Wednesday, 28 November 2012

Catholic News in Tamil - 28/11/12


1. கத்தோலிக்கக் கண்ணோட்டத்துடன் புலம்பெயர்தல் பிரச்சனையை நாம் சந்திக்கவேண்டும் - வத்திக்கான் உயர் அதிகாரி

2. பாலஸ்தீனாவைத் தனி நாடாக உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதரவு தரவேண்டும் -  இந்திய ஆயர்கள் வேண்டுகோள்

3. கர்தினால் Angelo Dalla Costaவுக்கு "நாடுகளிடையே வாழும் நல்லோர்" விருது

4. இறைவன் வழங்கியுள்ள இயற்கை சக்திகளை அறிவுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும் கொரியா, ஜப்பான் ஆயர்கள்

5. கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் அகில உலகக் கருத்தரங்கு

6. "பெண்களின் வறுமை: நம்மை எழுப்பிவிடும் ஓர் அழைப்பு" இலண்டன் மாநகரில் கருத்தரங்கு

7. புதிய வழிபாட்டு ஆண்டையொட்டி, 5000 ஓவியங்கள் அடங்கிய இணையதளம்

8. நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இளம்பிள்ளைவாதம் ஒரு கொள்ளை நோயாக உள்ளது

------------------------------------------------------------------------------------------------------

1. கத்தோலிக்கக் கண்ணோட்டத்துடன் புலம்பெயர்தல் பிரச்சனையை நாம் சந்திக்கவேண்டும் - வத்திக்கான் உயர் அதிகாரி

நவ.28,2012. நாடுவிட்டு நாடு செல்லும் பாரம்பரியம் கத்தோலிக்கத் திருஅவையின் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளது என்று வத்திக்கான் உயர் அதிகாரியான கர்தினால் Antonio Maria Veglio கூறினார்.
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தோர் பணியில் ஈடுபட்டிருக்கும் அமைப்புக்களின் கூட்டம் ஒன்று நவம்பர் 27, இச்செவ்வாய் முதல் வியாழன் முடிய உரோம் நகரில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தின் துவக்கவிழாவில் புலம்பெயர்ந்தோர் பணி திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Veglio உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.
வரலாற்றில், கிறிஸ்தவர்கள் நாடு விட்டு நாடு சென்ற வேளையில், நற்செய்தியையும் தங்களுடன் எடுத்துச் சென்றதால், கிறிஸ்தவ மறை உலகெங்கும் பரவியது என்பதைச் சுட்டிக்காட்டிய கர்தினால் Veglio, தற்காலச் சூழலில் நாடுகளுக்கிடையே உள்ள எல்லைக் கோடுகள் பல்வேறு காரணங்களால் மாற்றப்பட்டு, அல்லது அழிக்கப்பட்டு வருவதையும் நாம் காண முடிகிறது என்று கூறினார்.
நாடுகளுக்கிடையே அமைதியற்ற நிலை அதிகரித்து வருவதால், புலம்பெயர்தல் என்பதும் பெரும் பிரச்சனையாக வளர்ந்துள்ளது என்று கூறிய கர்தினால் Veglio, கத்தோலிக்கக் கண்ணோட்டத்துடன் இப்பிரச்சனையை நாம் சந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
CCEE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள இக்கூட்டத்தில் 25 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று வருகின்றனர்.


2. பாலஸ்தீனாவைத் தனி நாடாக உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதரவு தரவேண்டும் -  இந்திய ஆயர்கள் வேண்டுகோள்

நவ.28,2012. பாலஸ்தீனாவை ஒரு தனி நாடாக உருவாக்குவதற்கு இந்திய அரசு ஆதரவு தரவேண்டுமென்று இந்திய ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பாலஸ்தீனாவைத் தனியொரு அரபு அரசாக உருவாக்கும் முயற்சிகள் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.பொது அவையில் இவ்வியாழனன்று மேற்கொள்ளப்படும் சூழலில், இந்த முயற்சியை இந்திய அரசு ஆதரிக்கவேண்டும் என்று இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்றப் பணிக்குழுவின் சார்பில் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் Salman Khurshid அவர்களுக்கு மடல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
பாலஸ்தீனா தனியொரு நாடாக உருவாவது மட்டுமல்லாமல், அந்நாட்டில் இஸ்ரேல் இராணுவம் அத்துமீறி ஆக்கிரமித்திருக்கும் நிலப்பகுதிகளும் பாலஸ்தீன அரசிடம் ஒப்புவிக்கப்படவேண்டும் என்றும் இந்திய ஆயர்கள் இம்மடல் வழியே வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அமெரிக்க அரசு இஸ்ரேல் அரசின் பக்கம் அதிகம் சாய்ந்திருப்பது, பாலஸ்தீனா தனி நாடாக ஏற்றுக்கொள்ளப்படும் முயற்சிகளுக்குப் பெரியதொரு தடையாக உள்ளதென்று ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
1948ம்  ஆண்டிலிருந்து நவம்பர் 29ம் தேதியை, பாலஸ்தீனாவுக்கு ஆதரவு திரட்டும் அகில உலக நாளாக ஐ.நா. கடைப்பிடித்து வருகிறது.


