1. வெளிவேடம் என்பது திருஅவையில் பல வடிவங்களில் உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்
2. திருநற்கருணைச் செபங்களில் புனித யோசேப்புவின் பெயர் இனி இணைக்கப்படும்
3. புலம்பெயர்ந்து செல்லும் மக்களுடன் பயணிக்கும் கடமை திருஅவைக்கு உள்ளது - கர்தினால் Leonardo Sandri
4. 450க்கும் அதிகமான குழந்தைகள் வருகிற ஞாயிறன்று உரோம் நகருக்கு வந்து, திருத்தந்தையைச் சந்திப்பர்
5. விழி இழந்தோர் படிக்கும் வகையில் இவ்வுலகில் பெருமளவில் நூல்கள் இல்லை - பேராயர் சில்வானோ தொமாசி
6. வேளாண்மை வளர்ச்சித் திட்டங்களில், விளிம்பு மக்களையும் இணைப்பது அவசியம்
7. மோதல்களைத் தவிர்க்க, கத்தோலிக்கத் திருஅவை உரையாடல் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது - ஆப்ரிக்க ஆயர்
8. ஐ.நா. அவையின் பொதுநலக் கருத்துக்களை முன்னிறுத்தும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு விருதுகள்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. வெளிவேடம் என்பது திருஅவையில் பல வடிவங்களில் உள்ளது - திருத்தந்தை பிரான்சிஸ்
ஜூன்,19,2013. சட்டங்களையும், கட்டளைகளையும் கவனமாகப் படிப்பதில் கிறிஸ்தவ வாழ்வு அமைவதில்லை, மாறாக, மகிழ்வுள்ளவரான, தாராள
மனம் கொண்டவரான கடவுளைப் புரிந்துகொள்வதற்குத் தடையாக இத்தகைய மனநிலை
அமைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இன்றைய மறையுரையில்
கூறினார்.
குடும்ப
வாழ்வுக்கென பணியாற்றும் திருப்பீட அவையின் பணியாளர்களுடன் புனித மார்த்தா
இல்லத்தில் இப்புதன் காலை திருப்பலியாற்றியத் திருத்தந்தை, மக்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லும் வெளிவேடக்காரரைப் போல் இருப்பதன் ஆபத்தை தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
கிறிஸ்தவ தவத்தின் அடிப்படைகளான செபம், நோன்பு, தர்மம் ஆகிய மூன்று தூண்களை தகுந்த முறையில் புரிந்துகொள்ளாமல் வாழ்வது, மற்றவர்களுக்குப் பெரும் இடையூறாக இருக்கும் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
வெளிவேடம் என்பது திருஅவையில் பல வடிவங்களில் உள்ளதென்பதையும் எடுத்துரைத்தத் திருத்தந்தை, ஆலயத்தில் வேண்டச் சென்ற பணிவான சமாரியரே நமது பக்தி முயற்சிகளுக்குத் தகுந்த எடுத்துக்காட்டு என்பதையும் வலியுறுத்தினார்.
ஆயர்கள் திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Marc Ouellet அவர்களும், குடும்ப வாழ்வுக்கென பணியாற்றும் திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Vincenzo Paglia அவர்களும் திருத்தந்தையுடன் கூட்டுத் திருப்பலியில் கலந்துகொண்டனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. திருநற்கருணைச் செபங்களில் புனித யோசேப்புவின் பெயர் இனி இணைக்கப்படும்
ஜூன்,19,2013. திருப்பலியின் மத்தியப் பகுதியில் பயன்படுத்தப்படும் 2,3,4
ஆகிய திருநற்கருணைச் செபங்களில் புனித கன்னி மரியாவின் கணவரான புனித
யோசேப்புவின் பெயர் இனி இணைக்கப்படும் என்று திருப்பீடம் அறிவித்துள்ளது.
