Thursday, 15 November 2012

Catholic News in Tamil - 14/11/12

1. 27வது அனைத்துலகக் கருத்தரங்கு - "மருத்துவமனை: நற்செய்தி அறிவிப்புப் பணியின் தளம்"

2. ஆசிய ஆயர்கள் புனித பூமியில் மேற்கொண்ட திருப்பயணம்

3. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை விசாரிப்பதற்கு ஆஸ்திரேலிய அரசின் முயற்சி - ஆயர்கள் வரவேற்பு

4. கத்தோலிக்க உழைப்பாளர் இயக்கத்தைத் தோற்றுவித்த Dorothy Dayயைப் புனிதராக உயர்த்தும் முயற்சிகள்

5. சிரியாவில் காயமடைந்திருப்போர் கொள்ளை நோயைச் சந்திக்கும் ஆபத்து

6. இந்தோனேசியாவில் வாழும் சிறுபான்மையினர், தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாவது கண்டனத்திற்கு உரியது - ஐ.நா. உயர் அதிகாரி

7. உலகில் விற்பனையாகும் பத்து மருந்துகளில் ஒன்று போலி மருந்து

8. நவம்பர் 14 - உலக நீரிழிவு தினம்

------------------------------------------------------------------------------------------------------

1. 27வது அனைத்துலகக் கருத்தரங்கு - "மருத்துவமனை: நற்செய்தி அறிவிப்புப் பணியின் தளம்"

நவ.14,2012. இறைவார்த்தையை அறிவிப்பதும், உடல்நலம் குன்றியோரைக் குணமாக்குவதும் திருஅவையின் இரு முக்கியப் பணிகள் என்று திருப்பீட அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 15, இவ்வியாழன் முதல் சனிக்கிழமை முடிய நலம் மற்றும் மேய்ப்புப்பணி திருப்பீட அவை உரோம் நகரில் நடத்தவிருக்கும் 27வது அனைத்துலகக் கருத்தரங்கைக் குறித்து இத்திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, இச்செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு கூறினார்.
உலகெங்கும் சென்று நற்செய்தியை அறிவியுங்கள் என்று கூறிய இயேசு, அத்துடன், உடல் நலம் குன்றியோரைக் குணமாக்குங்கள் என்ற கட்டளையையும் அளித்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் Zimowski, "மருத்துவமனை: நற்செய்தி அறிவிப்புப் பணியின் தளம்" என்ற தலைப்பில் கருத்தரங்கு அமையும் என்று அறிவித்தார்.
மேற்கத்திய நாடுகளில் மருத்துவப்பணி அதிகமான அளவு தொழில் மயமாக்கப்பட்டுள்ளது என்பதையும், மருத்துவச் செலவுகள் கூடிவருகிறது என்பதையும் எடுத்துரைத்த பேராயர் Zimowski, இத்தகையப் போக்குகள் சீரமைக்கப்பட வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்தார்.
60க்கும் மேற்பட்ட நாடுகளின் நலப்பணியாளர்கள் கலந்துகொள்ளும் 27வது அனைத்துலகக் கருத்தரங்கு, இவ்வியாழனன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே தலைமையில் நடைபெறும் திருப்பலியுடன் ஆரம்பமாகும் என்றும், இச்சனிக்கிழமையன்று கருத்தரங்கில் கலந்துகொள்ளும் அனைவரையும் திருத்தந்தை சந்திப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


2. ஆசிய ஆயர்கள் புனித பூமியில் மேற்கொண்ட திருப்பயணம்

நவ.14,2012. கிறிஸ்தவக் குடும்பம், அயலவருடன் ஒன்றிப்பு, இறைவார்த்தையின் பரிமாற்றம் என்ற பல ஆழமான அனுபவங்களைப் பெறுவதற்கு புனித பூமியில் மேற்கொண்ட பயணம் மிக உதவியாக இருந்தது என்று கட்டக்-புபனேஸ்வர் பேராயர் ஜான் பார்வா கூறினார்.
இம்மாதம் 6ம்  தேதி முதல் இத்திங்கள் 12ம் தேதி முடிய 120 ஆசிய ஆயர்கள் புனித பூமியில் மேற்கொண்ட ஒரு திருப்பயணத்தின் இறுதியில், தாங்கள் பெற்ற அனுபவத்தைக் குறித்து Fides செய்தி நிறுவனத்திடம் பேசிய பேராயர் பார்வா இவ்வாறு கூறினார்.
திருத்தந்தை அறிவித்துள்ள நம்பிக்கை ஆண்டின் ஓர் அங்கமாக, Neocatechumenal Way என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இத்திருப்பயணத்தில் இந்தியாவிலிருந்து 70 ஆயர்களும், ஏனைய ஆசிய நாடுகளிலிருந்து 50 ஆயர்களும், இன்னும் பல குருக்கள், துறவியர், பொதுநிலையினர் என பலரும் கலந்துகொண்டனர்.
புதிய நற்செய்திப் பணியை மையப்படுத்தி, வருகிற டிசம்பர் மாதம் வியட்நாமில் நடைபெறவிருக்கும் ஆசிய ஆயர்கள் கூட்டத்திற்கு ஒரு சிறந்த தயாரிப்பாக இத்திருப்பயணம் அமைந்தது என்று  பேராயர் பார்வா மேலும் கூறினார்.


3. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை விசாரிப்பதற்கு ஆஸ்திரேலிய அரசின் முயற்சி - ஆயர்கள் வரவேற்பு

நவ.14,2012. குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறைகளை விசாரிப்பதற்கென ஆஸ்திரேலிய அரசு ஒரு குழுவை உருவாக்கும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அறிவித்துள்ளதை அந்நாட்டு ஆயர்கள் வரவேற்றுள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிராக நிகந்துள்ள பாலியல் வன்முறைகள் திருஅவை உறுப்பினர்கள் மத்தியில் மட்டும் காணப்படுகிறது என்று கூறுவதை வன்மையாக எதிர்ப்பதாகக் கூறிய ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால ஜார்ஜ் பெல் (George Pell), குடும்பங்கள், பள்ளிகள், இன்னும் மற்ற நிறுவனங்களில் இத்தகையக் குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை வலியுறுத்திக் கூறினார்.
கடந்த இருபது ஆண்டுகளாக திருஅவை இந்தக் குற்றச்சாட்டுக்குத் தகுந்த பதில் அளித்துள்ளது என்பதையும் எடுத்துரைத்த கர்தினால் பெல், இக்குறையை நீக்க காவல்துறையுடனும், நீதித் துறையுடனும் ஒத்துழைக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளிடம் மன்னிப்பு வேண்டுவதாகவும் உரைத்த கர்தினால் பெல், இக்குற்றங்களை மறைக்க தலத் திருஅவை முயன்றுவருவதாகக் கூறுவது உண்மையல்ல என்பதையும் செய்தியாளர்களிடம் கூறினார்.


4. கத்தோலிக்க உழைப்பாளர் இயக்கத்தைத் தோற்றுவித்த Dorothy Dayயைப் புனிதராக உயர்த்தும் முயற்சிகள்

நவ.14,2012. கத்தோலிக்க உழைப்பாளர் இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான Dorothy Day அவர்களைப் புனிதராக உயர்த்தும் முயற்சிகளைத் துவக்கலாம் என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
தற்போது Baltimore நகரில் நடைபெற்றுவரும் அமெரிக்க ஆயர்கள் பேரவையின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த முயற்சி பற்றி பேசப்பட்டபோது, அனைத்து ஆயர்களும் ஆர்வமான குரல் எழுப்பி இதை வரவேற்றனர் என்று கூறப்படுகிறது.
1897ம்  ஆண்டு நியூயார்க்கின் Brooklyn என்ற இடத்தில் பிறந்த Dorothy Day, குழந்தை பருவத்திலும், இளமையிலும் பல்வேறு துன்பங்களையும் போராட்டங்களையும் சந்தித்தார். பின்னர், கத்தோலிக்கத் திருமறையைத் தழுவினார்.
80 ஆண்டுகளுக்கு முன்னர் Peter Maurin என்பவருடன் இணைந்து கத்தோலிக்க உழைப்பாளர் இயக்கத்தைத் துவக்கிய Dorothy Day, 1980ம்  ஆண்டு காலமானார்.
இவரைப் புனிதராக்கும் முயற்சிகளை முன்னாள் நியூயார்க் பேராயர் கர்தினால் John O'Connor துவக்கி வைத்தார்.


5. சிரியாவில் காயமடைந்திருப்போர் கொள்ளை நோயைச் சந்திக்கும் ஆபத்து

நவ.14,2012. சிரியா நாட்டின் Homs நகரில் காயமடைந்திருப்போரும், வயது முதிர்ந்தோரும் கொள்ளை நோயைச் சந்திக்கும் ஆபத்தில் உள்ளனர் என்று அப்பகுதியில் பணிபுரியச் சென்றுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் Rabab Al-Rifai கூறினார்.
Homs நகரில் இராணுவத்திற்கும், புரட்சிக் குழுக்களுக்கும் இடையே பல மாதங்களாக நிகழ்ந்துவரும் மோதல்களால், அப்பகுதியில் பணிபுரிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அண்மையில் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதால், செஞ்சிலுவைச் சங்கம்  அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவும், மருந்துகளும் எடுத்துச் சென்று பணியாற்றி வருகிறது.
அப்பகுதியில் இருக்கும் ஓர் இயேசு சபை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 20க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் மிகவும் ஆபத்தான உடல் நிலையில் இருப்பதாகவும், இவர்கள் மூலம் அப்பகுதியில் கொள்ளை நோய் பரவும் ஆபத்து உள்ளதென்றும் கூறப்படுகிறது.


6. இந்தோனேசியாவில் வாழும் சிறுபான்மையினர், தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாவது கண்டனத்திற்கு உரியது - ஐ.நா. உயர் அதிகாரி

நவ.14,2012. இந்தோனேசியாவில் வாழும் சிறுபான்மையினர், தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாவதும், காவல் துறையினர் இப்பிரச்சனைகளைத் தீர்க்க எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளாமல் இருப்பதும் கண்டனத்திற்கு உரியதென்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்கள் இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்ட ஐ.நா.மனித உரிமைகள் அவையின் தலைவர் நவநீதம் பிள்ளை, ஜகார்த்தாவில் செய்தியாளர்களிடையே பேசுகையில் இவ்வாறு கூறினார்.
மேற்கு ஜாவாவில் உள்ள Bogor எனுமிடத்தில் கிறிஸ்தவர்கள் வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்கு உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கிய பின்னரும், அப்பகுதியில் உள்ள இஸ்லாம் அடிப்படைவாதக் குழுவினர் வழிபாட்டுத் தலங்களைக் கட்டுவதற்குத் தடை செய்து வருவதை ஐ.நா. அதிகாரி வன்மையாகக் கண்டித்தார்.
இந்தோனேசிய அரசு காப்பாற்ற வேண்டிய சட்டங்களை தனிப்பட்ட குழுக்கள் தங்கள் கைகளில் எடுத்திருப்பது நாட்டின் சட்டம் ஒழுங்குச் சூழலுக்குப் பெரும் ஆபத்து என்றும் ஐ.நா. அதிகாரி நவநீதம் பிள்ளை எடுத்துரைத்தார்.


7. உலகில் விற்பனையாகும் பத்து மருந்துகளில் ஒன்று போலி மருந்து

நவ.14,2012. உலகில் விற்பனையாகும் பத்து மருந்துகளில் ஒன்று போலி மருந்து என்றும், எனவே உலக அரசுகள் இந்த ஆபத்தை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகள் மேகொள்ளவேண்டும் என்றும் WHO உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
மலேரியாவுக்கு வழங்கப்படும் மருந்துகளில் மூன்றில் ஒன்று  போலியான மருந்து என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.
British Medical Journal என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஓர் ஆய்வறிக்கையின்படி, போலி மருந்துகள் வளரும் நாடுகளில் மட்டுமல்ல, வளர்ச்சி அடைந்துள்ள நாடுகளிலும் பரவலாகக் காணக்கிடக்கிறது என்று கூறப்படுகிறது.
அண்மையில் அமெரிக்காவில் விற்கப்பட்ட போலி மருந்துகளால் மூளைகாய்ச்சல் உருவாகி 15 பேர் இறந்துள்ளனர்.
உலகின் வெகு சில நாடுகளிலேயே மருத்துகளைப் பற்றிய மிகக் கடுமையான விதிமுறைகள் உள்ளன என்றும், உலக நாடுகளில் மூன்றில் ஒருபகுதி நாடுகளில் மருந்து விற்பனைக்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்றும் WHO வெளியிட்டுள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


8. நவம்பர் 14 - உலக நீரழிவு நோய் நாள்

நவ.14,2012. உலகெங்கும் நீரிழிவு நோயால் இறப்பவர்களில் 80 விழுக்காட்டினர் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளை சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவில் மட்டும், ஐந்து கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், இன்னும் சில ஆண்டுகளில் இவர்களின் எண்ணிக்கை 7 கோடியாக உயரும் என்றும் அஞ்சப்படுகிறது.
உடலில் இன்சுலின் உற்பத்தி மற்றும் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படுவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதைக் குணப்படுத்தும் இன்சுலின் மருந்தை Charles Best என்பவருடன் இணைந்து கனடாவைச் சேர்ந்த மருத்துவர் Fredrick Banting கண்டுபிடித்தார்.
இவரைக் கௌரவப்படுத்தும் விதமாக, அவரது பிறந்த நாளான நவம்பர் மாதம் 14ஆம் தேதியை உலக நீரிழிவு நோய் நாளாக ஐ.நா அறிவித்தது.
நீரிழிவு நோயில் இரண்டு வகைகள் உள்ளன. இன்சுலின் முற்றிலும் சுரக்காமல் நின்று விடுவது முதல் வகை. இது குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது. இரண்டாவது வகை, இன்சுலின் போதிய அளவு சுரக்காமல் இருப்பது. இவ்வகைதான் 90 விழுக்காடு பேருக்கு உள்ளது. 45 வயதுக்கும் மேற்பட்டோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
உலகம் முழுவதும் 34 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2030க்குள் இது இரு மடங்காக அதிகரிக்கும் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
உடல் எடை அதிகரித்தல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், அடிக்கடி பசி, அதிக தாகம் போன்றவை இந்நோய்க்கான அறிகுறிகள்.
இந்நோய்க்கான சிகிச்சையை தொடக்கத்திலேயே எடுக்கத் தவறினால், கண், இருதயம், சிறுநீரகம், ஆகியவை பாதிக்கப்படும். உணவு முறை, உடற்பயிற்சியால் இரண்டாவது வகை நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

 

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...