1. இந்தியாவின் ஆஜ்மீர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர் நியமனம்
2. பங்களாதேஷ் திருஅவைக் கொண்டாட்டங்களுக்கான திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதி அறிவிப்பு
3. அன்னை திரேசா குறித்த ஒருவார கலைக்கண்காட்சி
4. அரசியல் நடவடிக்கை என்பது ஓர் ஒழுக்க ரீதி சார்ந்த கடமை என்கிறார் லெபனன் பேராயர்
5. அநீதியான முறையில் அப்பாவி ஈராக்கியர்கள் இரத்தம் சிந்துகின்றனர், : பேராயர்.
6. தமிழகத்தில் 20 ஆண்டுகளில் சுருட்டல் ரூ.5000 கோடி
7. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை பாக்கெட்டுகளில் மட்டுமே விற்க உத்தரவு
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. இந்தியாவின் ஆஜ்மீர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர் நியமனம்
நவ.03, 2012. இந்தியாவின் ஆஜ்மீர் மறைமாவட்ட ஆயர் Ignatius Menezes நிர்வாகப் பணிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதைத் தொடர்ந்து, அம்மறைமாவட்டத்தின் புதிய ஆயராக Bareilly மறைமாவட்ட குரு பயஸ் தாமஸ் டி சூசாவை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள அருள்தந்தை டிசூசா, மங்களூர் மறைமாவட்டத்தின் Bantwal எனுமிடத்தில்
1954ம் ஆண்டு பிறந்து 1982ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
உரோம் நகர் உர்பான் பல்கலைக்கழகத்தில் திருச்சபைச் சட்டத்தில் முனைவர்
பட்டமும் பெற்றுள்ளார் புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள அருள்தந்தை டிசூசா.
பத்து பங்குதளங்களைக் கொண்டுள்ள ஆஜ்மீர் மறைமாவட்டத்தின் 9,190 கத்தோலிக்கரிடையே 43 மறைமாவட்ட குருக்கள், 21 துறவு சபை சகோதரர்கள் மற்றும் 402 அருட்சகோதரிகள் பணியாற்றுகின்றனர்.
2. பங்களாதேஷ் திருஅவைக் கொண்டாட்டங்களுக்கான திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதி அறிவிப்பு
நவ.03, 2012. பங்களாதேசின் டாக்கா உயர்மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 125வது ஆண்டுவிழாவில் கலந்துகொள்வதற்கான தன் பிரதிநிதியாக கர்தினால் Cormac Murphy-O’Connorஐ நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பங்களாதேசில்
நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு மற்றும் டாக்கா உயர்மறைமாவட்டம்
உருவாக்கப்பட்டதன் 125வது ஆண்டு ஆகியவைகளை இணைத்து இம்மாதம் 9 மற்றும் 10
தேதிகளில் பங்களாதேஷ் திருஅவை சிறப்பிக்கும் கொண்டாட்டங்களில்
திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்துகொள்கிறார் Westminsterன் முன்னாள் பேராயர் கர்தினால் O’Connor.
பங்களாதேஷ் திருஅவையின் இக்கொண்டாட்டங்களுக்கென திருத்தந்தை வழங்கும் சிறப்புச் செய்தியையும் எடுத்துச்செல்வார் கர்தினால்.
3. அன்னை திரேசா குறித்த ஒருவார கலைக்கண்காட்சி
நவ.03, 2012. அன்னை தெரேசாவைப் பற்றிய ஒருவார கலைக்கண்காட்சி இந்திய தலைநகர் புதுடெல்லியில் துவக்கப்பட்டுள்ளது.
திரப்படங்களைத் திரையிடுவதையும் உள்ளடக்கிய இக்கலைக்கண்காட்சியை இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் நவின் சாவ்லா, ஹங்கேரிய தகவல் மற்றும் கலாச்சார மையத்தில் இவ்வெள்ளியன்று திறந்து வைத்தார்.
ஹங்கேரிய மையத்துடன் இணைந்து இக்கலைக்கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை.
'அன்னை தெரேசா - கருணையை எடுத்துரைத்தவர்' என்ற தலைப்பில் இடம்பெறும் இக்கண்காட்சியில் இடம்பெறும் 35 ஓவியங்களும் அன்னையின் பிறரன்புப் பணிகளை எடுத்துரைப்பவைகளாக உள்ளன.
4. அரசியல் நடவடிக்கை என்பது ஓர் ஒழுக்க ரீதி சார்ந்த கடமை என்கிறார் லெபனன் பேராயர்
நவ.03, 2012.
அரசு நிர்வாகத்திலும் பொதுவாழ்விலும் இலஞ்ச ஊழல் பெருகிக்கிடப்பது மற்றும்
தங்கள் சுயநலக்காரணங்களுக்காக அரசியலைப் பயன்படுத்துவது ஆகியவை குறித்து
தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் லெபனனின் மேரனைட் ரீதி முதுபெரும்
தலைவர் Beshara al-Rahi.
அரசியல் நடவடிக்கை என்பது ஓர் ஒழுக்க ரீதி சார்ந்த கடமை என்பதை வலியுறுத்தியப் பேராயர், அனைத்துக் கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகளைத் துவங்க அரசுத்தலவர் விடுத்துள்ள அழைப்புக் குறித்து தன் மகிழ்ச்சியையும் வெளியிட்டார்.
புதிய கர்தினாலாக திருத்தந்தையால் அண்மையில் அறிவிக்கப்பட்ட பேராயர் Beshara al-Rahi, தங்கள்
சுயநலக்காரணங்களுக்காக பொதுமக்களின் நலனில் அக்கறையின்றி செயல்படும் அரசு
அதிகாரிகள் குறித்து தன் கண்டனத்தையும் வெளியிட்டார்.
நல்ல
பொருளாதார மற்றும் அரசியல் சூழலை உருவாக்க பேச்சுவார்த்தைகள்
மூலமே முடியும் எனவும் எடுத்துரைத்தார் லெபனன் மேரனைட் முதுபெரும்
தலைவர்.
5. அநீதியான முறையில் அப்பாவி ஈராக்கியர்கள் இரத்தம் சிந்துகின்றனர், : பேராயர்.
நவ.03, 2012.
அநீதியான முறையில் அப்பாவி ஈராக்கியர்கள் தங்கள் இரத்தத்தைச் சிந்தி
வந்துள்ளது இறைவன் மீதான விசுவாசத்தைப் புதுப்பிப்பதற்கும் நம் விசுவாசம்
மற்றும் நம்பிக்கையை பலப்படுத்துவதற்கும் இயைந்த முக்கிய தருணம் என்றார்
ஈராக் கல்தேய ரீதி பேராயர் Louis Sako.
இரண்டு
ஆண்டுகளுக்கு முன்னர் பாக்தாத் பேராலயத்தில் 58 அப்பாவி மக்கள்
கொல்லப்பட்டதை நினைகூரும் திருப்பலியில் மறையுரையாற்றிய பேராயர் Sako, மதங்களையும் மனித குலத்தையும் அவமதிக்கும் இத்தகைய வன்முறை நடவடிக்கைகள் வன்மையாக கண்டிக்கப்படவேண்டும் என்றார்.
கிர்குக் நகரில் மட்டும் 2003ம் ஆண்டிலிருந்து 37 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கவலையை வெளியிட்டார் பேராயர்.
மதத்தின் பெயரால் மத வழிபாட்டுத்தலங்களும் மதநம்பிக்கையாளர்களும் தாக்கப்படுவது இறைவனுக்கு எதிரான பாவம் என மேலும் கூறினார் பேராயர் Sako.
6. தமிழகத்தில் 20 ஆண்டுகளில் சுருட்டல் ரூ.5000 கோடி
நவ.03, 2012. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும், 5000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டுத் தொகை, பொதுமக்களிடம் மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், பணத்தை முதலீடு செய்யும் முன், மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்படுமாறும், தமிழகக் காவல்துறை எச்சரித்துள்ளது.
கடந்த
1990களில் இருந்து பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களைத்
தொடர்ந்து ஏமாற்றிவரும் பல்வேறு நிறுவனங்கள் குறித்த உண்மைகள் வெளிவந்துள்ள
போதிலும், அண்மைக்காலங்களிலும்
"ஈமு கோழி பண்ணை" விவகாரங்களில் அப்பாவி விவசாயிகள் பெருமளவில் ஏமாந்தது
குறித்து கவலையை வெளியிடும் காவல்துறையினர், மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டியது முதல் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.
நிதிமோசடி குற்றங்கள் ஒவ்வொன்றாக அம்பலமாகி, ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையிலும், விழிப்புணர்வு இன்னமும் பொதுமக்களைப் போதிய அளவில் சென்றடையவில்லை என கவலை வெளியிடும் பொருளாதார குற்றத்தடுப்பு காவல்துறையினர், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும், ஏறத்தாழ 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி நடந்திருக்கலாம் என, தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
7. அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை பாக்கெட்டுகளில் மட்டுமே விற்க உத்தரவு
நவ.03, 2012. குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், 19 வகையான பொருட்களை, அதன் சுகாதாரம் கெட்டுவிடாமல், தரமான பாக்கெட்டுகளில் தான் இனி விற்பனை செய்யவேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட சில உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப, வெவ்வேறு விதமான பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதால், அளவு வேறுபாடு, சுகாதாரம் போன்ற பிரச்சனைகள் எழுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், இது தொடர்பான சட்ட விதிகளில், கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், பிஸ்கட், ரொட்டி, வெண்ணெய், தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள், காபித்தூள், தேயிலை, சமையல் எண்ணெய், பால்பவுடர், சலவைத்தூள், அரிசி மாவு, கோதுமை, மைதா, ரவை, உப்பு, சோப்புகள், காஸ் நிரம்பிய குளிர்பானங்கள், குடிநீர், சிமென்ட் பைகள், பெயின்ட் உள்ளிட்ட 19 விதமான பொருட்கள், இனிமேல், நிலையான, தரமான பாக்கெட்டுகளில் அடைத்துதான், விற்பனை செய்யவேண்டும் என்ற உத்தரவு, இம்மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.
No comments:
Post a Comment