Friday, 2 November 2012

Catholic News in Tamil - 02/11/12

. நம்பிக்கை ஆண்டு நமக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு அரிய வாய்ப்பு - கர்தினால் Stanislaw Rylko

2. Homs நகரின் மையத்தில் வாழ்ந்துவந்த கடைசி கிறிஸ்தவர் ஒருவர் கொல்லப்பட்டார்

3. Sandy சூறாவளியில் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்களுக்கு கத்தோலிக்க பிறரன்புப்பணி அமைப்பின் 1,00,000 டாலர்கள் நிதி உதவி

4. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், கரிபியன் நாடுகளுக்கும் ஐ.நா.வின் உதவிகள் உறுதி

5. சுயநலக் கலாச்சாரத்தின் விளைவுகளை இந்தியாவின் துறவியரிடையிலும் காண முடிகிறது

6. இறைவனின் புகழைப் பரப்பும் ஒரு கருவியாக என்னைப் படைத்துள்ளார் - கண்பார்வையற்ற இளம்பெண் Beno

7. கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் ஜெர்மனியில் அதிகரித்துள்ளது

8. ஐ.நா.வில் இலங்கை மனித உரிமை நிலை குறித்த விவாதம்

------------------------------------------------------------------------------------------------------

1. நம்பிக்கை ஆண்டு நமக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு அரிய வாய்ப்பு - கர்தினால் Stanislaw Rylko

நவ.02,2012. நடைபெறும் நம்பிக்கை ஆண்டில் நமக்கு முன் நம்பிக்கைக் கதவு திறந்திருப்பது நமக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு அரிய வாய்ப்பு என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இத்தாலியின் ரிமினி எனும் நகரில் இவ்வியாழன்  முதல் வருகிற ஞாயிறு முடிய நடைபெறும் 36வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் அனைவருக்கும் பொதுநிலையினருக்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
மறுமலர்ச்சி என்பது திருஅவையின் வரலாற்றில் தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் ஒரு தொடர் அம்சம், இக்கண்ணோட்டத்தில் தற்போது நாம் கொண்டாடும் நம்பிக்கை ஆண்டும் மற்றொரு மறுமலர்ச்சி முயற்சி என்று புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தாலியில் உள்ள கத்தோலிக்கர்களின் மறுமலர்ச்சிக்கென கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் ஓர் அமைப்பின் 36வது ஆண்டுக் கூட்டம் ரிமினி நகரில் இஞ்ஞாயிறு முடிய நடைபெறுகிறது.


2. Homs நகரின் மையத்தில் வாழ்ந்துவந்த கடைசி கிறிஸ்தவர் ஒருவர் கொல்லப்பட்டார்

நவ.02,2012. சிரியாவின் Homs நகரின் மையத்தில் வாழ்ந்துவந்த கடைசி கிறிஸ்தவர் ஒருவர் கொல்லப்பட்டார் என்றும், அப்பகுதியில் உள்ள இயேசு சபை நிறுவனம் ஒன்று தாக்கப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சிரியாவின் இராணுவத்திற்கும் புரட்சிக் குழுக்களுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக நடைபெற்றுவரும் மோதல்களால் Homs நகரில் வாழ்ந்து வந்த அனைத்து கிறிஸ்தவர்களும் வேற்றிடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
84 வயதான கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவரான Elias Mansour, மாற்றுத் திறனாளியான தன் மகனுக்காக அப்பகுதியிலேயேத் தங்கிவிட்டார் என்று கூறப்படுகிறது.
போராட்டக் குழுவினரோ இராணுவமோ தன்னைத் தாக்க வந்தால், அவர்களிடம், இறைவன் கொடுத்த பத்து கட்டளைகளையும், விவிலிய கூற்றுக்களையும் தான் சொல்லவிருப்பதாக Elias Mansour  கூறியிருந்தார் என்றும் சொல்லப்படுகிறது.
Elias Mansour இப்புதனன்று கொல்லப்பட்டார் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது. இவரது அடக்கச் சடங்கு இவ்வியாழனன்று நடைபெற்றது.
Hamiyeh எனும் இடத்தில் இருந்த இயேசு சபையினரின் இல்லம் ஒன்று இவ்வியாழனன்று தாக்குதல்களுக்கு உள்ளானது என்றும், இத்தாக்குதலில் கட்டிடம் சிறிது பாழடைந்தாலும், உயிர்ச் சேதம் எதுவுமில்லை என்றும் Fides செய்திக் குறிப்பு மேலும் கூறுகிறது.


