Friday, 23 November 2012

CAtholic News in Tamil - 22/11/12


1. ஹெயிட்டி நாட்டின் அரசுத் தலைவருடன் திருத்தந்தை சந்திப்பு

2. தவறு செய்வோர் மீண்டும் நன்னெறியுடன் வாழ வழிவகைகள் செய்வதும் நீதியின் ஒரு முக்கிய அங்கம் - திருத்தந்தை

3. சிறைகள் வாரத்தில் திருஅவையின் முயற்சிகள்

4. திருத்தந்தை - நம்பிக்கையின் அழகையும் வலிமையையும் உணர்வதற்காக இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூட்டப்பட்டது

5. பல்சமய உரையாடல் திருப்பீட அவையும், இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் உறவுகள் அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கு

6. காசாப் பகுதி ஒரு பெரிய திறந்தவெளி சிறை - இலத்தீன் ரீதி பேராயர் Fouad Twal

7. இந்திய இயேசு சபை அருள் பணியாளர் ஒருவருக்கு அமெரிக்க விருது

8. முகரம் திருநாளையொட்டி பைசலாபாத் நகரில் சமரசக் கருத்தரங்கு

9. கூடங்குளம் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் சேமிக்க முடிவு

------------------------------------------------------------------------------------------------------

1. ஹெயிட்டி நாட்டின் அரசுத் தலைவருடன் திருத்தந்தை சந்திப்பு

நவ.22,2012. இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் ஹெயிட்டி நாட்டின் அரசுத் தலைவர் Michel Joseph Martelly அவர்களைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் சந்தித்தார். திருப்பீடத்திற்கும், ஹெயிட்டி நாட்டுக்கும் இடையே நிலவும் நல்லுறவைக் குறித்து இச்சந்திப்பில் பேசப்பட்டது.
2010ம் ஆண்டு ஹெயிட்டி நாட்டில் உண்டான நிலநடுக்கத்தின்போதும், அதற்குப் பின்னரும் திருஅவையும்,  திருப்பீடமும் தங்கள் நாட்டுக்குச் செய்த உதவிகளை அரசுத் தலைவர் Martelly திருத்தந்தையிடம் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
இச்சந்திப்பிற்குப் பின், ஹெயிட்டி அரசுத் தலைவர் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே  அவர்களையும், நாடுகளுடனான உறவுகளின் செயலர் பேராயர் டோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்து உரையாடினார்.


2. தவறு செய்வோர் மீண்டும் நன்னெறியுடன் வாழ வழிவகைகள் செய்வதும் நீதியின் ஒரு முக்கிய அங்கம் - திருத்தந்தை

நவ.22,2012. தவறு செய்வோரைத் தண்டிப்பது மட்டும் நீதி ஆகாது, மாறாக, அவர்கள் மீண்டும் நன்னெறியுடன் வாழ வழிவகைகள் செய்வதும் நீதியின் ஒரு முக்கிய அங்கம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நவம்பர் 22, இவ்வியாழன் முதல் இச்சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் சிறை அதிகாரிகளின் 17வது உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஐரோப்பாவின் பல நாடுகளிலிருந்து வந்திருக்கும் 200க்கும் அதிகமான உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை, மனித நீதி, இறை நீதியின் அடிப்படையில் உருவாகவேண்டும் என்ற அழைப்பை விடுத்தார்.
தாள்களில் பதிந்துவிடும் நீதி மன்றத்தீர்ப்புகளை மனதில் எழுதி, அவற்றைத் தகுந்த வகையில் அர்த்தம் கண்டு, தீர்ப்புக்குள்ளானவர்களை வழிநடத்தும் கடினமான பணி உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை சிறை அதிகாரிகளிடம் கூறினார்.
"சிறைகளிலும் ஜுபிலி" என்ற கருத்துடன் ஜுபிலி ஆண்டான 2000மாம் ஆண்டில் அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் வழங்கியக் கருத்துக்களைச் சுட்டிக் காட்டிப் பேசியத் திருத்தந்தை, விடுவிக்கும் அன்பை நோக்கி முயற்சிகள் மேற்கொள்ளும் நீதியே உண்மையான நீதி என்று மறைந்த திருத்தந்தை கூறியதையே தானும் வலியுறுத்துவதாகக் கூறினார்.
மனித மாண்பை இழந்து சிறையில் வாடும் மனிதர்களுக்கு மீண்டும் அந்த மாண்பை அளிக்கும் வகையில் உழைக்கும் அனைத்து அதிகாரிகளையும், அவர்களது பணிகளையும் இறைவன் ஆசீர்வதிக்கவேண்டும் என்ற வாழ்த்துடன் திருத்தந்தை இச்சந்திப்பை நிறைவு செய்தார்.


