1. அகில உலக நலப்பணியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுடன் திருத்தந்தை சந்திப்பு
2. 'அட்லிமினா' சந்திப்பையொட்டி பிரான்ஸ் நாட்டு ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு
3. மனிதர்களாகிய நாம் இயற்கைப் பரிணாம வளர்ச்சியில் எதேச்சையாகத் தோன்றிய உயிர்கள் அல்ல - திருத்தந்தை
4. அகில உலக நலப்பணியாளர் மாநாட்டின் இறுதித் திருப்பலியில் பேராயர் Zimowskiன் மறையுரை
5. வாழ்வுக்குப் பாதுகாப்பு தரக்கூடிய ஊதியத்தைக் கத்தோலிக்க நிறுவனங்கள் வழங்கவேண்டும் - ஆயர்கள் முடிவு
6. இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனைகளைத் தீர்க்க, வன்முறை என்றும் வழிவகுக்காது - எருசலேம் ஆயர்
7. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அகில உலக நலப்பணியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளுடன் திருத்தந்தை சந்திப்பு
நவ.17,2012. துன்பம் என்ற சொல்லுக்கே ஒரு புதிய அர்த்தம் கொடுத்து, துன்பங்களை அன்பால் வென்ற கிறிஸ்து, துன்பங்களைத் துடைக்கும் திருஅவைப் பணிகளுக்கு ஆழமான அர்த்தம் தருகிறார் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இவ்வியாழன்
முதல் சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெற்ற 27வது அகில உலக
நலப்பணியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகளை இச்சனிக்கிழமை மதியம்
திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய வாழ்த்துரையில் இவ்வாறு கூறினார்.
அண்மைக் காலங்களில் உலகம் சந்தித்து வரும் பொருளாதாரச் சரிவினால், நலப்பணிகளுக்கு ஒதுக்கப்படும் தொகை அரசுகளால் குறைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிப்பிட்டுப் பேசியத் திருத்தந்தை, இச்சூழலில் கத்தோலிக்க நலப்பணியாளர்கள் இன்னும் தீவிரமான அர்ப்பணத்துடன் உழைக்கவேண்டிய கட்டாயத்தையும் சுட்டிக்காட்டினார்.
தன் உரையின் இறுதியில், உலகெங்கும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் தான் அன்புடன் நினைவுகூர்வதாகக் கூறியத் திருத்தந்தை, நோயில் வாடுவோருக்கும், அவர்களுக்குப் பணிபுரிவோருக்கும் தன சிறப்பான அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்குவதாகவும் கூறினார்.
2. 'அட்லிமினா' சந்திப்பையொட்டி பிரான்ஸ் நாட்டு ஆயர்களுடன் திருத்தந்தை சந்திப்பு
நவ.17,2012.
கிறிஸ்தவப் பாரம்பரியத்தில் ஊறியிருந்த பிரான்ஸ் நாட்டின் வரலாற்றை
மறந்துவிடக் கூடாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
'அட்லிமினா' எனப்படும் சந்திப்பையொட்டி, உரோம் நகர் வந்திருந்த பிரான்ஸ் நாட்டு ஆயர்களின் ஒரு குழுவினரை இச்சனிக்கிழமை காலை, திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, தான் 2008ம் ஆண்டு பாரிஸ் நகருக்குப் பயணம் மேற்கொண்டதை மகிழ்வுடன் நினைவு கூர்ந்தார்.
உலகில்
தற்போது பல்வேறு துறைகளிலும் நிகழ்ந்துவரும் விவாதங்களில் திருஅவையின்
குரலும் தொடர்ந்து ஒழிப்பதற்கு ஆயர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்
என்று கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
தற்போது
கொண்டாடப்படும் நம்பிக்கை ஆண்டில் நற்செய்தியின் படிப்பினைகளை ஆணித்தரமாக
எடுத்துச் சொல்வதில் எவ்விதத் தயக்கமும் நம்மிடையே எழக்கூடாது என்று
திருத்தந்தை பிரான்ஸ் நாட்டு ஆயர்களிடம் வலியுறுத்திக் கூறினார்.
3. மனிதர்களாகிய நாம் இயற்கைப் பரிணாம வளர்ச்சியில் எதேச்சையாகத் தோன்றிய உயிர்கள் அல்ல - திருத்தந்தை
நவ.17,2012. மனிதர்களாகிய நாம் இயற்கைப் பரிணாம வளர்ச்சியில் எதேச்சையாகத் தோன்றிய உயிர்கள் அல்ல, மாறாக, கடவுளின் திட்டத்தில் வகுக்கப்பட்ட உயர்ந்த கொடைகள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நவம்பர் 16,17 - இவ்வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் போர்த்துகல் நாட்டில் நடைபெற்ற 'புறவினத்தார் முற்றம்' என்ற கூட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு, போர்த்துக்கல் மொழியில் வாழ்த்துச் செய்தி அனுப்பியத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை என்ற அடிப்படை உண்மையை வலியுறுத்த, கிறிஸ்தவர்களும், பிற மதத்தினரும் ஒன்று சேர்ந்து நடத்தும் இக்கருத்த்ரங்கிற்குத் தன் வாழ்த்துக்களையும், செபங்களையும் இச்செய்தி வழியாக அனுப்பியுள்ளார் திருத்தந்தை.
