1. திருத்தந்தை : பகைவர்களையும் அன்புகூராதவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது
2. நாம் சட்டத்தின் அடிமைகள் அல்ல, இறைவனின் குழந்தைகள் - திருத்தந்தை பிரான்சிஸ்
3. நைஜீரியாவில் நான்கு கிறிஸ்தவ கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன
4. ஈரானில் 6 கிறிஸ்தவர்களுக்கு சிறைத்தண்டனை
5. காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க மூங்கில் சவப்பெட்டிகள்
6. மாசடைந்த காற்றை சுவாசிக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு, மன வளர்ச்சிக் குறைபாடு அபாயம்
7. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை : பகைவர்களையும் அன்புகூராதவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்க முடியாது
ஜூன்,18,2013. உங்கள் பகைவர்களிடமும் அன்புகூருங்கள் என இயேசு நம்மை நோக்கிக் கேட்பது நம்மால் இயலாத ஒன்றாகத் தெரியலாம், ஆனால் நம் பகைவர்களை நாம் அன்புகூரவில்லையெனில், நாம் கிறிஸ்தவர்களாக இருக்கமுடியாது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பகைவரையும் அன்புகூர இயேசு விடுக்கும் அழைப்பு, உலகினின்று விலகி, அடைபட்ட துறவு மடத்தில் வாழ்வோருக்கும், புனிதர்களுக்கும் மட்டுமே உரியது என நாம் ஒதுக்கத் தேவையில்லை, ஏனெனில் நம்மால் இதனை ஆற்றமுடியும் என இயேசு கூறுகிறார் என்றார் திருத்தந்தை.
உங்களைத் துன்புறுத்துவோருக்காகவும் செபியுங்கள் என இயேசு விடுக்கும் விண்ணப்பத்திற்கு நாம் சரி என உரைத்தால், நாம் மேலும் அவர்களுக்காக செபிப்பது என்பதே சரியான பாதையாக இருக்கும் என்று கூறியத் திருத்தந்தை, இயேசுவின் விண்ணப்பத்தை நாம் மறுத்தால் அடுத்தவரின் பகைவராக, தொடர்ந்து பழிவாங்குதலிலேயே வாழ்ந்து கொண்டிருப்போம் எனவும் தெரிவித்தார்.
நம்மைத்
துன்புறுத்துவோரின் மனமாற்றத்திற்காக செபிக்கவேண்டிய கடமையும் நமக்கு
உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
எவ்வாறு இயேசுவின் ஏழ்மை நிலை நம் மீட்பிற்கான அருளாக மாறியதோ, அதுபோல் பகைவர்கள் மீது நாம் காட்டும் அன்பும் மன்னிப்பும் நம்மை ஏழ்மை நிலைக்குக் கொணர்ந்தாலும், அந்த ஏழ்மையே வளமையின் விதை, மற்றும் பிறர்க்கான அன்பு என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. நாம் சட்டத்தின் அடிமைகள் அல்ல, இறைவனின் குழந்தைகள் - திருத்தந்தை பிரான்சிஸ்
நாம் சட்டத்தின் அடிமைகளாக இல்லை, மாறாக, இறைவனின் குழந்தைகளாக சுதந்திரத்தைப் பெற்றதன் வழி அருளின் கீழ் வாழ்பவர்களாக உள்ளோம் என, உரோம் மறைமாவட்ட கருத்தரங்கில் பங்குபெற்றவர்களுக்கு இத்திங்களன்று மாலை, வத்திக்கானின் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் உரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்தி
அறிவிப்புப் பணியில் திருமுழுக்கு வழங்குபவர்களுக்கு இயேசுவின் துணை தேவை
என்ற கருத்தை மையமாக வைத்து இடம்பெற்ற மறைமாவட்ட மாநாட்டில் கலந்து
கொண்டோரை, உரோம் ஆயர் என்ற முறையில் இத்திங்கள் மாலை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இறைவனிடமிருந்து இலவசமாகப்பெற்ற அருளை நாம் இலவசமாக வழங்க அழைக்கப்படுகிறோம் எனக்கூறியதுடன், இறைவனை அன்புகூர நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் கூறினார்.
இறைவன் வழங்கும் விடுதலை கண்டோ, அவர் வழங்கும் அருள் குறித்தோ நாம் அஞ்சத்தேவையில்லை எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
நாம் அஞ்சாமல் நற்செய்தி அறிவிப்புப்பணியை மேற்கொள்வோம் என்ற ஊக்கத்தையும் வழங்கினார் திருத்தந்தை.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. நைஜீரியாவில் நான்கு கிறிஸ்தவ கோவில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன
நைஜீரியாவின் வடமாநிலங்களில் ஒன்றான Bornoவில் நான்கு கிறிஸ்தவ கோவில்கள் இஸ்லாமிய குமபல் ஒன்றால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன.
இஸ்லாமியர்களின் Boko Haram என்ற அடிப்படைவாதக் குழுவால் இது ஆற்றப்பட்டிருக்கலாம் என தன் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார் நைஜீரிய ஆயர் பேரவையின் தலைவர் பேராயர் Ignatius Ayau Kaigama.
ஆயுதம் தாங்கிய இக்கும்பல், கை வெடிகுண்டுகளை வீசி 4 கோவில்களை தீயிட்டு சேதப்படுத்தியுள்ளதுடன், மக்களின் கால்நடைகளையும் அவர்களின் தானியச் சேமிப்புகளையும் திருடிச் சென்றுள்ளது.
இத்தகைய தீவிரவாதக் குழுக்களை ஒடுக்க, நைஜீரியா, நைஜர் மற்றும் மாலி நாடுகள், ஒன்றிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளார் பேராயர் Kaigama
ஆதாரம் : FIDES
4. ஈரானில் 6 கிறிஸ்தவர்களுக்கு சிறைத்தண்டனை
ஈரானில் அரசுத்தலைவர் தேர்தல் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், 6 கிறிஸ்தவர்கள் கைது செய்யப்பட்டு, கிறிஸ்தவத்தைப் பரப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளார்கள்.
Mohabat ஈரானிய கிறிஸ்தவ செய்தி நிறுவனம் வழங்கியுள்ள தகவலின்படி, ஒரு வீட்டினுள் கூடி மத வழிபாடு நடத்தியதாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்பியதாகவும், வெளிநாட்டு மறைபோதகர்களுடன் தொடர்புக் கொண்டிருந்ததாகவும், நாட்டிற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததாகவும், தேசியப்பாதுகாப்பிற்கு ஊறுவிளைவித்ததாகவும் இந்த ஆறு கிறிஸ்தவர்கள் மீது குற்றச்சாட்டுப் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் 3 ஆண்டு எட்டு மாத கால சிறைத்தண்டனை வழ்ங்கப்பட்டுள்ளதாகக் கூறும் இச்செய்தி நிறுவனம், அரசுத்தலவர் தேர்தலின்போது இக்கைதுகள் இடம்பெற்றமையால், அது வெளி உலகுக்குத் தெரியாமலேயேச் சென்றுவிட்டது எனவும் கூறுகிறது.
கடந்த ஒன்றரை மாதமாக சிறுபான்மை மதங்களுக்கு எதிராக, காவல்துறையின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், Mohabat ஈரானிய கிறிஸ்தவ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆதாரம் : ANS
5. காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க மூங்கில் சவப்பெட்டிகள்
காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க தங்களால் ஆன உதவிகளை வழங்கும் நோக்கில் மிசோரம் கத்தோலிக்கத் திருஅவை, மூங்கில்களால் சவப்பெட்டிகளைத் தயாரிக்கத் துவங்கியுள்ளது.
இறந்தோரை அடக்கம் செய்ய சவப்பெட்டிகளைத் தயாரிக்கும் பணியில் மரங்கள் பயன்படுத்தப்படுவதைக் குறைக்கும் நோக்கில், மூங்கில்களால் சவப்பெட்டிகள் தயாரிக்கப்படுவதாக அம்மாநில கிறிஸ்தவர்கள் அறிவித்துள்ளனர்.
மிசோரம் மாநிலத்தில் 98 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மிசோரம் இளம் கிறிஸ்தவ இயக்கத்தால் மூன்றாண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட 'பசுமை மிசோரம்' என்ற காடுகள் பாதுகாப்புத் திட்டம் தற்போது மக்களிடையே நல்ல ஆதரவைப் பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் : UCAN
6. மாசடைந்த காற்றை சுவாசிக்கும் பெண்களின் குழந்தைகளுக்கு, மன வளர்ச்சிக் குறைபாடு அபாயம்
ஜூன் 18,2013. அதிகளவில்
மாசடைந்த வாயுவை சுவாசிக்க நேரிடுகின்ற கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள்
ஆட்டிஸம் எனும் மன வளர்ச்சிக் குறைபாடு நோயினால் பாதிக்கப்படும் அபாயம்
பெருமளவில் உள்ளதாக அமெரிக்காவில் நடந்த ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இப்பெண்களின் குழந்தைகளுக்கு, வாயு
மாசடைதல் அளவு குறைவாகக் காணப்படும் சூழலில் வாழும் பெண்களின் குழந்தைகளை
விட ஆட்டிஸம் ஏற்பட இரண்டு மடங்கு வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது என்று
ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
1989ம் ஆண்டிலிருந்து சுமார் ஒரு இலட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிபுணர்கள் நடத்திய இந்த ஆய்வில், கர்ப்பிணிப் பெண்களின் வருமானம், கல்வி மற்றும் புகைத்தல் பழக்கங்கள் உள்ளிட்ட நிலைமைகளும் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.
ஆட்டிஸம் என்ற இந்தப் பாதிப்பு, அமெரிக்காவில் 88 பேரில் ஒருவருக்கு இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன.
ஆதாரம் : BBC
7. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
ஜூன் 18,2013. வெளிநாட்டில்
இருந்து இந்தியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2012ல் 4.5
விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா, இலங்கை
மற்றும் மலேசியாவுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கர்களே இந்தியாவிற்கு அதிகம்
வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 65 இலட்சத்து 70,000 வெளிநாட்டினர் இந்தியாவிற்குச் சுற்றுலாப் பயணிகளாக வந்துள்ளனர். இதில் 10 இலட்சத்து 30,000 பேர் அமெரிக்கர்கள்.
ஆதாரம் : Dinamalar
No comments:
Post a Comment