Tuesday 13 November 2012

Catholic News in Tamil - 12/11/12

1. இவ்வுலகைக் காப்பாற்ற முதியோரின் செபங்கள் உதவமுடியும் என்றார் திருத்தந்தை

2. திருத்தந்தை : எதையும் பிறருக்குக் கொடுக்க முடியாத அளவுக்கு எவரும் ஏழையில்லை

3. கேரளாவில் இளையோர் ஆண்டு கொண்டட்டாங்கள் துவக்கப்பட்டுள்ளன.

4. ஷில்லாங் திருநற்கருணை ஊர்வலத்தில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்

5. கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவக் கல்லறைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

6. நேரு நினைவுச் சொற்பொழிவை ஆற்றும் Aung San Suu Kyi

7. பாகிஸ்தானில் அருள்சகோதரிகள் நடத்திவரும் பள்ளியில் இஸ்லாமியப் பெண்களே முற்றிலும் பயில்கின்றனர்

8. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் சூரிய ஒளி அடுப்பு கண்டறிந்து சாதனை

------------------------------------------------------------------------------------------------------

1.   இவ்வுலகைக் காப்பாற்ற முதியோரின் செபங்கள் உதவமுடியும் என்றார் திருத்தந்தை

நவ.12,2012. ஒவ்வொரு வயதிலும் இறைவன் மக்களுக்கு தன் கொடைகளை வழங்குகிறார் என்பதை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு முதியோரும் தன் கவலை எனும் சிறைக்குள் தன்னை முடக்கிக்கொள்ளாமல் வாழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடக் கற்றுக்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
உரோம் நகரில் சான் எஜிதியோ கத்தோலிக்க பிறரன்பு குழு நடத்தும் முதியோர் இல்லத்திற்கு இத்திங்கள் சென்று அவர்களோடு உரையாடிய திருத்தந்தை, தானும் முதியோர் என்ற முறையில் அவர்களின் துன்பங்களையும் பிரச்சனைகளையும் தெரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
விவிலியத்தில் முதுமை என்ப்து இறைவனின் ஆசீராக குறிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இலாபக் கண்ணோட்டத்தோடு பார்க்கும் இன்றைய உலகில் முதியோர்கள் பலனற்றவர்களாக ஒதுக்கப்படுவது குறித்தக் கவலையையும் வெளியிட்டார்.
முதியோர் எவ்விதம் நடத்தப்படுகிறார்கள் என்பதை வைத்தே எந்த ஒரு கலாச்சாரமும் கணிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துரைத்து, முதியோரை வரவேற்பவர்கள் வாழ்வையே வரவேற்கிறார்கள் என மேலும் இயம்பினார் திருத்தந்தை.
முதியோர்கள் தங்களிடம் கொண்டிருக்கும் முக்கிய செலவங்களுள் ஒன்று செபம் என்பதையும் வலியுறுத்திய திருத்தந்தை, இறைவனிடம் பரிந்துரைப்பவர்களாகச் செயல்பட்டு இவ்வுலகைக் காப்பாற்ற முதியோர்கள் உதவமுடியும் என மேலும் கூறினார்.


2.  திருத்தந்தை : எதையும் பிறருக்குக் கொடுக்க முடியாத அளவுக்கு எவரும் ஏழையில்லை

நவ.12,2012. தன்னால் எதையும் பிறருக்குக் கொடுக்கமுடியாத அளவுக்கு எவரும் அவ்வளவு பெரிய ஏழை அல்ல என எடுத்துரைத்து, விசுவசத்திற்கும் பிறரன்பிற்கும் இடையே விளங்கும் ஒன்றிப்பைக்குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் விளக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான 'எழைக் கைம்பெண்ணின் காணிக்கை' பற்றி தன் மூவேளை செப உரையில் எடுத்தியம்பியத் திருத்தந்தை, விசுவாசத்தின் விளைவாக வரும் தாராளமனப்பானமை, இறைவார்த்தையில் தன் முழு நம்பிக்கையைக் கொண்டிருக்கும் மக்களின் உள்மன செயல்பாடு எனவும் தெரிவித்தார்.
தன்னிடம் இருந்த இரண்டு காசுகளையும் இறைவனுக்கே காணிக்கையாக வழங்கிய கைம்பெண்ணும், இறைவாக்கினர் எலியாவுக்கு உதவிய கைம்பெண்ணும், விசுவாசத்திற்கும் பிறரன்பிற்கும் இடையிலும், மற்றும் இறையன்பிற்கும் அயலார் மீதான அன்பிற்கும் இடையிலும் விளங்கும் ஒன்றிப்பின் அடையாளமாக நிற்கின்றனர் எனவும் கூறினார் திருத்தந்தை.
ஏழைக்கைம்பெண் வழங்கிய இரு சிறு காசுகளும் பணக்காரர்கள் வழங்கிய மிகுதியான செல்வங்களை விட உயர்ந்தது  என இயேசு கூறியதை எடுத்தியம்பியத் திருத்தந்தை, எந்த ஓர் இரக்கச்செயலும் அர்த்தமின்றி இருக்காது, எந்த ஒரு கருணை நடவடிக்கையும் பலனின்றிப்போகாது என உரைத்தார்.


