Saturday 24 November 2012

Catholic News in Tamil - 24/11/12

1. திருத்தந்தை : கர்தினால்கள் அவை திருஅவையின் உலகளாவிய தன்மையை உயர்த்திக் காட்டுகிறது

2. பேராயர் Roham : கிழக்கு சிரியாவின் நகரங்கள் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்

3. எகிப்து தலத்திருஅவை : புதிய அரசுத்தலைவர் அந்நாட்டை கடும் ஆபத்தில் வைத்துள்ளார்

4. உலகில் இருபது கோடிக் கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர்

5. ஜமெய்க்காவில் ஏழைகள் மத்தியில் பணி

6. சில நாடுகளில் பத்துக்கு ஏழு பெண்கள்வீதம் உடலளவில் துன்புறுத்தப்படுகின்றனர்

7. ஆக்ஸஃபாம் : காசாவுக்கானப் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : கர்தினால்கள் அவை திருஅவையின் உலகளாவிய தன்மையை உயர்த்திக் காட்டுகிறது

நவ.24,2012. திருஅவையின் உலகளாவிய தன்மையை நிறைவுசெய்யும் தனது திருப்பணியில் கர்தினால்கள், முதலும் முக்கியமுமான விலைமதிக்கப்பட்ட உடன்பணியாளர்கள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 11 மணிக்குத் தொடங்கிய Consistory எனப்படும் புதிய கர்தினால்களின் திருநிலைப்பாடு திருவழிபாட்டில் மறையுரையாற்றிய திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
திருஅவையின் உலகளாவியதன்மை குறித்து இம்மறையுரையில் விளக்கிய திருத்தந்தை, உலகின் பல்வேறு மறைமாவட்டங்களைக் குறித்து நிற்கும் இந்தப் புதிய கர்தினால்கள், உலகளாவியத் திருஅவையை ஒன்றிணைக்கும் ஆன்மீகப் பிணைப்புக்களை வலிமைப்படுத்துகிறார்கள் என்று கூறினார்.
இப்புதிய கர்தினால்கள் இத்திருவழிபாட்டில் எடுக்கும் பதவிப்பிரமாணம் பற்றியும் விளக்கிய திருத்தந்தை, இவர்கள் பெறவிருக்கும் செந்நிறத் தலைப்பாகை, கிறிஸ்தவ விசுவாசத்திற்காகத் தங்களது குருதியையும் சிந்துவதற்குத் தயாராகும் அளவுக்கு இவர்கள் விசுவாசத்தில் உறுதியானவர்களாய் இருக்க வேண்டுமென்பதை நினைவுபடுத்துகின்றது என்று தெரிவித்தார்.
திருஅவையிடம் இப்புதிய கர்தினால்கள் கொண்டிருக்கும் அன்பு, திருத்தூதர்களின் இளவரசர் மீது இவர்கள் கொண்டிருக்கும் அன்பால் உறுதிப்படுத்தப்படுகின்றது என்பதை இவர்கள் பெறவிருக்கும் மோதிரம் நினைவுபடுத்துகின்றது என்று கூறினார் திருத்தந்தை.
இத்திருவழிபாட்டில், இந்தியாவின் சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் பேராயர் Baselios Cleemis Thottunkal, பிலிப்பீன்சின் மனிலா பேராயர் Luis Antonio Tagle,  இன்னும், லெபனன், கொலம்பியா, நைஜீரியா, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகள் முறையே ஒரு பேராயர் என ஆறு பேருக்குச் செந்நிறத் தலைப்பாகை, மோதிரம் ஆகியவற்றையும் அணிவித்தார் திருத்தந்தை.
கடந்த அக்டோபர் 24ம் தேதி புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் கேரளாவின் சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் பேராயர் Baselios Cleemis Thottunkal(53வயது), பிலிப்பீன்சின் மனிலா பேராயர் Luis Antonio Tagle(55 வயது), லெபனன் மாரனைட்ரீதித் தலைவர் பேராயர் Bechara Boutros al-Rahi (72 வயது), நைஜீரியப் பேராயர் John Onaiyekan(68 வயது), கொலம்பியப் பேராயர் Ruben Salazar Gomez (70 வயது), அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர் James Michael Harvey (63 வயது) ஆகிய ஆறு பேரைப் புதிய கர்தினால்களாக அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
கடந்த பிப்ரவரியில் 16 ஐரோப்பியர்கள் உட்பட 22 பேரைக் கர்தினால்களாக உயர்த்தினார். இவர்களில் ஏழு பேர் இத்தாலியர்கள். ஆக மொத்தத்தில் இச்சனிக்கிழமையோடு திருஅவையில் மொத்தக் கர்தினால்களின் எண்ணிக்கை 211 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 120 ஆகவும் உள்ளன.
பொதுவாக, கர்தினால்கள் திருஅவையின் இளவரசர்கள்என அழைக்கப்படுகின்றனர்.
இப்புதிய கர்தினால்கள் இஞ்ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று திருத்தந்தையோடு சேர்ந்து திருப்பலியும் நிகழ்த்துவார்கள்.
53 வயது நிரம்பிய கேரளாவின் புதிய கர்தினால் Baselios Cleemis Thottunkal திருஅவையிலுள்ள இளவயது கர்தினாலாகும்.
இந்நிகழ்வில் இந்திய நாடாளுமன்றத் தலைவர் P. J. Kurien, லெபனன் அரசுத்தலைவர்  Michel Sleiman,  பிலிப்பீன்ஸ் உதவி அரசுத்தலைவர் Jejomar C. Binay, நைஜீரிய செனட்டர் David Mark ஆகிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

2. பேராயர் Roham : கிழக்கு சிரியாவின் நகரங்கள் தாக்குதல்களிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும்

நவ.24,2012. கிழக்கு சிரியாவின் Kamishly, Hassaké ஆகிய நகரங்களில் அடைக்கலம் தேடியுள்ள ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்வு தாக்குதல்களிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்று அந்நாட்டின் Jazirah மற்றும் Euphrates ஆர்த்தடாக்ஸ் பேராயர் Eustathius Matta Roham கேட்டுக் கொண்டார்.
அந்த நகரங்களில் புலம் பெயர்ந்துள்ள அப்பாவிப் பெண்கள், வயதானவர்கள், சிறார் உட்பட ஆயிரக்கணக்கான மக்களுக்கு மேலும் மனிதாபிமான நெருக்கடிகள் இடம்பெறாமல் இருப்பதைத் தவிர்க்கும் நோக்கத்தில் அப்பகுதிகளில் தாக்குதல்களை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளார் பேராயர் Roham.
Kamishly, Hassaké ஆகிய இரு முக்கிய நகரங்கள் ஒவ்வொன்றிலும் நான்கு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர், இவர்களில் ஏறக்குறைய 20 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள் என்றும் பேராயர் ஃபிதெஸ் செய்தி நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள செய்தி கூறுகிறது. 
மேலும், சிரியாவிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புலம் பெயர்ந்துள்ள ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சிறாருக்கு குளிர்காலத்துக்குத் தேவையான உடைகளை வழங்கத் தொடங்கியுள்ளது ஐ.நா.வின் யுனிசெப் நிறுவனம்.

3. எகிப்து தலத்திருஅவை : புதிய அரசுத்தலைவர் அந்நாட்டை கடும் ஆபத்தில் வைத்துள்ளார்

நவ.24,2012. எகிப்து நாடு கடும் ஆபத்தில் உள்ளது, அந்நாட்டின் சட்டத்துறை, நீதிஅமைப்பு என அனைத்து அதிகாரங்களையும் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது, இதனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று அருள்திரு Rafic Greiche கூறினார்.
முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு, எகிப்தை, ஷாரியா என்ற இசுலாமியச் சட்டத்தின்கீழ் கொண்டுவருவதற்குத் திட்டவட்டமான முயற்சிகளில் இறங்கியுள்ளது என்று ஆசியச் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார் அருள்திரு Greiche.
எகிப்தின் அரசியல் அமைப்பில் அரசுத்தலைவர் செய்துள்ள அண்மை மாற்றங்கள், அந்நாட்டின் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்புக்கும், Salafi என்ற இசுலாமிய குழுவுக்கும் உறுதியான அதிகாரங்களை வழங்குவதாக இருக்கின்றன என்றும் அக்குரு தெரிவித்தார்.
இதற்கிடையே, எகிப்தின் மக்களாட்சி ஆதரவாளர்கள் Tahrir வளாகத்தில் கூடி, அரசியலில் முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு கொண்டுள்ள அதிகாரத்துக்கு எதிராகப் புதிய புரட்சி ஒன்றை நடத்துமாறு அனைத்து எகிப்தியர்களையும் கேட்டுள்ளதாக ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

4. உலகில் இருபது கோடிக் கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர்

நவ.24,2012. உலகில், மற்ற சமயத்தினரைவிட கிறிஸ்தவர்கள் அதிக அளவில் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றனர் என்று Rupert Shortt என்ற நிருபர் வெளியிட்ட அண்மைப் புத்தகம் ஒன்று தெரிவிக்கிறது.
சமயத் தலைப்புக்களில் பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ள பத்திரிகையாளர் Shortt,  அண்மையில் “Cristianophobia” என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டுள்ளார்.
சகிப்பற்றதன்மை என்ற பிரச்சனையால் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் துன்புறுகின்றனர் என அந்த நூலில் குறிப்பிட்டுள்ள Shortt, கடந்த பத்து ஆண்டுகளில் இப்பிரச்சனை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார். 
ஈராக்கில் 12 இலட்சமாக இருந்த கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 2 இலட்சத்துக்கும் குறைவாகவே இருப்பதாகவும், 2003ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டின் தொடக்க காலம் வரை ஏறக்குறைய 63 ஆலயங்களில் குண்டு வீசப்பட்டன மற்றும் ஆக்ரமிக்கப்பட்டன எனவும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது.  


