோணமலையிலுள்ள குவாதலூப்பே ஆலய பங்குத் தந்தைக்கு புலனாய்வுத் துறையினர் என தங்களை அடையாளப்படுத்திய நபர்களினால் துப்பாக்கி முனையில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக திருகோணமலை ஆயர் கிங்ஸிலி சுவாமிபிள்ளை தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்திற்கு முதல் நாள், செவ்வாய்கிழமை இரவு இலக்கமற்ற இரண்டு சக்கர வாகனத்தில் ஆலயத்திற்கு வந்த இருவர், துப்பாக்கிமுனையில் பங்குத் தந்தையான அருட்திரு எஸ்.எஸ். ஜோன்பிள்ளைக்கு இந்த அச்சுறுத்தலை விடுத்துச் சென்றுள்ளதாக ஊடகச் செய்திக் குறிப்பு கூறுகின்றது.
குறித்த நபர்கள் தங்களை புலனாய்வுத் துறை எனக் கூறிய போது அதிகாரபூர்வ அடையாள அட்டையை காட்டுமாறு அருள்தந்தை அந்நபர்களைக் கேட்டபோது அந்நபர்கள் அவரது உடையைப் பிடித்து உலுக்கி, கீழே தள்ளிவிட்டு வெளியேறும்போது இந்த அச்சுறுத்தலை விடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, காவல்துறை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதோடு, இது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என கேட்டுள்ளார்.
இதற்கிடையே, இனந்தெரியாத குழுவொன்று துப்பாக்கி முனையில் அருள்திரு ஜோன்பிள்ளையை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் திருகோணமலை காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஆதாரம் : TamilNet

6. பொருளாதார ஏமாற்றத்தால் துன்புறும் மக்களின் எண்ணிக்கை உலகில் அதிகரிப்பு

நவ.29,2013. பொருளாதாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி கிடைக்காததால் ஏற்படும் ஏமாற்றத்தால் துன்புறும் மக்களின் எண்ணிக்கை உலகில் கடந்த பல ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றது என புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
பொருளாதாரத்தில் எதிர்கொண்ட ஏமாற்றத்தால் 2012ம் ஆண்டில் உலகில் வயதுவந்தவர்களில் ஏழு பேருக்கு ஒருவர் வீதம் துன்புற்றுள்ளனர் எனவும், இந்நிலை தெற்கு ஆசியாவில் 24 விழுக்காடாகவும், பால்கன் பகுதியில் 21 விழுக்காடாகவும், அதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் அதிகம் இருந்ததாகவும் 
Gallup நடத்திய புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள முன்னணி கருத்துக் கணிப்பு நிறுவனமான Gallup நடத்திய ஆய்வில், இந்தியாவில் இவ்வாறு துன்புறும் மக்களின் எண்ணிக்கை, 2006க்கும் 2008க்கும் இடைப்பட்ட காலத்தைவிட, 2010க்கும் 2012க்கும் இடைப்பட்ட காலத்தில் இரண்டு மடங்குக்கு அதிகமாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : IANS                       

7. ஊட்டச்சத்துப் பற்றாக்குறைச் சிறாருக்குச் சிகிச்சை வழங்குவது குறித்த ஐ.நா.வின் புதிய வழிகாட்டிகள்

நவ.29,2013. உலகில் கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையை எதிர்நோக்கும் ஐந்து வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 2 கோடிச் சிறாருக்குச் சிகிச்சை வழங்குவது குறித்த புதிய நடைமுறை வழிகாட்டிகளை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் உலக நலவாழ்வு நிறுவனம்.
இச்சிறார்க்கு வீடுகளிலே சிகிச்சை அளிக்க அனுமதிப்பது, இவர்களில் எய்ட்ஸ் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிப்பது உட்பட கடும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் துன்புறும் சிறாருக்கு சிகிச்சை வழங்குவது குறித்த புதிய நடைமுறைவிதிகளை வெளியிட்டுள்ளது உலக நலவாழ்வு நிறுவனம்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெறத் தேவையில்லாத இச்சிறாருக்கு வீடுகளிலேயே சிகிச்சை வழங்கப்படுவதற்கான வழிகாட்டிகளையும் இந்நிறுவனம்   வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : UN

8. நிலவில் துளசி செடி: நாசா மையத்தின் திட்டம்

நவ.29,2013. நிலவில் மனிதர் வாழ்ந்து வேலை செய்ய இயலுமா என்பதை அறிந்துகொள்வதற்காக, நிலவில் 2015ம் ஆண்டுக்குள் தாவரங்களை வளரச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி ஆய்வு மையம்.
இதற்கான பணிகள் தற்போதே தொடங்கப்பட்டுவிட்டது, தற்போது எந்த வகை பயிர்களை முளைக்க வைப்பது என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.
இதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி, துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ் என்ற ஒருவகை தாவரத்தைப் பயிரிட முடியும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றின் விதைகள் 5 முதல் 10 நாட்களில் முளைக்கும் தன்மை உடையவை.
இதற்காக 2015ம் ஆண்டில் ஆய்வுக் கூடம் ஒன்றும் அனுப்பப்படுகிறது.
இந்த விதைகளை முளைக்க வைத்து காய்கறி விளைவிப்பதன் மூலம் அங்கு மனிதர் தங்கி உயர் வாழ முடியுமா என்ற ஆய்வையும் தொடர்ந்து நடத்த நாசா திட்டமிட்டுள்ளது.
நிலவு அல்லது செவ்வாய்க் கிரகத்தில் காய்கறிகளைப் பயிரிடும் திட்டத்தை,  கடந்த ஆண்டில் சீன அறிவியலாளர்கள் அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Agencies

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...