Friday, 2 November 2012

Catholic News in Tamil 29/10/12

1. திருத்தந்தை,  குரோவேஷியப் பிரதமர் சந்திப்பு

2. திருத்தந்தை : குடியேற்றம், நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பயணம்

3. திருத்தந்தையின் செபங்களுக்கு பஹாமாஸ் ஆயர் நன்றி

4. கத்தோலிக்க ஆயர்கள் : சிரியாவில் கொல்லப்பட்டுள்ள அருள்பணி Fady Haddad ஒரு மறைசாட்சி

5. இந்தியத் துறவு சபைகள் : துறவுற வார்த்தைப்பாடுகள் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும்
6. இந்தோனேசியாவில் முதல் தேசிய இளையோர் தினம்

7. நைஜீரியக் கத்தோலிக்க ஆலயம் மீது தற்கொலை தாக்குதல்

8. மியான்மாரில் தொடர் வன்முறை, 22 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்வு

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை,  குரோவேஷியப் பிரதமர் சந்திப்பு

அக்.29,2012. குரோவேஷியப் பிரதமர் Zoran Milanović ஐ இத்திங்களன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
திருத்தந்தையை தனியாகச் சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே, நாடுகளுடனான உறவுகளுக்கானத் திருப்பீடச் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் குரோவேஷியப் பிரதமர் Milanović.
இச்சந்திப்புகள் குறித்து செய்தி வெளியிட்ட திருப்பீட பத்திரிகை அலுவலகம், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளில் குரோவேஷியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும், இன்னும், இவ்விரு நாடுகள் சார்ந்த பொது விவகாரங்கள் குறித்தும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாகத் தெரிவித்தது.
ஐரோப்பாவோடு முழுவதும் ஒன்றிணைவதற்கு குரோவேஷியாவுக்கு இருக்கும் நியாயமான ஆவலுக்குத் திருப்பீடம் ஆதரவு தருவதாகவும், Dajla விவகாரம் குறித்து இவ்விரு தரப்பும் விரைவில் ஒரு தீர்வு காணும் எனவும், அப்பகுதியின், சிறப்பாக, போஸ்னியா-எர்செகொவினாவிலுள்ள குரோவேஷியர்களின் பொருளாதாரம் குறித்தும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டதாகவும் திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.


2. திருத்தந்தை : குடியேற்றம், நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பயணம்

அக்.29,2012. ஒவ்வொரு குடியேற்றதாரரும் மனிதர் என்பதால், அவர் கொண்டுள்ள அடிப்படையான மற்றும் தவிர்க்கமுடியாத உரிமைகள் ஒவ்வொருவராலும் அனைத்துச் சூழல்களிலும் மதிக்கப்பட வேண்டுமென்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுள்ளார்.
இக்காரணத்துக்காகவே, குடியேற்றதாரர்கள் : நம்பிக்கை மற்றும் எதிர்நோக்கின் பயணம் என்பது, 2013ம் ஆண்டின் உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினத்திற்குத் தலைப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
2013ம் ஆண்டு சனவரி 13ம் தேதி கடைப்பிடிக்கப்படும் 99வது உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் தினத்திற்கென செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை, குடியேற்றதாரர் பலரின் இதயங்களில்   நம்பிக்கையும் எதிர்நோக்கும் பிரிக்கமுடியாதவைகளாக இருக்கின்றன என்றும் கூறியுள்ளார்.
இந்தக் குடியேற்றதாரர்கள், தங்களது நிச்சயமற்ற வருங்காலத்தின் மீதான நம்பிக்கையின்மையைப் பின்னுக்குத் தள்ளி, கடவுள்மீது நம்பிக்கை வைத்து தங்களின் பயணத்தை மேற்கொள்கின்றனர் என்றும் திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
திருஅவை இந்தக் குடியேற்றதாரர்களின் ஒருங்கிணைந்த ஆளுமை வளர்ச்சியில் அக்கறை காட்டுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, ஒவ்வொரு நாடும் இம்மக்கள் குறித்த கொள்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கு உரிமையைக் கொண்டுள்ளது என்பதையும் வலியுறுத்தியுள்ளார். 
குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர்க்கானத் திருப்பீட மேய்ப்புப்பணி அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Vegliò, அவ்வவையின் செயலர் ஆயர் Joseph Kalathiparambil ஆகியோர் இத்திங்களன்று நிருபர் கூட்டத்தில் திருத்தந்தையின் இச்செய்தியை வெளியிட்டனர்.


