1. திருத்தந்தை பிரான்சிஸ் : எவரும் தற்செயலாக கிறிஸ்தவராவதில்லை
2. சிரியாவில் அருள்பணியாளர் Murad கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து கீழைரீதி பேராயம் ஆழ்ந்த அனுதாபம்
3. சிரியாவில் இடம்பெறும் வெட்கத்துக்குரிய சண்டை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு புனிதபூமிக் காவலர் அழைப்பு
4. கர்தினால் தாக்லே : திருத்தந்தை பிரான்சிஸ் ஆசியக் கத்தோலிக்கர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்
5. யாங்கூன் பேராயர் : சமய மோதல்களை நிறுத்துவதற்கு கத்தோலிக்கத் திருஅவை உரையாடலின் கருவி
6. இமாலயச் சுனாமியில் பாதிக்கப்பட்டோருக்கு இந்தியத் திருஅவை உதவி
7. உலகளாவிய வணிகத்துக்கு உதவும் கடல்தொழிலாளருக்கு ஐ.நா.பொதுச் செயலர் பாராட்டு
8. ஹிரோஷிமா அணுகுண்டு வெளியிட்ட வெப்பம்போல் நான்கு மடங்கு வெப்பம் புவியில் அதிகரிக்கும்
9. புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்ட ஜெர்மன் இளையோர்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தை பிரான்சிஸ் : எவரும் தற்செயலாக கிறிஸ்தவராவதில்லை
ஜூன்,25,2013. கிறிஸ்தவராய் இருப்பது அன்பின் குரலுக்குப் பதிலளிப்பதாய், இறைவனின் பிள்ளைகளாக மாறுவதற்கு அழைப்பு விடுப்பதாய் இருக்கின்றது என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புனித மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய திருப்பலி மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவன்
நம்மை ஒருபோதும் தனியாக விடுவதில்லை மற்றும் துன்பங்கள் மத்தியிலும் நம்மை
முன்னோக்கி நடக்குமாறு அவர் சொல்கிறார் என்ற உறுதி கிறிஸ்தவர்களுக்கு
இருக்க வேண்டும் என்று கூறினார்.
இப்பூமியை
ஆபிராமுக்கும் அவரது உறவினர் லோத்துக்கும் இடையே பிரிப்பது குறித்த
கலந்துரையாடலை விளக்கும் இந்நாளைய முதல் வாசகத்தை(தொ.நூ.13:2,5-18)மையமா க வைத்து மறையுரை வழங்கிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இப்பகுதியை வாசித்தபோது மத்திய கிழக்குப் பகுதி பற்றிய நினைவு தனக்கு வந்ததாகவும், போரை அல்ல, அமைதியின் ஞானத்தை நம் அனைவருக்கும் அருளுமாறு செபிப்போம் எனவும் கூறிய திருத்தந்தை, இறைவன் ஆபிராமுக்கு வாக்குறுதி கொடுத்து அவர் தனது இடத்தைவிட்டு வெளியே வருமாறு அழைப்பு விடுத்தார் என்றும் கூறினார்.
கிறிஸ்தவர்களாகிய நாம், ஒவ்வொருவராக அழைக்கப்படுகிறோம் என்றும், எவரும் தற்செயலாக கிறிஸ்தவராவதில்லை என்றும், நாம் பெயர் சொல்லி, வாக்குறுதியோடு முன்னோக்கிச் செல்ல அழைக்கப்படுகிறோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நான் உங்களோடு எப்போதும் இருக்கிறேன் என்று இறைவன் நம்மிடம் கூறுகிறார் என்றும் தெரிவித்தார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. சிரியாவில் அருள்பணியாளர் Murad கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து கீழைரீதி பேராயம் ஆழ்ந்த அனுதாபம்
ஜூன்,25,2013. சிரியாவில் கத்தோலிக்க அருள்பணியாளர் François Murad மிகக் கொடூரமாய்க் கொல்லப்பட்டுள்ளது குறித்து சிரியாவின் கத்தோலிக்கத் திருஅவைக்கும், அந்நாட்டினர் அனைவருக்கும், புனிதபூமிக் காவலருக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் கீழைரீதி பேராயத் தலைவர் கர்தினால் Leonardo Sandri.
கீழைரீதி பேராய அதிகாரிகள் மற்றும் உடன் உழைப்பாளர்களுடன் சேர்ந்து தனது அனுதாபங்களைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள கர்தினால் Sandri, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருவதுபோல், சிரியாவில்
ஆயுதச் சப்தங்களை ஒழித்து எதிர்காலத்தில் அமைதியைக் கொண்டுவரும்
நீதியுடன்கூடிய ஒப்புரவின் பாதையைத் தேர்ந்தெடுக்குமாறு அனைத்துலகச்
சமுதாயத்துக்கும், போரிடும் தரப்புகளுக்கும் அழைப்புவிடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அருள்பணியாளர் Murad கொல்லப்பட்டுள்ளது எந்தவிதத்திலும் நியாயம் சொல்லப்பட முடியாதது என்றும், இவர் அடிக்கடி சொல்லியதுபோல, மீட்பின் நற்செய்தி முதன்முதலில் அறிவிக்கப்பட்ட மத்திய கிழக்குப் பகுதி முழுவதிலும், சிரியாவிலும் கிறிஸ்தவர்கள் அமைதியுடன் வாழ்வதற்கு ஆவன செய்யப்பட வேண்டுமென்றும் கர்தினால் Sandri கேட்டுள்ளார்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
3. சிரியாவில் இடம்பெறும் வெட்கத்துக்குரிய சண்டை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு புனிதபூமிக் காவலர் அழைப்பு
ஜூன்,25,2013. அருள்பணியாளர் Murad கொலை செய்யப்பட்டுள்ளது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள புனிதபூமிக் காவலர் பிரான்சிஸ்கன் சபை அருள்பணியாளர் Pierbattista Pizzaballa, சிரியாவில்
இடம்பெறும் அர்த்தமற்ற மற்றும் வெட்கத்துக்குரிய சண்டை முடிவுக்குக்
கொண்டுவரப்படுமாறு அனைவரும் செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
அருள்பணியாளர் Muradன் இறப்பு குறித்துப் பேசிய சிரியா பேராயர் Jacques Behnan Hindo, மத்திய
கிழக்கு கிறிஸ்தவர்களின் வரலாறு முழுவதும் பல வன்முறைகளுக்கு உள்ளான
மறைசாட்சிகளின் இரத்தத்தால் குறிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
வட சிரியாவின் Gassaniehவிலுள்ள புனித பதுவை அந்தோணியார் பிரான்சிஸ்கன் இல்லத்தில் அடைக்கலம் தேடியிருந்த 49 வயது அருள்பணியாளர் Murad இறந்ததற்கான சூழல் குறித்த முழுவிபரங்கள் இன்னும் தெரியாத நிலையில், புரட்சியாளர்கள் அந்த பிரான்சிஸ்கன் இல்லத்தைத் தாக்கினர் என உள்ளூர் வட்டாரங்கள் கூறுகின்றன.
அருள்பணியாளர் Murad, குருவாகத் திருப்பொழிவு செய்யப்பட்ட பின்னர் Gassanieh என்ற கிராமத்தில் புனித Simon Stylites துறவு
இல்லத்தைக் கட்டி வந்தார். ஆயினும் அந்த இடம் தாக்குதலுக்கு உள்ளானதால்
இவர் அக்கிராமத்தின் புனித பதுவை அந்தோணியார் பிரான்சிஸ்கன் இல்லத்தில்
தஞ்சம் புகுந்திருந்தார்.
இஞ்ஞாயிறன்று இந்த இல்லம் புரட்சியாளர்களால் தாக்கப்பட்டபோது அங்கு அருள்பணியாளர் Murad மட்டுமே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : Fides
4. கர்தினால் தாக்லே : திருத்தந்தை பிரான்சிஸ் ஆசியக் கத்தோலிக்கர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார்
ஜூன்,25,2013.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆசிய மற்றும் பிலிப்பீன்ஸ்
கத்தோலிக்கர்மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளார் என்று மனிலா கர்தினால் லூயிஸ்
அந்தோணியோ தாக்லே தெரிவித்தார்.
அண்மையில்
வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது குறித்து ஆசிய
செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த கர்தினால் தாக்லே, நாம் விசுவாசத்தில் வளர்வது, அன்னைமரியாமீது உண்மையான பக்தி கொண்டிருப்பதுடன் தொடர்பு கொண்டது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதாகவும் தெரிவித்தார்.
