1. தந்தையாக இருக்கும் ஆவல், அருள் பணியாளர்கள் உட்பட, அனைத்து மனிதருக்கும் உள்ள ஆவல் - திருத்தந்தை பிரான்சிஸ்
2. 'பாலியம்' எனப்படும் கழுத்துப் பட்டையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து 34 பேராயர்கள் பெறுவார்கள்
3. இத்தாலியின் முன்னாள் பிரதமர் Emilio Colombo அவர்களின் மறைவையொட்டி, திருத்தந்தை அனுப்பிய அனுதாபத் தந்தி
4. நடைபெறவிருக்கும் இளையோர் நாள், 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலத்தீன் அமெரிக்காவிற்குத் திரும்புவது அழகான ஒரு நிகழ்வு - கர்தினால் Stanislaw Rylko
5. வத்திக்கானில் நடைபெற்ற 13வது ஆயர்கள் மாமன்றத்தைப் பற்றிய ஆவணப்படம்
6. இயேசு சபையினர் மனதுக்கு நெருக்கமானது, கல்விப்பணி - அருள் பணியாளர் Ashley Evans
7. சித்ரவதைகளைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே அரசுகளின் கடமை அல்ல - ஐ.நா. பொதுச் செயலர்
8. சட்டப்பூர்வ போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரிப்பு - ஐ.நா. அலுவலகம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. தந்தையாக இருக்கும் ஆவல், அருள் பணியாளர்கள் உட்பட, அனைத்து மனிதருக்கும் உள்ள ஆவல் - திருத்தந்தை பிரான்சிஸ்
ஜூன்,26,2013. தந்தையாக இருக்கும் ஆவல், அருள் பணியாளர்கள் உட்பட, அனைத்து மனிதருக்கும் உள்ள ஆவல் என்றும், இந்த ஆவல் இல்லாதவர்கள் ஏதோ ஒரு வகையில் குறையுள்ளவர்கள் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இப்புதன் காலை, புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் திருப்பலி ஆற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தந்தையாகச் செயலாற்றும் ஆவல் அனைவருக்கும் பொதுவானதென்றும், வாழ்வு அளிப்பதும், அதைப் பேணுவதும் அனைவரிடமும் உள்ள வேட்கை என்றும் தன் மறையுரையில் குறிப்பிட்டார்.
தந்தையாகும் பேறு தனக்கில்லை என்று ஏங்கிய ஆபிராமுக்கு, வானில்
உள்ள விண்மீன்களைப் போல அவர் மக்களைப் பெறுவார் என்று தொடக்க நூலில்
இறைவன் அளித்த வாக்குறுதியை தன் மறையுரையின் மையமாக்கினார் திருத்தந்தை.
அருள் பணியாளர்களை மக்கள் 'தந்தையே' என்று அழைக்கும்போது, தந்தைக்குரிய
பாதுகாப்பை அருள் பணியாளர்கள் வழங்குவர் என்ற எதிர்பார்ப்பில் இந்த
மரியாதை வழங்கப்படுகிறது என்பதை திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
தன் குருத்துவப் பிணியின் 60 ஆண்டு வைர விழாவைக் கொண்டாடிய பலேர்மோவின் முன்னாள் பேராயர் கர்தினால் Salvatore De Giorgi அவர்கள், திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியாற்றினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. 'பாலியம்' எனப்படும் கழுத்துப் பட்டையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து 34 பேராயர்கள் பெறுவார்கள்
ஜூன்,26,2013. ஜூன் 29ம் தேதி வருகிற சனிக்கிழமையன்று கொண்டாடப்படும் புனிதர்கள் பேதுரு, பவுல் ஆகியோரின் பெருவிழாவன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நடைபெறும் திருப்பலியில் 34 பேராயர்கள் 'பாலியம்' எனப்படும் கழுத்துப் பட்டையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து பெறுவார்கள்.