உலகில் நிலவும் பிரச்சனைகளைக் கண்டு மருளும் மனிதர்கள், இறைவனை உலகினின்று அகற்றும் முயற்சிகளில் ஈடுபடுகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, மீண்டும் இறைவனை படைப்பனைத்தின் மையத்திற்குக் கொணர்வதே பிரச்சனைகளைத் தீர்க்க சிறந்த வழி என்று எடுத்துரைத்தார்.
4. அகில உலக நலப்பணியாளர் மாநாட்டின் இறுதித் திருப்பலியில் பேராயர் Zimowskiன் மறையுரை
நவ.17,2012.
நம்பிக்கை ஆண்டில் நலப்பணியில் ஈடுபட்டிருப்போர் இணைந்து வந்திருப்பது
பொருத்தமான ஒரு முயற்சி என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
நலம் மற்றும் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, உரோம்
நகரில் கடந்த மூன்று நாட்களாக நிகழ்ந்த ஓர் அகில உலக நலப்பணியாளர்
மாநாட்டின் இறுதித் திருப்பலியை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், இச்சனிக்கிழமை காலை நிறைவேற்றி, மறையுரை வழங்கியபோது, இவ்வாறு கூறினார்.
இச்சனிக்கிழமையன்று
திருஅவையால் சிறப்பிக்கப்படும் ஹங்கேரி நாட்டின் புனித எலிசபெத் அவர்கள்
தன வாழ்வின் பெரும்பகுதியைப் பிரரன்புப் பணிக்கென அர்ப்பணித்ததை, பேராயர் Zimowski தன் மறையுரையில் சிறப்பாகச் சுட்டிக் காட்டினார்.
உலகின்
65 நாடுகளிலிருந்து இம்மாநாட்டில் கலந்து கொண்ட 650க்கும் மேற்பட்ட
அங்கத்தினர்கள் கடன்க்ஹா மூன்று நாட்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தன்
பாராட்டுக்களையும் தெரிவித்தார் பேராயர் Zimowski.
5. வாழ்வுக்குப் பாதுகாப்பு தரக்கூடிய ஊதியத்தைக் கத்தோலிக்க நிறுவனங்கள் வழங்கவேண்டும் - ஆயர்கள் முடிவு
நவ.17,2012. உழைப்பாளிகளின் வாழ்வுக்குப் பாதுகாப்பு தரக்கூடிய ஊதியத்தைக் கத்தோலிக்க நிறுவனங்கள் வழங்கவேண்டும் என்ற ஒரு முடிவினை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் இணைந்து இவ்வெள்ளியன்று நிறைவேற்றினர்.
நவம்பர் 21, வருகிற புதனன்று, இங்கிலாந்தில் அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இணைந்து நடத்தவிருக்கும் ஒரு சிறப்பு மாமன்றத்தில் 'வாழ்வுக்குப் பாதுகாப்பளிக்கும் ஊதியம்' என்ற கருத்து வலியுறுத்தப்படும் என்று தெரிகிறது.
கத்தோலிக்கத் திருஅவையும், இங்கிலாந்து கிறிஸ்தவ சபையும் இணைந்து நடத்தவிருக்கும் இச்சிறப்புக் கூட்டத்தில், உழைப்பாளிகளின் தினக் கூலி குறைந்தது 7.45 பவுண்டு, அதாவது ஏறத்தாழ 500 ரூபாயாவது இருக்க வேண்டும் என்பது பரிந்துரைக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
6. இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனைகளைத் தீர்க்க, வன்முறை என்றும் வழிவகுக்காது - எருசலேம் ஆயர்
நவ.17,2012. இஸ்ரேல் இராணுவத்திற்கும், பாலஸ்தீனப் போராளிகளுக்கும் இடையே மீண்டும் மோதல்கள் உருவாகியிருப்பதால், அதிக அளவு பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே என்று எருசலேம் ஆயர் ஒருவர் கூறினார்.
நவம்பர் 14, கடந்த புதனன்று இஸ்ரேல் இராணுவமும், பாலஸ்தீனர்களும் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவரை 15க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியது.
இம்மக்களுக்காக செபிப்பது மட்டும் போதாது, இவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று எருசலேம் இலத்தீன் ரீதி ஆயர் William Shomali, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றில் கூறினார்.
இஸ்ரேல்- பாலஸ்தீனப் பிரச்சனைகளைத் தீர்க்க, வன்முறை என்றும் வழிவகுக்காது என்று கூறிய ஆயர் Shomali, பன்னாட்டுத் தலையீடு இப்பிரச்சனையைத் தீர்க்க மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
7. கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்
நவ.17,2012. கூடங்குளம் அணுமின் நிலையத்தினால் இலங்கையின் வடபகுதியில் வாழும் தழிழர்களுக்கு ஆபத்து என்று கூறி, இந்திய அரசிற்கு எதிராக யாழ்ப்பாணத்தில் இச்சனிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, அணுஉலையினால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்களை வெளிப்படுத்தும் விதமாக துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும், இந்தியாவில் அணுஉலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்களுக்கு தாம் ஆதரவு அளிப்பதாகவும் இப்போராட்டத்தில் கோஷம் எழுப்பட்டது.
புதுடெல்லிக்கு அபிவிருத்தி, தமிழ்நாடு-இலங்கைக்கு சுடுகாடு, அணுஉலை கதிரியக்கம் கொடிய புற்றுநோயையும் அங்கவீனப் பிறப்பையும் கொண்டுவரும், பல்தேசியக் கம்பனிகளுக்கு 1000 ஆயிரம் மெகாவாட் மின்சாரம், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உயிர் அபாயம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment