Tuesday, 13 November 2012

Catholic News in Tamil - 07/11/12

1. பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவரின் மறைவையொட்டி, திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபத் தந்தி

2. திருத்தந்தையின் பிரதிநிதியாக பங்களாதேஷில் கர்தினால் Murphy-O’Connor

3. உரோம் நகரில் நடைபெற்றுவரும் INTERPOL  கருத்தரங்கில் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி

4. நலம் குறித்த பிரச்சனை மிகுந்த சட்டவரைவுக்கு எதிராக நவம்பர் 12 பிலிப்பின்ஸ் நாட்டில் செபநாள்

5. அரேபிய நாடுகளின் இரண்டாவது இளையோர் மாநாடு அபு தாபியில் நவம்பர் மாதம் 15-17

6. இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்த எகிப்தின் புதிய அரசு எந்த முயற்சிக்கு காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தலைவர் எதிர்ப்பு

7. நவம்பர் 6 - போரினாலும், வன்முறை மோதல்களாலும் இயற்கை வளங்கள் சீரழிவதை எதிர்க்கும் உலக நாள்

8. உலகெங்கும் இணையதளத்தின் வசதிகள் பெருகி வந்தாலும், digital divide என்ற வேறுபாடுகள் கூடிவருகின்றன

------------------------------------------------------------------------------------------------------

1. பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவரின் மறைவையொட்டி, திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபத் தந்தி

நவ.07,2012. பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் தலைவராகப் பணியாற்றி, இப்புதனன்று இறையடி சேர்ந்த முதுபெரும் தலைவர் Maxim அவர்களின் மறைவையொட்டி, அனுதாபத் தந்தியைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனுப்பியுள்ளார்.
பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் சபையின் தற்போதையத் தலைவராகப் பொறுபேற்றுள்ள Grigorij di Veliko Trnovo அவர்களுக்கு அனுப்பியுள்ள இத்தந்தியில், அனைத்து ஆயர்கள், குருக்கள், பொதுநிலையினர் அனைவருக்கும் தன் செபங்களையும் அனுதாபங்களையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் பல்கேரியா நாட்டுக்கு 2002ம்  ஆண்டு மேய்ப்புப்பணித் திருப்பயணம் மேற்கொண்டபோது, முதுபெரும் தலைவர் Maxim அவரை அன்போடு வரவேற்று உபசரித்ததைத் திருத்தந்தை தன் அனுதாபச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதுபெரும் தலைவர் Maxim, கடந்த 41 ஆண்டுகள் பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவராகப் பணியாற்றிவர். இவர் கடந்த அக்டோபர் மாதம் 28ம்  தேதி தனது 98வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.


2. திருத்தந்தையின் பிரதிநிதியாக பங்களாதேஷில் கர்தினால் Murphy-O’Connor

நவ.07,2012. நாம் பெற்றுக்கொண்ட விசுவாச பாரம்பரியத்தை வருங்கால மக்களுக்கு அளிக்கும் சிறந்த கருவிகள் குருத்துவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் என்று கர்தினால் Cormac Murphy-O’Connor கூறினார்.
தெற்கு ஆசியாவில் கிறிஸ்தவ மறை விதைக்கப்பட்டதன் 400வது ஆண்டு நிறைவையும், டாக்கா உயர்மறைமாவட்டம் நிறுவப்பட்டதன் 125வது ஆண்டு நிறைவையும் பங்களாதேஷ் தலத்திருஅவை கொண்டாடிவருகிறது.
இவ்விழாக்களில் கலந்துகொள்ள, திருத்தந்தையின் பிரதிநிதியாக அந்நாட்டுக்குச் சென்றுள்ள கர்தினால் Murphy-O’Connor, டாக்கா உயர்மறைமாவட்டக் குருமாணவர்களை இச்செவ்வாயன்று சந்தித்தபோது இவ்வாறு கூறினார்.
மேலும், இச்செவ்வாயன்று பங்களாதேஷ் ஆயர்களைச் சந்தித்தபோது, புதிய நற்செய்திப் பணி, நம்பிக்கை ஆண்டு ஆகிய எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
பங்களாதேஷ் இருபால் துறவியர் பேரவையையும், இஸ்லாமிய உயர்மட்டத் தலைவர்களையும் இப்புதனன்று சந்திக்கும் கர்தினால் Murphy-O’Connor, இவ்வெள்ளியன்று டாக்கா உயர்மறைமாவட்டத்தின் 125வது ஆண்டு நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றுவதுடன், நம்பிக்கை ஆண்டு நிகழ்வுகளைத் துவக்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