3. கர்தினால் Angelo Dalla Costaவுக்கு "நாடுகளிடையே வாழும் நல்லோர்" விருது

நவ.28,2012. 1931ம்  ஆண்டிலிருந்து 1961ம் ஆண்டு முடிய இத்தாலியின் Florence உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் Angelo Elia Dalla Costa, அவர்களுக்கு "நாடுகளிடையே வாழும் நல்லோர்" (Righteous Among the Nations) என்ற உயரிய விருதை Yad Vashem என்ற யூத அமைப்பு ஒன்று இத்திங்களன்று வழங்கியது.
இரண்டாம் உலகப் போரின்போது, வன்முறைகளுக்கு உள்ளான யூதர்களை Florence நகரில் கர்தினால் Dalla Costa அடைக்கலம் கொடுத்து காத்துவந்ததால் இவ்விருது அவருக்கு வழங்கப்படுகிறது என்று  YV அமைப்பு வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
பேராயரான கர்தினால் Dalla Costa, யூதர்களைக் காக்கும் பணியில் தன் மறைமாவட்டக் குருக்களையும் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார் என்றும், தனது செயலராகப் பணியாற்றிய அருள்தந்தையை இப்பணியின் ஒருங்கிணைப்பாளராக ஏற்படுத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது யூதர்களுக்கு எதிராக எழுந்த வன்முறைகளிலிருந்து அக்குலத்தவரைக் காத்தவர்களுக்கு "நாடுகளிடையே வாழும் நல்லோர்" என்ற விருது 1953ம்  ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வந்தள்ளது. இதுவரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 24000க்கும் அதிகமானோருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 530 பேர் இத்தாலியர்கள்.


4. இறைவன் வழங்கியுள்ள இயற்கை சக்திகளை அறிவுள்ள வகையில் பயன்படுத்தவேண்டும் கொரியா, ஜப்பான் ஆயர்கள்

நவ.28,2012. மனிதர்களுக்கு இயற்கையில் இறைவன் வழங்கியுள்ள சூரிய ஒளி, காற்று ஆகிய சக்திகளை அறிவுள்ள வகையில் பயன்படுத்துவதால், அணுசக்தியை நம்பி வாழும் ஆபத்தான நிலையிலிருந்து விடுதலை பெறலாம் என்று கொரியா மற்றும் ஜப்பான் ஆயர்கள் கூறியுள்ளனர்.
கொரியா மற்றும் ஜப்பான் ஆயர்கள் அண்மையில் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் 'அணுசக்தியைப் படிப்படியாக அகற்றுவது' என்ற தலைப்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இவ்வாண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட 40க்கும் மேற்பட்ட ஆயர்களும் குருக்களும், தென் கொரியாவின் Gyeongju நகரில் இயங்கி வரும் அணுசக்தி நிலையத்தைச் சென்று பார்வையிட்டனர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இவ்விரு நாடுகளின் ஆயர்களும் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜப்பான் நாட்டில் ஒன்று கூடுவதாகத் தெரிவித்துள்ளனர்.


5. கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் அகில உலகக் கருத்தரங்கு

நவ.28,2012. மறைபரப்புப் பணி, திருஅவை, இறையியல் ஆகிய முப்பரிமாணங்கள் அடங்கிய ஓர் அகில உலகக் கருத்தரங்கு உரோம் நகரில் உள்ள கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் இப்புதனன்று ஆரம்பமானது.
இப்பல்கலைக் கழகத்தில் 1931ம்  ஆண்டு துவக்கப்பட்ட மறைபரப்புப் பணியியல் (Missiology) என்ற பிரிவின் 80ம் ஆண்டு நிறைவையும், இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆரம்பமானதன் 50ம்  ஆண்டு நிறைவையும் சிறப்பிக்கும் விதமாக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்புதன் முதல் வெள்ளி முடிய நடைபெறும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில் பல நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் இறையியல் வல்லுனர்கள் பங்கேற்று வருகின்றனர்.
விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடப் பேராயத்தின் ஆலோசகராகப் பணியாற்றிய கர்தினால் Karl Josef Becker என்ற இயேசு சபை பேராசிரியர் இக்கருத்தரங்கின் இறுதிநாள் அமர்வில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