திருவழிபாட்டுக்கும், அருள் சாதன வழிமுறைகளுக்கும் பொறுப்பான திருப்பீடப் பேராயம் இப்புதனன்று வெளியிட்ட இவ்வறிக்கையில், ஆண்டவராம்
கிறிஸ்துவின் குடும்பத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட புனித
யோசேப்புவின் பெயர் முதல் திருநற்கருணைச் செபத்தில் தற்போது
இடம்பெற்றிருப்பதைப் போல, 2,3,4 ஆகிய திருநற்கருணைச் செபங்களிலும் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரப் பூர்வ அறிக்கையை வெளியிட்ட, இத்திருப்பீடப் பேராயத்தின் தலைவரான கர்தினால் Antonio Cañizares Llovera, முத்திபேறு பெற்ற திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள் இந்த முயற்சியைத் துவக்கினார் என்றும், அவரைத் தொடர்ந்த அனைத்துத் திருத்தந்தையரும் இக்கருத்தை ஆர்வமாக ஆதரித்தனர் என்றும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
புனித யோசேப்புவின் பெயரை இணைக்கும் அதிகாரப் பூர்வமான வார்த்தைகளை இலத்தீன் மொழியில் வெளியாகியுள்ளன என்றும், விரைவில் ஏனைய மொழிகளில் இந்த வார்த்தைகள் இணைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார் கர்தினால் Cañizares Llovera.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. புலம்பெயர்ந்து செல்லும் மக்களுடன் பயணிக்கும் கடமை திருஅவைக்கு உள்ளது - கர்தினால் Leonardo Sandri
ஜூன்,19,2013.
மிக அவலமான நிலையில் வாழும் மக்களின் துன்பங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத
அநீதி என்று அவர்கள் சார்பில் குரல் எழுப்பும் அதே வேளையில், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் திருஅவை கடமைப்பட்டுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கீழை
வழிபாட்டு முறை திருஅவைகளின் 86வது ஆண்டுக் கூட்டத்தை இச்செவ்வாயன்று
திருப்பலியுடன் துவக்கிவைத்த கீழை வழிபாட்டு முறை திருஅவைகள் திருப்பீடப்
பேராயத்தின் தலைவர் கர்தினால் Leonardo Sandri அவர்கள் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
கீழை
வழிபாட்டு முறையைப் பின்பற்றும் நாடுகளில் வாழும் பல்லாயிரம்
கிறிஸ்தவர்கள் அப்பகுதிகளில் நிலவும் அமைதியற்றச் சூழலால் பல்வேறு
நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து செல்லும் பிரச்சனையை, தன் மறையுரையில் குறிப்பிட்டுப் பேசிய கர்தினால் Sandri அவர்கள், இம்மக்களுடன் பயணிக்கும் கடமை திருஅவைக்கு உள்ளதென்று எடுத்துரைத்தார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள மேற்கத்திய நாடுகள், இந்த பிரச்சனையுடன், கீழை நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்துவரும் மக்களை ஆதரிக்கும் சவாலையும் ஏற்க வேண்டும் என்ற அழைப்பை முன்வைத்தார் கர்தினால் Sandri.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
4. 450க்கும் அதிகமான குழந்தைகள் வருகிற ஞாயிறன்று உரோம் நகருக்கு வந்து, திருத்தந்தையைச் சந்திப்பர்
ஜூன்,19,2013. வசதிகள் குறைந்த குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 450க்கும் அதிகமான குழந்தைகள் ஜூன் 23, வருகிற ஞாயிறன்று உரோம் நகருக்கு வந்து, திருத்தந்தையைச் சந்திப்பர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
மதங்களுக்கு இடையே நல்லுறவையும், உரையாடலையும் வளர்க்கும் வண்ணம் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் 'புறவினத்தார் முற்றம்' என்ற முயற்சி துவக்கப்பட்டது.
இந்த முயற்சியின் ஓர் அங்கமாக, "குழந்தைகளின் இரயில்: அழகின் வழி ஒரு பயணம்" என்ற பெயர் தாங்கிய ஒரு பயணத்தில் Milan, Bologna, Florence ஆகிய நகரங்களில் உள்ள பேராயலங்களில் 450க்கும் அதிகமான குழந்தைகள் கல்விச் சுற்றுலா மேற்கொள்கின்றனர்.
இந்தச் சுற்றுலா இந்த ஞாயிறன்று மிலான் நகரில் ஆரம்பமாகி, இறுதியில் வத்திக்கானில் உள்ள இரயில் நிலையத்தில் முடிவுறும் என்றும், இப்பயணத்தின் இறுதியில், இக்குழந்தைகளைத் திருத்தந்தை சந்திப்பார் என்றும் திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவரான கர்தினால் Gianfranco Ravasi கூறினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
5. விழி இழந்தோர் படிக்கும் வகையில் இவ்வுலகில் பெருமளவில் நூல்கள் இல்லை - பேராயர் சில்வானோ தொமாசி
ஜூன்,19,2013. பார்வைத்திறனற்றோர் படிப்பதற்கு ஏற்ற நூல்கள் இல்லாத நிலையை 'புத்தகப் பட்டினி' என்று நாம் அழைக்கக்கூடும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவாவில்
இயங்கும் ஐ.நா. அலுவலகங்களில் திருப்பீடத்தின் சார்பில் நிரந்தரப்
பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், பார்வைத்திறன் அற்றோரின் பிரச்சனைகளைக் கலந்து பேசும் ஐ.நா. கருத்தரங்கு ஒன்றில் இச்செவ்வாயன்று உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.
உலகின் அனைத்து கலைப் படைப்புக்களையும் அனைவரும் சமமாக அனுபவிக்கவேண்டும் என்பது மனிதர்களின் அடிப்படை உரிமை என்றாலும், விழி இழந்தோர் படிக்கும் வகையில் இவ்வுலகில் பெருமளவில் நூல்கள் இல்லை என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார் பேராயர் தொமாசி.
உலக நலவாழ்வு நிறுவனமான, WHOவின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, உலகில் 28 கோடியே, 50 இலட்சம் பேர் பார்வைத் திறனற்றவர்கள் என்றும், இவர்களில் 90 விழுக்காட்டினர் வளரும் நாடுகளில் உள்ளனர் என்றும் பேராயர் தன் உரையின் துவக்கத்தில் சுட்டிக்காட்டினார்.
வளரும் நாடுகளில் பார்வைத்திறனற்று துன்புறும் மக்கள் படிப்பதற்கு ஏற்ற நூல்கள் அங்கு 1 விழுக்காடு மட்டுமே உள்ளனவென்றும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்த நிலை 5 விழுக்காடாக மட்டுமே உள்ளது என்றும் பேராயர் எடுத்துரைத்தார்.
இன்றைய புதிய தொழிநுட்ப முன்னேற்றங்களைக் கொண்டு, பார்வைத் திறனற்றோர் கணணி வழியாக நூல்களை வாசிக்கக் கேட்டு பயன்பெற முடியும் என்றாலும், இத்தகைய வசதிகள் பலரை அடைவதற்குத் தடையாக, சட்டப் பூர்வமான சிக்கல்கள் உருவாகியுள்ளன என்று பேராயர் தொமாசி சுட்டிக்காட்டினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. வேளாண்மை வளர்ச்சித் திட்டங்களில், விளிம்பு மக்களையும் இணைப்பது அவசியம்
ஜூன்,19,2013. வேளாண்மையில் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் காண விழையும் உலக அரசுகள், தங்கள் திட்டங்களில் விளிம்பு மக்களையும் இணைப்பது அவசியம் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜூன் 19, 20 அகிய நாட்களில் உரோம் நகரில் நடைபெறும் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் 38வது அமர்வில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் Luigi Travaglino இவ்வாறு கூறினார்.
உலக உணவு உற்பத்தியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மரபணு மாற்ற ஆய்வுகள், பல்வேறு வகையான உணவுப் பொருட்களையும், உயிர்களையும் பெருமளவில் பாதிக்கும் ஆபத்து உள்ளதென்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Travaglino, இந்தப் போக்கினைக் கண்காணிக்கும் வழிமுறைகள் உலக அரங்கில் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.
வேளாண்மைத் துறையில் மட்டுமல்ல, காடுகள், கடல்கள் ஆகிய கருவூலங்களையும் காப்பாற்றினால் மட்டுமே, உலக உணவு உற்பத்தியில் நாம் நிறைவையும், சமமான பங்கீட்டையும் பெறமுடியும் என்று பேராயர் Travaglino தன் உரையில் வலியுறுத்தினார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
7. மோதல்களைத் தவிர்க்க, கத்தோலிக்கத் திருஅவை உரையாடல் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது - ஆப்ரிக்க ஆயர்
ஜூன்,19,2013. மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை, கத்தோலிக்கர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மத்தியில் உரையாடல் முயற்சிகளை ஆரம்பித்துள்ளது என்றும், இந்த உரையாடல் இன்றி, நாட்டில் வன்முறைகள் வெடிக்கும் ஆபத்து உள்ளதென்றும் அந்நாட்டு ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசு நாட்டில் மதங்களுக்கிடையே நல்லுறவு இல்லாததால், தொடர்ந்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன என்றும், இந்த நிலையை மாற்ற உரையாடல் மிகவும் அவசியம் என்றும் Bangassou ஆயர் Juan José Aguirre Munos, Fides செய்திக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
நாட்டில் பணியாற்றும் பல அரசு சாரா அமைப்புக்கள் கத்தோலிக்கத் திருஅவையிடம் இந்த விண்ணப்பத்தை எழுப்பியதால், தலத் திருஅவை இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என்று ஆயர் Munos விளக்கினார்.
LRA எனப்படும் வன்முறைப் படையினருக்கும், உகாண்டாவின் கொரில்லாப் படையினருக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்களால் ஏற்படும் உயிர்ச் சேதங்களைக் குறித்தும் ஆயர் Munos தன் கவலையை வெளியிட்டார்.
ஆதாரம் : Fides
8. ஐ.நா. அவையின் பொதுநலக் கருத்துக்களை முன்னிறுத்தும் வானொலி நிகழ்ச்சிகளுக்கு விருதுகள்
ஜூன்,19,2013. மனித வர்த்தகத்தின் கொடுமைகள், போரினால் பாதிக்கப்பட்ட காபுல் நகரின் தெருக்களில் வாழும் ஒரு சிறுவனின் நம்பிக்கை, மற்றும் வயது முதிர்ந்தோருக்கு உதவுதல் ஆகிய கருப்பொருட்கள் கொண்ட வானொலி நிகழ்ச்சிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் கலை விழாக்களின் ஓர் அங்கமாக, ஐ.நா. அவையும், நியூயார்க் நகரும் இணைந்து, இத்திங்கள் இரவு வழங்கிய தங்கப் பதக்கத்தை, பாஸ்டன் நகரைச் சேர்ந்த Philip Martin என்பவர் பெற்றார்.
ஐ.நா. அவையின் பொதுநலக் கருத்துக்களை முன்னிறுத்தும் வானொலி நிகழ்வுகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றில், "Underground Trade" என்ற தலைப்பில், மனித வர்த்தகத்தின் கொடுமைகளை விளக்கும் பாஸ்டன் நகர WGBH வானொலி நிலைய நிகழ்வு முதல் பரிசைப் பெற்றது.
நெதர்லாந்து வானொலி நிலையம் உருவாக்கியிருந்த காபுல் நகரச் சிறுவனைப் பற்றிய நிகழ்ச்சி வெள்ளிப்பதக்கத்தையும், கனடா நாட்டு வானொலி, முதியோருக்கு உதவுதல் குறித்து உருவாக்கியிருந்த நிகழ்ச்சி வெண்கலப் பதக்கத்தையும் வென்றன.
1957ம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் நியூயார்க் கலை விழாக்களில், 1990ம் ஆண்டு முதல் ஐ.நா.வும், நியூயார்க் நகரும் இணைந்து சமுதாயக் கண்ணோட்டம் கொண்ட வானொலி நிகழ்சிகளுக்கு பரிசுகள் வழங்கி வருகின்றன.
ஆதாரம் : UN
No comments:
Post a Comment