Tuesday, 17 December 2013

செய்திகள் - 16.12.13

செய்திகள் - 16.12.13
------------------------------------------------------------------------------------------------------

1. இறைவாக்கு உரைக்கும் பண்பு திருஅவையில் குறையும்போது, சடங்குகள் ஆற்றும் குருத்துவம் வளர்ந்துவிடும் ஆபத்து உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

2. சோகமாக இருக்கும் மக்களின் சரணாலயம் கத்தோலிக்கத் திருஅவை அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்

3. 'Villa Nazareth' என்ற அமைப்பைச் சார்ந்தவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துக்கள்

4. கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, இலங்கை ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள சுற்றுமடல்

5. மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வன்முறையற்ற, நல்மனம் கொண்டவர்கள் - பேராயர் லூயிஸ் இரபேல் சாக்கோ

6. கொலராடோ உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டென்வர் பேராயர் ஆழ்ந்த வருத்தம்

7. "வீடற்ற இயேசு" என்ற வடிவம், உரோம் நகரில் ஒரு முக்கியமான இடத்தில் நிரந்தரமாக வைக்கப்படலாம்
8. பாக்தாத் நகராட்சியின் முயற்சியால், Karrada என்ற நகரில் கிறிஸ்மஸ் மரம்

------------------------------------------------------------------------------------------------------

1. இறைவாக்கு உரைக்கும் பண்பு திருஅவையில் குறையும்போது, சடங்குகள் ஆற்றும் குருத்துவம் வளர்ந்துவிடும் ஆபத்து உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்

டிச.16,2013. இறைவாக்கு உரைக்கும் பண்பு திருஅவையில் குறையும்போது, சடங்குகள் ஆற்றும் குருத்துவம் வளர்ந்துவிடும் ஆபத்து உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
டிசம்பர் 16, இத்திங்களன்று புனித மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் காலை திருப்பலியாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவாக்கினர்கள் பணியை தன் மறையுரையின் மையமாக்கினார்.
கடந்த காலத்தின் வாக்குறுதிகள், நிகழ்காலத்தின் நடைமுறைகள், எதிர்காலத்தின் துணிவு என்ற மூன்று குணங்களை ஒருங்கிணைப்பவர் இறைவாக்கினர் என்பதை திருத்தந்தை விளக்கிக் கூறினார்.
வரலாறு முழுவதிலும் இறைவாக்கினர்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதைக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவுக்கும் இதே நிலை உருவானது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இறைவாக்கினர்களின் பண்புகளை அறியாமல், தாங்களே கோவிலைப் பாதுகாப்பவர்கள் என்று எண்ணியதால், 'எந்த அதிகாரத்தில் இவற்றை செய்கிறீர்?' என்று இயேசுவிடம் கோவில் குருக்கள் கேள்விகள் எழுப்பினர் என்று சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இறை வாக்கு உரைக்கும் பண்பு திருஅவையிலிருந்து குறையும்போது, கோவில் குருத்துவம் அதிக சக்திபெறும் என்பதையும் தெளிவுபடுத்தினார்.
இதற்கிடையே, கிறிஸ்துவர்கள் இல்லாத மத்தியக் கிழக்குப் பகுதியை நாம் எண்ணிப் பார்க்க இயலாது, ஒவ்வொரு நாளும் அமைதிக்காக வேண்டுவோம் என்ற Twitter செய்தியை, டிசம்பர் 16, இத்திங்களன்று 9 மொழிகளில் வெளியிட்டார் திருத்தந்தை.
மேலும், டிசம்பர் 17, இச்செவ்வாயன்று, தன் 77வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு நம் மனம்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. சோகமாக இருக்கும் மக்களின் சரணாலயம் கத்தோலிக்கத் திருஅவை அல்ல - திருத்தந்தை பிரான்சிஸ்

டிச.16,2013. கத்தோலிக்கத் திருஅவை, சோகமாக இருக்கும் மக்களின் சரணாலயம் அல்ல என்றும், கடவுள் நம்மை விரும்பித் தேடிவந்து அன்பு செய்கிறார் என்பதில் அடங்கியுள்ள மகிழ்வே நற்செய்தி சொல்லும் மகிழ்வு என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருவருகைக் காலத்தில், 'மகிழும் ஞாயிறு' என்று அழைக்கப்படும் மூன்றாம் ஞாயிறன்று வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, கிறிஸ்தவ மகிழ்வை தன் சிறு உரையின் மையமாக்கினார்.
தங்கள் இல்லங்களில் அலங்கரிக்கப்படும் கிறிஸ்மஸ் குடிலில் வைக்கப்படவிருக்கும் குழந்தை இயேசு திரு உருவத்தை, மகிழும் ஞாயிறன்று, குழந்தைகள் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்திற்குக் கொணர்ந்து, திருத்தந்தையின் ஆசீரைப் பெறுவது வழக்கம்.
இந்த வழக்கத்தையொட்டி, வளாகத்தில் கூடிவந்திருந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளையும், அவர்கள் கொணர்ந்திருந்த குழந்தை இயேசுவின் திரு உருவையும் அசீர்வதித்தத் திருத்தந்தை, தான் அவர்களை, குழந்தை இயேசுவிடம் நினைவுகூர்வதுபோல், அவர்களும் தன்னை நினைவுகூர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
நாம் எவ்வளவுதான் வலுவற்றவர்களாக இருந்தாலும், இறைவன் நம்மோடு இருக்கிறார் என்ற உயர்ந்த எண்ணம் நம்மை வாழ்வில் உந்தித் தள்ளவேண்டும் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நமது தோல்விகளைக் கண்டு மனம் தளர்ந்து போகும்போது, இறைவனை விட்டு நாம் விலகிச் செல்கிறோம் என்றும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பெய்த மழையிலும் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையைக் கேட்க வந்திருந்த பக்தர்களின் நல்ல மனதைப் புகழ்ந்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. 'Villa Nazareth' என்ற அமைப்பைச் சார்ந்தவர்களுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்த்துக்கள்

