1. திருத்தந்தை பிரான்சிஸ் ஆங்லிக்கன் பேராயரிடம் : மனித மற்றும் குடும்ப வாழ்வைப் பாதுகாப்பதற்குச் சேர்ந்து செயல்படுவோம்
2. ஆங்லிக்கன் பேராயர் Welby : உரையாடலின் கனிகளை ஊக்குவிப்போம்
3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களின் மனத்தாழ்மை வெளிப்படையாகத் தெரிய வேண்டும்
4. திருத்தந்தை பிரான்சிஸ் : சுவர்களை அல்ல, பாலங்களைக் கட்டி எழுப்புங்கள்
5. கர்தினால் Tauran, இலண்டன் இந்து சமயக் குழுவினர் சந்திப்பு
6. வத்திக்கான் அதிகாரி : போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைளில் குடும்பங்கள் மையப்படுத்தப்பட வேண்டும்
7. இரத்த தானம் செய்வதற்கு மேலும் பலர் முன்வர வேண்டும், ஐ.நா.
8. 2050ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 960 கோடி
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் ஆங்லிக்கன் பேராயரிடம் : மனித மற்றும் குடும்ப வாழ்வைப் பாதுகாப்பதற்குச் சேர்ந்து செயல்படுவோம்
ஜூன்,14,2013. மனித வாழ்வையும், திருமணத்தின்மீது அமைக்கப்பட்ட குடும்ப வாழ்வையும் பாதுகாப்பதற்கும், ஏழைகளின் அழுகுரலுக்குத் தீர்வு காணும் சமூகநீதிக்காக இன்னும் அதிகமாகச் உழைப்பதற்கும், சிரியா
உட்பட நாடுகளில் சண்டைகள் முடிவடையவும் நாம் சேர்ந்து செயல்படுவோம் என்று
இங்கிலாந்து ஆங்லிக்கன் பேராயரிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இங்கிலாந்து ஆங்லிக்கன் சபையின் புதிய தலைவர் பேராயர் Justin Welby அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் தனியே சந்தித்துப் பேசிய பின்னர், அவரோடு சென்ற பிரதிநிதி குழுவினருக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கூறினார்.
நாடுகளிடையே இடம்பெறும் சண்டைகளுக்குத் தீர்வு காணப்படவும், நாடுகளிடையே ஒப்புரவும் ஏற்படுவதற்கு பேராயர் Welby எடுத்துவரும் முயற்சிகளைத் தான் அறிந்தே இருப்பதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ்,
சிரியாவில் சிறுபான்மையினர் உட்பட அந்நாட்டில் அனைவரின் பாதுகாப்புக்கு
உறுதி வழங்கும் விதத்தில் அமைதியான தீர்வு காணப்படுமாறு இங்கிலாந்தின்
கத்தோலிக்கப் பேராயர் நிக்கோல்ஸ் ஆங்லிக்கன் பேராயர் Welby ஆகிய இருவரும் சேர்ந்து விடுத்துள்ள அழைப்பையும் சுட்டிக் காட்டினார்.
கிறிஸ்தவர்களாகிய நாம் இவ்வுலகத்துக்கு அமைதியையும் அருளையும் ஒரு சொத்தாக வழங்க வேண்டும், கிறிஸ்தவர்கள்
நல்லிணக்கத்தில் வாழ்ந்து ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இக்கொடைகள்
கனிதர முடியும் என்றும் ஆங்லிக்கன் பேராயரிடம் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
இம்மாதிரியான வாழ்வு, பிற சமயத்தவருடனும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுடனும் அமைதியாக வாழ உதவும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒன்றிப்புக்கான வழிகளைத் தேடுவது, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் விருப்பம் என்றும் கூறினார்.
இங்கிலாந்து ஆங்லிக்கன் சபைத் தலைவர் பேராயர் Justin Welby அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் திருப்பீடத்தில் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. ஆங்லிக்கன் பேராயர் Welby : உரையாடலின் கனிகளை ஊக்குவிப்போம்
ஜூன்,14,2013. இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தபோது உரையாற்றிய ஆங்லிக்கன் பேராயர் Justin Welby, செபம் மற்றும் நற்செய்தி அறிவிப்பு வழியாக விசுவாசத்தில் நம் ஒன்றிப்பை வெளிப்படுத்துவோம் என்று கூறினார்.
வன்முறை, அடக்குமுறை, போர், அநீதியான பொருளாதார அமைப்புமுறைகள், மோசமான
அரசு ஆகியவற்றால் கிறிஸ்தவர்கள் கடுமையாய்த் துன்புறும்போது கிறிஸ்துவின்
பெயரால் நாம் அவர்களுக்காகப் பரிந்துபேச வேண்டியதன் அவசியத்தையும் பேராயர் Welby வலியுறுத்தினார்.
இந்த
நவீன சமுதாயம் முன்வைக்கும் சவால்கள் மத்தியில் கிறிஸ்தவ விசுவாசத்தை
வழங்கும் முறைகளில் நம்மிடையே வேறுபாடுகள் இருப்பதை நாம் உணர்ந்தே உள்ளோம், ஆயினும், நமக்கிடையேயான ஆழமான நட்பு இந்த வேறுபாடுகளைக் களைய உதவும் என்றும் கூறினார் பேராயர் Welby.
இயேசுவின் செபத்தில் நம்பிக்கை வைத்து இந்தப் பயணத்தைத் தொடருவோம் என்றும் தெரிவித்தார் ஆங்லிக்கன் பேராயர் Welby.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 23ம் அருளப்பர், பிறரன்பால் மனித இதயங்களைக் கொள்ளை கொண்ட மாமனிதர் என்று பாராட்டிப் பேசினார் பேராயர் Welby.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவர்களின் மனத்தாழ்மை வெளிப்படையாகத் தெரிய வேண்டும்
ஜூன்,14,2013. தான் பலவீனமானவர், தான் பாவி என்பதை ஒவ்வொருவரும் நேர்மையோடு ஏற்று, எந்த விதத்திலும் தனக்கே நியாயம் சொல்லிக்கொள்வதைத் தவிர்ப்பதே, கிறிஸ்துவில் கிடைக்கும் மீட்பின் கொடையை உண்மையிலேயே பெறுவதற்குரிய ஒரே வழியாகும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கடவுளின் வேலையாகிய விசுவாசத்தின் அசாதாரண வல்லமை, இவ்வுலகின்
மண்பாண்டங்களாகிய பாவிகளாகிய மனிதர்மீது பொழியப்படுகின்றது என்பதை
விளக்கும் தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய 2ம் திருமடல் பகுதியை வைத்து
தனது சிந்தனைகளை வழங்கியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
இவ்வெள்ளிக்கிழமை காலையில் புனித மார்த்தா இல்லத்தில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, தான் பலவீனமான மண்பாண்டம் என்பதை உணர்ந்து,
தன்னிடம் முழுவதும் இலவசமாக அளிக்கப்பட்ட பெரும் சொத்துக்குப் பாதுகாவலராக
இருப்பது கிறிஸ்துவைப் பின்செல்பவர் என்பதற்கு அடையாளம் என்று கூறினார்.
இறையருளுக்கும்
இயேசு கிறிஸ்துவின் வல்லமைக்கும் இடையேயுள்ள உறவிலிருந்தே நமது மீட்பின்
உரையாடல் ஊற்றெடுக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்த உரையாடலில் தனக்கே நியாயம் சொல்லிக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறினார்.
அருள்பணியாளரின் மனத்தாழ்மை, கிறிஸ்தவர்களின் மனத்தாழ்மை வெளிப்படையாகத் தெரிய வேண்டும், இதில்
தவறினால் இயேசு நமக்குக் கொடுக்கும் மீட்பின் அழகைப் புரிந்து
கொள்வதற்கானச் சக்தியை முதலில் இழப்போம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ்
கூறினார்.