3. சிறைகள் வாரத்தில் திருஅவையின் முயற்சிகள்

நவ.22,2012. நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலும், பகல் கனவுகளிலும் மூழ்கியிருக்கும் நாம், ஒவ்வொருநாளும் ஒரு சில மணித்துளிகளாவது ஒதுக்கி, அமைதியான செபத்தில் இறைவனுடன் அந்நேரத்தைச் செலவிடுவது நல்லது என்று பிரித்தானியாவின் திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Mennini கூறினார்.
நவம்பர் 18, கடந்த ஞாயிறு முதல் நவம்பர் 24 இச்சனிக்கிழமை முடிய திருஅவையில்  கடைபிடிக்கப்படும் சிறைகள் வாரம் என்ற முயற்சிகளின் ஓர் அங்கமாக, பேராயர் Mennini இப்புதனன்று Feltham எனுமிடத்தில் அமைந்துள்ள வளர் இளம் பருவத்தினர் சிறையில் உள்ளவர்களுக்குத் திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியபோது இவ்வாறு கூறினார்.
சிறையில் உள்ளவருக்கென சிறப்பான பணியாற்றும் ஆன்மீகக் குருக்களின் அர்ப்பண சிந்தனையை, பேராயர் Mennini சிறப்பாகப் பாராட்டினார்.
'வாழ்வை நோக்கிச் செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்தல்' ‘இறுதியாக வீடு நோக்கி போன்ற மையக் கருத்துக்களுடன் இவ்வாண்டுக்கான சிறைகள் வாரம் சிறப்பிக்கப்படுகிறது.


4. திருத்தந்தை - நம்பிக்கையின் அழகையும் வலிமையையும் உணர்வதற்காக இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூட்டப்பட்டது

நவ.22,2012. நம்பிக்கையின் அழகையும் வலிமையையும் உணர்வதற்காக இரண்டாம் வத்திக்கான் சங்கம் கூட்டப்பட்டது, அதன் 50ம் ஆண்டு நிறைவில் மீண்டும் அந்த நம்பிக்கையை நாம் கொண்டாட நடைபெறும் நம்பிக்கை ஆண்டில் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இப்புதன் மாலை, திருப்பீடத்தின் அனைத்து கல்வி அறக்கட்டளை உறுப்பினர்களின் கூட்டத்தில் திருத்தந்தை வழங்கியச் செய்தியை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே வாசித்தார்.
அண்மையில் திருத்தந்தையால் நிறுவப்பட்ட லத்தீன் மொழி பயிற்சிக்கான அறக்கட்டளையைக் குறித்து திருத்தந்தை தன் செய்தியில் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.
நம்பிக்கை வெளிப்பாட்டின் பல வடிவங்கள்: நம்பிக்கையின் அழகிற்குச் சாட்சியம் பகரும் கலைஞர்கள் என்ற மையக் கருத்துடன் கூடிவந்த இந்த 17வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் திருத்தந்தை வாழ்த்தினார்.
இக்கூட்டத்தின் நடைமுறைச் செயல்பாடுகளை, கலாச்சாரத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi விளக்கினார். திருப்பீட அறக்கட்டளைகள் நடத்தும் நிறுவனங்களில் கடந்த ஆண்டு வெற்றிபெற்றோருக்கு கர்தினால் பெர்தோனே பரிசுகள் வழங்கினார்.


