செய்திகள் - 03.12.13
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : மகிழ்ச்சியோடு இல்லாத திருஅவையை கற்பனை செய்து பார்க்க முடியாது
2. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் இயேசுவுடன் நண்பர்களாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம்
3. குடியேற்றதாரர்மீது அன்பும் தோழமையும் காட்ட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது, கர்தினால் வேலியோ
4. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள 12 ஆர்த்தடாக்ஸ் அருள்சகோதரிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை, பேராயர் செனாரி
5. ஈரானின் அணுத்திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள உடன்பாட்டுக்கு அமெரிக்க ஆயர் பேரவை பாராட்டு
6. தாய்லாந்தில் கத்தோலிக்கத் தொழிலதிபர்களின் அனைத்துலக கருத்தரங்கு
7. மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் அனைத்துத் தடைகளும் அகற்றப்படுமாறு ஐ.நா.பொதுச்செயலர் வலியுறுத்தல்
8. நவீனகால அடிமைமுறை ஒழிக்கப்படுவதற்கு பான் கி மூன் வேண்டுகோள்
9. ஹாங்காங்கில் புதிய வகை பறவைக் காய்ச்சல்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : மகிழ்ச்சியோடு இல்லாத திருஅவையை கற்பனை செய்து பார்க்க முடியாது
டிச.03,2013. கிறிஸ்துபோன்று திருஅவை எப்பொழுதும் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும், மகிழ்ச்சியோடு காணப்படாத திருஅவை நினைத்துப் பார்க்க முடியாதது என, இச்செவ்வாய் காலை வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் நிறைவேற்றியத் திருப்பலியில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதி, மகிழ்ச்சி ஆகிய இரு தலைப்புக்களை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, உண்மையான அமைதியை வழங்கும் ஆண்டவரின் மகிழ்ச்சியை தம் பிள்ளைகளுக்கு வழங்குமாறு திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
இன்றையத் திருப்பலியின் முதல் வாசகத்தில், மெசியா நமக்குக் கொண்டுவரும் அமைதி பற்றி எசாயா இறைவாக்கினர் பேசுகிறார், அதேசமயம், இன்றைய நற்செய்தியில், மகிழ்வான இயேசுவின் இதயத்தைப் பார்க்கிறோம் எனக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
போதிக்கும், குணமளிக்கும், பயணம்செய்யும், தெருக்களில் நடக்கும் இயேசுவை நாம் எப்பொழுதும் நினைக்கிறோம், ஆனால், இயேசு புன்முறுவலுடன் காணப்பட்டதை, மகிழ்ச்சியாக இருந்ததை நாம் நினைத்துப் பார்க்கப் பழக்கப்படவில்லை என மறையுரையில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இயேசு தூய ஆவியில் தமது தந்தையோடு உள்ளார்ந்த உறவில் இருந்தபோது அவர் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தார், அவர் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்திருந்தார் எனக் கூறினார்.
இந்தத் தமது உள்ளார்ந்த மகிழ்ச்சியை இயேசு நமக்கு அளிக்கிறார், இந்த மகிழ்ச்சி, ஓர் அமைதியான நிலை அல்ல, ஆனால், இந்தக் கிறிஸ்தவ மகிழ்ச்சி உண்மையான அமைதி, ஏனெனில் நம் ஆண்டவர் மகிழ்ச்சியாக இருந்தார் என விளக்கினார் திருத்தந்தை.
மகிழ்ச்சியாக இல்லாத திருஅவையை கற்பனை செய்து பார்க்க முடியாது என்றும், திருஅவையின் மகிழ்ச்சி இயேசுவின் பெயரை அறிவிப்பதில் உள்ளது என்றும், அவர் கடவுள், அவர் ஆண்டவர், அவர் நம்மோடு நடக்கிறார், அவர் நம்மை மீட்கிறார் என்பதை அறிவிப்பது திருஅவையின் மகிழ்ச்சி என்றும், மணமகளாக இருக்கும் இம்மகிழ்ச்சியில் திருஅவை தாயாக மாறுகிறது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருத்தந்தை பிரான்சிஸ் : நாம் இயேசுவுடன் நண்பர்களாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம்
டிச.03,2013.
