Friday, 23 November 2012

Catholic News in Tamil - 23/11/12


1. திருத்தந்தை : துன்பங்களை எதிர்கொள்ளும் கடல்தொழில் செய்வோருடன் திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது

2. லெபனன் அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு

3. நவம்பர் 24ம் நாளன்று ஆறு புதிய கர்தினால்களுக்குத் திருத்தந்தை தலைப்பாகை, மோதிரம்  

4. நன்றியறிதல் நாள் அன்றும் வர்த்தகம் நடைபெறுவது, பேராசையை வளர்க்கும் நமது கலாச்சாரத்தின் ஒரு வெளிப்பாடு - அமெரிக்கக் கர்தினால் Timothy Dolan

5. இனக்கலவரங்களால் அதிக ஆபத்திற்கு உள்ளாவது குழந்தைகளே - ஆப்ரிக்க ஆயர்கள்

6. சிரியாவில் கத்தோலிக்கக் கோவிலைச் சேதப்படுத்திய கும்பலின் மன்னிப்பும் ஒப்புரவும்

7. புனித பூமிக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தமிழ் நாடு அரசு 20,000 ரூபாய் அளிக்கும்

8. Down Syndrome உள்ள குழந்தைகளுக்காகப் போராடும் ஸ்பானிய பிறரன்பு அமைப்பு

9. கூடங்குளம் அணுக்கழிவுகளை புதைக்க கோலாரில் எதிர்ப்பு

10. மத்தியப்பிரதேச மாநிலத்தில் சூரிய ஒளி மூலம் மின்சக்தி பெறும் இரயில் நிலையங்கள்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : துன்பங்களை எதிர்கொள்ளும் கடல்தொழில் செய்வோருடன் திருஅவை ஒருமைப்பாட்டுணர்வு கொண்டுள்ளது

நவ.23,2012. "அநீதியான சூழல்களை" அடிக்கடி எதிர்நோக்கும் கடல்தொழில் செய்வோருக்கும் புதுப்பிக்கப்பட்ட புதிய நற்செய்திப்பணி தேவைப்படுகின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கேட்டுக் கொண்டார்.
தாங்கள் வேலை செய்யும் கப்பல்களையும் படகுகளையும் விட்டுவிட்டு தரைக்கு வருமாறு வலியுறுத்தப்படல், கடல் கொள்ளையர்களால் அச்சுறுத்தப்படல், சட்டத்துக்குப் புறம்பே மீன்பிடிக்கும்போது துன்புறுதல் போன்ற சூழல்களை இத்தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர் என்றும் திருத்தந்தை கூறினார்.
வத்திக்கான் ஆயர்கள் மாமன்ற அரங்கத்தில் இவ்வெள்ளியன்று நிறைவடைந்த, கடல்தொழில் செய்வோருக்குத் திருஅவையின் மேய்ப்புப்பணி குறித்த 5 நாள் 23வது அனைத்துலக கருத்தரங்கில் கலந்து கொண்ட ஏறக்குறைய 400 பேரைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
கப்பலில் வேலை செய்வோர், மீனவர்கள், இன்னும் கடலில் பயணம் செய்வோர் எதிர்நோக்கும் துன்பங்களை மனதில்கொண்டு திருஅவை அவர்களுக்கான மேய்ப்புப்பணிகளில் அதிகக் கவனம் செலுத்துமாறும் திருத்தந்தை கேட்டுக் கொண்டார்.
மீனவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களைச் சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடும்ப மதிப்பீடு பாதுகாக்கப்படல், பணிசெய்யுமிடத்தில் தரமான மற்றும் பாதுகாப்பான நிலை போன்றவற்றை மீனவர்கள் எதிர்நோக்குகிறார்கள், இவர்களோடு திருஅவை உடனிருக்கின்றது என்றும் உறுதியளித்தார்.
இத்தகைய அனைத்துலக கருத்தரங்கு, 30 ஆண்டுகளுக்குப் பின்னர், அதாவது, 1982ம் ஆண்டுக்குப் பின்னர் தற்போதுதான் உரோமையில் நடைபெற்றது. கடல்தொழில் செய்வோருக்குத் திருஅவையின் மேய்ப்புப்பணி குறித்த விதிமுறைகள் முதல்முறையாக 1922ம் ஆண்டு ஆகஸ்ட் 17ம் தேதி திருத்தந்தை 11ம் பத்திநாதரால் வெளியிடப்பட்டது. அதன் 90ம் ஆண்டின் நிறைவாக இப்போதைய கருத்தரங்கு இடம்பெற்றது. இதில் 70 நாடுகளின் ஏறக்குறைய 400 பிரிதிநிதிகள் கலந்து கொண்டனர்.


2. லெபனன் அரசுத்தலைவர், திருத்தந்தை சந்திப்பு

நவ.23,2012. லெபனன் அரசுத்தலைவர் Michel Sleiman இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை 15 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார்.
லெபனன் மாரனைட்ரீதித் தலைவர் பேராயர் Bechara Boutros al-Rahi அவர்களைக் கர்தினாலாக உயர்த்தியிருப்பதற்குத் திருத்தந்தையிடம் நன்றி தெரிவித்தார் அரசுத்தலைவர் Michel Sleiman. இவர், இச்சனியன்று வத்திக்கானில் இடம்பெறும் புதிய கர்தினால்கள் திருநிலைப்பாடு நிகழ்வுக்கு ஏறக்குறைய 500 பேருடன் உரோம் வந்திருக்கிறார். இந்த 500 பேரில்  லெபனன் Hezbollah இசுலாமிய இயக்கத்தினரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


3. நவம்பர் 24ம் நாளன்று ஆறு புதிய கர்தினால்களுக்குத் திருத்தந்தை தலைப்பாகை, மோதிரம்  

நவ.23,2012. இந்தியாவின் சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் பேராயர் Baselios Cleemis Thottunkal உட்பட 6 பேரை இச்சனிக்கிழமையன்று புதிய கர்தினால்களாகத் திருநிலைப்படுத்தவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 11 மணிக்குத் தொடங்கும் Consistory எனப்படும் புதிய கர்தினால்களின் திருநிலைப்பாடு திருவழிபாட்டில், புதிய கர்தினால்களுக்குத் தலைப்பாகை, மோதிரம் ஆகியவற்றை அணிவிப்பதோடு அவரவர்களுக்குரிய ஆலயங்களையும் அறிவிப்பார் திருத்தந்தை.
இப்புதிய கர்தினால்கள் இஞ்ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று திருத்தந்தையோடு சேர்ந்து திருப்பலியும் நிகழ்த்துவார்கள்.
இப்புதிய கர்தினால்களுடன் திருஅவையில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 120 ஆக இருக்கும். பொதுவாக, கர்தினால்கள் திருஅவையின் இளவரசர்கள்என அழைக்கப்படுகின்றனர்.
புதிய கர்தினால்கள் : சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் பேராயர் Baselios Cleemis Thottunkal(53வயது), பிலிப்பீன்சின் மனிலா பேராயர் Luis Antonio Tagle(55 வயது), லெபனன் மாரனைட்ரீதித் தலைவர் பேராயர் Bechara Boutros al-Rahi (72 வயது), நைஜீரியப் பேராயர் John Onaiyekan(68 வயது), கொலம்பியப் பேராயர் Ruben Salazar Gomez (70 வயது), அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர் James Michael Harvey (63 வயது).
53 வயது நிரம்பிய கேரளாவின் புதிய கர்தினால் Baselios Cleemis Thottunkal திருஅவையிலுள்ள இளவயது கர்தினாலாகும்.
புதிய கர்தினால்கள் திருநிலைப்பாடு நிகழ்வுக்குப் பின்னர், திருஅவையில் 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களாக, 62 ஐரோப்பியர்கள்14 வட அமெரிக்கர்கள், 21 தென் அமெரிக்கர்கள், 11 ஆசியர்கள் மற்றும் 11 ஆப்ரிக்கர்கள் இருப்பார்கள்.


4. நன்றியறிதல் நாள் அன்றும் வர்த்தகம் நடைபெறுவது, பேராசையை வளர்க்கும் நமது கலாச்சாரத்தின் ஒரு வெளிப்பாடு - அமெரிக்கக் கர்தினால் Timothy Dolan

நவ.23,2012. நன்றியறிதல் நாள் அன்றும் நமது கடைகள் திறக்கப்பட்டு வர்த்தகம் நடைபெறுவதை நாம் முன்னேற்றம் என்று கூற முடியாது, மாறாக, இது பேராசையை வளர்க்கும் நமது கலாச்சாரத்தின் ஒரு வெளிப்பாடு என்று அமெரிக்கக் கர்தினால்களில் ஒருவரான Timothy Dolan கூறினார்.
நவம்பர் 22, இவ்வியாழனன்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் நன்றியறிதல் நாள் கொண்டாடப்பட்டது. இந்நாளில் குடும்பங்கள் ஒன்றிணைந்து வருவதற்கு ஏற்ற வகையில், இந்நாள் ஒரு விடுமுறையாக கடைபிடிக்கப்படுவது வழக்கம்.
அண்மைய ஆண்டுகளில், இந்நாளிலும் பெரும் அங்காடிகள் திறக்கப்பட்டு, வர்த்தகங்கள் பெருமளவில் நடைபெறும் போக்கைக் குறித்து, அமெரிக்க ஆயர் பேரவையின் தலைவரான கர்தினால் Dolan தன் வருத்தத்தைத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு Sears, Wal-Mart, Target, Kmart, Toys“R”Us, Gap போன்ற பெரும் அங்காடி நிறுவனங்கள் நன்றியறிதல் நாளன்றும் அதற்கடுத்த நாளன்றும் கடைகளைத் திறந்தததால், வழக்கமான நாள்களைக் காட்டிலும், 22 விழுக்காடு அதிகமான வர்த்தகம் இந்நாள்களில் நடந்தன என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
செய்யும் தொழில்களில் இருந்து விலகி, குடும்ப உறவுகளை வளர்ப்பதற்கேன்று நமது முன்னோர் உருவாக்கிய இந்த நல்ல நாளின் அடிப்படை உணர்வுகளை நாம் தொடர்ந்து கடைபிடிக்க இறைவன் நமக்கு உதவவேண்டும் என்று கர்தினால் Dolan New York Post என்ற செய்தித்தாளுக்கு வரைந்த ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


5. இனக்கலவரங்களால் அதிக ஆபத்திற்கு உள்ளாவது குழந்தைகளே - ஆப்ரிக்க ஆயர்கள்

நவ.23,2012. இனக்கலவரங்களால் அதிக ஆபத்திற்கு உள்ளாவது குழந்தைகளே என்றும், அவர்களைப் பாலியல் வன்முறைக்கும், போர் பயிற்சிக்கும் பலவந்தப்படுத்துவது அவர்களது தனிப்பட்ட மாண்புக்கு எதிரானது என்றும் ஆப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
நவம்பர் 20, இச்செவ்வாய் முதல் இவ்வியாழன் முடிய ஆப்ரிக்கக் கண்டத்தில் காரித்தாஸ் அமைப்பு ஆற்றிவரும் பணிகள் குறித்துப் பேச காங்கோ குடியரசின் தலைநகர் கின்ஷாசாவில் கூடியிருந்த ஆப்ரிக்க ஆயர்கள், ஆப்ரிக்காவின் பல்வேறு நாடுகளில், சிறப்பாக, காங்கோ குடியரசில் அப்பாவி மக்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக நிகழும் வன்முறைகளைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
தற்போது நிலவும் குளிர்காலம், பட்டினி, மற்றும் பிற வன்முறைகளால் துன்புறும் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டுமென்று ஆயர்கள் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுக்களின் கட்டுக்கடங்காத வன்முறைகளால் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு தப்பித்து, துயர்துடைப்பு முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர் என்று காரித்தாஸ் இயக்குனர் அருள்தந்தை Oswald Musoni கூறினார்.