3.  கேரளாவில் இளையோர் ஆண்டு கொண்டட்டாங்கள் துவக்கப்பட்டுள்ளன.

நவ.12,2012. திரு அவையில் துவக்கப்பட்டுள்ள 'நம்பிக்கை ஆண்டு' கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக கேரள கத்தோலிக்க இளையோருக்கென ஓராண்டு திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளது கேரள ஆயர்களின் இளைஞர்களுக்கான அவை.
இளைஞர் ஆண்டு கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்த ஆயர் Joseph Pandarasserril உரைக்கையில், கிறிஸ்தவத்திலும் விசுவாசத்திலும் தங்கள் வாழ்க்கைமுறையை அமைத்துள்ள இளையோர், சமூகத்தை மேம்படுத்தவும், தாங்கள் வாழும் சமூகத்தில் விசுவாசத்தின் தூதுவர்களாகச் செயல்படவும்  மாறவேண்டும் என அழைப்புவிடுத்தார்.
கேரள ஆயர்கள் துவக்கியுள்ள இளையோர் ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பங்குதளங்களில் பாடவகுப்புகள், இளைய தலைவர்களின் கூட்டம், கருத்தரங்குகள் என பல்வேறு திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.


4.  ஷில்லாங் திருநற்கருணை ஊர்வலத்தில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்

நவ.12,2012. மெகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் இடம்பெற்ற திருநற்கருணை மாநாட்டு ஊர்வலத்தில் வடகிழக்கு இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் கலந்துகொண்டனர்.
ஷில்லாங் பேராயர் தோமினிக் ஜாலாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த திருநற்கருணை ஊர்வலத்தில் எண்ணற்ற சுற்றுலாப்பயணிகளும் கலந்துகொண்டனர்.
புதுநன்மை வாங்க தங்களைத் தயாரித்து வந்துள்ள சிறுவர்களும் சிறுமிகளும் விண்ணகத் தூதர்கள் போல் வெள்ளை உடை அணிந்து இவ்வூர்வலத்தின்போது நடனமாடிக் கொண்டேச் சென்றனர்.
மெகாலய முதல் அமைச்சர் முகுல் சங்மா, மற்றும் மாநில ஆளுனர் இரஞ்சித் சேகர் மூசாஹரி ஆகியோர் இக்கொண்டாட்டங்களில் விருந்தினர்களாக்க் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


5. கந்தமால் மாவட்டத்தில் கிறிஸ்தவக் கல்லறைகள் சேதமாக்கப்பட்டுள்ளன.

நவ.12,2012. இந்தியாவின் ஒரிசா மாநில கந்தமால் மாவட்டத்தின் மிடியாக்கியா கிராம கிறிஸ்தவ கல்லறைத்தோட்டத்தில் புகுந்த அடையாளம் தெரியாத சிலர், அங்குள்ள சிலுவைகள் அனைத்தையும் அகற்றியுள்ளதாக அப்பகுதியிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அனைத்துக் கல்லறைகளின் சிலுவைகளும் அகற்றப்பட்டதோடு, அக்கல்லறைத் தோட்டத்தில் இருந்த மரங்களையும் செடிகொடிகளையும் அவர்கள் சேதமாக்கிச் சென்றுள்ளாதாக மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபை குரு கௌரங்கோ நாயக் தெரிவித்தார்.
கவல்துறையிடம் இது குறித்த புகார் முன்வைக்கப்பட்டுள்ளபோதிலும், இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.