டிச.16,2013. திருஅவையின் பிறரன்புப் பணிகளில் முழுமையாக ஈடுபட்டுள்ள 'Villa Nazareth' என்ற அமைப்பைச் சார்ந்தவர்களுக்குத் தன் வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்களுக்கு திருப்பீடச் செயலாராகப் பணியாற்றிய கர்தினால் Domenico Tardini அவர்களால் உருவாக்கப்பட்ட 'Villa Nazareth' என்ற பிறரன்பு அமைப்பின் உறுப்பினர்களை இஞ்ஞாயிறு மதியம் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினர் ஆற்றிவரும் பணிகளுக்குத் தன் பாராட்டைத் தெரிவித்தார்.
கர்தினால் Tardini அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் வழியாக, அறிவுத் திறன் மிக்க ஏழை மாணவர்களின் கல்விக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன.
பேராயராக இருந்த Tardini அவர்கள், 1958ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி கர்தினாலாகவும், திருப்பீடச் செயலாராகவும் உயர்த்தப்பட்ட நாளின் நினைவைக் கொண்டாட 'Villa Nazareth' அமைப்பினர், இஞ்ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலியில் கலந்துகொண்டனர். இத்திருப்பலிக்குப் பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினரைச் சந்தித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, இலங்கை ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள சுற்றுமடல்

டிச.16,2013. இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போனவர்களைக் குறித்த உண்மைகள் வெளியிடப்பட வேண்டும்; தமிழர்களும், சிங்களவர்களும் இணைந்து நாட்டின் அமைதியை உறுதி செய்யவேண்டும் என்ற விண்ணப்பங்கள் அடங்கிய ஒரு மடலை இலங்கை ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ளது.
"ஒப்புரவை நோக்கியும், நாட்டை கட்டியெழுப்பவும்" என்ற தலைப்பில், கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி, இலங்கை ஆயர்கள் பேரவை வெளியிட்டுள்ள இந்தச் சுற்றுமடல் இலங்கை அரசை மட்டும் கருத்தில் கொண்டு வெளியிடப்பட்ட மடல் அல்ல, மாறாக, இலங்கை வாழ் அனைத்து மக்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்ட மடல் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் கூறினார்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்து இவ்வளவு காலம் ஆகியும், இன்னும் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்பாமல் இருப்பது குறித்து ஆயர்கள் தங்கள் கவலையை இம்மடலில் வெளியிட்டுள்ளனர்.
உள்நாட்டுப் போரில் காணமல் போனவர்களைப் பற்றிய உண்மைகள் வெளியிடப்படவேண்டும் என்றும், பல்வேறு வடிவங்களில் தொடர்ந்துவரும் சித்திரவதைகள் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் ஆயர்களின் இம்மடல் வலியுறுத்துகிறது.

ஆதாரம் : AsiaNews

5. மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வன்முறையற்ற, நல்மனம் கொண்டவர்கள் - பேராயர் லூயிஸ் இரபேல் சாக்கோ

டிச.16,2013. மத்தியக் கிழக்குப் பகுதியில் வாழும் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வன்முறையற்ற, நல்மனம் கொண்டவர்கள் என்று பாபிலோனிய கல்தேய வழிபாட்டு முறை கத்தோலிக்க முதுபெரும் தந்தை பேராயர் லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.
உரோம் நகர் உர்பானியா பல்கலைக் கழகத்தில், 'கிறிஸ்தவமும், விடுதலையும்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய பேராயர் சாக்கோ அவர்கள், இஸ்லாமியரில் பெரும்பான்மை மக்கள் நல்மனம் கொண்டவர்கள் என்றாலும், வன்முறையை மேற்கொள்ளும் அடிப்படை வாதக் குழுக்களுக்கு எதிராகக் குரல் எழுப்ப  முடியாமல் தவிக்கின்றனர் என்பதை அவர் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
இஸ்லாமியரின் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அங்கு வேரூன்றியிருந்த கிறிஸ்தவம், தொடர்ந்து அங்கு தங்கவேண்டும் என்ற தன் ஆவலையும் பேராயர் சாக்கோ வெளியிட்டார்.
இஸ்லாமிய கோட்பாடுகள் தற்போதைய காலக் கட்டத்திற்குப் பொருந்துமாறு அமைவதற்கு, உலக நாடுகளின் தலையீடு அவசியம் என்பதையும் முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : CNA/EWTN