6. "பெண்களின் வறுமை: நம்மை எழுப்பிவிடும் ஓர் அழைப்பு" இலண்டன் மாநகரில் கருத்தரங்கு

நவ.28,2012. "பெண்களின் வறுமை: நம்மை எழுப்பிவிடும் ஓர் அழைப்பு" என்ற கருத்தில் டிசம்பர் 1ம் தேதி, வருகிற சனிக்கிழமையன்று இலண்டன் மாநகரில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 25, கடந்த ஞாயிறுமுதல் உலகின் பல நாடுகளிலும் துவக்கப்பட்டுள்ள "ஏன் வறுமை" மற்றும் "வறுமையைப் பழங்கால வரலாறாக்குவோம்" என்ற மையக் கருத்துடன் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முயற்சிகளின் ஓர் அங்கமாக, பிரித்தானிய கத்தோலிக்கப் பெண்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஒரு நாள் கருத்தரங்கில், வறுமை என்ற சமுதாய அவலத்தால் அதிக அளவு பாதிக்கப்படுவது பெண்களே என்ற கருத்து வலியுறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
வறுமையிலிருந்து பெண்கள் விடுதலை பெற, ஒவ்வொரு நாட்டிலும் பெண்கள் சுயமாக வருமானம் ஈட்டும் முறைகளை அறிமுகப்படுத்தும் முயற்சிகளையும் இவ்வமைப்பினர் மேற்கொள்வர் என்று இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் Amy Daughton கூறினார்.


7. புதிய வழிபாட்டு ஆண்டையொட்டி, 5000 ஓவியங்கள் அடங்கிய இணையதளம்

நவ.28,2012. வருகிற ஞாயிறன்று ஆரம்பமாகும் புதிய வழிபாட்டு ஆண்டையொட்டி, The new Radiant Light என்ற ஒரு புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
Elizabeth Wang என்ற ஒரு கத்தோலிக்க ஓவியர் வரைந்துள்ள 5000 ஓவியங்கள் அடங்கிய இவ்விணையதளத்தில், மூவொரு இறைவன், கிறிஸ்துவின் வாழ்வு, செபமாலை, என்பன போன்ற கத்தோலிக்கத் திருமறையின் பல்வேறு கருத்துக்களில் ஓவியங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த ஓவியங்களை யாரும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு கொண்டாடப்படும் நம்பிக்கை ஆண்டின் ஒரு வெளிப்பாடாக அமைந்துள்ள கலைநயம் மிக்க இந்த ஓவியங்களைத் தீட்டியுள்ள Elizabeth Wang, கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியங்கள் தீட்டி, பல கண்காட்சிகளை நடத்தியுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஓவியங்களைக் காண விரும்புவோர் www.radiantlight.org.uk என்ற இணையதளத்தை காண்க.


8. நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இளம்பிள்ளைவாதம் ஒரு கொள்ளை நோயாக உள்ளது

நவ.28,2012. நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் இளம்பிள்ளைவாதம் எனப்படும் போலியோ நோய்கெதிரான தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என்று நிரூபித்தால் மட்டுமே, பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என உலகளவில் போலியோ நோயை ஒழிக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த மூன்று நாடுகளில் இளம்பிள்ளைவாதம் ஒரு கொள்ளை நோயாக உள்ளது என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
அனைத்துலக அளவில் போலியோ ஒழிப்பைக் கண்காணிக்கும் Global Polio Eradication Initiative என்ற அமைப்பு, இம்மூன்று நாடுகளில் இருந்தும் யாராவது ஒருவர் பயணம் மேற்கொண்டால், அதன் மூலம் போலியோ கிருமி ஏற்றுமதியாகும் ஆபத்து உள்ளது என்று தெரிவித்துள்ளது.
இனி, பாகிஸ்தான், நைஜீரியா மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் எல்லையை கடக்கும் முன்னர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான ஆதாரத்தைக் காண்பிக்க வேண்டும் என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
உலகின் மற்ற அனைத்துப் பகுதிகளிலும் இளம்பிள்ளைவாத நோய் ஏறத்தாழ ஒழிக்கப்பட்டுவிட்டது.


No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...