Saturday, 15 June 2013

Catholic News in Tamil - 13/06/13

1. நாவடக்கம் என்பது மிக எளிதான, அதேவேளை, மிகவும் சவால்கள் நிறைந்த ஒரு புண்ணியம் - திருத்தந்தை

2. ஜலந்தர் மற்றும் Eluru மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்கள் நியமனம்

3. Slovenia குடியரசின் பிரதமர் திருத்தந்தையுடன் சந்திப்பு

4. நம்பிக்கை ஆண்டின் சுற்றுமடல் நவம்பர் மாதத்திற்கள் வெளிவரும் - திருத்தந்தை

5. ஒவ்வொரு மதத்திற்கும் உரிய மதிப்பை வழங்குவதன் வழியாக, மதங்களுக்கிடையே நல்லுறைவை வளர்க்கமுடியும் - கர்தினால் Filoni

6. சுற்றுச்சூழல் பிரச்சனைகளின்போது, அரசுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள சாதாரண மக்களுக்கு சக்தியில்லை - இந்தோனேசிய ஆயர் Agustinus Agus

7. அடிப்படையான, நலமான உணவுக்காக உலகின் ஏழைகள் இன்னும் பொறுமையுடன் காத்திருக்கத் தேவையில்லை - வெனேசுவேலா ஆயர் Azuaje

8. அனைத்துலக குழந்தைத்தொழில் எதிர்ப்பு நாளையொட்டி, இந்திய நகரங்களில் பல்லாயிரம் குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டங்கள்

9. உலகின் பிரம்மாண்டமான ஓவியக் கண்காட்சி சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்

------------------------------------------------------------------------------------------------------

1. நாவடக்கம் என்பது மிக எளிதான, அதேவேளை, மிகவும் சவால்கள் நிறைந்த ஒரு புண்ணியம் - திருத்தந்தை

ஜூன்,13,2013. நமது நாவிலிருந்து பிறக்கும் சொற்கள் மீது கவனம் தேவை, ஏனெனில், மற்றவர்களைப் புகழ்ந்து, நல்லவற்றை விளைவிக்கும் சொற்களைவிட, அவர்களை இழிவுபடுத்தும் சொற்களே நமது நாவிலிருந்து வெளிவருகின்றன என்ற எச்சரிக்கையைத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கினார்.
இவ்வியாழன் காலை, புனித மார்த்தா இல்ல சிற்றாலயத்தில் ஆற்றிய திருப்பலியில், "மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புகமுடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்" என்ற மத்தேயு நற்செய்தி வரிகளை மையப்படுத்தி திருத்தந்தை மறையுரையாற்றினார்.
இத்திருப்பலியை, அர்ஜென்டீனா தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் ஊழியர்களுக்கும் இஸ்பானிய மொழியில் திருத்தந்தை ஆற்றினார்.
பிப்ரவரி 26ம் தேதிக்குப்பின் தற்போதுதான் இஸ்பானிய மொழியில் தான் திருப்பலியாற்றுவதாகக் கூறிய திருத்தந்தை, இந்த வாய்ப்பு தனக்கு மகிழ்வைத் தருவதாகவும் எடுத்துரைத்தார்.
மற்றவர்களை 'முட்டாளே', 'அறிவிலியே' என்ற சொற்களால் அழைப்பதைக் கண்டனம் செய்துள்ள இயேசுவின் வார்த்தைகள் நமக்கு நல்லதோர் எச்சரிக்கையாக அமைந்துள்ளன என்று கூறியத் திருத்தந்தை, முழுமையான மனவளர்ச்சி அடைய மறுப்பவர்களே மற்றவர்களை இழிவுபடுத்தும் மொழியைப் பயன்படுத்துகின்றனர் என்று தெளிவுபடுத்தினார்.
நமக்குள் எழும் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பது மிகவும் கடினம் என்பதால், பல நேரங்களில் நாம், பிறரைக் குற்றம் சொல்லுதல், பிறரை இழிவுபடுத்துதல் ஆகிய மிக எளிய வழிகளைப் பின்பற்றி, பின்னர் மனம் வருந்துகிறோம் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
நாவடக்கம் என்பது மிக எளிதான, அதேவேளை, மிகவும் சவால்கள் நிறைந்த ஒரு புண்ணியம் என்று கூறியத் திருத்தந்தை, இந்தப் புண்ணியத்தில் நாம் அனைவரும் வளர இறைவனிடம் அனைவருக்காகவும் தான் செபிப்பதாகக் கூறி, தன் மறையுரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. ஜலந்தர் மற்றும் Eluru மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்கள் நியமனம்