6. நேரு நினைவுச் சொற்பொழிவை ஆற்றும் Aung San Suu Kyi

நவ.12,2012. மியான்மார் அரசியல் தலைவரான Aung San Suu Kyi மிகவும் பணிவான ஒரு பெண் என்றும், கற்பனைத் திறன்மிக்க எழுத்தாற்றல் பெற்றவர் என்றும் அவரது இளமைக்காலத் தோழியான Malavika Karlekar கூறினார்.
நவம்பர் 13 இச்செவ்வாய் முதல் வருகிற ஞாயிறு முடிய இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் Suu Kyiயைக் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய Karlekar இவ்வாறு கூறினார்.
இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் Sonia Gandhi விடுத்துள்ள அழைப்பின் பேரில் இந்தியாவில் ஆறுநாட்கள் பயணம் மேற்கொள்ளும் Suu Kyi, நவம்பர் 14, இப்புதனன்று கொண்டாடப்படும் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளன்று, நேரு நினைவுச் சொற்பொழிவை ஆற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக அமைதிக்கான நொபெல் விருதினைப் பெற்றுள்ள Suu Kyiன் இந்தியப் பயணத்தின்போது, டில்லியில் அவர் பயின்ற Lady Shri Ram கல்லூரி நிர்வாகத்தினரால் கௌரவிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் அவர் பயில்வதற்கு முன், டில்லியில் உள்ள இயேசு மரியா கான்வென்ட் பள்ளியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


7. பாகிஸ்தானில் அருள்சகோதரிகள் நடத்திவரும் பள்ளியில் இஸ்லாமியப் பெண்களே முற்றிலும் பயில்கின்றனர்

நவ.12,2012. பாகிஸ்தானில் தாங்கள் நடத்திவரும் பள்ளியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண்களே முற்றிலும் பயில்கின்றனர் என்று பாகிஸ்தானின் Swat பள்ளத்தாக்கில் பணிபுரியும் அருள்சகோதரி ஒருவர் கூறினார்.
பெண்களின் கல்விக்காகப் போராடியதால் தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, தற்போது இங்கிலாந்தில் சிகிச்சை பெற்றுவரும் பாகிஸ்தான் சிறுமி Malala Yousafzaiக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாக, நவம்பர் 10ம் தேதி, கடந்த சனிக்கிழமையை ஐ.நா. போதுச்செயலர் பான் கி மூன் அறிவித்துள்ளதையொட்டி, Fides செய்திக்குப் பேட்டியளித்த அருள்சகோதரி Riffat Sadiq, இவ்வாறு கூறினார்.
பெண்கள் கல்விக்கு எதிராக தலிபான் அடிப்படைவாதக் குழுக்கள் 400க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூட வைத்துள்ளனர், மற்றும் 150 பள்ளிகளை இடித்துள்ளனர்.
காணிக்கை மாதா துறவுச்சபையைச் சேர்ந்த அருள்சகோதரிகள் Swat பள்ளத்தாக்கில் 1962ம்  ஆண்டு முதல் நடத்திவந்த பள்ளியை, 2007ம் ஆண்டு தாலிபான் வற்புறுத்தலால் மூடவேண்டியிருந்தது. 2009ம்  ஆண்டு இப்பள்ளி தாலிபான் கும்பலால் இடிக்கப்பட்டது.
இவ்வாண்டு மீண்டும் இப்பள்ளியைச் சீரமைத்து, வகுப்புக்களைத் துவங்கியுள்ள அருள்சகோதரிகள், இதுவரை தங்கள் பள்ளியில் 200க்கும் அதிகமான பெண்கள் சேர்ந்துள்ளனர் என்றும், உள்ளூர் மக்கள் தங்கள் கல்விப் பணியால் பெரிதும் மகிழ்வடைந்துள்ளனர் என்றும் Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்  கூறியுள்ளனர்.


8. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்கள் சூரிய ஒளி அடுப்பு கண்டறிந்து சாதனை

நவ.12,2012. தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் மின்வெட்டை சமாளிக்க, தேவகோட்டை மாணவர்கள், "சூரிய ஒளி அடுப்பை' கண்டுபிடித்து சாதனை படைத்து உள்ளனர்.
ஒவ்வொரு நாளும் 16 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படும் சூழலில், இப்பிரச்சனைக்குத் தீர்வுகாண, தேவகோட்டை லோட்டஸ் பள்ளி மாணவர்கள், "சூரிய ஒளி சமைப்பான்' என்ற பெயரில், சூரிய ஒளி அடுப்பை கண்டறிந்து உள்ளனர்.
மரப் பெட்டிக்குள் கறுப்பு வண்ணமிட்ட துத்தநாகத் தகட்டை வைத்துள்ளனர். அதில், ஒளி ஊடுருவும் வகையில் கண்ணாடித் தட்டும், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், முகம் பார்க்கும் கண்ணாடியை மேலேயும் இணைத்துள்ளனர்.
முதற்கட்டமாக, மாணவர்கள் இச்சூரிய ஒளி அடுப்பில் காய்கறி, பருப்பை வேகவைத்து காண்பித்தனர். இம்மாதம் 18ம் தேதி, மானாமதுரையில், தேசிய இளம் அறிவியலாளர்கள் மாநாடு நடைபெறும்போது, மாணவர்களின் கண்டுபிடிப்பு மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என கூறப்பட்டது.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...