3. உரோம் நகரில் நடைபெற்றுவரும் INTERPOL  கருத்தரங்கில் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி

நவ.07,2012. நாடுகள் என்ற எல்லைகளைக் கடந்து, குற்றங்கள் அகில உலக அளவில் ஒரு தொழில் நிறுவனத்தைப் போல் நடத்தப்படுகின்றன என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
நவம்பர் 5, இத்திங்கள் முதல் உரோம் நகரில் நடைபெற்றுவரும் INTERPOL  எனப்படும் அனைத்துலகக் காவல்துறையினரின் ஒரு கருத்தரங்கில் இச்செவ்வாயன்று, நாடுகளுக்கிடையே உறவுத் துறையின் திருப்பீடச் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
நாளுக்கு நாள் வளர்ந்துவரும் வன்முறைகளின் முன் நாம் செயலிழந்திருப்பது நன்னெறிக் கேள்விகளை எழுப்புகிறது என்று கூறிய பேராயர் மம்பெர்த்தி, குற்றங்களைக் களையும் முயற்சிகளும் அனைத்துலக அளவில் ஒன்றிணைக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
குற்றங்களையும் வன்முறைகளையும் உலகில் குறைப்பதற்கு நல்லதொரு ஆரம்பம் நமது குடும்பங்கள் என்பதால், குடும்ப உறவுகளை உறுதிப்படுத்தும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில், அரசு மற்றும் சமுதாய நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்று பேராயர் மம்பெர்த்தி வேண்டுகோள் விடுத்தார்.


4. நலம் குறித்த பிரச்சனை மிகுந்த சட்டவரைவுக்கு எதிராக நவம்பர் 12 பிலிப்பின்ஸ் நாட்டில் செபநாள்

நவ.07,2012. பிலிப்பின்ஸ் நாட்டில் மக்கள்பேறு நலம் குறித்த பிரச்சனை மிகுந்த சட்டவரைவுக்கு எதிராக நவம்பர் 12, வருகிறத் திங்களன்று, கத்தோலிக்கர்கள் அனைவரும் செபத்தில் இணையுமாறு அந்நாட்டு ஆயர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் குடும்பநல பணிக்குழுவின் தலைவர் ஆயர் Gabriel Reyes, கருவில் வளரும் குழந்தைகள் மனித குலத்திலேயே மிகவும் சக்தியிழந்த உயிர்கள் என்றும், இவர்களுக்காக நமது செபங்கள் மிகவும் தேவை என்றும் கூறினார்.
பிலிப்பின்ஸ் அரசு சட்டமாக்க விழையும் இச்சட்டவரைவால், கருத்தடைச் சாதனங்கள் மிக எளிதாகக் கிடைக்கும் என்றும், 5ம்  வகுப்பு பயிலும் குழந்தைகளும் பாலியல் கல்வி பயில வற்புறுத்தப்படுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது.


5. அரேபிய நாடுகளின் இரண்டாவது இளையோர் மாநாடு அபு தாபியில் நவம்பர் மாதம் 15-17

நவ.07,2012. வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இளையோரைச் சார்ந்தது என்பதால், அவர்களை நம்பிக்கையில் வளர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவது நல்லது என்று தென்  அரேபிய அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Paul Hinder கூறினார்.
அரேபிய நாடுகளின் இரண்டாவது இளையோர் மாநாடு நவம்பர் மாதம் 15ம்  தேதி முதல் 17ம் தேதி முடிய அபு தாபியில் உள்ள புனித யோசேப்பு பேராலயத்தில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு குறித்த விவரங்களை வெளியிட்ட ஆயர் Paul Hinder, இம்மாநாட்டில் 1500க்கும் அதிகமான கத்தோலிக்க இளையோர் கலந்துகொள்வர் என்று கூறினார்.
அரேபிய நாடுகளில் வாழும் கத்தோலிக்க இளையோர் அகில உலக இளையோர் மாநாடுகளில் கலந்துகொள்ள பணவசதி இன்றி இருப்பதால், இத்தகைய மாநாடு அரேபியப் பகுதிகளில் ஏற்பாடு செய்யப்படுகிறது என்று ஆயர் Hinder மேலும் கூறினார்.
2009ம்  ஆண்டு துபாயில் நடைபெற்ற மாநாட்டுக்குப் பிறகு, இவ்வாண்டு அபு தாபியில் நடைபெறும் இந்த மாநாட்டில், "நம்பிக்கைக் கொள்வோருக்கு அனைத்தும் சாத்தியமே" என்ற விவிலிய வார்த்தைகள் மையக் கருத்தாக அமையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


6. இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்த எகிப்தின் புதிய அரசு எந்த முயற்சிக்கு காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தலைவர் எதிர்ப்பு

நவ.07,2012. எகிப்தில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் ஒரு சேர வாழ்வதால், எகிப்து அரசு இஸ்லாமிய சட்டங்களை நாட்டில் நடைமுறைப்படுத்துவது நாட்டை பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் புதியத் தலைவர் இரண்டாம் Anba Tawadros கூறினார்.
இஞ்ஞாயிறன்று காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைமைப் பொறுப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட இரண்டாம் Anba Tawadros பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த முதல் பேட்டியில் இவ்வாறு கூறினார்.
இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்த எகிப்தின் புதிய அரசு எடுக்கும் எந்த முயற்சியையும் தான் எதிர்க்கப்போவாதாக முதுபெரும் தலைவர் தெரிவித்தார்.
முதுபெரும் தலைவரின் கருத்துக்கு ஆதரவாகவும், அதை எதிர்த்தும் இஸ்லாமிய குழுக்கள் தங்கள் கருத்துக்களைத் தெவித்து வருவதாக, ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


7. நவம்பர் 6 - போரினாலும், வன்முறை மோதல்களாலும் இயற்கை வளங்கள் சீரழிவதை எதிர்க்கும் உலக நாள்

நவ.07,2012. தொடர்ந்து வளர்க்கக்கூடிய  முன்னேற்றங்களை போரும், ஏனைய வன்முறை மோதல்களும் குலைக்கின்றன என்று ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
போரினாலும், வன்முறை மோதல்களாலும் இயற்கை வளங்கள் சீரழிவதை எதிர்க்கும் உலக நாள், நவம்பர் 6, இச்செவ்வாயன்று கொண்டாடப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கும் இயற்கை வளங்களைப் பகிர்ந்து கொள்ள தடைகள் எழும்போது, வன்முறைகளும், போர்களும் உருவாகின்றன என்பதை ஐ.நா.பொதுச்செயலர் தெளிவுபடுத்தினார்.
1990ம்  ஆண்டு முதல் குறைந்தது 18 முறை, இயற்கை வளங்களின் பகிர்வை மையப்படுத்தி மோதல்கள் எழுந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பான் கி மூன், வன்முறைகள் களையப்படுவதற்கு  நீதியான பகிர்தல் அவசியம் என்பதை எடுத்துக் கூறினார்.
இயற்கை வழங்கும் மரம், வைரம், எண்ணெய் போன்ற விலையுயர்ந்த வளங்களாக  இருந்தாலும், வளமிக்க நிலம், நீர் போன்று தொடர்ந்து நலிந்து வரும் வளங்களாக இருந்தாலும் இவற்றின் பகிர்வில் எழும் பிரச்சனைகளே கடந்த 60 ஆண்டுகள் போர்களைத் தூண்டியுள்ளன என்று ஐ.நா.அறிக்கை ஒன்று கூறுகிறது.


8. உலகெங்கும் இணையதளத்தின் வசதிகள் பெருகி வந்தாலும், digital divide என்ற வேறுபாடுகள் கூடிவருகின்றன

நவ.07,2012. நலத்துறை, வேளாண்மை, தொழில்துறை, என்ற பலத் துறைகளிலும், பேரிடர் களைதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற காரணங்களுக்காகவும் இணையதளம் அதிக அளவில் பயன்படுகிறது என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இணையதள ஆட்சி Internet Governance Forum (IGF), என்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு Azerbaijan நாட்டின் Baku நகரில் இப்புதனன்று ஆரம்பமானது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஐ.நா. உயர் அதிகாரி Wu Hongbo, உலகெங்கும் இணையதளத்தின் வசதிகள் பெருகி வந்தாலும், இன்னும் digital divide என்ற வேறுபாடுகள் உலகில் கூடிவருவதையும் சுட்டிக்காட்டினார்.
2011ம்  ஆண்டில் உலகெங்கும் 230 கோடி மக்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று கூறிய Hongbo, வளரும் நாடுகளில் இணையதள பயன்பாடு இன்னும் பெருமளவில் குறைந்தே உள்ளது என்ற குறைபாட்டையும் சுட்டிக்காட்டினார்.
ஒரு வாரம் நடைபெறும் இக்கருத்தரங்கில் மனித முன்னேற்றமும் இணையதள பயன்பாடும் என்ற தலைப்பில் கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன.
 

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...