சென்னை மயிலைப் பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள், விசாகப்பட்டினம் பேராயர் பிரகாஷ் மல்லவரப்பு அவர்கள், மற்றும் டில்லி பேராயர் அனில் கூட்டோ அவர்கள் உட்பட உலகின் பல நாடுகளிலிருந்தும் வருகை தரும் பேராயர்களுக்கு, சனிக்கிழமை காலை நடைபெறும் திருப்பலியின் துவக்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'பாலியம்' வழங்குகிறார்.
புனித பேதுருவின் வழித் தோன்றலென அழைக்கப்படும் உரோமைய ஆயருக்கும், உலகின் பல்வேறு உயர் மறைமாவட்டங்களின் பேராயர்களுக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்தும் வண்ணம் இந்த நிகழ்வு அமைந்துள்ளதால், புனித பேதுரு, பவுல் ஆகிய இரு பெரும் திருத்தூதர்களின் பெருவிழாவன்று 'பாலியம்' வழங்கப்பட்டு வருகிறது.
தனிப்பட்ட முறையில் வளர்க்கப்படும் செம்மறிகளின் உரோமத்திலிருந்து உருவாக்கப்படும் இந்தக் கழுத்துப்பட்டை, பேராயர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆடுகளைக் கண்காணிக்கும் ஆயர்கள் என்பதை உணர்த்துவதாகவும், இந்தக் கழுத்துப் பட்டையில் பொருத்தப்படும் ஊசிகள், கிறிஸ்துவைச் சிலுவையில் அறைய பயன்படுத்தப்பட்ட ஆணிகளை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. இத்தாலியின் முன்னாள் பிரதமர் Emilio Colombo அவர்களின் மறைவையொட்டி, திருத்தந்தை அனுப்பிய அனுதாபத் தந்தி
ஜூன்,26,2013. ஜூன் 24, இத்திங்களன்று இறையடி சேர்ந்த இத்தாலியின் முன்னாள் பிரதமர் Emilio Colombo அவர்களின் மறைவையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சார்பில் அனுதாபத் தந்தியொன்றை, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே அனுப்பியுள்ளார்.
இத்தாலிய குடியரசில் முக்கியமான பங்கு வகித்துள்ள திருவாளர் Colombo அவர்கள், பக்தி மிகுந்த கத்தோலிக்கராக வாழ்ந்தார் என்றும், சமுதாயத்தின் பொதுநலனில் அதிக அக்கறை கொண்டவர் என்றும் திருத்தந்தையின் தந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களும், செபங்களும், மறைந்த திருவாளர் Colombo அவர்களின் குடும்பத்திற்கு உறுதி செய்யப்படுவதாக இத்தந்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
1948ம் ஆண்டு முதல் இத்தாலியப் பாராளு மன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றிய திருவாளர் Colombo அவர்கள், 1970 முதல் 72 முடிய அந்நாட்டின் பிரதமாராகவும் பணியாற்றினார். இவர் தனது 93வது வயதில் இறையடி சேர்ந்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. நடைபெறவிருக்கும் இளையோர் நாள், 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலத்தீன் அமெரிக்காவிற்குத் திரும்புவது அழகான ஒரு நிகழ்வு - கர்தினால் Stanislaw Rylko
ஜூன்,26,2013.
வருகிற ஜூலை மாதம் 23ம் தேதி முதல் 28ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் அகில
உலக இளையோர் நாளுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே
இருக்கும் இவ்வேளையில், வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் இந்த இளையோர் நாளைக் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடைபெறவிருக்கும் இந்த 28வது இளையோர் நாள், 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலத்தீன் அமெரிக்காவிற்குத் திரும்புவது அழகான ஒரு நிகழ்வு என்று, இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வரும் பொதுநிலையினருக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko கூறினார்.