நாம் இயேசுவுடன் நண்பர்களாக இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம். ஆண்டவரால்
அன்புகூரப்பட உங்களைக் கையளிப்பதற்கு அஞ்சவேண்டாம் என்று இச்செவ்வாயன்று
தனது டுவிட்டரில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வெப்பநிலை மாற்றம், நீதி சார்ந்த விவகாரம், இந்நிலையை அகற்றுவதற்கு, மனித மாண்பை அடிப்படையாகக்கொண்ட, ஒழுக்கநெறி அணுகுமுறையோடு இணைந்த தொழில்நுட்ப அறிவு அவசியம் என்ற, பேராயர் செலஸ்தீனோ மிலியோரேயின் கூற்றை, தனது @terzaloggia டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளது திருப்பீடச் செயலகம்.
பேராயர் மிலியோரே, 2010ம் ஆண்டு ஜூலையில் போலந்து நாட்டுக்கானத் திருப்பீடத் தூதராக, முன்னாள்
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு
முன்னர் ஐ.நா.வுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப்
பணியாற்றினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. குடியேற்றதாரர்மீது அன்பும் தோழமையும் காட்ட வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது, கர்தினால் வேலியோ
டிச.03,2013. குடியேற்றதாரர்மீது அன்பும் தோழமையும் காட்ட வேண்டிய பொறுப்பு உலகினர் அனைவருக்கும், குறிப்பாக நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கும், அரசுகளுக்கும் உள்ளது என, திருப்பீட குடியேற்றதாரர் மற்றும் அகதிகள் அவைத் தலைவர் கர்தினால் அந்தோணியோ மரிய வேலியோ இச்செவ்வாயன்று மால்ட்டாவில் கூறினார்.
மால்ட்டாவின் La Vallettaவில் இத்திங்களன்று தொடங்கிய 3 நாள் கூட்டத்தில் இச்செவ்வாயன்று உரையாற்றிய கர்தினால் வேலியோ, அடைக்கலம் தேடும் குடியேற்றதாரரின் மனித மாண்பு மதிக்கப்படுமாறும் வலியுறுத்தினார்.
ஐரோப்பாவிலே அதிகமாகப் புகலிடம் கேட்கப்படும் நாடு மால்ட்டா என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய கர்தினால் வேலியோ, ஆப்ரிக்காவின்
கொம்பு நாடுகளிலிருந்து வரும் குடியேற்றதாரரில் 50 விழுக்காட்டினர்
மால்ட்டாவில் கரையிறங்குகின்றனர் எனத் தெரிவித்தார்.
19
ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் குடியேற்றதாரர் பணிக்குழுக்களின் தலைவர்கள்
மற்றும் பிற வல்லுனர்கள் என ஏறக்குறைய 40 பேர் கூட்டத்தில் கலந்து
கொள்கின்றனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள 12 ஆர்த்தடாக்ஸ் அருள்சகோதரிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை, பேராயர் செனாரி
டிச.03,2013.
சிரியாவில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் இத்திங்கள் மாலையில் கடத்தப்பட்ட 12
ஆர்த்தடாக்ஸ் அருள்சகோதரிகளின் நிலை என்னவென்று தெரியவில்லை என, தமாஸ்கிலுள்ள திருப்பீடத்தூதர் பேராயர் மாரியோ செனாரி கூறினார்.
Maaloulaவிலுள்ள புனித தேக்ளா துறவு இல்லத்திலிருந்து 12 ஆர்த்தடாக்ஸ் அருள்சகோதரிகள் Yabrud நகர் நோக்கி இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்திச் செல்லப்பட்டனர் என்றும், இச்சகோதரிகள் குறித்த தகவல்கள் இதுவரை எதுவும் தெரியவில்லை எனவும் பேராயர் செனாரி ஆசியச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
Maaloula நகரில், சிரியா இராணுவத்துக்கும், இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கும் இடையே கடந்த இரண்டு நாள்களாக கடும் சண்டை இடம்பெற்று வருகிறது.