இவ்வுலகின்
மண்பாண்டங்களாகிய நாம் இயேசு கிறிஸ்துவின் மகிமையான மீட்பைப் புரிந்து
கொள்வற்கு வரம் கேட்போம் எனத் தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை
பிரான்சிஸ்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. திருத்தந்தை பிரான்சிஸ் : சுவர்களை அல்ல, பாலங்களைக் கட்டி எழுப்புங்கள்
ஜூன்,14,2013. எல்லைகளின் மனிதர்களாகிய ஊடகவியலாளர் சுவர்களை அல்ல, மாறாக, திறந்த மனத்தோடும் இதயத்தோடும் பாலங்களைக் கட்டி எழுப்ப வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மாதம் இருமுறை வெளியாகும் “La Civiltà Cattolica”
என்ற இயேசு சபையினரின் இத்தாலிய இதழின் பணியாளர்கள் முப்பது பேரை
இவ்வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்தக் கத்தோதலிக்க இதழின் 163 ஆண்டுகால இடையறாப் பணியைப் பாராட்டினார்.
உரையாடல், தேர்ந்து தெளிதல், எல்லைகள் ஆகிய மூன்று தலைப்புகளில் உரையாற்றிய திருத்தந்தை, கத்தோலிக்க கலாச்சாரத்தை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றும் இப்பணியாளர்கள்,
கிறிஸ்தவரல்லாதவர்கள் உட்பட எல்லா மனிதர்களோடும் உரையாடலை ஏற்படுத்தும்
பாலங்களை எழுப்புவதை முக்கிய பணியாகக் கொண்டிருக்க வேண்டும் என்று
கூறினார்.
இவ்வுலகில் விவாதித்துப் பகிர்ந்து கொள்வதற்குப் பல விவகாரங்கள் உள்ளன, ஆயினும், உரையாடலே, உண்மைக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவரும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், இந்த உண்மை இறைவனின் கொடை, இது ஒருவர் ஒருவரை வளப்படுத்தும் என்றும் கூறினார்.
உரோமையில் தலைமையகத்தைக் கொண்டுள்ள La Civiltà Cattolica இதழின் முதல் பிரதி 1850ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி வெளியானது. தற்போது ஒவ்வொரு முறையும் 15 ஆயிரம் பிரதிநிதிகள் விநியோகிக்கப்படுகின்றன.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. கர்தினால் Tauran, இலண்டன் இந்து சமயக் குழுவினர் சந்திப்பு
ஜூன்,14,2013. அமைதியை ஏற்படுத்துவதற்குப் பரிவிரக்கம் இன்றியமையாதது என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, இலண்டன் இந்து சமய வல்லுனர்களிடம் கூறினார்.
பிரிட்டனில் இப்புதன் முதல் ஐந்து நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுவரும் கர்தினால் Tauran, வட
இலண்டனில் இந்து மத ஆலயம் ஒன்றில் பிரிட்டனின் இந்து சமயக் குழுவினரைச்
சந்தித்தபோது பல்சமய உரையாடலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.
பிற சமய மரபுகளைப் பாராட்டுவதற்கும், அனைத்து
மக்களும் சுதந்திரத்திலும் அமைதியிலும் வாழ்வதற்கு நல்ல சூழல்களை
உருவாக்குவதற்கும் பல்சமய உரையாடல் உதவுகின்றது என்றும் கூறினார் கர்தினால்
Tauran.
நவீனகாலத்
திருத்தூதராகிய மகாத்மா காந்தி அஹிம்சாவைச் செயல்படுத்தியபோது அவரில்
பரிவிரக்கம் என்ற பண்பு வெளிப்பட்டது என்றும் கூறிய கர்தினால் Tauran, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பரிவிரக்கம் குறித்துப் பேசியிருப்பதையும் விளக்கினார்.
திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Tauran மேற்கொண்டுள்ள இச்சுற்றுப்பயணம் வருகிற ஞாயிறன்று நிறைவடையும்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. வத்திக்கான் அதிகாரி : போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைளில் குடும்பங்கள் மையப்படுத்தப்பட வேண்டும்
ஜூன்,14,2013.
போதைப்பொருள் தடுப்பு சார்ந்த கொள்கைகளில் மனித மாண்புக்கும்
குடும்பங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமென்று ஐ.நா.வுக்கானத்
திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் பிரான்சிஸ் சுள்ளிக்காட்
கேட்டுக் கொண்டார்.
