Monday 17 June 2013

Catholic News in Tamil - 15/06/13


1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ வாழ்வு, இறைவனோடு ஒப்புரவாகும் பாதையை அறிவிக்கின்றது

2. திருத்தந்தை, EU அவைத் தலைவர் சந்திப்பு

3. திருத்தந்தை பிரான்சிஸ் : மனித மாண்பை மதித்து உயர்த்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு இன்றியமையாத கடமை உள்ளது 

4. திருத்தந்தை பிரான்சிஸ் : Evangelium vitae தினத் திருப்பலி

5. ஐக்கிய அரபுக் குடியரசுகளில் கர்தினால் Filoni

6. வெஸ்ட்மின்ஸ்டரில் கர்தினால் Tauran : அமைதிக்காகப் பல்சமயப் பிரார்த்தனை

7. தரமான கல்வி, இனவெறியையும், மொழிவெறியையும் களைய உதவும், ஐ.நா. வல்லுனர்

8. 2030ல் உலகில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள நாடாக இந்தியா

9. அண்டார்டிக் கடலின் பனிக்கட்டிகள் உருகும் அபாயம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ் : கிறிஸ்தவ வாழ்வு, இறைவனோடு ஒப்புரவாகும் பாதையை அறிவிக்கின்றது

ஜூன்,15,2013. மனிதர்களாகிய நம்மை இறைவனோடு ஒப்புரவாக்குவதற்கு, இயேசு நம் பாவங்களைத் தம்மீது சுமந்து நமக்காகப் பாவமானார் என்பதை உலகுக்கு அறிவிக்கும் வாழ்வை வாழ்வதே உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தினமும் காலை 7 மணிக்கு புனித மார்த்தா இல்லத்தில் திருப்பலி நிகழ்த்தி அன்றைய நாளின் திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து மறையுரையாற்றிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் இச்சனிக்கிழமை காலைத் திருப்பலியில் இவ்வாறு கூறினார்.
ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு விண்ணகத்துக்கு இட்டுச்செல்லும் சாலையை வரைந்து கொண்டிருப்பது கிறிஸ்தவ வாழ்வு அல்ல, மாறாக, நம்மைக் கடவுளோடு ஒப்புரவாக்குவதற்காக கிறிஸ்து நமக்காகப் பாவமானார் என்பதை அறிவிக்கும் சாலையில் தங்கியிருக்க நம்மை ஊக்கப்படுத்தும் உயிர்த்துடிப்புள்ள வாழ்வு அது என்றும் கூறினார் திருத்தந்தை.
கிறிஸ்துவின் மையச் செய்தியான இந்த ஒப்புரவு வாழ்வை நாம் அறிவிக்க வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை.
இந்நாளின் முதல் வாசகத்தில் (2கொரி.5,14-21) ஒப்புரவு என்ற சொல் ஐந்து தடவைகள் வந்துள்ளது என்றுரைத்த திருத்தந்தை, உண்மையான ஒப்புரவு என்றால் என்ன என்றும் விளக்கினார்.
கிறிஸ்தவர்கள் தங்களின் பணியை உண்மையாகப் புரிந்துகொண்டு, அதற்குச் சாட்சியாக வாழ அழைக்கப்படுவது குறித்து விளக்கிய பிரான்சிஸ், கிறிஸ்து நமக்காகப் பாவியானார், எனவே நமது பாவங்கள் ஏற்கனவே அவரது உடலிலும் ஆன்மாவிலும் உள்ளன என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை, EU அவைத் தலைவர் சந்திப்பு

ஜூன்,15,2013. EU என்ற ஐரோப்பிய சமுதாய அவைத் தலைவர் José Manuel Durão Barroso, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்புக்குப் பின்னர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீடத்தின் நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் EU அவைத் தலைவர் Barroso.
மனித உரிமைகளை, குறிப்பாக, சமய சுதந்திரத்தை ஊக்குவித்தல், இன்னும் சிறப்பாக, உலகில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினராக இருக்கும் பகுதிகளில் சமய சுதந்திரத்தை ஊக்குவித்தல் குறித்து இச்சந்திப்பில் அதிகக் கவனம் செலுத்தப்பட்டதாக திருப்பீடப் பத்திரிகை அலுவலகம் தெரிவித்தது. 
ஐரோப்பாவை ஒன்றிணைக்கும் நடவடிக்கை உட்பட அனைத்துலக நிலைமைகள், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பின்மை, குறிப்பாக இதனால் பாதிக்கப்பட்டுள்ள இளையோர், குடும்ப வாழ்வில் ஏற்படுத்தியுள்ள எதிர்மறைத் தாக்கங்கள் ஆகியவையும் இச்சந்திப்பில் இடம்பெற்றதாக அவ்வலுவலகம் தெரிவித்தது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் : மனித மாண்பை மதித்து உயர்த்துவதற்கு அரசியல்வாதிகளுக்கு இன்றியமையாத கடமை உள்ளது 

ஜூன்,15,2013. பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தின் 70 பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், மனிதரின் நலனில் அக்கறை காட்டவும், சகோதரத்துவத்தை வளர்க்கவும் வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பணி சட்டங்களைச் சீர்திருத்தம் செய்வது, அதில் மாற்றங்களைக் கொண்டு வருவது என, சட்டங்கள் சார்ந்ததாக இருந்தாலும், மனித மாண்பை மதித்து உயர்த்துவதற்கு இவர்களுக்கு இன்றியமையாத கடமை உள்ளது என்பதையும் வலியுறுத்திக் கூறினார் திருத்தந்தை.
இப்பிரதிநிதிகள் தங்களது குடிமக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், மனிதரை மதித்தல், பொது நலனில் அக்கறை காட்டுதல் போன்ற திருஅவை பரிந்துரைக்கும் விவகாரங்களை ப்ரெஞ்ச் சமுதாயம் செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றது என்றும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் : Evangelium vitae தினத் திருப்பலி

ஜூன்,15,2013. Evangelium vitae என்ற வாழ்வுக்கு ஆதரவான தினம் இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படுவதையொட்டி இஞ்ஞாயிறு காலை 10.30 மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் திருப்பலி நிகழ்த்தவுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருஅவையில் சிறப்பிக்கப்பட்டுவரும் நம்பிக்கை ஆண்டின் ஒரு கட்டமாக மனித வாழ்வை ஆதரிக்கும் பெருமளவான மக்களுக்கு இத்திருப்பலியை நிகழ்த்தவுள்ளார் திருத்தந்தை.
மேலும், நற்செய்தியை புதிய வழிகளில் அறிவிப்பதற்கான திருப்பீட அவை இச்சனிக்கிழமையும் இஞ்ஞாயிறும் வாழ்வுக்கு ஆதரவான தினத்தைச் சிறப்பித்து வருகிறது. பெருமளவான மக்கள் இச்சனிக்கிழமையன்று வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்காவிலுள்ள தூய பேதுரு கல்லறையைத் தரிசித்தனர்.
மேலும், Harley Davidson இரண்டு சக்கர மோட்டார் வாகன நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதன் 110ம் ஆண்டின் நிறைவையொட்டி அந்நிறுவனம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு சிறப்பான இரண்டு மோட்டார் வாகனங்களை பரிசாக அளித்துள்ளது.
இம்மாதம் 13 முதல் 16 வரை உரோமையில் நடைபெறும் இந்நிறுவனத்தின் இவ்விழாவின் உச்சகட்டமாக ஏறக்குறைய 2,000 Harley Davidson இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் இஞ்ஞாயிறன்று வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருக்கும், அவை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆசீரைப் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. ஐக்கிய அரபுக் குடியரசுகளில் கர்தினால் Filoni

ஜூன்,15,2013. அரேபியத் தீபகற்பத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் தங்களது அன்றாடச் செபம், உடன் இருப்பவர்களோடு கருணையுடனும் விசுவாசத்துடனும் நடந்து கொள்வது போன்றவற்றின் மூலம் புளிக்காரமாக வாழுமாறு கேட்டுக்கொண்டார் கர்தினால் Fernando Filoni.
ஐக்கிய அரபுக் குடியரசுகளுக்கு ஐந்து நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட திருப்பீட நற்செய்தி அறிவிப்புப் பேராயத் தலைவர் கர்தினால் Filoni இவ்வெள்ளிக்கிழமையன்று துபாய் நகரின் புறநகர்ப் பகுதியிலுள்ள Ras Al Khaimah என்ற இடத்தில் தூய அந்தோணியார் புதிய ஆலயத்தைத் திருப்பொழிவு செய்த திருப்பலியில் ஆற்றிய மறையுரையில் இவ்வாறு கூறினார்.
இக்குடியரசுகளில் வாழும் வெளிநாட்டுக் கிறிஸ்தவர்களில் தான் நம்பிக்கையும் பற்றுறுதியும் கொண்டிருப்பதாகத் தெரிவித்த கர்தினால் Filoni, ஒவ்வொருவரும் உயிருள்ள கற்களாக வாழ்ந்து உயிர்த்த கிறிஸ்துவில் தங்களது வாழ்வைக் கட்டியெழுப்பும்போது உலகை மாற்ற இயலும் என்றும் கூறினார்.
விசுவாசத்துக்குச் சாட்சியாக வாழ்வது மதங்களுக்கிடையே உரையாடலை ஊக்குவிக்கும், ஒருமைப்பாட்டுணர்வை வளர்க்கும் மற்றும் கடவுளின் அன்பைப் பிரதிபலிக்கச் செய்யும் எனவும் கர்தினால் Filoni கூறினார்.
கடந்த செவ்வாயன்று அரேபியத் தீபகற்ப நாடுகளுக்குத் தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்கிய கர்தினால் Filoni இச்சனிக்கிழமையன்று அதனை நிறைவு செய்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. வெஸ்ட்மின்ஸ்டரில் கர்தினால் Tauran : அமைதிக்காகப் பல்சமயப் பிரார்த்தனை

ஜூன்,15,2013. உலகை இன்னும் அமைதியான இடமாக அமைப்பதற்குச் செபமும் ஒன்றிப்பும் இரு தூண்களாக உள்ளன என்று திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran கூறினார்.
பிரிட்டனுக்கு ஆறு நாள்கள் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள கர்தினால் Tauran இவ்வெள்ளிக்கிழமையன்று இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பேராலய அறையில் உலகின் பெரிய மதங்களின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து உலக அமைதிக்காகச் செபித்தார்.
அனைவரும் ஏங்குகின்ற இன்னும் அதிகமான நீதியும் அமைதியும் நிறைந்த உலகம் உருவாக்கப்படுமாறு அனைவரும் செபிப்போம் என்றுரைத்த கர்தினால் Tauran, அமைதிக்காகச் செபிக்கும்போது அமைதிக்குச் சாட்சிகளாக வாழ்வதற்கு இறைவன் நம்மை மாற்றுகிறார் என்றும் கூறினார். 
1986ம் ஆண்டு இத்தாலியின் அசிசியில் முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் நடத்திய உலக அமைதிக்கானச் செபத்தால் உந்தப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டரில் இச்செபம் நடத்தப்பட்டது.
இச்சுற்றுப்பயணத்தில் பிரிட்டனில் வாழும் இந்து மற்றும் சீக்கிய மதப் பிரதிநிதிகளையும் சந்தித்துள்ளார் கர்தினால் Tauran.
கடந்த புதனன்று தொடங்கிய இச்சுற்றுப்பயணம் இஞ்ஞாயிறன்று நிறைவுடையும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. தரமான கல்வி, இனவெறியையும், மொழிவெறியையும் களைய உதவும், ஐ.நா. வல்லுனர்

ஜூன்,15,2013. தரமான கல்வியை வழங்குவதன்மூலம் இனவெறி, மொழிவெறி மற்றும் பிற பாகுபாடுகளைக் களைய முடியும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் வல்லுனர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.
புதிய விழுமியங்களையும் புதிய எண்ணங்களையும் ஊட்டுவதில் கல்விக்கு மையப்பங்கு உள்ளது என்றும், இதன்மூலம் வரலாற்றில் ஆழமாகப் புரையோடிப்போயுள்ள அநீதிகளையும் பாகுபாடுகளையும் களைய முடியும் என்றும் ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் அவையில் Mutuma Ruteere கூறியுள்ளார்.
சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தோர், குடியேற்றதாரர் மற்றும் வலுவற்ற குழுக்களால் சமுதாயத்துக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தத் தகவல்கள் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்பதையும் Ruteere வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : UN                             

8. 2030ல் உலகில் மக்கள் தொகை அதிகமாகவுள்ள நாடாக இந்தியா

ஜூன்,15,2013. ஒரு நாளைக்கு 75 ஆயிரம் குழந்தைகள் வீதம் பிறக்கும் இந்தியா, 2030ம் ஆண்டுக்குள் உலகில் அதிகமான மக்கள் தொகையைக்  கொண்டிருக்கும் நாடாக அமையக்கூடும் என்று ஐ.நா. கணித்துள்ளது.
தற்போது 120 கோடி மக்களைக் கொண்டிருக்கும் இந்தியாவின் மக்கள் தொகை 2030ம் ஆண்டில் சீனாவின் மக்கள் தொகையைவிட அதிகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
எனினும், குடும்பக்கட்டுப்பாடு என்ற கொள்கைகளின்கீழ் இடம்பெறும் கருக்கலைப்புகள் குறித்து குறைகூறியுள்ள திருப்பீட வாழ்வுக் கழக உறுப்பினர் மருத்துவர் பாஸ்கால் கர்வாலோ, ஓராண்டில் இந்தியாவில் 62 இலட்சம் கருக்கலைப்புகள் இடம்பெறுவது குறித்து குறைகூறியுள்ளார்.  

ஆதாரம் : Asianews

9. அண்டார்டிக் கடலின் பனிக்கட்டிகள் உருகும் அபாயம்

ஜூன்,15,2013. உலகம் வெப்பமயமாவதால் அண்டார்டிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இருக்கும் பனிக்கட்டிகள் உருகுவதாக முன்பு தெரிவிக்கப்பட்டிருக்க, தற்போது அப்பெருங்கடலின் அடிப்பகுதியில் படிந்து கிடக்கும் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகுவதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் எரிக் ரிக்னாட் குழுவினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2003ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டுவரை சராசரியாக 1,325 இலட்சம் கோடி கிலோ பனிக்கட்டிகள் உருகியுள்ளவேளை, 1,100 இலட்சம் கோடி கிலோ பனிக்கட்டிகள் புதிதாக உருவாகியுள்ளன.
அண்டார்டிக் பெருங்கடலின் ஆழமான பகுதியில் 3 மிகப் பெரிய இராட்சத பனிக்கட்டிகள் உருகியுள்ளன. அவை முழுமையான அண்டார்டிகாவின் மூன்றில் 2 மடங்காகும்.
ஆயினும் பெருங்கடலின் மேற்பரப்பில் 15 விழுக்காடு பனிக்கட்டிகள் மட்டுமே உருகியுள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : தமிழ்வின்

No comments:

Post a Comment