இதற்கிடையே, சிரியா அரசுத்தலைவர் Bashar al-Assadன் அங்கீகாரத்தாலும் அந்நாட்டில் போர்க்காலக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என, ஐ.நா. மனித உரிமைகள் அவைத் தலைவர் நவிபிள்ளை இத்திங்களன்று குறைகூறியுள்ளார்.
ஆதாரம் : AsiaNews
5. ஈரானின் அணுத்திட்டம் தொடர்பாக ஏற்பட்டுள்ள உடன்பாட்டுக்கு அமெரிக்க ஆயர் பேரவை பாராட்டு
டிச.03,2013. சர்ச்சைக்குரிய ஈரானின் அணுத்திட்டம் தொடர்பாக, மேற்கத்திய
நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் ஓர் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை
வரவேற்றுள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும்
அமைதிப் பணிக்குழுத் தலைவர் ஆயர் Richard Pates.
இவ்வுடன்பாடு தொடர்பாக அமெரிக்க ஐக்கிய நாட்டுச் செயலர் John Kerryக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியுள்ள ஆயர் Pates, ஈரானுடன் தொடர்ந்து அயராது நடத்திய உரையாடலின் பயனாக இவ்வுடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நடவடிக்கையைவிட, தூதரக ரீதியில் இடம்பெற்ற உரையாடல் ஈரான்மீதான எதிர்மறை நடவடிக்கையைத் தவிர்த்துள்ளது எனவும் ஆயரின் கடிதம் கூறுகிறது.
ஈரான், தனது அணுத் திட்டம் குறித்து 1996ம் ஆண்டு முதல் ஐ.நா. பாதுகாப்பு அவையிலுள்ள பிரிட்டன், சீனா, பிரான்ஸ், இரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய 5 நாடுகளுடனும் ஜெர்மனியுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
ஜெனீவாவில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் தெஹ்ரானின் அணுத்திட்டம் தொடர்பில் உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.
ஆதாரம் : CNS
6. தாய்லாந்தில் கத்தோலிக்கத் தொழிலதிபர்களின் அனைத்துலக கருத்தரங்கு
டிச.03,2013. புதிய வழியில் நற்செய்தி அறிவிப்பதில் தொழிலதிபர்களின் அழைப்பும், கத்தோலிக்கச்
சமூகப் போதனைகளும் என்ற தலைப்பில் கத்தோலிக்கத் தொழிலதிபர்களின் அனைத்துலக
கருத்தரங்கு ஒன்று வருகின்ற மார்ச் மாதத்தில் தாய்லாந்தில் நடைபெறவுள்ளது.
நிச்சயமற்ற உலகப் பொருளாதாரத்தில் கத்தோலிக்கத் தொழிலதிபர்கள் எதிர்கொள்ளும் தடுமாற்றங்கள் குறித்துப் பரிசீலனை செய்யவும், அவர்களின் கத்தோலிக்க விசுவாசத்தை உறுதிப்படுத்தவும் இந்த கருத்தரங்கு உதவும் என, தாய்லாந்து ஆயர் பேரவையின் உதவி பொதுச் செயலர் பேரருள்திரு Andrew Vissanu Thanya Anan கூறினார்.
பாங்காக்கின் Royal Orchid Sheraton பயணியர் விடுதியில் 2014ம் ஆண்டு மார்ச் 20 முதல் 22 வரை நடைபெறவிருக்கும் இந்த அனைத்துலக கருத்தரங்கில், தொழிலதிபரின் அழைப்பு என்ற தலைப்பில், திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் உரையாற்றுவார்.
ஆதாரம் : CNA
7. மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் அனைத்துத் தடைகளும் அகற்றப்படுமாறு ஐ.நா.பொதுச்செயலர் வலியுறுத்தல்
டிச.03,2013.
இன்று உலகில் நூறு கோடிக்கு மேற்பட்டவர்கள் அல்லது உலக மக்கள்தொகையில்
ஏறக்குறைய 15 விழுக்காட்டினர் ஏதாவது ஒரு விதத்தில் மாற்றுத்திறனோடு
வாழும்வேளை, சமூகத்தில் இந்த மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் அனைத்துத் தடைகளும் அகற்றப்படுமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுள்ளார்.