ஜூன்,13,2013. டில்லி உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராகப் பணியாற்றி வரும் ஆயர் Franco Mulakkal அவர்களை ஜலந்தர் மறைமாவட்டத்தின் ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று நியமித்தார்.
ஜலந்தர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய Anil Joseph Thomas Couto அவர்களை டில்லி பேராயராக முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்கள் 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் உயர்த்தியபின், ஜலந்தர் மறைமாவட்டம் கடந்த ஐந்து மாதங்கள் ஆயரின்றி இருந்தது.
ஜலந்தர் ஆயராகப் பொறுப்பேற்கும் ஆயர் Franco Mulakkal, கேரளாவின் மட்டம் என்ற ஊரில் 1964ம் ஆண்டு பிறந்தவர். 1990ம் ஆண்டு ஜலந்தர் மறைமாவட்டத்தின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட Mulakkal அவர்கள், 2009ம் ஆண்டு டில்லி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார்.
மேலும், ஆந்திர மாநிலத்தின் Eluru மறைமாவட்டத்தின் ஆயராக அருள் பணியாளர் Jaya Rao Polimera அவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழனன்று நியமித்துள்ளார்.
1965ம் ஆண்டு ஆந்திராவின் வாரங்கல் மறைமாவட்டத்தின் தர்மசாகர் எனுமிடத்தில் பிறந்த Jaya Rao அவர்கள், 1992ம் ஆண்டு அருள் பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
வாரங்கல் மறைமாவட்டத்தில் பல்வேறு பணிகளை மேற்கொண்ட இவர், 2009ம் ஆண்டிலிருந்து மறைமாவட்டத்தின் இளையோர் பணி மையத்தின் இயக்குனராகப் பணியாற்றி வந்தார்.
Eluru மறைமாவட்டத்தின் ஆயராக 1977ம் ஆண்டு பொறுப்பேற்ற John Mulagada அவர்கள் 2009ம் ஆண்டு இறையடி சேர்ந்ததையடுத்து, கடந்த நான்கு ஆண்டளவாய் இம்மறைமாவட்டம் ஆயரின்றி இருந்துவந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. Slovenia குடியரசின் பிரதமர் திருத்தந்தையுடன் சந்திப்பு

ஜூன்,13,2013. ஜூன் 13, இவ்வியாழன் காலை Slovenia குடியரசின் பிரதமர் Alenka Bratušek அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தார்.
Slovenia நாட்டு வரலாற்றில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றியுள்ள முக்கியப் பங்கு, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சுமுகமான உறவு, இதன் விளைவாக, இவ்விரு நாடுகளுக்கும் இடையே இன்னும் உறைவை ஆழப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள், ஆகியவை இச்சந்திப்பில் இடம்பெற்றதாக வத்திக்கான் தகவல் அலுவலகம் அறிவித்தது.
தற்போதையப் பொருளாதாரச் சரிவினால் நாடு சந்திக்கும் சவால்களையும், இந்நேரத்தில் கத்தோலிக்கத் திருஅவை ஆற்றக்கூடிய பணிகள் ஆகியவை குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டது.
திருத்தந்தையைச் சந்தித்தபின், பிரதமர் Bratušek அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சீசியோ பெர்தோனே அவர்களையும், நாடுகளுடன் உறவை மேற்கொள்ளும் திருப்பீடத் துறையின் நேரடிச் செயலர் பேரருள் தந்தை Antoine Camilleri அவர்களையும் சந்தித்துப்  பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. நம்பிக்கை ஆண்டின் சுற்றுமடல் நவம்பர் மாதத்திற்கள் வெளிவரும் - திருத்தந்தை

