உலகின் மிகப் பெரிய, கடும்வெப்பமான பாலைவனம்
அரேபிய மொழியில் “மிகப்பெரிய பாலைவனம்” என்ற பொருள் கொண்ட சகாரா (The Sahara) உலகின் மிகப்பெரிய கடும்வெப்பமான பாலைவனமாகும். சகாரா பாலைவனம், அண்டார்ட்டிக், ஆர்டிக் ஆகிய இரண்டு மிகப்பெரிய பனிப்பாலைவனங்களுக்கு அடுத்து உலகின் மூன்றாவது மிகப்பெரிய பாலைவனமாகும். இது, கிழக்கு மேற்காக 4,800 கி.மீ(2,983 மைல்) நீளத்தையும், வடக்கு தெற்காக 1,800 கி.மீ(1,118 மைல்) அகலத்தையும் கொண்டு, 94 இலட்சம் சதுர கிலோமீட்டர்கள் (36,00,000
சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆப்ரிக்கக் கண்டத்தின் ஏறக்குறைய
பத்து விழுக்காட்டுப் பகுதியைக் கொண்டுள்ள சகாரா பாலைவனம் ஏறத்தாழ 25
இலட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. அதற்குமுன் இங்கே ஏரிகளும் ஆறுகளும்
இருந்தன எனச் சொல்லப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு 25 மி.மீட்டருக்குக்
குறைவாகவே மழை பெய்கின்றது. ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் இங்குக்
குடியிருக்கத் தொடங்கிவிட்டனர். இப்பூமியின் காலநிலையில் ஏற்படும்
மாறுதல்களால் சகாரா பாலைவனம் 17,000மாம்
ஆண்டில் மீண்டும் பசுமையாக மாறும் வாய்ப்பு உள்ளது எனக்
கணிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய வட ஆப்ரிக்கா முழுவதிலும் பரவியுள்ள
இப்பாலைவனம், அளவில்
அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது சீனாவை ஒத்தது. ஏறக்குறைய 25
விழுக்காட்டுப் பாலைவனப் பகுதி மண் குவியல்களாக இருக்கின்றது. இவற்றில் சில
குவியல்கள் 500 அடி உயரமுடையவை. சகாராவில் எரிமலைகளும் உள்ளன. மத்திய
ஆப்ரிக்காவிலிருந்து உற்பத்தியாகி மத்தியதரைக் கடலில் கலக்கும் உலகின்
நீளமான நைல்நதி சகாரா பாலைவனத்தின் வழியாகப் பாய்கின்றது. எகிப்தின் Bahariya Oasis, அல்ஜீரியாவின் Ghardaïa Oasis
போன்று சில சிறிய பாலைவனச்சோலை நகரங்களும் குடியிருப்புகளும் உள்ளன.
தாவரங்கள் இங்கு இல்லையெனினும் ஏறக்குறைய 500 வகையான உயிரினங்கள்
வாழ்கின்றன. சகாராவில் அடிக்கும் மணல்புயலின் தூசிகள் 2 அல்லது 3 மைல்கள்
தூரம் வரை வானில் பறக்கும். அல்ஜீரியா, சாட், எகிப்து, எரிட்ரியா, லிபியா, மாலி, மௌரித்தானியா, மொராக்கோ, நைஜர், சூடான், துனிசியா, மேற்கு சகாரா ஆகிய ஆப்ரிக்க நாடுகளில் இது பரவியுள்ளது.
No comments:
Post a Comment