டிசம்பர் 3, இச்செவ்வாயன்று
கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினத்திற்கென
வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு வலியுறுத்தியுள்ள பான் கி மூன்,
மாற்றுத்திறனாளிகள் குறித்த அமைப்புரீதியான பாகுபாட்டு மற்றும் தாழ்வான எண்ணங்கள் அகற்றப்பட்டு, இவர்கள், தங்களின் மாற்றுத்திறன்களோடு சமூக நடவடிக்கைகளில் ஈடுபடவும், பங்கெடுக்கவும் அனுமதிக்கப்படுமாறு கேட்டுள்ளார்.
அனைத்து
மாற்றுத்திறனாளிகளையும் சமூகத்தில் ஒன்றிணைத்து அவர்கள் சமமாக
மதிக்கப்பட்டு நிலையான முன்னேற்றம் பெற ஐக்கிய நாடுகள் நிறுவனம் நடவடிக்கை
எடுத்து வருவதாக ஐ.நா.பொதுச்செயலரின் செய்தி கூறுகிறது.
“சமூகத்தில் இணக்கப்படவும் அனைவரையும் முன்னேற்றவும் : தடைகளை அகற்று, கதவுகளைத் திறந்துவிடு” என்ற மையக்கருத்துடன் 2013ம் ஆண்டின் அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம் இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்டது.
ஆதாரம் : UN
8. நவீனகால அடிமைமுறை ஒழிக்கப்படுவதற்கு பான் கி மூன் வேண்டுகோள்
டிச.03,2013. டிசம்பர் 2, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக அடிமைத்தன ஒழிப்பு தினத்திற்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன், இக்காலத்தில்
இடம்பெறும் வெறுக்கத்தக்க அடிமைத்தனங்களின் பல்வேறு வடிவங்களை ஒழிப்பதற்கு
ஒன்றிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.
சமுதாயத்தில் ஏழைகளை, குறிப்பாக, குடியேற்றதாரர், பெண்கள், பாகுபடுத்தப்பட்ட இனக்குழுக்கள், சிறுபான்மையினர், பூர்வீக
இனத்தவர் உட்பட சமூகரீதியாக அதிகம் ஒதுக்கப்பட்ட மக்களைப் பாதிக்கும்
நவீனகால அடிமைமுறை மற்றும் கட்டாய உழைப்புமுறையை ஒழிப்பதற்கு உலகளவில்
நடவடிக்கைகள் எடுக்கப்படுமாறு கேட்டுள்ளார் பான் கி மூன்.
இன்று உலகில் பெண்கள், ஆண்கள், சிறார் என, 2 கோடியே 10 இலட்சம் பேர் அடிமைமுறைகளில் சிக்கியுள்ளனர் என ILO உலக தொழில் நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
“இப்பொழுதே அடிமைமுறை முடிவுறச்செய்” என்ற மையக்கருத்துடன் இவ்வாண்டின் அனைத்துலக அடிமைத்தன ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
ஆதாரம் : UN
9. ஹாங்காங்கில் புதிய வகை பறவைக் காய்ச்சல்
டிச.03,2013. ஹாங்காங்கில் புதிய வகை பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
H7N9 எனும் நோய்க் கிருமியால் 35 வயது நபர் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், இது, பறவைக் காய்ச்சலின் புதிய வகை என்றும் சொல்லப்படுகிறது.
பாதிக்கப்பட்டுள்ள நபர் இந்தோனேஷிய நாட்டைச் சேர்ந்தவர் எனவும், வீட்டுப் பணியாளராக வேலை செய்த அவர் அண்மையில் சீனாவுக்கானப் பயணம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது.
இவரோடு தொடர்பு கொண்டிருந்த ஏறக்குறைய 200 பேரை இந்நோய்க்கிருமி தாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னர் இவ்வகையான பறவைக் காய்ச்சலால் ஒருவர் தாய்வானில் பாதிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இந்த புதிய வகை கிருமித் தாக்குதல் கடந்த ஏப்ரல் மாதம் முதலில் தெரியவந்தது. அதன் காரணமாக ஐம்பது பேர் உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment