Tuesday, 6 November 2012

Catholic News in amil - 06/11/12


1. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அயர்லாந்து அரசின் சட்டத் திருத்தத்திற்கு அந்நாட்டு ஆயர்கள் ஆதரவு

2. அமெரிக்க இயேசு சபை குருவுக்கு ஹிந்தி எழுத்தாளர் விருது

3. மதச்சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் அமெரிக்க ஆயர்கள் பேரவை துவக்கியுள்ள புதிய இணையதளம்

4. காங்கோ மனித குல நெருக்கடியை களைய அழைப்பு

5. நைஜீரிய இஸ்லாமிய தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் கவனமுடன் செயல்பட அழைப்பு

6. சிரியாவின் உள்நாட்டுப் போரால் தாய்மார்களும் குழந்தைகளும் பெருமளவில் பாதிப்பு

7. இலங்கை அரசு ஐநாவில் வெற்று வாக்குறுதிகளையே முன்வைத்தது

------------------------------------------------------------------------------------------------------

1. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் அயர்லாந்து அரசின் சட்டத் திருத்தத்திற்கு அந்நாட்டு ஆயர்கள் ஆதரவு

நவ.06,2012. குழந்தைகளின் நலனும், பாதுகாப்பும் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல்களில் பெற்றோருக்குரிய இடத்தை அரசே கைப்பற்றி, குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பை உறுதி செய்யும் அயர்லாந்து அரசின் சட்டத் திருத்தத்திற்கு அந்நாட்டு ஆயர்கள் தங்கள் ஆதரவை வெளியிட்டுள்ளனர்.
பொது நலனின் பாதுகாவலர் என்ற முறையில் நெருக்கடியானச் சூழல்களில் பெற்றோருக்குரிய இடத்தை அரசே எடுத்துக் கொண்டாலும், அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் குழந்தைகளின் நலனையும், உரிமைகளையும் முன்னிறுத்தியதாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது என அயர்லாந்து திருஅவை அறிவித்துள்ளது.
பெற்றோர் தங்கள் கடமைகளிலிருந்து தவறும்போது, அவர்களின் குழந்தைகளை, பொறுப்புடைய தம்பதியருக்குத் தத்து கொடுப்பது குறித்த சட்டத் திருத்தத்தையும் கொணரவிருப்பதாக அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஓர் ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நிகழும் திருமணத்தின் வழியாக, அவர்களின் குழந்தைகள் மீது இத்தம்பதியர் கொள்ளும் உரிமைகள் இப்புதிய சட்டத்தின் வழியாக எவ்வகை பாத்ப்பையும் உருவாக்காது என உரைக்கும் ஆயர்கள், பெற்றோரின் கடமைகளையும், பொறுப்பையும் வலியுறுத்துவதாகவே இச்சட்டத் திருத்தம் அமையும் என்றும் தெரிவித்துள்ளனர்.


2. அமெரிக்க இயேசு சபை குருவுக்கு ஹிந்தி எழுத்தாளர் விருது

நவ.06,2012. ஹிந்தி மொழியில் தன் எழுத்துக்கள் மூலம் கத்தோலிக்க விசுவாசத்தை பரப்பியதற்கென அமெரிக்க இயேசு சபை குரு ஒருவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
Bettiah ஆயரின் செயலராகச் செயல்படும் 83 வயது அமெரிக்க இயேசு சபை குரு Jerome Durackக்கு  Cherubin Barno Sahu நினைவு விருதை வழங்கி கௌரவித்தார் பாட்னா உயர் மறைமாவட்டத்தின் குரு Devasia Mattathilany.
பல்வேறு நூல்களை ஹிந்தியில் மொழிபெயர்த்துள்ள குரு Durack, மதம், மறைக்கல்வி, ஆன்மீகம், ஒழுக்கரீதி என பல்வேறு துறைகளில் ஹிந்தி மொழியில் சிறந்த படைப்புகளை வழங்கியுள்ளார்.
பாட்னாவின் பொதுநிலை கத்தோலிக்க ஹிந்தி எழுத்தாளர்களுள் முக்கியமானவரான மறைந்த எழுத்தாளர் Sahu, பல்வேறு நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மூலம் கத்தோலிக்க விசுவாசத்தைப் பரப்ப உதவியுள்ளார். இந்த எழுத்தாளரின் பெயரால் கடந்த நான்காண்டுகளாக ஹிந்தி கத்தோலிக்க எழுத்தாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.