5. பல்சமய உரையாடல் திருப்பீட அவையும், இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் உறவுகள் அமைப்பும் இணைந்து நடத்திய கருத்தரங்கு

நவ.22,2012. பல்சமய உரையாடல் திருப்பீட அவையும், இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் உறவுகள் அமைப்பும் இணைந்து நவம்பர் 19, இத்திங்கள் முதல் இப்புதன் முடிய உரோம் நகரில் கருத்தரங்கு ஒன்றை நடத்தின.
திருப்பீடத்தின் சார்பில், பல்சமய உரையாடல் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, பேராயர் Ramzi Garmou உட்பட பல கத்தோலிக்க அறிஞர்களும், இஸ்லாமிய அமைப்பின் சார்பில் அதன் தலைவர் Mohammad Bagher Korramshad, முனைவர் Mohammad Reza Dehshiri உட்பட பல அறிஞர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
நீதியின் இலக்கணம், தனிமனிதருக்கு உரிய நீதி, சமுதாயத்தின் பல்வேறு அங்கங்களில் இருக்கவேண்டிய நீதி, மற்றும் மனித சமுதாயம் அனைத்திற்கும் நீதி என்ற நான்கு பிரிவுகளில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
திறந்த மனதோடும் நட்புறவோடும் நடைபெற்ற இக்கருத்தரங்கில், நீதிக்கும் அமைதிக்கும் அண்மைக்காலங்களில் எழுந்துள்ள சவால்கள், நீதியை நிலைநாட்ட சமயத் தலைவர்கள் ஆற்றவேண்டிய கடமைகள் ஆகிய கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்பட்டன.


6. காசாப் பகுதி ஒரு பெரிய திறந்தவெளி சிறை - இலத்தீன் ரீதி பேராயர் Fouad Twal

நவ.22,2012. காசாப் பகுதி ஒரு பெரிய திறந்தவெளி சிறை என்றும், அங்கு வாழும் மக்கள் சிறைகளில் வாழ்வோரைக் காட்டிலும் மிக அவலமான நிலையில் உள்ளனர் என்றும் இலத்தீன் ரீதி முதுபெரும் தலைவர் Fouad Twal கூறினார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தலைவர்கள் மோதல்களைக் கைவிடுமாறு தன் மறைப்போதகத்தின் இறுதியில் திருத்தந்தை குறிப்பிட்ட இப்புதனன்று, இலத்தீன் ரீதி பேராயர் Fouad Twal, காசாப் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துப் பேசினார்.
போரைப் புனிதம் என்று அழைப்பது எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்படமுடியாது என்றும், வன்முறைகளையும், அழிவையும் உருவாக்கும் எந்த முயற்சியும் புனிதமாகாது என்றும் வலியுறுத்தினார் பேராயர் Twal.
இதற்கிடையே, இப்புதன் மாலை ஏழு மணியளவில் இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பினரும் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. ஒரு வாரத்திற்கும் மேலாக நிகழ்ந்த இத்தாக்குதல்களில் இதுவரை பாலஸ்தீனப் பகுதியில் 158 பேரும், இஸ்ரேல் பகுதியில் 5 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று சொல்லப்படுகிறது.


7. இந்திய இயேசு சபை அருள் பணியாளர் ஒருவருக்கு அமெரிக்க விருது

நவ.22,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டின் Illinois மாநிலம் இந்திய இயேசு சபை அருள் பணியாளர் ஒருவருக்குத் 'தலைச் சிறந்த சேவை' விருதை வழங்கியுள்ளது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சமூகப் பணியாற்றிவரும் இயேசு சபை அருள் பணியாளர் செட்ரிக் பிரகாஷ் அவர்களுக்குIllinois மாநிலத்தின் Harvey நகர மேயர் Eric Kellogg, இவ்விருதை அண்மையில் வழங்கியுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் இயேசு சபையினர் நடத்திவரும் Prashant என்ற மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரான அருள்தந்தை பிரகாஷ், 2002ம்  ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, துணிவுடன் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதி இவ்வுலகில் நிலைநிறுத்தப்படும் வரையிலும், நாம் யாரும் அமைதி காக்கமுடியாது என்பதை இவ்விருது எனக்கு மீண்டும் நினைவுறுத்துகிறது என்று அருள் பணியாளர் பிரகாஷ் கூறினார்.