பிலிப்பீன்ஸ் கத்தோலிக்கத் திருஅவைமீது உயர்வான நம்பிக்கை வைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ், அனைத்து விசுவாசிகளும் தனக்காகச் செபிக்குமாறும், அன்னைமரியாமீது கொண்டிருக்கும் விசுவாசத்தை அதிகரிக்குமாறும் கேட்டுக்கொண்டதாக கர்தினால் தாக்லே கூறினார்.
ஆசியாவில் பிலிப்பீன்சும், கிழக்குத் திமோரும் கத்தோலிக்க நாடுகளாகும்.
ஆதாரம் : AsiaNews
5. யாங்கூன் பேராயர் : சமய மோதல்களை நிறுத்துவதற்கு கத்தோலிக்கத் திருஅவை உரையாடலின் கருவி
ஜூன்,25,2013.
பதட்டநிலைகளும் பயமும் நிலவும் மியான்மாரில் மதங்களுக்கு இடையே இடம்பெறும்
மோதல்களை நிறுத்துவதற்கு கத்தோலிக்கத் திருஅவை உரையாடலை ஊக்குவித்து
வருகின்றது என்று யாங்கூன் பேராயர் Charles Maung Bo கூறினார்.
மியான்மாரில் புத்தமதத் தீவிரவாதக் குழுக்கள் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வையும் வகுப்புவாத வன்முறையையும் தூண்டிவரும்வேளை, சில புத்தமத பிக்குகள், வன்முறையில்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் புகலிடம் அளித்து வருவதோடு அமைதி மற்றும்
ஒப்புரவுக்கு அழைப்புவிடுக்கும் அறிக்கையையும் வெளியிட்டுள்ளனர் என்று
கூறினார் பேராயர் Bo.
மியான்மாரின் தற்போதைய நிலைமை குறித்து Fides செய்தி நிறுவனத்துக்கு இவ்வாறு தகவல் தெரிவித்துள்ள பேராயர் Bo,
அந்நாட்டின் சமயத் தலைவர்களையும் பொது மக்கள் சமுதாயத்தையும் கவலைப்பட
வைத்துள்ள வகுப்புவாத வன்முறைகளை நிறுத்துவதற்கு கத்தோலிக்கத் திருஅவை
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மியான்மாரில்
75 விழுக்காட்டினர் புத்தமதத்தினர். ஏறக்குறைய 4 விழுக்காட்டினர்
முஸ்லீம்கள் மற்றும் 8 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள். இயற்கையை
வழிபடுவோரும் அந்நாட்டில் உள்ளனர்.
ஆதாரம் : Fides
6. இமாலயச் சுனாமியில் பாதிக்கப்பட்டோருக்கு இந்தியத் திருஅவை உதவி
ஜூன்,25,2013. வட இந்தியாவின் உத்தரகண்ட், இமாச்சலப்
பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும்
நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு அரசு
மற்றும் பிற தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தியக் கத்தோலிக்கத்
திருஅவையும் மனிதாபிமானப் பணிகளைச் செய்து வருகிறது.
இமாலயாவின்
சுனாமி எனச் சொல்லப்படும் இந்த இயற்கைப் பேரிடருக்கு இந்திய ஆயர்
பேரவையின் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் அமைப்பு உதவி வருவது குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய அவ்வமைப்பின் இயக்குனர் அருள்பணி ஃப்ரெட்ரிக் டி சூசா, பாதிக்கப்பட்டுள்ள
பகுதிகளுக்கு இந்திய காரித்தாஸ் அமைப்பு தனது பணியாளர்களை அனுப்பி
அவ்விடங்களில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்குத் தேவையான உடனடி
உதவிகளைச் செய்து வருகின்றது என்று கூறினார்.
இந்தியாவில்
பருவமழை முன்கூட்டியே வந்து இமாலயா மலைக்குக் அடிவாரத்திலுள்ள பல
மாநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அருள்பணி டி சூசா
தெரிவித்தார்.
மேலும், இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கைப் பேரிடரில் பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சேதங்கள் குறித்த தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
இதற்கிடையே, உத்தர்கண்டில் மீட்புப் பணிகளை மேலும் விரைவுபடுத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த இயற்கைப் பேரிடரில் 80 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர், இன்னும் ஆயிரக்கணக்கானோர் மீட்புக்காகக் காத்திருக்கின்றனர்.
