Wednesday 19 June 2013

Catholic News in Tamil - 17/06/13

1. திருத்தந்தை : கிறிஸ்தவத் துணிச்சல் என்பது எப்போதும் தாழ்ச்சியுடன் இணைந்துச் செல்வது

2. திருத்தந்தை : மரணத்துக்கு அல்ல, வாழ்வுக்கு ஆம் என்று சொல்லுங்கள்

3. திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை

4. G8 நாடுகளின் கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி

5. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

6. எகிப்தில் விவிலிய நூலை எரித்த இஸ்லாமிய மதபோதகருக்கு தண்டனை

7. சங்க இலக்கிய நூல்கள் 12 ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு

8. வேப்பமரத்தில் அற்புதமான "வீரிய ஊக்கி': கால்நடை மருத்துவர் கண்டுபிடிப்பு

------------------------------------------------------------------------------------------------------


1. திருத்தந்தை : கிறிஸ்தவத் துணிச்சல் என்பது எப்போதும் தாழ்ச்சியுடன் இணைந்துச் செல்வது

ஜூன்,17,2013. உலகப் பொருட்களின் மீது பற்றற்றவராக, ஒன்றுமில்லாதவராக ஒரு கிறிஸ்தவர் வாழ்ந்தாலும், அவர் எல்லாமும் இருப்பவராக வாழ்கிறார், ஏனெனில் கிறிஸ்து அவருள் நிறைந்திருக்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தான் தங்கியிருக்கும் மார்த்தா இல்லக் கோவிலில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய திருத்தந்தை, கண்ணுக்கு கண் என்ற நீதியைத்தான் நாம் கேட்டிருக்கிறோம், ஆனால், அதைவிட பெரிய சட்டத்தை இயேசு கொணர்ந்துள்ளார், அதுவே, ஒரு கன்னத்தில் அறைந்தவருக்கு மறுகன்னத்தையும் காட்டுவது, என்று கூறினார்.
வழக்கமாக நம்மை எவராவது அடித்தால், நாம் திருப்பி அடிப்போம், ஏனெனில், நம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமை நமக்கு உள்ளது எனக் கூறிய திருத்தந்தை, இறைவன் காட்டும் நீதியோ, இதிலிருந்து மிகவும் மாறுபட்டதாக உள்ளது என்று கூறினார்.
எவராவது உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால், அவருக்கு மேலாடையையும் கொடுங்கள் எனவும், ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால், இரு கல் தொலை கூடச்செல்லுங்கள் எனவும் இயேசு கூறியதை நினைவுறுத்திய திருத்தந்தை, எல்லாமும் இயேசுவாக இருக்கும் கிறிஸ்தவர்களுக்கு இது கடினமானதல்ல என எடுத்துரைத்தார்.
கிறிஸ்தவத் துணிச்சல் என்பது எப்போதும் தாழ்ச்சியுடன் இணைந்து செல்வது எனவும் கூறினார் திருத்தந்தை. ஆனால் இன்றைய உலகில் உலகப்பொருட்கள் எல்லாமுமாக நினைக்கப்பட்டு, இயேசு கிறிஸ்துவுக்கு வெற்றிடமே வழங்கப்படுகிறது என்ற கவலையையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் SEDOC

2. திருத்தந்தை : மரணத்துக்கு அல்ல, வாழ்வுக்கு ஆம் என்று சொல்லுங்கள்

ஜூன்,17,2013. மனிதர் பல நேரங்களில் வாழ்வைத் தேர்ந்தெடுப்பதில்லை, வாழ்வின் நற்செய்தியை ஏற்பதில்லை, வாழ்வை மதிப்பதில்லை, ஏனெனில் தன்னலம், சுயஇலாபம், ஆதாயம், அதிகாரம், இன்பம் ஆகியவற்றால் மனிதர் ஆட்சி செலுத்தப்படுகின்றனர்  என இஞ்ஞாயிறு மறையுரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Evangelium Vitae என்ற மனித வாழ்வு ஆதரவு தினம் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பலி நிகழ்த்தி, ஆற்றிய மறையுரையில், கடவுள் வாழ்பவர், கருணையுள்ளவர் என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டுதானே என்று விசுவாசிகளிடம் கேட்டு அதை அனைவரும் சேர்ந்து சொல்லுமாறு கூறினார்.
மரணத்துக்கு அல்ல, வாழ்வுக்கு ஆம் என்று சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மை ஒருபோதும் ஏமாற்றாத, அன்பும், வாழ்வும், சுதந்திரமுமான இறைவனுக்கு ஆகட்டும் எனச் சொல்வோம் என்றும் கூறினார்.
கடவுள் இல்லாத மனிதரின் நகரைக் கட்டுவதற்கு கனவு காணும் மனிதர், வாழ்வின் நற்செய்தியைப் புறக்கணிப்பது சுதந்திர வாழ்வுக்கும், மனநிறைவுக்கும் இட்டுச்செல்லும் எனப் பொய்யாக நம்புவதால், உயிருள்ள இறைவனின் இடத்தில் அழிந்துபோகும் மனித இன்பங்கள் வைக்கப்படுகின்றன என்ற கவலையையும் தன் மறைபோதகத்தில் வெளியிட்டார் திருத்தந்தை.