6. சிரியாவில் கத்தோலிக்கக் கோவிலைச் சேதப்படுத்திய கும்பலின் மன்னிப்பும் ஒப்புரவும்

நவ.23,2012. மேற்கு சிரியாவில் உள்ள ஹோம்ஸ் மறைமாவட்டத்தைச்  சேர்ந்த Qara எனுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால கத்தோலிக்க கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கோவில் இவ்வாரம் சேதமடைந்தது.
ஆறாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட, Sergius மற்றும் Bacchus என்ற புனிதர்களின் கோவில் இவ்வாரத்தின் துவக்கத்தில், வன்முறை கும்பலால் சேதமடைந்தது. கோவிலைச் சேர்ந்த 20 திரு உருவங்கள் திருடப்பட்டன, மற்றும் 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த 'Madonna del Latte'  என்ற ஓவியம் சேதமாக்கப் பட்டதென்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
இக்கோவில் செதமடைந்ததைத் தொடர்ந்து, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தலைவர் நான்காம் Ignatius Hazim அவர்களும், கிரேக்கக் கத்தோலிக்க முதுபெரும்தலைவர் மூன்றாம் Gregorios Laham அவர்களும் தங்கள் அனைத்து கோவில்களுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டி அரசுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதற்கிடையே, கன்னி மரியா கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட திருநாளான இப்புதனன்று இவ்வன்முறைக் கும்பலைச் சேர்ந்த ஒரு சிலர் கோவிலிலிருந்து திருடப்பட்ட திரு உருவங்களை கோவிலின் கண்காணிப்பாளரான அருள்தந்தை Georges Luis அவர்களிடம் ஒப்படைத்து, மன்னிப்பு வேண்டினர் என்று Fides செய்திக் குறிப்பு கூறுகிறது.
இப்புதனன்று வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் மன்னிப்பு வேண்டி, ஒப்புரவானதை அப்பகுதி மக்கள் ஒரு புதுமை என்று கூறிவருகின்றனர்..


7. புனித பூமிக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தமிழ் நாடு அரசு 20,000 ரூபாய் அளிக்கும்

நவ.23,2012. வருகிற 2013ம் ஆண்டு புனித பூமிக்குப் பயணம் மேற்கொள்ளும் திருப்பயணிகள் ஒவ்வொருவருக்கும் தமிழ் நாடு அரசு 20,000 ரூபாய் அளிக்கும் என்று இவ்வியாழன்று அறிவிக்கப்பட்டது.
வரும் ஆண்டு ஜனவரி முதல் மேமாதம் முடிய பயணம் மேற்கொள்ளும் 500 பயணிகளுக்கு இத்தொகை வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தின் முதல்கட்டமாக, பல்வேறு துறவு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதென UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
தற்போதைய நிலவரப்படி, அடுத்த ஈராண்டுகளுக்கு இத்திட்டத்திற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதென்று கூறப்படுகிறது.
இப்பயணத்தை மேற்கொள்வதில், 70 வயதைத் தாண்டிய, நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், ஒரு குடும்பத்தில் 4 பேர் இப்பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மதங்களின்  புனிதத் தலங்களுக்கு அரசு நிதி உதவிகள் வழங்கும் திட்டமானது, இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தற்போது தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