3. திருத்தந்தையின் செபங்களுக்கு பஹாமாஸ் ஆயர் நன்றி

அக்.29,2012. பஹாமாஸ், கியூபா, ஹெய்ட்டி, ஜமெய்க்கா ஆகிய கரீபியன் நாடுகளில் சாண்டி புயலால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள மக்களுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தெரிவித்த ஆறுதலுக்கும் செபத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பஹாமாஸ் ஆயர் Patrick Christopher Pinder .
கடும் புயலாலும் வெள்ளத்தாலும் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள இந்நாடுகளின் மக்களுக்கு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் தனது செபங்களையும், ஆறுதலையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்த திருத்தந்தைக்குத் தான் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார் பஹாமாஸின் Nassau ஆயர் Pinder .
கரீபியன் நாடுகளில் சாண்டி புயலால் அறுபதுக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும், அப்புயல், ஐந்து கோடிக்கு மேற்பட்டோர் வாழும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிழக்குக் கரையைத் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


4. கத்தோலிக்க ஆயர்கள் : சிரியாவில் கொல்லப்பட்டுள்ள அருள்பணி Fady Haddad ஒரு மறைசாட்சி

அக்.29,2012. சிரியாவில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை அருள்பணியாளர் ஒருவர் கொடூரமாய்க் கொல்லப்பட்டதற்குத் தங்களது அனுதாபங்களைத் தெரிவித்துள்ள தமஸ்கு  கத்தோலிக்க ஆயர்கள், அந்நாட்டில் வெளிநாட்டுச் சதிவேலைகள் தீமையைப் பரப்பி அழிவை ஏற்படுத்துகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
சிரியாவில் போரிடும் குழுக்களுக்கிடையே ஒப்புரவு ஏற்படவேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ள ஆயர்கள், அதிகரித்துவரும் ஆயுதப்புழக்கங்களும் இரத்தம் சிந்துதலும் வன்முறையும் நிறுத்தப்படுமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
சிரியாவின் தலைநகர் தமஸ்கு நகருக்குப் புறநகர்ப் பகுதியிலுள்ள Qatana என்ற சிறிய நகரத்தின் St. Elias ஆலயத்தில் பங்குக் குருவாகப் பணியாற்றிய அருள்பணி Fady Haddad, இம்மாதம் 18ம் தேதி ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டார். ஆறுநாள்களுக்குப் பின்னர் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அருள்பணியாளர் Fady கொலை செய்யப்பட்டதையொட்டி, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபை முதுபெரும் தலைவர் 4ம் இக்னேஷியுசுக்கு இரங்கல் செய்தியும் அனுப்பியுள்ள தமஸ்கு கத்தோலிக்க ஆயர்கள், சிரியாவின் அனைத்து மறைசாட்சிகளுடன் இந்த அருள்பணியாளர் மறைசாட்சியையும் இறைவன் தமது வான்வீட்டில் சேர்த்தருள செபிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அப்பாவி குடிமக்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு எதிரானத் தாக்குதல்களைக் கண்டித்துள்ள ஆயர்கள், முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் சமய உணர்வு உள்ள ஒவ்வொருவரும் மனிதாபிமான மற்றும் ஆன்மீகப் பணிகளுக்குத் தங்களை அர்ப்பணித்துள்ளனர் எனவும் ஆயர்களின் செய்தி கூறுகிறது.


5. இந்தியத் துறவு சபைகள் : துறவுற வார்த்தைப்பாடுகள் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும்

அக்.29,2012. இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள், தங்களது துறவற அழைப்புக்குப் பிரமாணிக்கமாய் இருக்க வேண்டுமானால், தீர்மானம் எடுப்பது, வாழ்க்கைமுறை மற்றும் மறைப்பணிகளில் புது மாறுதல்களை அவர்கள் ஏற்படுத்த வேணடுமென்று, இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் மாநாட்டில் கூறப்பட்டது.
ஆந்திர மாநிலத்தின் ஹைதராபாத்தில் இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள மூன்று நாள் மாநாட்டில் பேசிய Montfort சபையின் அருள்சகோதரர் Varghese Thechanath, துறவற வாழ்வை மறைப்பணிகள் வடிவமைக்க வேண்டும் என்று கூறினார்.
அர்ப்பண வாழ்க்கையை அதிகப் பயனுள்ள விதத்தில் வாழ்வதற்குப் புது வழிமுறைகள்என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் இம்மாநாட்டில் துறவு சபைகளின் அதிபர்கள், மாநிலத் தலைவியர் என 550 பேர் கலந்து கொள்கின்றனர்.
CRI எனப்படும் இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் அவை, 334 துறவு சபைகளையும், அதிபர்கள், மாநிலத் தலைவியர் என 822 தலைவர்களையும் கொண்டுள்ளது.
இந்தியாவில் அருள் சகோதரர்கள், அருள்தந்தையர், அருள் சகோதரிகள் என ஒரு இலட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மறைப்பணியாற்றுகின்றனர்.