"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இந்த இளையோர் நாள் நிகழ்வுகள், 26 ஆண்டுகளுக்கு முன்னர் Argentina நாட்டின் Buenos Aires நகரில் நடைபெற்றது என்றும், அந்நகரில் பேராயராக பணியாற்றிய கர்தினால் பெர்கோலியோ அவர்கள் தற்போது திருத்தந்தை என்பதையும் கர்தினால் Rylko தன் செய்தியில் குறிப்பிட்டார்.
ஒவ்வவொரு முறையும் இளையோர் நாள் நிகழும்போது, உலகெங்கும் உள்ள கத்தோலிக்கத் திருஅவையில் நம்பிக்கை வளர்க்கப்படுகிறது என்று கூறிய கர்தினால் Rylko அவர்கள், நம்பிக்கை
ஆண்டில் நடைபெறும் இந்த இளையோர் நாள் இன்னும் அதிகமான நம்பிக்கையை நம்மில்
வளர்க்கும் என்ற தன் எதிர்பார்ப்பை வெளியிட்டார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. வத்திக்கானில் நடைபெற்ற 13வது ஆயர்கள் மாமன்றத்தைப் பற்றிய ஆவணப்படம்
ஜூன்,26,2013.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல் 28ம் தேதி முடிய வத்திக்கானில்
நடைபெற்ற 13வது ஆயர்கள் மாமன்றத்தைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று இப்புதனன்று
வத்திக்கானில் திரையிடப்பட்டது.
கனடாவில் இயங்கிவரும் 'Salt and Light' எனப்படும் தொலைக்காட்சி நிறுவனம், "புதுவழி நற்செய்திப் பரப்புதல் ஆயர்கள் மாமன்றம்: செல்லுங்கள், கற்பியுங்கள்"
என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள இந்த ஆவணப்படம் 55 நிமிடங்கள் நீளமானது
என்று இத்தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர் அருள்தந்தை தாமஸ் ரோசிகா
கூறினார்.
இந்த ஆவணப்படம் முதல் முறையாக திரையிடப்பட்ட இந்த நிகழ்வை, திருப்பீடத்தின் சமூகத் தொடர்பு அவையும், புதுவழி நற்செய்தி பரப்புதல் திருப்பீட அவையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
ஆங்கிலத்தில்
உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் வருகிற செப்டம்பர் மாதம் கனடாவின்
கத்தோலிக்கத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்றும், இந்த ஆவணப்படம், பிரெஞ்ச் மொழியிலும் வெளியிடப்படும் என்றும் இத்தொலைக்காட்சி நிறுவனத்தின் இயக்குனர் அருள்தந்தை தாமஸ் ரோசிகா கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. இயேசு சபையினர் மனதுக்கு நெருக்கமானது, கல்விப்பணி - அருள் பணியாளர் Ashley Evans
ஜூன்,26,2013. இயேசு சபையினருக்கு, கல்விப்பணி எப்போதும் முக்கியமான, மனதுக்கு நெருக்கமான பணி என்றும், குறிப்பாக, கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளவர்கள் மத்தியில் கல்விப்பணி புரிவது இன்னும் அர்த்தமுள்ளது என்றும் இயேசு சபை அருள் பணியாளர் Ashley Evans கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாக கம்போடியாவில் பணியாற்றிவரும் அயர்லாந்தைச் சேர்ந்த அருள்தந்தை Evans, அந்நாட்டில் இயேசு சபையினர் துவக்கும் புதிய கல்விப் பணி குறித்து Fides செய்திக்கு அளித்த குறிப்பொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
கம்போடியாவின் பட்டம்பங் (Battambang) என்ற இடத்தில் முதல் நிலைப் பள்ளியொன்றையும், இடைநிலை பள்ளியொன்றையும் இயேசு சபையினர் துவக்கவிருப்பதாக அறிவித்துள்ளனர்.
