Friday, 30 November 2012

Catholic News in Tamil - 30/11/12


1. டெல்லி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் ஆயர் Anil Couto

2. Khunti மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Binay Kandulna

3. திருத்தந்தை ப்ரெஞ்ச் ஆயர்களிடம் : ஐரோப்பாவில் இறையழைத்தலை ஊக்குவியுங்கள்

4. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஐ.நா. நடவடிக்கைக்குத் திருப்பீடம் வரவேற்பு

5. மத்திய கிழக்குப் பகுதியின் அமைதி நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் அரசு ஆதரவு வழங்குமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்

6. முதுபெரும் தலைவர் Tawadros II : எகிப்துக்குத் தேவை செபம், அன்பு, ஞானம்

7. ஐ.நா.நிறுவனங்கள் : எய்ட்ஸ் நோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்

8. பெண்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்கள் மீது உண்மையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்


------------------------------------------------------------------------------------------------------

1. டெல்லி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயர் ஆயர் Anil Couto

நவ.30,2012. இந்தியாவின் டெல்லி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக, ஆயர் Anil Joseph Thomas Couto அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
டெல்லி உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றி வந்த பேராயர் Vincent Michael Concessao அவர்களின் பணி ஓய்வை, திருஅவை சட்டம் எண் 401,1ன்படி ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, தற்போதைய ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் Anil Couto அவர்களை, டெல்லி உயர்மறைமாவட்டத்தின் புதிய பேராயராக நியமித்துள்ளார்.
கோவா மாநிலத்தில் Pomburaவில் 1954ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி பிறந்த ஆயர் Anil Couto, 1981ம் ஆண்டில் குருவானார். உரோமையில் உயர்படிப்பை முடித்துள்ள இவர், 2011ம் ஆண்டில் டெல்லி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். 2007ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி ஜலந்தர் ஆயராக நியமிக்கப்பட்டார். 

2. Khunti மறைமாவட்டத்தின் புதிய ஆயர் Binay Kandulna

நவ.30,2012. இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் Khunti மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, ஆயர் Binay Kandulna அவர்களை இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Khunti மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும், ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராகவும் பணிபுரிந்துவந்த ஆயர் Binay Kandulna, 1964ம் ஆண்டு Gondraவில் பிறந்தவர். 
1994ம் ஆண்டில் Khunti மறைமாவட்டத்திற்கென குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 2009ம் ஆண்டு ராஞ்சி உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமிக்கப்பட்டார். 2012ம் ஆண்டு மார்ச் 5ம் தேதியன்று Khunti மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.
ராஞ்சி உயர்மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்ட Khunti மறைமாவட்டத்தில் Mundas பழங்குடி இன மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.

3. திருத்தந்தை ப்ரெஞ்ச் ஆயர்களிடம் : ஐரோப்பாவில் இறையழைத்தலை ஊக்குவியுங்கள்

நவ.30,2012. ஐரோப்பாவில் இறையழைத்தல்கள் குறைந்து வருவதற்கு ஐரோப்பிய மற்றும் ப்ரெஞ்ச் திருஅவைகள் பாராமுகமாய் இருக்க முடியாது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை திருத்தந்தையைச் சந்திக்கும் அட் லிமினா அப்போஸ்தலிக்கச் சந்திப்பையொட்டி பிரான்ஸ் நாட்டு ஆயர்களில் மூன்றாவது குழுவினரை இவ்வெள்ளிக்கிழமை காலையில்  திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, இளையோர் இறைவனின் அழைப்பைக் கேட்பதற்குச் சாதகமான மேய்ப்புப்பணிகளைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
திருஅவை மற்றும் உலகின் நம்பிக்கையாகவும் வருங்காலமாகவும் இருக்கின்ற இளையோர்க்கு கத்தோலிக்கக் கல்வி வழங்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, எடுத்துக்காட்டான மற்றும் சான்று பகரக்கூடிய பயிற்சியாளர்கள் இளையோருக்குத் தேவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்த நம்பிக்கை ஆண்டில் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி பற்றியும் பேசிய அவர், இப்பணியில் பங்குத்தளங்களும் கிறிஸ்தவ சமூகங்களும் இணைக்கப்பட வேண்டுமென்றும் கூறினார்.
கிறிஸ்தவ வாழ்வாலும் கலாச்சாரத்தாலும் உருவாகியுள்ள பிரான்சில், பள்ளிகள் மற்றும் பன்முகப் பணியிடங்கள் வழியாகப் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி இடம்பெறுமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

4. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஐ.நா. நடவடிக்கைக்குத் திருப்பீடம் வரவேற்பு

நவ.30,2012. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் உறுப்பினரல்லாத பார்வையாளராகும் தகுதிபாலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ள அதேவேளை, அப்பகுதியின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இந்த அங்கீகாரம் மட்டும் போதுமானதாக இல்லை என்று திருப்பீடம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
பாலஸ்தீனத்துக்கு இந்த அங்கீகாரம் வழங்குவது குறித்து இவ்வியாழனன்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், இந்தியா உட்பட 138 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
இந்த அங்கீகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட திருப்பீடம், தனது நடுநிலைத் தன்மையை உறுதி செய்திருப்பதோடு, அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் பாலஸ்தீனப் பகுதிக்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுமாறும் கேட்டுள்ளது.
இஸ்ரேல், தனி நாடாகச் செயல்படுவதற்குரிய உரிமை அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், பன்னாட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியையும் பாதுகாப்பையும் அனுபவிக்கவும் அங்கீகாரம் பெற்றுள்ளது, இதேபோல் பாலஸ்தீனாவும் முழுமாண்புடன் இறையாண்மை கொண்ட தனிப்பட்ட நாடாக இயங்குவதற்கு அங்கீகரிக்கப்பட வேண்டுமெனவும் திருப்பீடம் அறிக்கை கூறுகிறது.
பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் பல ஆண்டுகளாக எல்லைகள் உள்பட பல பிரச்சனைகள் நிலவுகின்றன. யாசர் அராபத்தின் கடும் போராட்டத்துக்கு பிறகு பாலஸ்தீனம் தனி நாடானது. எனினும் ஐ.நா.வால் தனி நாடு தகுதி வழங்கப்படவில்லை. இதையடுத்து தனி நாடு அந்தஸ்து வழங்க கோரி தொடர்ந்து பாலஸ்தீனத் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், பாலஸ்தீனத்தை உறுப்பினரல்லாத பார்வையாளராகும் தகுதியை அங்கீகரித்து ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஐ.நா.வில் மொத்தம் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. இவற்றில், இந்தியா உள்பட 138 நாடுகள் இத்தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தன. அமெரிக்க ஐக்கிய நாடு, பிரிட்டன், இஸ்ரேல் உள்பட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மற்ற நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கி கொண்டன.

5. மத்திய கிழக்குப் பகுதியின் அமைதி நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் அரசு ஆதரவு வழங்குமாறு கிறிஸ்தவத் தலைவர்கள் வலியுறுத்தல்

நவ.30,2012. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் உறுப்பினரல்லாத பார்வையாளராகும் தகுதியைப் பாலஸ்தீனத்துக்கு வழங்குவது குறித்து ஐ.நா.வில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டன் பங்கேற்காமல் இருந்ததையொட்டி, தங்களின் கருத்தைத் தெரிவித்துள்ளனர் அந்நாட்டின் கத்தோலிக்க மற்றும் ஆங்லிக்கன் ஆயர்கள்.
ஆயர்கள் Michael Langrish, Declan Lang ஆகிய இருவரும் இணைந்து வெளியுறவுத்துறைச் செயலர் William Hagueக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கிழக்குப் பகுதியில் தடைபட்டுள்ள அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு மீண்டும் உயிரூட்டம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.
ஐ.நா.வில் தங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்று விண்ணப்பித்த பாலஸ்தீன அதிகாரிகளின் ஆவல் நியாயமானது என்றும், இது, அப்பகுதியின் தற்போதைய இடர்நிறைந்த அரசியல் சூழலை நீக்குவதற்கு வன்முறையற்ற வழியில் எடுக்கும் முயற்சியாகும் என்றும்,  இதற்குப் பரவலான ஆதரவு தேவை என்றும் பிரிட்டன் ஆயர்கள் விளக்கியுள்ளனர்.
இஸ்ரேலும் பாலஸ்தீனாவும் இரண்டு நாடுகளாக செயல்படுவதற்குரிய நேரம் வந்தாகிவிட்டது என்று கூறியுள்ள ஆயர்கள், இவ்விரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்சனைகள் தீர்க்கப்படாமலே இருப்பது கொடுமையானது என்று தெரிவித்துள்ளனர். 