6. இந்தோனேசியாவில் முதல் தேசிய இளையோர் தினம்

அக்.29,2012. "நூறு விழுக்காடு கத்தோலிக்கர், நூறு விழுக்காடு இந்தோனேசியர்" என்ற விருதுவாக்குடன், இந்தோனேசியாவில் கடந்த வாரத்தில் நடைபெற்ற முதல் இந்தோனேசிய இளையோர் தினத்தில் ஆயிரக்கணக்கான இளையோர் கலந்து கொண்டனர்.
இம்மாதம் 20 முதல் 26 வரை Borneo தீவின்  மேற்கு  Kalimantan மாநிலத்தில் Sanggau மறைமாவட்டத்தில் நடைபெற்ற இந்த இளையோர் தினத்தில், அந்நாட்டின் 35 மறைமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
பல கலாச்சார, பல இன, பல மொழிகளைக் கொண்ட இந்தோனேசியாவில், அன்றாட வாழ்வில் கத்தோலிக்க விசுவாசத்தை வாழும் முறையை இளையோர் அறிந்து கொண்டனர் என்று, முதல் தேசிய இளையோர் தின இயக்குனர் அருள்பணி Yohanes Dwi Harsanto  கூறினார்.
அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தினம், 2013ம் ஆண்டு ஜூலையில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ளது.


7. நைஜீரியக் கத்தோலிக்க ஆலயம் மீது தற்கொலை தாக்குதல்

அக்.29,2012. நைஜீரியாவின் வடபகுதியில் Kadona நகரின் கத்தோலிக்க ஆலயம் ஒன்றில் ஞாயிறு திருப்பலி நடந்து கொண்டிருந்த நேரத்தில் சக்தி மிக்க வெடிகுண்டு ஒன்று வெடித்ததில் குறைந்தது 7 பேர் இறந்துள்ளனர் மற்றும் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
இஞ்ஞாயிறு காலை 9 மணியளவில் திருப்பலி நடந்து கொண்டிருந்த போது, ஆலயச் சுவரில் ஒரு தற்கொலையாளி குண்டு நிரப்பிய வாகனத்தை  மோதியதாக பிபிசி நிருபர் ஒருவர் கூறியுள்ளார்.
லயத்தின் உட்புறத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், அருகில் இருந்த கடைகள் மற்றும் வீடுகளின் கூரைகள் வெடித்துச் சிதறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தத் தாக்குதலால் கோபமடைந்த கிறிஸ்தவ இளைஞர்கள், அங்குத் தாக்குதலில் அகப்பட்டவர்களை மீட்கச் சென்ற அரசு வாகனம் ஒன்றை தாக்கியதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இசுலாமியரின் Eid al-Adha விழாவையொட்டி நைஜீரியாவில் தேசிய விடுமுறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் இச்சமயத்தில் Boko Haram என்ற இசுலாமியத் தீவிரவாதக் குழு, இத்தாக்குதலை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
2009ம் ஆண்டில் Boko Haram குழு வன்முறையில் இறங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 2,800 பேர் இறந்துள்ளனர்  என மனித உரிமை குழுக்கள் கூறுகின்றன.


8. மியான்மாரில் தொடர் வன்முறை, 22 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புலம் பெயர்வு

அக்.29,2012. மியான்மார் நாட்டில், ரகின் மாநிலத்தில் புத்தமதத்தினருக்கும் Rohingya சிறுபான்மை முஸ்லீம்களுக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்றுவரும் மோதல்களில் ஒரு வராத்தில் மட்டும் குறைந்தது இருபதாயிரம் பேர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று ஐ.நா. கூறியுள்ளது.
இஞ்ஞாயிறன்று வெளியான செய்தியின்படி, 22,500 பேர் புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் ஆறாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன எனத் தெரிகிறது.  
பங்களாதேஷிலிருந்து குடிபெயர்ந்து மியான்மாரின் ரகின் மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் வாழும் ஏறக்குறைய எட்டு இலட்சம் முஸ்லீம்களில் 22 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்றும் ஐ.நா. கூறியுள்ளது.
இந்த முஸ்லீம்கள், மியான்மாரில் குடியுரிமை கேட்டுப் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரகின் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் இவ்விரு மதத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட இனக் கலவரத்தில், இரு தரப்பிலும் குறைந்தது 90 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3,000க்கும் அதிகமான வீடுகள் நாசப்படுத்தப்பட்டன.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...