பல ஆண்டுகளாக கம்போடியாவில் புலம்பெயர்ந்தொரிடையில் பணியாற்றி வந்துள்ள இயேசு சபையினர், கடந்த 20 ஆண்டுகளாக அந்நாட்டில் கல்வித் துறையில் மாற்றங்களை உருவாக்கி வருகின்றனர் என்றும், குறிப்பாக, தொழில் கல்வி வழியாக பல இளையோருக்கு எதிர்காலத்தை உருவாக்கி வந்துள்ளனர் என்றும், Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஆதாரம் : Fides
7. சித்ரவதைகளைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே அரசுகளின் கடமை அல்ல - ஐ.நா. பொதுச் செயலர்
ஜூன்,26,2013. சித்ரவதைகளைத் தடுத்து நிறுத்துவது மட்டுமே அரசுகளின் கடமை அல்ல, மாறாக, சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்குத் தகுந்த ஈடு செய்வதும், அவர்களுக்கு மறுவாழ்வு தரும் முயற்சிகளில் ஈடுபடுவதும் அரசின் கடமை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
ஜூன் 26ம் தேதி, இப்புதனன்று கடைபிடிக்கப்படும், சித்ரவதைகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் உலக நாளையொட்டி (International Day in Support of Victims of Torture) செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், மனித மாண்பை அழிக்கும் ஒரு கருவியாக சித்ரவதைகள் இக்காலத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன என்ற தன் கவலையை வெளியிட்டார்.
சமுதாயத்தில் குறிப்பிட்ட குழுவினரை அச்சத்தில் வாழவைப்பதற்காக, ஒரு சில நாடுகளில் அரசுகளே சித்ரவதைகளைப் பயன்படுத்துகின்றன என்ற தகவலையும் பான் கி மூன் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு கடைபிடிக்கப்படும், சித்ரவதைகளுக்கு உள்ளாகும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் உலக நாளுக்கு, 'மறுவாழ்வு அமைத்தல்' என்பது ஐ.நா.அவையால் மையப்பொருளாக வழங்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : UN
8. சட்டப்பூர்வ போதை மருந்துகளின் பயன்பாடு அதிகரிப்பு - ஐ.நா. அலுவலகம்
ஜூன்,26,2013. சட்டப்பூர்வமான போதை மருந்துகளின் பயன்பாடு, அச்சமூட்டும் அளவுக்கு அதிகரித்திருப்பதாக போதை மருந்து மற்றும் குற்றங்கள் குறித்த ஐ.நா.வின் அலுவலகம் - The United Nations Office on Drugs and Crime (UNODC) - எச்சரித்துள்ளது.
Heroin மற்றும் Cocaine போன்ற பாரம்பரிய போதை மருந்துகளின் பயன்பாடு உலக அளவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதே வேளை, புதிய போதைப் பொருட்களின் பயன்பாடு மிகவும் அதிகரித்திருப்பதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்த வழி அறியாது அதிகாரிகள் திகைத்திருப்பதாகவும் ஐ.நா.வின் புதிய அறிக்கை கூறுகிறது.
இந்தப்
புதிய வகை போதை மருந்துகள் பாரம்பரிய போதைப் பொருட்களை விட பல மடங்கு
ஆபத்தானவை என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வகையான புதிய போதை மருந்துகள் பெரும்பாலும் ஆசியாவிலேயே உற்பத்தியாவதாகவும், இணையதளத்தின் மூலம் அவை பரப்பப்படுவதாகவும் இவ்வறிக்கை கூறுகிறது.
இது ஓர் உலகளாவியப் பிரச்சனை என்றாலும், இந்தப் போதைப்பொருள் விற்பனைக்கு, வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் பெரிய சந்தைகளாகத் திகழ்கின்றன என்று BBC செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஜூன் 26, இப்புதனன்று, போதைப்பொருள் வர்த்தகத்தையும், பயன்பாட்டையும் எதிர்க்கும் உலக நாள் (International Day against Drug Abuse and Illicit Trafficking) கடைபிடிக்கப்படுகிறதென்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : BBC
No comments:
Post a Comment