3. மதச்சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் அமெரிக்க ஆயர்கள் பேரவை துவக்கியுள்ள புதிய இணையதளம்

நவ.06,2012. கல்வி, செபம், மற்றும் மதச் சுதந்திரம் ஆகியவற்றை ஊக்குவிக்கும் நோக்குடன் புதிய இணையதளம் ஒன்றைத் துவக்கியுள்ளது அமெரிக்க ஆயர்கள் பேரவை.
அமெரிக்க விடுதலையின் அதிகார அறிவிப்பில் மதச் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என்பதைத் தங்கள் புதிய இணையதளத்தில் சுட்டிக்காட்டியுள்ள ஆயர்கள், மனித மாண்பில் வேரூன்றியுள்ள அடிப்படை மனித உரிமைகளில் மதச் சுதந்திரம் ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.
சமூக ஒழுங்கைக் கட்டிக்காப்பதற்கு, தேவைப்பட்டாலொழிய, எவருமே தங்கள் மத நம்பிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படக்கூடாது என்பதையும் தங்கள் இணையதளத்தில் வலியுறுத்தியுள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.
கத்தோலிக்கர்களின் முக்கியப் பணிகள் என, ஏழைகளுக்கு உதவுதல், வாழ்வைப் பாதுகாத்தல், அகதிகளை வரவேற்றல், சமூக நீதிக்காகப் போராடுதல் போன்றவற்றையும் firstamericanfeedom.com என்ற இணையதளத்தில் எடுத்தியம்பியுள்ளனர் அமெரிக்க ஆயர்கள்.


4. காங்கோ மனித குல நெருக்கடியை களைய அழைப்பு

நவ.06,2012. மோதல்களால் 20இலட்சம் மக்கள் குடிபெயர்ந்துள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசில் இடம்பெற்றுவரும் மனிதகுல நெருக்கடிகளைக் களைய ஒன்றிணைந்த பதிலுரை தேவைப்படுவதாக ஐநா அதிகாரி ஒருவர் விண்ணப்பித்துள்ளார்.
நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழும் 24 இலட்சம் கோங்கோ மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதாக உரைத்த ஐநா அதிகாரி John Ging, இவர்களின் வாழ்வைக் காப்பாற்ற தேவைப்படும் 79 கோடியே 10 இலட்சம் டாலர்களுக்கு விண்ணப்பித்துள்ளதில் இதுவரை 42 கோடியே 90 இலட்சம் டாலர்களே கிட்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஆண்கள் கொல்லப்படுவது, பெண்கள் கற்பழிக்கப்படுவது மற்றும் சிறார்கள் கட்டாயமாக ஆயுத மோதல்களில் பங்கெடுக்க வலியுறுத்தப்படுவது போன்றவை தொடர்வதாக எடுத்துரைத்த ஐநா அதிகாரி Ging, எண்ணற்றோர் அண்மை நாடுகளான ருவாண்டா மற்றும் உகாண்டாவில் குடியேறியுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
காங்கோவின் உள்நாட்டு மோதல்களால் ஏறத்தாழ 45 இலட்சம் பேர் போதிய உணவின்மையால் துன்புறுகின்றனர். 10 இலட்சம் குழந்தைகள் போதிய சத்துணவின்மையால் துன்புறும் அதேவேளை, 27,000 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


5. நைஜீரிய இஸ்லாமிய தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தைகளில் கவனமுடன் செயல்பட அழைப்பு

நவ.06,2012. கடந்த பல ஆண்டுகளாக பல ஆயிரக்கணக்கானோரின் உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருக்கும் நைஜீரிய Boko Haram இஸ்லாமிய தீவிரவாத அமைப்புடன் அந்நாட்டு அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட எடுத்திருக்கும் முடிவு கவனமுடன் செயல்படுத்தப்படவேண்டும் என அழைப்புவிடுத்துள்ளார் அந்நாட்டு பேராயர் Felix Job.
சவுதி அரேபியாவில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் நைஜீரியாவின் முன்னாள் இராணுவத்தலைவர் இஸ்லாமிய தீவிரவாத குழுவின் பிரதிநிதியாகப் பங்குபெறுவது குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளார் Ibadan பேராயர்.
தங்கள் சுய உருவை வெளியிடாமலேயே போரிட்டு அப்பாவி மக்களைப் பலிவாங்கி வரும் Boko Haram குழுவின் பிரதிநிதியாக முன்னாள் இராணுவ தளபதி அறிவிக்கப்பட்டிருப்பது, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என்றார் பேராயர் Job.
Boko Haram இஸ்லாமிய தீவிரவாதக்குழுவின் முக்கியத் தாக்குதல்களின் இலக்காக கிறிஸ்தவக் கோவில்களே இருந்துவரும் நிலையில், அரசுடன் ஆன பேச்சுவார்த்தைகள் நிகழ்வதற்கு பொது இடமாக சவுதி அரேபியாவை அக்குழு தேர்ந்தெடுத்திருப்பது குறித்த கேள்வியையும் எழுப்பியுள்ளார் நைஜீரியாவின் Bauchi ஆயர் John Goltok.