ஆதாரம் : Fides
7. உலகளாவிய வணிகத்துக்கு உதவும் கடல்தொழிலாளருக்கு ஐ.நா.பொதுச் செயலர் பாராட்டு
ஜூன்,25,2013. உலகில் கடலில் வேலைசெய்யும் 15 இலட்சம் தொழிலாளர்களின் உதவியின்றி அனைத்துலக வணிகம் இடம்பெறாது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார்.
ஜூன் 25, இச்செவ்வாயன்று அனைத்துலக கடல்போக்குவரத்துப் பணியாளர் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், உலக அளவில் கடல் வழியாகப் போக்குவரத்துப் பணி செய்யும் ஆண்கள் மற்றும் பெண்களின் துணிச்சலைப் பாராட்டியுள்ளார்.
மேலும், இத்தினத்தைச் சிறப்பிக்கும் IMO என்ற அனைத்துலக கடல்போக்குவரத்துப் நிறுவனம், அன்றாட
வாழ்வுக்குப் பயன்படும் பல்வேறு பொருள்களைக் கடல்வழிப் போக்குவரத்து
வழியாக விநியோகிக்கும் மக்களின் பணிகள் ஊடகங்கள் வழியாக மேலும் விளக்கப்பட
வேண்டும் என்ற தனது ஆவலை வெளிப்படுத்தியுள்ளது.
ஆதாரம் : UN
8. ஹிரோஷிமா அணுகுண்டு வெளியிட்ட வெப்பம்போல் நான்கு மடங்கு வெப்பம் புவியில் அதிகரிக்கும்
ஜூன்,25,2013. ஒவ்வொரு வினாடியும், இப்புவிமீது அதிகப்படியான வெப்பம் திணிக்கப்பட்டு வருவதால் இப்பூமியின் வெப்பம் ஜப்பானின் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு வெளியிட்ட வெப்பத்தைப் போல நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆஸ்திரேலிய அறிவியலாளர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் தட்பவெப்ப தகவல் துறையைச் சேர்ந்த அறிவியலாளர் ஜான் குக், புவிமீது, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, அதிகப்படியான கரியமில வாயுவின் அடர்த்தி அதிகரித்து உள்ளதால், புவியில் அதிகப்படியான வெப்பம் ஏற்படுகிறது என்றும், இவ்வெப்பம், ஜப்பானின், ஷிரோஷிமாவில், அமெரிக்க இராணுவத்தினர் நடத்திய அணுகுண்டுத் தாக்குதலில் வெளியான வெப்பத்தைவிட நான்கு மடங்கு அதிகம் என்றும் கூறினார்.
இந்தப் புவி வெப்பமயமாதலுக்கு மனிதர்களே முக்கிய காரணம் என்றும், கடந்த, 20 ஆண்டுகளாக, இது குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகளில், மனிதர்களின் தவறுகளால், புவி வெப்பமடைதல் வேகமாக நடைபெறுவதை அறிவியலாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் ஜான் குக் கூறினார்.
ஆதாரம் : ANI
9. புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்ட ஜெர்மன் இளையோர்
ஜூன்,25,2013.ஜெர்மனியில்
கடந்த பத்தாண்டுகளில் புகைப்பிடிக்கும் பழக்கம் இளையோரிடையே பாதியாகக்
குறைந்துள்ளது என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
2001ம்
ஆண்டில் 12 மற்றும் 17 வயதுடைய ஜெர்மனியர்களில் 27.5 விழுக்காட்டினர்
புகைப்பிடிப்பவர்களாக இருந்தனர். இவ்வெண்ணிக்கை 2012ம் ஆண்டில் 12
விழுக்காடு குறைந்துவிட்டது என்று நலவாழ்வு கல்வி கூட்டமைப்பு மையத்தின்
ஆய்வு தெரிவித்துள்ளது.
இப்புதனன்று அனைத்துலக போதைப்பொருள் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி இந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த
10 ஆண்டுகளில் இளையோரின் சராசரி புகைப்பிடிக்கும் வயது 13.6லிருந்து
14.4ஆக உயர்ந்துள்ளது. 25 வயதுக்குட்பட்டோரில் மூன்றில் ஒரு பங்கினர்
புகைப்பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்களாக உள்ளனர்.
விதிமுறைகள்
கடுமையாக்கப்பட்டது இந்த மாற்றத்திற்கு ஒரு காரணம் என்று நலவாழ்வு கல்விக்
கூட்டமைப்பு மையத்தின் தலைவர் எலிசபெத் பாட் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : தமிழ்வின்
No comments:
Post a Comment