ஜூன்,13,2013. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தின் மையக்கருத்தான, "நம்பிக்கையை பரப்புவதற்கு, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி" என்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்புகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
நடைபெறும் நம்பிக்கை ஆண்டின் துவக்க நிகழ்வாக வத்திக்கானில் நடைபெற்ற ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு தொடர்ச்சியாக, இவ்வாரம் வத்திக்கானில் 25 ஆயர்கள் ஒன்றுகூடி, அடுத்த ஒரு வாரத்திற்கு விவாதங்கள் மேற்கொள்ளவிருக்கின்றனர்.
ஆயர்கள் மாமன்ற பொதுச்செயலர் பேராயர் Nikola Eterovic தலைமையில் கூடியுள்ள இந்த ஆயர்கள் குழுவை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் நடைபெறும் கூட்டத்திற்கு தன் சிறப்பான வாழ்த்துக்களையும், ஆசீரையும் வழங்கினார்.
தான் எழுதிவைத்திருந்த உரையை ஆயர்களிடம் வாசிக்காமல், அவர்களுடன் ஓர் உரையாடலில் ஈடுபட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நம்பிக்கை ஆண்டுக்குரிய சுற்றுமடலின் முதல் வரைவை முன்னாள் திருத்தந்தை பெனடிக்ட் அவர்களிடமிருந்து தான் பெற்றுள்ளதாகவும், அதில் மிக ஆழமான இறையியல் எண்ணங்கள் பொதிந்துள்ளதாகவும் கூறினார்.
முன்னாள் திருத்தந்தை வழங்கியுள்ள இந்த எண்ணங்களுடன் தன் எண்ணங்களை இணைத்து, இந்த ஆகஸ்ட் மாதம் தான் சுற்றுமடலை உருவாக்க உள்ளதாகவும், இவ்விரு திருத்தந்தையரின் முயற்சிகளின் தொகுப்பாக வெளிவரும் சுற்றுமடல், நம்பிக்கை ஆண்டின் இறுதிக்குள் வெளிவரும் என்றும் திருத்தந்தை, கூடியிருந்த ஆயர்களிடம் கூறினார்.
நற்செய்தியை அறிவிப்பதற்கு நம்மிடம் பல புதிய கருவிகள் வளர்ந்திருப்பது நல்லதொரு முன்னேற்றம் என்றாலும், நற்செய்தியின் நாயகனான இயேசுவைப் புறம்தள்ளிவிட்டு, இக்கருவிகள் முதலிடம் பெறமுடியாது என்பதை உணரவேண்டும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
இவ்வாரம் நடைபெறும் ஆயர்கள் கூட்டம் அடுத்த ஆயர்கள் மாமன்றத்தின் மையக் கருத்தைத் தீர்மானிக்கும் என்பதால், அவர்களின் விவாதங்களை தூயஆவியாரும் அன்னை மரியாவும் வழிநடத்த வேண்டுமென்ற விருப்பத்துடன், திருத்தந்தை அங்கிருந்தோர் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. ஒவ்வொரு மதத்திற்கும் உரிய மதிப்பை வழங்குவதன் வழியாக, மதங்களுக்கிடையே நல்லுறைவை வளர்க்கமுடியும் - கர்தினால் Filoni

ஜூன்,13,2013. ஒரே கடவுள் என்ற அடிப்படை கொள்கை, இறை வேண்டலின் முக்கியத்துவம் ஆகிய அம்சங்களை நம்முடன் பகிரும் இஸ்லாமியர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள ஒரு நாட்டில் தங்கி, பணிபுரியும் நீங்கள், ஒவ்வொரு மதத்திற்கும் உரிய மதிப்பை வழங்குவதன் வழியாக, மதங்களுக்கிடையே நல்லுறைவை வளர்க்கமுடியும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மக்கள் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவராகிய கர்தினால் Fernando Filoni அவர்கள், ஒன்றிணைந்த அரேபிய அரசு நாடுகளில் மேற்கொண்டுள்ள ஐந்து நாள் மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு நிகழ்வாக, இப்புதன் மாலை Abu Dhabiயில் அமைந்துள்ள புனித யோசேப்பு பேராலயத்தில் ஆற்றிய திருப்பலியில், இவ்வாறு மறையுரையாற்றினார்.
பணியின் நிமித்தம் பல்வேறு நாடுகளிலிருந்து இங்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் அருகாமையில் தான் இருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உங்களிடம் தன் வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார் என்று கர்தினால் Filoni அவர்கள் தன் மறையுரையின் துவக்கத்தில் பகர்ந்தார்.
சொந்த நாடுகளையும், உங்கள் குடும்பங்களையும் விட்டு, வெகு தூரத்தில் வாழும் நீங்கள், உங்கள் நம்பிக்கை வாழ்வை கட்டியெழுப்பியுள்ளது போற்றுதற்குரியது என்று கர்தினால் Filoni அவர்கள் அங்கிருந்தோரைப் பாராட்டினார்.
பல்வேறு நாடுகளின் குடிமக்களாகிய நாம் அனைவருமே, இவ்வுலகத்தில் பயணிகள், நமது நிலையான நாடும், வீடும் விண்ணகம் என்பதே, கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் உண்மை என்று கர்தினால் Filoni அவர்கள் மறையுரையின் இறுதியில் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. சுற்றுச்சூழல் பிரச்சனைகளின்போது, அரசுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ள சாதாரண மக்களுக்கு சக்தியில்லை - இந்தோனேசிய ஆயர் Agustinus Agus

ஜூன்,13,2013. சுற்றுச்சூழல் பிரச்சனைகள் எழும்போது, அரசுடனும், வர்த்தக சக்திகளுடனும் நேரடி தொடர்பு கொள்வதற்கோ, பேச்சுவார்த்தைகள் மேற்கொள்வதற்கோ சாதாரண மக்களுக்கு சக்தியில்லை என்று இந்தோனேசிய நாட்டின் ஆயர் ஒருவர் கூறினார்.
இந்தோனேசியாவில் உள்ள காடுகளை அழித்து அங்கு பல சுரங்கத் தொழில்களை ஆரம்பித்துள்ள வர்த்தகச் சக்திகளின் ஆதிக்கத்தைத் தடுக்க எளிய மக்களுக்கு வழி முறைகளும், சக்தியும் இல்லை என்று இந்தோனேசிய ஆயர் பேரவையின் நீதி, அமைதி பணிக்குழுவின் தலைவரான ஆயர் Agustinus Agus அவர்கள், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இணைந்து ஜகார்தாவில் இப்புதனன்று மேற்கொண்ட ஒரு கருத்தரங்கின்போது குறிப்பிட்டார்.
2004ம் ஆண்டு முதல், 2012ம் ஆண்டு முடிய பல்வேறு சுரங்கத் தொழில் நிறுவனங்களுக்கு அரசு அளித்துள்ள உத்தரவால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உருவாக்கியுள்ள 1,724 எடுத்துக்காட்டுகள் உள்ளன என்று  UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தோனேசியாவில் இயங்கிவரும் 10,677 சுரங்கத் தொழில் நிறுவனங்களால், சுற்றுச்சூழலுக்கும், சமுதாயத்தின் விளிம்புகளில் வாழும் மக்களுக்கும் பெரும் அழிவுகள் உருவாகியுள்ளன என்று கூறப்படுகிறது.

ஆதாரம் : UCAN   

7. அடிப்படையான, நலமான உணவுக்காக உலகின் ஏழைகள் இன்னும் பொறுமையுடன் காத்திருக்கத் தேவையில்லை - வெனேசுவேலா ஆயர் Azuaje

ஜூன்,13,2013. அடிப்படையான, நலமான உணவு அனைத்து மக்களின் அடிப்படை உரிமை என்றும், உலகின் ஏழைகள் இன்னும் பொறுமையுடன் காத்திருக்கத் தேவையில்லை என்றும் வெனேசுவேலா நாட்டின் ஆயர் ஒருவர் கூறினார்.
ஜூன் 8 கடந்த சனிக்கிழமை முதல், ஜூன் 16, வருகிற ஞாயிறு முடிய வெனேசுவேலா நாட்டின் Caracas எனுமிடத்தில் நடைபெற்றுவரும் காரித்தாஸ் பிறரன்புப்பணி கூட்டத்தில் உரையாற்றிய ஆயர் Jose Luis Azuaje இவ்வாறு கூறினார்.
இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளில் உள்ள காரித்தாஸ் பணிகளின் ஒருங்கிணைப்பாளரான ஆயர் Azuaje தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் 20 நாடுகளிலிருந்து வந்துள்ள காரித்தாஸ் உறுப்பினர்கள் பங்கேற்று வருகின்றனர்.
இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளில் அதிகத் தேவையில் உள்ளவர்களை முதன்மைப்படுத்தி, அவர்களுக்கு மிக அவசரத் தேவையாக உள்ளவைகளை உடனடியாகத்  தீர்க்கும் முயற்சியில் இந்த கூட்டம் ஈடுபட்டுள்ளது என்று Fides செய்திக்கு அனுப்பப்பட்டுள்ள ஒரு குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