6. சிரியாவின் உள்நாட்டுப் போரால் தாய்மார்களும் குழந்தைகளும் பெருமளவில் பாதிப்பு

நவ.06,2012. சிரியாவின் உள்நாட்டுப் போரால் தாய்மார்களும் குழந்தைகளும் குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக UNICEF என்ற ஐநாவின் குழந்தைகள் நிதி அமைப்பு அறிவித்துள்ளது.
போரின் காரணமாக பெருமளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்குப் போதிய அளவு வசதிகள் மருத்துவமனைகளில் இல்லை என அறிவித்த ஐநா அதிகாரி Marixie Mercado, 120 படுக்கை வசதிகள் உடைய மருத்துவ மனையில் 200 குழந்தைகள் சிகிச்சைக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
இப்போரின் பாதிப்புகள், கருத்தாங்கிய பெண்களின் மனநிலையை பெருமளவில் பாதித்துள்ளதாகவும் கவலையை வெளியிட்டார் அவர்.
கடந்த 20 மாதங்களாக சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப்போரில் குறைந்தபட்சம் 20,000 பேர் உயிரிழந்துள்ளனர், 25 இலட்சம் மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.


7. இலங்கை அரசு ஐநாவில் வெற்று வாக்குறுதிகளையே முன்வைத்தது

நவ.06,2012. ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அரசு முன்வைத்துள்ள 'வெற்று' உறுதிமொழிகளை ஐநாவின் உறுப்பு நாடுகள் நம்புவதை நிறுத்த வேண்டும் என்று அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசு நாட்டில் முன்னெடுத்துள்ளதாக மனித உரிமைகள் பேரவையில் காட்டியுள்ள பல விடயங்களுக்கும் உண்மையில் இலங்கையில் நிலவும் களநிலைமைகளுக்கும் இடையில் பெரிய வேறுபாடுகள் இருப்பதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கை தொடர்பான நிபுணர் யொலாண்டா ஃபாஸ்டர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் நீதித்துறைக்கூட பாதுகாப்புடன் இல்லை என்பதையே அண்மைக்காலமாக அங்கு நடந்துவரும் சம்பவங்கள் காட்டுவதாக கூறிய அவர், அப்படியென்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எந்தளவுக்கு பாதுகாப்பு இருக்கும் என்றும் ஃபாஸ்டர் கேள்வி எழுப்பினார்.
தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களின் விபரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளக் கூடிய விதத்தில் பெயர் பதிவு நடைமுறையொன்றை பேணுவதாக இலங்கை அரசு மனித உரிமைகள் கவுன்சிலின் மீளாய்வில் கூறியிருந்தாலும், உண்மையில் பல குடும்பங்கள் இன்னும் அங்கு தங்கள் உறவுகளைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், அப்படியொரு பதிவுப் பொறிமுறையே அங்கு இல்லை என்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனம் கூறுகிறது.
மீள்குடியேற்றம் தொடர்பிலும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக கூறுகின்ற நிலையில், இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிரந்தர தீர்வு வழங்கக்கூடிய நடைமுறை எதுவும் இன்னும் இல்லை என்பதற்கு தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த நிறுவனத்தின் இலங்கை தொடர்பான நிபுணர் சுட்டிக்காட்டினார்.
இறுதிக்கட்டப் போரின்போது இலங்கையில் நடந்திருக்கின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் பற்றி ஆராய இராணுவ நீதிமன்றம் அமைத்துள்ளதாக அரசு கூறுவது பொருத்தமான நடவடிக்கை இல்லை என்றும், இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டை அதே இராணுவமே விசாரிப்பது எந்தளவுக்கு சரியான நடவடிக்கை என்று தாம் ஐநாவின் உறுப்பினர்களிடம் கேள்வி எழுப்பியிருப்பதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கை தொடர்பான நிபுணர் யொலாண்டா ஃபாஸ்டர் கூறினார்.


No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...