6. கொலராடோ உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு டென்வர் பேராயர் ஆழ்ந்த வருத்தம்

டிச.16,2013. அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் அடிக்கடி நடைபெறும் அர்த்தமற்ற வன்முறைகள் நம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது என்று டென்வர் பேராயர் Samuel Aquila அவர்கள் கூறினார்.
டிசம்பர் 13, கடந்த வெள்ளியன்று கொலராடோவின் Arapahoe உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்த பேராயர் Aquila அவர்கள், கிறிஸ்து பிறப்பு விழாவை நெருங்கிக் கொண்டிருக்கும் நாம், நாட்டின் இளையோரைச் சிறப்பாக நினைத்து, செபங்களை எழுப்புவோம் என்று கேட்டுக் கொண்டார்.
2100 மாணவர்களைக் கொண்ட Arapahoe பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மூவர் காயமடைந்தனர் என்றும், இந்த வன்முறையை மேற்கொண்டவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார் என்றும் கூறப்படுகிறது.
A பள்ளிக்கு எட்டு மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள Columbine உயர்நிலைப் பள்ளியில், 1999ம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், 15 பேர் இறந்தனர். மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, Connecticut மாநிலத்தில் Sandy Hook என்ற பள்ளியில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 20 குழந்தைகளும், 6 ஆசியர்களும் கொல்லப்பட்டனர்.

ஆதாரம் : CNA

7. "வீடற்ற இயேசு" என்ற வடிவம், உரோம் நகரில் ஒரு முக்கியமான இடத்தில் நிரந்தரமாக வைக்கப்படலாம்

டிச.16,2013. "வீடற்ற இயேசு" என்ற கருத்துடன் அமைந்திருந்த இயேசுவின் உருவத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொட்டபோது, உலகெங்கும் வீடற்று இருக்கும் மக்கள் அனைவரையும் அவர் தொட்டதுபோல் நான் உணர்ந்தேன் என்று சிற்பக்கலைஞர் Timothy Schmalz அவர்கள் கூறினார்.
கனடாவின் Toronto நகரைச் சார்ந்த Schmalz என்ற சிற்பக் கலைஞர், "வீடற்ற இயேசு" என்ற பொருள்படும் உருவத்தை வடித்து, அதனை வத்திக்கான் புனித பேதுரு வளாகத்திற்கு சென்ற மாத இறுதியில் கொணர்ந்தார்.
தெருவோரம் அமைந்துள்ள ஒரு பெஞ்சில் படுத்திருப்பது போன்ற இவ்வடிவத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புதன் பொது மறைப்போதகத்தின் இறுதியில் ஆசீர்வதித்தபோது, அந்த உருவத்தின் கால்களைத் தொட்டு ஒரு நிமிடம் செபித்தார்.
"வீடற்ற இயேசு" என்ற இந்த வடிவம், உரோம் நகரில் ஒரு முக்கியமான இடத்தில் நிரந்தரமாக வைக்கப்படலாம் என்று CNS செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : CNS

8. பாக்தாத் நகராட்சியின் முயற்சியால், Karrada என்ற நகரில் கிறிஸ்மஸ் மரம்
டிச.16,2013. ஈராக் நாட்டின் பாக்தாத் நகராட்சியின் முயற்சியால், Tigris நதியின் கிழக்குக் கரையில் அமைத்துள்ள Karrada என்ற நகரில் கிறிஸ்மஸ் மரம் ஒன்று வைக்கப்படவுள்ளது.
நாட்டைவிட்டு வெளியேறும் கிறிஸ்தவர்களைத் தடுத்து, அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு முயற்சியாகவும், Karrada நகரில் கிறிஸ்தவ இஸ்லாமிய உறவு நல்முறையில் அமைந்துள்ளது என்பதைக் காட்டவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்று பாக்தாத் நகராட்சி தெரிவித்துள்ளது.
15 அடி உயரமுள்ள இந்த கிறிஸ்மஸ் மரம் விரைவில் வண்ண விளக்குகளுடன் அமைக்கப்படும் என்று பாக்தாத் கலாச்சாரக் குழுவின் தலைவர் Salah Abdel Razaaq அவர்கள் கூறினார்.
2003ம் ஆண்டு ஈராக் நாட்டில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களின் வன்முறைகளுக்கு இலக்காகி வருகின்றனர்.
இதனால், 10 ஆண்டுகளுக்கு ஈராக்கில் 20 இலட்சம் என்ற அளவில் இருந்த கிறிஸ்தவர்கள், தற்போது 3 இலட்சமாகக் குறைந்துள்ளனர் என்று ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...