குவாத்தமாலா நாட்டின் Antiguaவில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு குறித்த ஐ.நா. கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பாகப் பேசிய பேராயர் சுள்ளிக்காட், அனைத்து மக்களின் மாண்பையும், குறிப்பாக, நம் எதிர்காலத்தைக் குறித்து நிற்கும் இளையோரையும் பாதுகாப்பது நமது ஒன்றிணைந்த முயற்சியாக அமைய வேண்டும் என்று கூறினார்.
சட்டத்துக்குப் புறம்பே போதைப்பொருள்கள் பயன்படுத்தப்படும்போது அவை குடும்பங்களின் சமூகக் கட்டமைப்பையே அழிக்கின்றன என்றும், இது சமுதாயத்துக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் பேராயர் சுள்ளிக்காட் கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. இரத்த தானம் செய்வதற்கு மேலும் பலர் முன்வர வேண்டும், ஐ.நா.
ஜூன்,14,2013. உலக அளவில் இரத்தம் தேவைப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும்வேளை, ஒவ்வொரு நாடும் தன் நாட்டினருக்குத் தேவைப்படும் இரத்தத்தை, அந்நாட்டின் தன்னார்வத் தொண்டர்களிடமிருந்தே தானமாகப் பெறும் திட்டத்தை 2020ம் ஆண்டுக்குள் நிறைவேற்றுமாறு WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
தற்போது 60 விழுக்காட்டு நாடுகள் தங்களுக்குத் தேவையான இரத்தத்தைத் தங்களது மக்களிடமிருந்தே பெறுகின்றன என்றும், இவற்றில் 35 விழுக்காடு அதிக வருவாய் உள்ள நாடுகள் என்றும் WHO நிறுவனம் கூறியுள்ளது.
ஜூன் 14 இவ்வெள்ளிக்கிழமையன்று அனைத்துலக இரத்த தானம் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள உலக நலவாழ்வு நிறுவனம், இன்றைய உலகின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இன்னும் பலர் இரத்த தானம் செய்வதற்கு முன்வருமாறு கேட்டுள்ளது.
2004ம் ஆண்டில் 80 இலட்சம் பேர் இரத்த தானம் செய்தனர், ஆனால் இவ்வெண்ணிக்கை 2011ம் ஆண்டில் ஏறக்குறைய 8 கோடியே 30 இலட்சமாக உயர்ந்தது, ஆயினும் இவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது WHO நிறுவனம்.
உலகில் ஆண்டுதோறும் ஏறக்குறைய 10 கோடியே 70 இலட்சம் பேர் இரத்த தானம் செய்கின்றனர், இவர்களில் பாதிப்பேர் பணக்கார நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஆதாரம் : UN
8. 2050ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 960 கோடி
ஜூன்,14,2013. 720 கோடியாக இருக்கும் தற்போதைய உலக மக்கள் தொகை அடுத்த 12 ஆண்டுகளில் மேலும் 100 கோடியாக உயரும், இவ்வெண்ணிக்கை 2050ம் ஆண்டில் 960 கோடியை எட்டும் என, ஐக்கிய நாடுகள் நிறுவனம் இவ்வியாழனன்று வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
உலக மக்கள் தொகை வளர்ச்சி பெரும்பாலும் வளரும் நாடுகளில் காணப்படுகின்றது என்றும், இதில் பாதிக்கும்மேல் ஆப்ரிக்காவில் இடம்பெறுகின்றது என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
2025ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 810 கோடியாக அதிகரிக்கக் கூடும் எனக் கூறும் அவ்வறிக்கை, மிகவும் வளர்ச்சி குன்றிய 49 நாடுகளின் மக்கள் தொகை 2013ம் ஆண்டில் ஏறக்குறைய 90 கோடியாக உயரும் எனவும் கூறுகிறது.
வளர்ந்த நாடுகளைக் காட்டிலும், இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் போன்ற வளர்ந்துவரும் ஆசிய நாடுகளிலும், ஆப்ரிக்க நாடுகளிலும் மக்கள் தொகை அதிகரிக்கக் கூடும் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment