Thursday, 15 November 2012

Catholic Neews in Tamil - 13/11/12

1. ஒழுக்கநெறிகளும் ஆன்மீகமும் காணாமல்போயிருப்பதே சமூகத் தீமைகளுக்கான மூலக்காரணம்

2. மனமாற்றம் மற்றும் ஒப்புரவு குறித்து அமெரிக்க ஆயர்கள் பேரவை

3. இலங்கை தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு குறித்து இலங்கை ஆயர்கள்.

4. பாகிஸ்தான் சிறையில் பொய்க்குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌ட்டுள்ள கிறிஸ்த‌வ‌ குடும்ப‌ம்

5. துருக்கிசிரியா எல்லைப்பகுதியில் அச்சத்துடன் வாழும் மக்கள் - சிரிய ஆர்த்தடாக்ஸ் பேராயர்

6. மும்பை சேரி மக்களிடையே பணியாற்றிய சவானுக்கு அனைத்துலக கல்வி விருது

7. பிரிட்டனில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

------------------------------------------------------------------------------------------------------

1. ஒழுக்கநெறிகளும் ஆன்மீகமும் காணாமல்போயிருப்பதே சமூகத் தீமைகளுக்கான மூலக்காரணம்

நவ.13,2012. இந்திய மக்களின் கலாச்சார வாழ்வின் அங்கமாக இருக்கும் தீபாவளித் திருவிழா மகிழ்ச்சிநிறை மற்றும் முழுமையான வாழ்விற்கான தூண்டுதலை வழங்குவதாக இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்தார் இந்தியாவின் பூனே ஆயர் Thomas Dabre.
சமூகத்தில் நிலவும் இலஞ்ச ஊழலை அகற்ற வேண்டியதன் தேவையை வலியுறுத்திய பூனே ஆயர், தீமையின் மீது நன்மை வெற்றி கண்ட திருவிழாவைச் சிறப்பிக்கும் நாம், சமூகத்தில் நிலவும் இலஞ்ச ஊழலை அகற்ற வேண்டியதன் தேவையை உணர்ந்துச் செயல்படவேண்டும் என்றார்.
மக்களிடையே ஒழுக்கநெறிக்கும் ஆன்மீகத்திற்கும் ஊக்கமளிப்பதன் மூலம் இலஞ்ச ஊழலை அகற்றமுடியும் என்ற ஆயர் Dabre, மெய்யியலாளர்களாலும், புனித மக்களாலும், புனித தலங்களாலும் நிறைந்து காணப்படும் இந்தியாவில் இலஞ்ச ஊழல் இவ்வளவுப் பரவலாகக் காணக்கிடப்பது வெட்கத்திற்குரியதாக உள்ளது என்றார். 
ஒழுக்கநெறிகளும் ஆன்மீகமும் சமூகத்தில் காணாமல்போயிருப்பதே அனைத்துத் தீமைகளுக்கான மூலக்காரணம் என மேலும் கூறினார் பூனே ஆயர் Dabre.


2. மனமாற்றம் மற்றும் ஒப்புரவு குறித்து அமெரிக்க ஆயர்கள் பேரவை

நவ.13,2012. ஆயர்களும் தங்கள் பாவங்களை ஏற்று, பாவப்பரிகாரத்தின் வழியாகக் கிடைக்கும் அருள் அனுபவங்களைப் பெற்றாலொழிய அவர்களால் பேச்சுவார்த்தைகளிலும், சவால்களை எதிர்கொள்வதிலும் ஈடுபடமுடியாது என்றார் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியூ யார்க் கர்தினால் Timothy Dolan.
இத்திங்கள் முதல் வியாழன் வரை அமெரிக்க ஐக்கிய நாட்டின்  Baltimoreல் இடம்பெறும் அந்நாட்டு ஆயர்களின் ஆண்டு நிறையமர்வுக்கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் Dolan, ஒப்புரவு எனும் அருள் அடையாளத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
அமெரிக்க ஆயர்களின் கூட்டத்தில் தலைமை தாங்கி உரையாற்றிய அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Carlo Maria Vigano, மக்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பெறவேண்டுமெனில் ஆயர்களும் தொடர்ந்து மனமாற்றத்திற்கு தங்களை உட்படுத்தவேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஆயர்கள் அனைவரும் மத விடுதலையும் திருமணமும்  பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். 