ஆதாரம் SEDOC

3. திருத்தந்தையின் ஞாயிறு மூவேளை செப உரை

ஜூன்,17,2013. பல யூதர்களை நாத்சி அடக்குமுறைகளிலிருந்து காப்பாற்றி, வாழ்வின் நற்செய்திக்குச் சாட்சியாகத் திகழ்ந்த முத்திப்பேறு பெற்ற Odoardo Focheriniக்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம் என்று கூறி இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மனித வாழ்வைத் தனது உயிரினும் மேலாக மதித்த Odoardo Focherini, தனது உயிரைப் பணயம் வைத்து துன்புற்ற யூதர்களின் வாழ்வைக் காப்பாற்றினார் என்று கூறினார் திருத்தந்தை.
கடந்த சனிக்கிழமையன்று முத்திப்பேறு பெற்றவராக அறிவிக்கப்பட்ட Odoardo Focherini,  Hersbruck, நாத்சி வதைப்போர் முகாமில் 1944ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி தனது 37வது வயதில் இறையடி சேர்ந்தார்.
வாழ்வின் நற்செய்தியைக் கொண்டாடுவோம் என்றும் இம்முவேளை செப உரையின்போது கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்வை ஊக்குவிப்பதில் நேரடியாகச் செயல்பட்டுவரும் குடும்பங்களுக்குத் தன் தனிப்பட்ட நன்றியையும் வெளியிட்டார்.
திருஅவையில் இஞ்ஞாயிறன்று Evangelium Vitae என்ற மனித வாழ்வு ஆதரவு தினம் சிறப்பிக்கப்பட்டது.

ஆதாரம் SEDOC 

4. G8 நாடுகளின் கூட்டத்திற்கு திருத்தந்தையின் செய்தி

ஜூன்,17,2013. அனைத்துவிதமான அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளும் தேசிய அளவிலும் அனைத்துலக அளவிலும் எடுக்கப்படும்போது, மனிதனின் முக்கியத்துவம், குறிப்பாக, ஏழைகளுக்குரிய முக்கியத்துவம் வலியுறுத்தப்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.
இத்திங்களும் செவ்வாயும் வட அயர்லாந்தின் Lough Erne எனுமிடத்தில் இடம்பெறும் G8 நாடுகளின் கூட்டத்திற்கு என, அதன் தற்போதைய தலைவர் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, சுதந்திரமாக இயங்கக்கூடிய அனைத்துலக சந்தை வியாபாரம், வரிவிதிப்பு, அரசுகளின் வெளிப்படையான நிர்வாகம் போன்ற தலைப்புகளில் விவாதம் இடம்பெற உள்ளது குறித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
மனிதனுக்குரிய முக்கியத்துவம், பசிக்கொடுமையை முற்றிலுமாக ஒழித்தல், உணவு பாதுகாப்பை உறுதிச்செய்தல் என்பவைகளோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளை வன்முறைகளிலிருந்து காப்பாற்ற வேண்டியதும் உறுதி செய்யப்படவேண்டும் எனவும் தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை.
சரிநிகரான, அதேவேளை, நீதியுடன் கூடிய அமைதியை உறுதி செய்யவேண்டிய தொலைநோக்குத் திட்டங்களின் முக்கியத்துவம் குறித்தும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
இன்றையப் பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளும் அறநெறி மற்றும் உண்மையால் வழிநடத்தப்படுவதாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளின் குறிக்கோள், மனித சமுதாயத்திற்குச் சேவையாற்றுவதை நோக்கம் கொண்டதாக இருக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் SEDOC 

5. திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜூன்,17,2013. எவருடனாவது கோபமாக இருக்கிறாயா? அப்படியெனில் அவருக்காக செபம் செய், அதுவே கிறிஸ்தவ அன்பு என இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒவ்வொரு நாளும் டுவிட்டர் பக்கத்தில் தன் ஒரு வரிச்சிந்தைகளை முன்வைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறும், திங்களும், மன்னிப்பும் அன்பும் என்பதை மையக்கருத்தாக வைத்து எழுதியுள்ளார்.
இஞ்ஞாயிறன்று தன டுவிட்டர் பக்கத்தில், 'திருஅவை எப்போதும் கருணை மற்றும் நம்பிக்கையின் இடமாக இருக்கட்டும். அங்கு அனைவரும் தாங்கள் வரவேற்கப்படுவதையும் அன்புகூரப்படுவதையும், மன்னிப்புப் பெறுவதையும் உணரட்டும்' என எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் SEDOC 

6. எகிப்தில் விவிலிய நூலை எரித்த இஸ்லாமிய மதபோதகருக்கு தண்டனை

ஜூன்,17,2013. எகிப்தில் கிறிஸ்தவர்களின் புனித நூலான விவிலியத்தை எரித்த இஸ்லாமிய மதபோதகரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடத்துபவருமான அபு இஸ்லாமுக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாத்துக்கு எதிரான வீடியோ ஒன்று, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டிருந்ததை எதிர்த்து, கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக நடந்த ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை ஏற்றிருந்தவர் அபு இஸ்லாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அபு இஸ்லாமின் மகனுக்கும் எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் இருவரும் சில நூறு டாலர்கள் கணக்கில் அபராதம் செலுத்தினால் இவர்களது சிறைத்தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என நீதிமன்றத் தீர்ப்பு அமைந்துள்ளது.

ஆதாரம் BBC

7. சங்க இலக்கிய நூல்கள் 12 ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு

ஜூன்,17,2013. சங்க இலக்கியத்திலுள்ள பதினெட்டு நூல்களில், பன்னிரெண்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்காக தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருபவருமான வைதேகி ஹெர்பர்ட் அவர்களுக்கு கனடாவின் டொரான்டோ பல்கலைகழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளன.
இதுவரை சங்க இலக்கியத்தின் பன்னிரெண்டு படைப்புகளை மொழிபெயர்த்துள்ள வைதேகி அவர்கள், இதர ஆறு படைப்புகளையும் அடுத்த ஆண்டு (2014) இறுதிக்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
பதிற்றுப்பத்தை முதல் முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதாகக் கூறும் அவர், சங்க இலக்கியத்தைப் பொருத்தவரையில் இதுவரை யாருமே ஒரு நூலுக்கு மேல் மொழிபெயர்த்தது கிடையாது எனவும் தெரிவிக்கிறார்.
தனது மொழிபெயர்ப்புகள் வர்த்தக ரீதியில் எவ்விதப் பலனையும் அளிக்காது என்பதை தான் நன்கு உணர்ந்துள்ளதாகவும் வைதேகி ஹெர்பர்ட் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் BBC

8. வேப்பமரத்தில் அற்புதமான "வீரிய ஊக்கி': கால்நடை மருத்துவர் கண்டுபிடிப்பு
ஜூன்,17,2013. மருந்து, பெட்ரோல் உள்ளிட்டவைகளின் சக்தியை அதிகரிக்கும், "வீரிய ஊக்கி'யைக் கண்டுபிடித்துள்ளார் தேனியை சேர்ந்த, கால்நடை அரசு மருத்துவர் உமாகாந்தன்.
"நிம்பின்' என்ற வேதிப்பொருள் மூலம், "ஆன்டிபயாடிக்' தன்மையை, வேப்பமரம் அதிகரிக்கச் செய்து கொள்கிறது என்பதை, கடந்த எட்டு ஆண்டு ஆய்வில் கண்டுபிடித்து, "நிம்பின்' என்ற இந்த வீரிய ஊக்கியை, குறைந்த அளவு மருந்துடன் சேர்த்து பயன்படுத்தினால், அதிக வீரியம் கிடைக்கும் என அறிய வந்துள்ளார் மருத்துவர் உமாகாந்தன்.
இதை, பெட்ரோல், டீசலில் குறிப்பிட்ட அளவு சேர்த்தால், எரிபொருள் சிக்கனம் கிடைக்கும்; மாசு உண்டாக்கும் புகை அளவை குறைக்கலாம் எனவும், மண்ணெண்ணெய், நல்லெண்ணெய், பசும்பால், நெய்யில் சேர்த்து, ஆராய்ச்சி செய்யப்பட்டதில், பயனுள்ள முடிவுகள் கிடைத்துள்ளன எனவும் கூறும் கால்நடை அரசு மருத்துவர் உமாகாந்தன், விவசாயம் மற்றும் சிமென்ட், ரப்பருடன், சரியான விகித்தில் பயன்படுத்தினால், வீரியம் அதிகரிக்கும், செலவு குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் Dinamalar 

No comments:

Post a Comment