5. ஜமெய்க்காவில் ஏழைகள் மத்தியில் பணி

நவ.24,2012. சுற்றுலாவுக்கும் இசைக் கலாச்சாரத்துக்கும் புகழ்பெற்ற ஜமெய்க்காவில் ஏழைகளுக்குப் பணி செய்வதற்குத் திருஅவை அழைக்கப்பட்டுள்ளது என்று அருள்திரு Richard Ho Lung கூறினார்.
கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமெய்க்காவில் புதிதாக மறைப்பணியைத் தொடங்கியிருக்கும் ஏழைகளின் மறைபோதகர்கள் என்ற புதிய சபை, அந்நாட்டில் ஏழைகள் மத்தியில் தனது பணியைத் தொடங்கியுள்ளது என்று அச்சபையின் தலைவர் அருள்திரு Richard Ho Lung கூறினார்.
ஜமெய்க்காவில் ஏழை-செல்வந்தர் இவர்களுக்கு இடையே இடைவெளி அதிகமாக இருப்பதாகத் தெரிவித்த அக்குரு, தங்களது சபையினர் சேரிகளில் ஏழைகளோடு வாழ்ந்து, கழிவறைகளைச் சுத்தம் செய்தல், பல்துலக்கச் சொல்லிக் கொடுத்தல், சிறார்களைக் குளிப்பாட்டுதல் போன்ற சாதாரண பணிகளைச் செய்து வருவதாகக் கூறினார்.
ஜமெய்க்கா தலைநகர் Kingston, உலகின் மிக ஆபத்தான நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும்வேளை, 27 இலட்சம் மக்களைக் கொண்ட அந்நாட்டில் போதைப்பொருள் கும்பல்களால் ஆண்டுதோறும் 1,500க்கும் அதிகமானோர் இறக்கின்றனர். 

6. சில நாடுகளில் பத்துக்கு ஏழு பெண்கள்வீதம் உடலளவில் துன்புறுத்தப்படுகின்றனர்

நவ.24,2012. உலகில் இலட்சக்கணக்கான பெண்களும் சிறுமிகளும் தாக்கப்படுகின்றனர், அடிக்கப்படுகின்றனர், பாலியல் வன்செயலுக்கு உள்ளாகின்றனர், முடமாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம், இஞ்ஞாயிறன்று (நவம்பர்25)  கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள பான் கி மூன், உலகில் 70 விழுக்காட்டுப் பெண்கள், தங்கள் வாழ்நாளில் ஏதாவது ஒரு கட்டத்தில் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகின்றனர் அல்லது பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர் என்று   கூறியுள்ளார்.
பெண்களைத் துன்புறுத்தும் குற்றவாளிகள் பல நேரங்களில் தண்டிக்கப்படாமல் விடப்படுகின்றனர் என்று உரைக்கும் ஐ.நா.பொதுச் செயலர், பெண்களுக்கு எதிரான அனைத்துவிதமான வன்முறைகளும் ஒழிக்கப்படுவதற்கானத் தங்களது தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு அனைத்து அரசுகளும் நல்லமனம் காட்ட வேண்டுமென, இந்த அனைத்துலக நாளில் தான் கேட்பதாகத் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் நவம்பர் 25ம் தேதி  கடைப்பிடிக்கப்படுமாறு 1999ம் ஆண்டு டிசம்பரில் ஐ.நா.பொது அவை தீர்மானித்தது.

7. ஆக்ஸஃபாம் : காசாவுக்கானப் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும்

நவ.24,2012. காசாவில் அமைதி இடம்பெறுவதற்குத் தற்போது கையெழுத்திடப்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம் மட்டும் போதாது, மாறாக, அப்பகுதியில் ஐந்து ஆண்டுகளாக அமலில் இருக்கும் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டுமென்று ஆக்ஸஃபாம் என்ற பிரிட்டன் பிறரன்பு அமைப்பு கூறியது.
இந்தப் பொருளாதாரத் தடைகள், காசா பகுதிக்கான ஏற்றுமதி மற்றும்  இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துவதோடு, அப்பகுதியின் பொருளாதாரத்தையும் அழித்துள்ளன என்று ஆக்ஸஃபாம் அமைப்பின் பேச்சாளர் Martin Hartberg கூறினார்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட இந்தப் பொருளாதாரத் தடைகளினால் அப்பகுதியின் 80 விழுக்காட்டு மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன என்றும் Hartberg கூறினார்.
பிரிட்டனை மையமாகக் கொண்டு செயல்படும் ஆக்ஸஃபாம் பிறரன்பு அமைப்பு, உலகின் மிகப் பெரிய அரசு-சாரா நிறுவனங்களில் ஒன்றாகும். 


No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...