6. முதுபெரும் தலைவர் Tawadros II : எகிப்துக்குத் தேவை செபம், அன்பு, ஞானம்

நவ.30,2012. எகிப்தின் முன்வரைவு அரசியல் அமைப்பு, அந்நாட்டின் முற்போக்குச் சிந்தனையாளர்கள் மற்றும் கிறிஸ்தவ உறுப்பினர்களின் பங்கேற்பு இன்றி இசுலாமிய அடிப்படைவாதக் குழுக்களால் இவ்வெள்ளிக்கிழமை ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது குறித்து கவலை தெரிவித்தார் அந்நாட்டின் ஆர்த்தடாக்ஸ் காப்டிக் கிறிஸ்தவ சபையின் புதிய தலைவர்  இரண்டாம் Tawadros
இந்த அரசியல் அமைப்பு, முஸ்லீம் குருக்களுக்குச் சட்டத்தின்மீது  அதிக அதிகாரம் அளிக்கும் எனவும், பேச்சு சுதந்திரம், சமய சுதந்திரம், பெண்களின் உரிமைகள் மற்றும் பிற சுதந்திரங்கள் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டுவரும் என மனித உரிமை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
எகிப்தின் தற்போதைய நிலவரம் குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த காப்டிக் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவர் 2ம் Tawadros,  தற்போது எகிப்துக்குச் செபம், அன்பு மற்றும் ஞானம் தேவை என்று கூறினார்.
இந்த அரசியல் அமைப்பை இச்சனிக்கிழமையன்று அரசுத்தலைவரிடம் கொடுப்பதற்கும் அந்நாட்டின் நாடாளுமன்றம் திட்டமிட்டுள்ளது எனவும், இது குறித்த பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு 30 நாள்களுக்குள் நடத்தப்பட வேண்டுமெனவும் மனித உரிமை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

7. ஐ.நா.நிறுவனங்கள் : எய்ட்ஸ் நோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்

நவ.30,2012. எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் HIV நோய்க் கிருமிகளால் பாதிக்கப்பட்டுள்ளோர் பணி செய்யும் இடங்களில் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது தவிர்க்கப்படுமாறு ஐ.நா.நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
டிசம்பர் முதல் தேதியன்று அனைத்துலக எய்ட்ஸ் நோய் தினம் கடைப்பிடிக்கப்படுவதையொட்டி இவ்வாறு விண்ணப்பித்துள்ள அனைத்துலக தொழில் நிறுவன இயக்குனர் Guy Ryder,  HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்பவர்கள் மாண்புடன் வாழவும், வேலை செய்யும் இடங்களில் வேறுபாடின்றி நடத்தப்படவும் அனைவரும் உழைக்குமாறு கேட்டுள்ளார்.
பாகுபாடற்ற சுதந்திரம், பணிசெய்வதற்கான அடிப்படையான உரிமை என்றுரைத்த Guy Ryder, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பாகுபாடுகளைக் களைய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேலைசெய்யும் வயதுடையவர்களில் 3 கோடிக்கு மேற்பட்டோர் HIV நோய்க் கிருமிகளுடன் வாழ்கின்றனர் மற்றும் வேலை செய்யும் இளையோரில் 40 விழுக்காட்டுக்கு அதிகமானோர் ஆண்டுதோறும் புதிதாக இந்நோய்க் கிருமிகளால் தாக்கப்படுகின்றனர் என்று அனைத்துலக தொழில் நிறுவனம் கூறுகிறது.

8. பெண்களுக்கு எதிராகக் குற்றம் செய்பவர்கள் மீது உண்மையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

நவ.30,2012. பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு ஒரு வழியாக, அவர்களை வன்முறைக்கு உள்ளாக்கும் மனிதருக்குரிய தண்டனைகளைப் பொதுப்படையாக அறிவிக்க வேண்டுமென பாகிஸ்தான் மனித உரிமைகள் குழு ஒன்று கூறியது.
பாகிஸ்தானில் காவல்நிலையங்களில் இடம்பெறும் ஊழல் கலாச்சாரம், சட்டமும் ஒழுங்கும் மீறப்படுவது, நீதிமன்ற வழக்குகள் இழுத்தடிக்கப்படல் ஆகியவை ஆணாதிக்க சமுதாயத்தில் சட்டத்தினால் கிடைக்கும் தண்டனைகள் மீது பயத்தை நீக்குகின்றன என்று அக்குழு கூறியது. 
பாகிஸ்தானில் கடத்தல் குற்றமே பெண்களுக்கு எதிராகப் பரவலாக இடம்பெறும் குற்றம் என்றுரைக்கும் Aurat மனித உரிமைகள் அமைப்பு, இவ்வாண்டின் முதல் 6 மாதங்களில் 1,086 கடத்தல் குற்றங்களும், 792 கொலைகளும் இடம்பெற்றுள்ளன என்று கூறியுள்ளது.

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...