8. அனைத்துலக குழந்தைத்தொழில் எதிர்ப்பு நாளையொட்டி, இந்திய நகரங்களில் பல்லாயிரம் குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டங்கள்

ஜூன்,13,2013. ஜூன் 12, இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட அனைத்துலக குழந்தைத்தொழில் எதிர்ப்பு நாளையொட்டி, இந்தியாவின் டில்லி, ராஞ்சி, பெங்களூரு ஆகிய நகரங்களில் பல்லாயிரம் குழந்தைகள் கலந்துகொண்ட போராட்டங்கள் நடைபெற்றன.
புது டில்லியில் அமைந்துள்ள இந்தியா வாசலுக்கு எதிராகக் கூடியிருந்த குழந்தைகள், குழந்தைத்தொழிலுக்கு எதிராக எழுதப்பட்டிருந்த வாசகங்கள் தாங்கிய விளம்பர அட்டைகளைத் தாங்கி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் குழந்தைத்தொழில் எதிர்ப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் அருள் பணியாளர் Rajan Punnakal, புது டில்லியின் நிகழ்வுகளை முன்னின்று நடத்தினார்.
குழந்தைத்தொழிலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் அதேவேளையில், ஒவ்வொரு குழந்தையும் கல்வி பெறுவது அவர்களின் அடிப்படை உரிமை என்பதையும் வலியுறுத்தி வருகிறோம் என்று அருள் பணியாளர் Punnakal, UCAN செய்தியிடம் கூறினார்.
ராஞ்சியில், 'குழந்தைத்தொழிலுக்கு எதிரான ஓட்டம்' என்ற ஓட்டப்பந்தய நிகழ்வில் 3000க்கும் அதிகமான குழந்தைகள் கலந்துகொண்டனர் என்று UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இந்தியாவில் தொழில் செய்ய கட்டாயப்படுத்தப்படும் குழந்தைகள் 50 இலட்சம் பேர் என்றும், இவர்களில் 17 இலட்சம் குழந்தைகள் உத்தரகாந்து மாநிலத்திலிருந்தும், 5 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் மேற்கு வங்காளத்திலிருந்தும், 4 இலட்சம் குழந்தைகள் இராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களிலிருந்தும் வந்துள்ள குழந்தைகள் என்று நாடு தழுவிய ஒரு கணக்கெடுப்பு அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

9. உலகின் பிரம்மாண்டமான ஓவியக் கண்காட்சி சுவிட்சர்லாந்தில் ஆரம்பம்

ஜூன்,13,2013. சுவிட்சர்லாந்தில் ஜூன் 13, இவ்வியாழன் முதல் 16ம் தேதி ஞாயிறு முடிய நடைபெறும் பிரம்மாண்ட ஓவியக் கண்காட்சியில் உலகின் ஐந்து கண்டங்களிலிருந்தும் வந்துள்ள ஓவியர்கள் 300 ஓவிய அரங்குகளை உருவாகியுள்ளனர்.
இந்தப் போட்டியில் கலந்துகொள்ள 39 நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் வந்துள்ளனர். ஜெர்மனியிலிருந்து 60 பேரும், இலண்டனிலிருந்து 40 பேரும், அமெரிக்காவிலிருந்து 90 பேரும் வந்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் 30 பேர் பங்கு பெறுகின்றனர், இவர்களது ஓவியம் 65,000 பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கின்றனர். ஓவியப் போட்டியில் கலந்துகொள்ள 1000 ஓவியர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நேரடி ஓவியங்கள், வீடியோக்கள், காட்சிப் படைப்புகள், சிற்பங்கள் ஆகியவை ஓவியக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. இவையனைத்தும் அதிக விலைக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போட்டியில் வெற்றி பெறுபவருக்கு "Swiss Art Awards" வழங்கப்படும்.

ஆதாரம் : artbasel.com

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...