8. Down Syndrome உள்ள குழந்தைகளுக்காகப் போராடும் ஸ்பானிய பிறரன்பு அமைப்பு

நவ.23,2012. Down Syndrome என்ற நிலையுடன் பிறந்துள்ள குழந்தைகள் இன்னும் மனித சமுதாயத்தில் இயல்பாக இணைக்கப்பட முடியாமல் ஒதுக்கப்படுகின்றனர் என்று ஸ்பானிய பிறரன்பு அமைப்பு ஒன்று கூறியது.
இவ்வாரம் செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்ட அகில உலகக் குழந்தைகள் நாளையடுத்து, Down Syndrome உள்ள குழந்தைகளுக்காகப் பணிபுரியும் Down Spain என்ற அமைப்பு, அகில உலக மனித உரிமைகள் ஒப்பந்தம் 7ல் கூறியுள்ளது இக்குழந்தைகளுக்கும் பொருந்தும் என்று சுட்டிக் காட்டியது.
ஸ்பெயின் நாட்டிலும், இன்னும் உலகில் பல்வேறு நாடுகளிலும் Down Syndrome நிலையுடன் வாழும் குழந்தைகள் மனித சமுதாயத்தில் முழுமையாக இணைக்கப்படும் முயற்சிகளை அரசுகள் மேற்கொள்ளவேண்டும் என்று இவ்வமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அண்மையில் வெளியான ஒரு புள்ளி விவரத்தின்படி, அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும், Down Syndrome உள்ள குழந்தை என்று கருவில் தெரிய வந்தால், 92 விழுக்காட்டினர் கருகலைப்பு செய்துகொள்கின்றனர் என்று கூறப்படுகிறது.


9. கூடங்குளம் அணுக்கழிவுகளை புதைக்க கோலாரில் எதிர்ப்பு

நவ.23,2012. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி துவங்கப்பட்ட பிறகு, அதிலிருந்து வெளியாகும் அணுக்கழிவுகளை, கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில், மூடப்பட்ட தங்கச் சுரங்கங்களில் சேமித்து வைக்கப் போவதாக இந்திய அரசு இப்புதனன்று தெரிவித்திருப்பதற்கு, கோலாரில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இந்திய மத்திய அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்து, இவ்வெள்ளிக்கிழமை (நவம்பர்23) கோலார் தங்கவயல் மக்கள் உரிமை பாதுகாப்பு என்ற அமைப்பினரின் தலைமையில் கோலார் பகுதியில் ஒருநாள் முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அணுக்கழிவுகளை கோலார் சுரங்கங்களில் சேமித்து வைப்பதாகக் கூறும் மத்திய அரசின் முடிவு, கோலார் பகுதிவாழ் மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியிருப்பதாக இவ்வமைப்பின் தலைவர் இராஜேந்திரன் கூறினார்.
இந்தக் கழிவுகள் கோலாரில் கொண்டுவந்து சேமித்து வைக்கப்படுவதன் மூலம் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு மட்டுமல்ல, அங்குள்ள தாவரங்களுக்குக் கூட கடும் பாதிப்புக்கள் ஏற்படுத்தும் என்று தம்மிடம் அறிவியலாளர்கள் தெரிவித்திருப்பதாகவும் இராஜேந்திரன் கூறினார்.
இந்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து, தாங்கள் நீதிமன்றங்களை அணுகப்போவதாகவும் அவர் கூறினார்.


10. மத்தியப்பிரதேச மாநிலத்தில் சூரிய ஒளி மூலம் மின்சக்தி பெறும் இரயில் நிலையங்கள்

நவ.23,2012. மத்தியப்பிரதேச மாநில அரசு, போபால் இரயில்வே பகுதிக்கு உட்பட்ட 5 இரயில்வே நிலையங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சக்தி வழங்க தீர்மானித்துள்ளது. இதன்மூலம், மின்வாரியத்திற்கு தற்போது செலுத்தப்பட்டு வரும் மின்கட்டணம் பெருமளவு குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூரிய ஒளியை பயன்படுத்தி, இரயில்வே நிலையங்களைப் பசுமை நிலையங்களாக மாற்றும் நடவடிக்கைகளில் மத்தியப்பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது என்று, போபால் பகுதி இரயில்வே மேலாளராகப் பொறுப்பேற்றுள்ள ராஜிவ் சவுத்ரி பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
இப்புதிய திட்டத்தின் மூலம், மாதம் ஒன்றுக்கு ரூ. 40 ஆயிரம் என்ற அளவிற்கு மின் வாரியத்திற்கு கட்டப்பட்டு வரும் பணம் மிச்சமாகும் என்றும் ராஜிவ் சவுத்ரி கூறினார்.
மின்சக்தியை மேலும் சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், மேம்படுத்தப்பட்ட மின் இணைப்புக்கள் இந்நிலையங்களில் பெருமளவு பயன்படுத்தப்பட உள்ளதாக அவர் மேலும் கூறினார்.


No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...