8. முகரம் திருநாளையொட்டி பைசலாபாத் நகரில் சமரசக் கருத்தரங்கு

நவ.22,2012. வருகிற சனிக்கிழமை, மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கொண்டாடப்படவிருக்கும் முகரம் திருநாளையொட்டி, கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் ஒருங்கிணைந்து பாகிஸ்தான் பைசலாபாத் நகரில் ஒரு சமரசக் கருத்தரங்கை நடத்தினர்.
"வேறுபட்ட, பன்முகச் சமுதாயத்தில் ஒன்றுபட்டு வாழக் கற்றுக்கொள்ளுதல்" என்ற மையக் கருத்துடன் அண்மையில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட இளையோர், தற்போது கடைபிடிக்கப்படும் முகரம் மாதத்தில் சகிப்புத்தன்மை, உரையாடல், ஒருவரை ஒருவர் மதித்தல் ஆகிய அம்சங்கள் தங்கள் தலைமுறையில் வளரவேண்டுமென்ற அழைப்பை விடுத்தனர்.
திருத்தூதர் முகம்மது வழங்கிய இறுதி அறிவுரையும், பாகிஸ்தான் நாட்டின் தந்தை முகம்மது அலி ஜின்னா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வழங்கிய உரையும் சமயங்களுக்கிடையே நல்லுறவை வளர்க்கும் கூற்றுகள் என்று இஸ்லாமிய சமுதாய பணியாளர் Tahir Iqbal கூறினார்.
முகரம் மாதத்தில் வன்முறைகள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன என்றாலும், ஆங்காங்கே வன்முறைகள் நிகழ்ந்துள்ளது வேதனை தருகிறது என்று கிறிஸ்தவ சமுதாயப் பணியாளர் Yousaf Adnan கூறினார்.
இதற்கிடையே, இப்புதன் மாலை முகரம் மாதத்தையொட்டி தொழுகைக்குச் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 23 பேர் இறந்துள்ளனர், மற்றும் 60க்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.


9. கூடங்குளம் அணுக்கழிவுகளை கோலார் தங்கவயலில் சேமிக்க முடிவு

நவ.22,2012. கூடங்குளம் அணுமின் நிலையம் எப்போது செயல்படத் துவங்கும் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், அந்த உலையில் இருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் உள்ள முன்னாள் தங்கச் சுரங்கங்களில் தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இப்புதனன்று நடைபெற்ற விசாரணையின்போது, மத்திய அரசின் சார்பில் தோன்றிய வழக்கறிஞர் ரோஹிங்டன் நாரிமன் இத்தகவலைத் தெரிவித்தார்.
கோலார் தங்கவயலில் உள்ள தங்கச் சுரங்கங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டுவிட்ட நிலையில், அந்தச் சுரங்கங்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை என்றும், அணுக்கழிவுகளை சேமித்து வைக்க அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அரசு முடிவு செய்திருப்பதாகவும் ரோஹிங்டன் நாரிமன் தெரிவித்தார்.
அணு உலையில் இருந்து வெளியாகும் கழிவுகளில் 97 விழுக்காட்டினை மறு சுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்தத் திட்டமிப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் மக்கள் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், அணுக்கழிவுகளை எப்படி சுத்திகரிக்கப் போகிறார்கள், எப்படி சேமிக்கப் போகிறார்கள் என்ற விடயங்களில் அரசிடம் தெளிவான திட்டம் இல்லை என்று குற்றம் சாட்டினார்.
42 ஆயிரம் கோடி லிட்டர் தண்ணீரை கடலில் இருந்து எடுத்து, பயன்படுத்திவிட்டு, அதை மீண்டும் கடலில் விடுவதாக அரசுத் தரப்புக் கூறுகிறது. அவ்வாறு விடப்பட்டால் கடல் வளங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றும் பிரசாந்த் பூஷண் சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில், பாதுகாப்பு தொடர்பாக நிபுணர் குழு பரிந்துரைத்த 17 அம்சங்களுக்கு, அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, அடுத்து எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பதை மனுவாகத் தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...