3. இலங்கை தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டு குறித்து இலங்கை ஆயர்கள்.

நவ.13,2012. இலங்கையில் தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவரைப் பாராளுமன்ற வாக்கெடுப்பு மூலம் அகற்றும் முயற்சிகள் குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ளனர் இலங்கை ஆயர்கள்.
தலைமை நீதிபதி மீதான குற்றங்கள் குறித்த விளக்கங்கள் இல்லை எனக்கூறும் ஆயர்கள், நிர்வாகம், சட்டத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் தனித்தனியாக இயங்க வேண்டியவை எனவும் கூறியுள்ளனர்.
நீதித்துறையின் சுதந்திரம் அரசின் அண்மை நடவடிக்கைகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது எனவும் கூறியுள்ளனர் ஆயர்கள்.
இலங்கை அரசுத்தலைவரின் சகோதரர் பசில் ராஜபக்ஷே தலைமையின் கீழ் இயங்கும் பொருளாதார வளர்ச்சி அமைச்சகத்தின்கீழ் நிதி பரிமாற்றங்களைக் கொணரும் சட்டத்தை நிறைவேற்ற காலம் தாழ்த்தியதும், மாநில அவைகளின் அதிகாரத்தை மைய அரசு எடுத்துக்கொள்ள முயன்றதை எதிர்த்ததும் தலைமை நீதிபதி Shirani Bandaranayake செய்த குற்றங்களாக வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தலைமை நீதிபதிக்கு எதிராக, 14 குற்றங்களை முன்னிறுத்தி ஆளுங்கட்சியின் 117 அங்கத்தினர்கள் பாராளுமன்றத்தில் வைத்துள்ள பதவி நீக்கலுக்கான விண்ணப்பம் அவைத்தலைவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


4. பாகிஸ்தான் சிறையில் பொய்க்குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌ட்டுள்ள கிறிஸ்த‌வ‌ குடும்ப‌ம்

நவ.13,2012. ஆள்க‌ட‌த்த‌லில் ஈடுப‌ட்ட‌தாக‌ பொய்க்குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌ட்டு பாகிஸ்தான் நாட்டில் கிறிஸ்த‌வ‌ குடும்ப‌ம் ஒன்று சிறையில‌டைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
பாகிஸ்தானின் Faisalabadஐச்சேர்ந்த Sharif Masih என்ற ஏழை கிறிஸ்தவ விவசாயியின் மகன் ஓர் இஸ்லாமிய பெண்ணுடன் ஓடியதைத்தொடர்ந்து,  Masihன் மூன்று மகள்களையும் அவர்களின் கணவர்களையும் கைதுச் செய்த காவல்துறை, கத்தோலிக்க நீதி மற்றும் அமைதி அவையின் துணையுடன் அவர் போராடியதைத்தொடர்ந்து, அவரின் மகள்களை மட்டும் விடுதலைச் செய்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் திருமணமாகாத இஸ்லாமியப் பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய திருமணமான Babar Masih என்ற இளைஞரைச் சட்டம் மூலம் தண்டிப்பதில் தவறில்லை, ஆனால் எக்குற்றமும் செய்யாத அவரது சகோதரிகளின் கணவன்களைப் பல மாதங்களாகச் சிறைவைத்திருப்பது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது எனக்கூறும் பாகிஸ்தான் தலத்திருஅவை, அவர்கள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்துள்ளது.


5. துருக்கிசிரியா எல்லைப்பகுதியில் அச்சத்துடன் வாழும் மக்கள் - சிரிய ஆர்த்தடாக்ஸ் பேராயர்

நவ.13,2012. துருக்கிக்கும் சிரியாவிற்கும் இடையே எந்நேரமும் போர் மூளும் அபாயம் இருப்பதால் மக்கள் தங்கள் வருங்காலம் குறித்த அச்சத்துடனேயே வாழ்ந்துவருவதாக கவலையை வெளியிட்டுள்ளார் சிரிய ஆர்த்தடாக்ஸ் பேராயர் Eustathius Matta roham.
பெரும் அளவில் சிரிய அகதிகள் நாட்டிற்குள் புகுவதையொட்டி துருக்கி சிரியா எல்லைப்பகுதியில் வன்முறைகள் இடம்பெற்றுவருவதைக் குறித்து கவலை வெளியிட்ட Jazirah மற்றும் Euphrates உயர்மறைமாவட்ட பேராயர் Matta roham, சிறு சிறு மோதல்கள் பெரிய போராக உருவெடுக்கும் ஆபத்தையும் சுட்டிக்காட்டினார்.
போரின் அச்சத்தால் மக்கள் எந்நேரமும் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பது குறித்த கவலையும் பேராயர் Matta rohamஆல் வெளியிடப்பட்டது.


6. மும்பை சேரி மக்களிடையே பணியாற்றிய சவானுக்கு அனைத்துலக கல்வி விருது

நவ.13,2012. இந்தியாவின் மும்பை சேரிப்ப‌குதியில் வாழும் ப‌ல‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ குழ‌ந்தைக‌ளுக்குக் க‌ல்விப்ப‌ணி ஆற்றிய‌த‌ற்கென‌ மாத‌வ் ச‌வான் என்ப‌வ‌ருக்கு அனைத்துல‌க‌ WISE க‌ல்வி விருது வ‌ழ‌ங்க‌ப்ப‌டுவ‌தாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.
க‌ல்விக்கான‌ நொபெல் விருது என‌வும் அழைக்க‌ப்ப‌டும் இவ்விருதினைப் பெறும் ச‌வான், மும்பை சேரிப்பகுதியில் கல்வியை ஊக்குவிக்க தொடர்ந்து பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார்.
கத்தார் தலைநகர் டோஹாவில் இடம்பெற்ற அனைத்துலகக் கல்விக் கருத்தரங்கின்போது இச்செவ்வாயன்று சவானின் பெயர் இவ்விருதிற்கென அறிவிக்கப்பட்டது.
அடிப்படை துவக்கக் கல்வியைப்பெற வசதியின்றி இருக்கும் உலகின் 6 கோடியே 10 இலட்சம் சிறார்களிடையே கல்வியை ஊக்குவிப்பவர்களுக்கென உடுவாக்கப்பட்ட WISE க‌ல்வி விருது, ஐந்து இலட்சம் டாலர்கள் பரிசுத்தொகையை உள்ளடக்கியது.
அமெரிக்க ஐக்கிய நாட்டில் கல்வி கற்று இந்தியா திரும்பிய சவான், 1980களில் மும்பை சேரிமக்களிடையே தன் கல்விப்பணியைத் துவக்கினார்.


7. பிரிட்டனில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

நவ.13,2012. முறையாகத் திருமணம் செய்துகொண்டு வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை பிரிட்டனில் குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர குடும்பங்களில்தான் திருமணம் செய்துகொண்டு வாழும் முறையை அனைவரும் பின்பற்றி வருகின்றனர் என, பிரிட்டனின் சமூக நீதிக்கான மையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்ற‌து.
தற்போது 50 விழுக்காட்டினர் மட்டுமே முறையாகத் திருமணம் செய்துகொள்வதாகவும், இந்நிலை தொடர்ந்தால், 2050ம் ஆண்டில் திருமணம் செய்து வாழ்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..
பிரிட்டன் குடும்ப வாழ்க்கையை பலப்படுத்த தெளிவற்ற திட்டத்தை கையாள்வதே இந்நிலைக்குக் காரணமாகும் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...