3. Sandy சூறாவளியில் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்களுக்கு கத்தோலிக்க பிறரன்புப்பணி அமைப்பின் 1,00,000 டாலர்கள் நிதி உதவி

நவ.02,2012. Knights of Columbus எனும் கத்தோலிக்க பிறரன்புப்பணி அமைப்பு Sandy சூறாவளியில் பாதிக்கப்பட்ட அமெரிக்க மக்களுக்கு 1,00,000 டாலர்கள் உடனடி நிதி உதவி செய்துள்ளது.
பேரிடர்கள் நேரத்தில் உதவுவது Knights of Columbusன் பாரம்பரியம் என்று கூறிய இவ்வமைப்பின் தலைவர் Carl Anderson, சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் பணியில் தங்கள் அமைப்பு தற்போது முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
அக்டோபர் 29ம் தேதி அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையைத் தாக்கிய Sandy சூறாவளியில் இதுவரை 80க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்றும், 45 இலட்சம் மக்கள் இன்னும் மின் வசதி இன்றி வாழ்கின்றனர் என்றும் CNA கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியது.


4. அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும், கரிபியன் நாடுகளுக்கும் ஐ.நா.வின் உதவிகள் உறுதி

நவ.02,2012. Sandy சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்குத் தன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவருக்கும், கரிபியன் நாடுகளின் அரசுத் தலைவர்களுக்கும் ஐ.நா.வின் உதவிகள் உண்டு என்ற உறுதியையும் வழங்கியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் எண்ணங்களையும் செபங்களையும் இணைப்பதாகக் கூறிய பான் கி மூன், இயற்கைப் பேரிடர்களின் விளைவுகளைக் குறைக்கும் பாதுகாப்பான வழிகளை அனைத்து நாட்டின் அரசுகளும் தேடவேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளார்.
"ஒரு தலைமுறையில் ஒரு முறையே வரும் சூறாவளி" இதுவென ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டுள்ள Sandy சூறாவளியில் இதுவரை 120க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளையும் வீடுகளையும் இழந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
நியூயார்க் நகரைத் தாக்கிய இச்சூறாவளியால் ஐ.நா.வின் தலைமைச் செயலகமும் பாதிக்கப்பட்டது என்றும், இதுவரை ஐ.நா. வரலாற்றில் இல்லாத வகையில், மூன்று நாட்கள் மூடப்பட்டிருந்த தலைமையகம் மீண்டும் இவ்வியாழனன்று செயல்படத் துவங்கியது என்றும் ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


5. சுயநலக் கலாச்சாரத்தின் விளைவுகளை இந்தியாவின் துறவியரிடையிலும் காண முடிகிறது

நவ.02,2012. சுயநலக் கலாச்சாரத்தின் விளைவுகளை துறவு வாழ்விலும் காண முடிகிறது என்றும், இதனால் இந்தியாவின் துறவியரிடையே அர்ப்பண மனப்பான்மை குறைந்து வருகிறது என்றும் இந்தியத் துறவியரின் கருத்தரங்கில் கூறப்பட்டது.
கடந்த ஞாயிறு முதல் இப்புதன் முடிய ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அனைத்திந்திய துறவியர் கூட்டத்தில், இந்தியாவின் இருபால் துறவியரும் சந்திக்கும் பல்வேறு சவால்கள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஆன்மீகத்தையும் அறிவியல் முன்னேற்றங்களையும் சரியான முறையில் இணைப்பதற்கு தற்போது பயிற்சியில் இருக்கும் துறவியருக்குத் தகுந்த வழிகாட்டுதல் அவசியம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
வெளி உலகிலும், சமுதாயத்திலும் காணப்படும் பல்வேறு பிரிவுச் சுவர்கள் துறவுச் சபைகளிலும் காணப்படுவது வேதனை என்றும், இச்சுவர்களை தகர்த்து, பாலங்கள் கட்டுவது அவசியம் என்றும் கருத்தரங்கின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்தனர்.
இந்தியாவில் 334 துறவியர் சபைகளைச் சார்ந்த 1,25,000 இருபால் துறவியர் பணி புரிகின்றனர். கல்வி நிலையங்கள், மருத்துவ மனைகள், சமுதாய நிறுவனங்கள் மூலம் பணி செய்யும் இருபால் துறவியரில் 822 பேர் தலைமைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


6. இறைவனின் புகழைப் பரப்பும் ஒரு கருவியாக என்னைப் படைத்துள்ளார் - கண்பார்வையற்ற இளம்பெண் Beno

நவ.02,2012. கண்பார்வையற்ற ஒரு பெண்ணாக இறைவன் என்னைப் படைத்ததற்காக நான் அவரைக் குற்றம் சாட்டவில்லை, மாறாக, இறைவனைப் புகழ்வதற்கு எனக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு வாய்ப்பாக இதனைக் கருதுகிறேன் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த Beno என்ற இளம்பெண் கூறியுள்ளார்.
என்னையும், நான் வளர்த்துக் கொண்ட திறமைகளையும் காணும்  அனைவரும் கடவுளைப் புகழ்வதைக் கேட்கும்போது, அவர் புகழைப் பரப்பும் ஒரு கருவியாக என்னைப் படைத்துள்ளார் என்று பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார் கல்லூரி மாணவியான Beno.
22 வயது நிரம்பிய இளம்பெண் Beno, தன் பேச்சுத் திறமையால் 2008ம் ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்துகொள்ளச் சென்ற முதல் இந்திய மாற்றுத் திறனாளி என்ற புகழ்பெற்றவர்.
தற்போது சென்னை லொயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பயின்றுவரும் Beno, பள்ளியிறுதித் தேர்வில் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களில் முதலிடம் பெற்றவர்.
தனது வெற்றியைத் தமிழக அரசு ஏற்க வேண்டும் என்று போராடியதால், இவருக்குப் பின் பள்ளியிறுதித் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தமிழக அரசு பரிசுகளும், கல்வித் தொகையும் வழங்க ஆரம்பித்தது.
இந்திய அரசின் நிர்வாகத் துறையில் IAS பதவியில் பணிபுரிய வேண்டும் என்ற கனவு தனக்கு உள்ளது என்று இளம்பெண் Beno, UCAN செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.


7. கிறிஸ்தவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் ஜெர்மனியில் அதிகரித்துள்ளது

நவ.02,2012. கிறிஸ்தவர்களுக்கு எதிராக எழுந்துள்ள பல மனித உரிமை மீறல்கள் ஜெர்மனியில் அதிகரித்துள்ளது என்று அரசு சாரா அமைப்பு ஒன்று ஐ.நா. மனித உரிமைகள் கழகத்திடம் அறிக்கையொன்று சமர்ப்பித்துள்ளது.
Observatory on Intolerance and Discrimination against Christians என்ற அமைப்பு சமர்ப்பித்துள்ள இவ்வறிக்கையில், கிறிஸ்தவர்கள் ஆறு விதங்களில் சமுதாயப் புறக்கணிப்பை எதிர்கொள்கின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
குழந்தைகள் கல்வி, கருக்கலைப்பு, போன்ற கருத்துக்களில் அரசுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளால் இப்புறக்கணிப்பு அதிகரித்துள்ளது என்று இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களில் வெறுப்பை வெளிப்படுத்தும் வாசகங்களும், படங்களும் சுவர்களில் தோன்றி வருவதும் ஓர் ஆபத்தான போக்கு என்று கூறப்பட்டுள்ளது.
மதச் சுதந்திரத்துக்கு எதிரான இத்தகைய போக்கு 2005ம் ஆண்டிலிருந்து அதிகரித்து வந்துள்ளது என்பதையும் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.


8. ஐ.நா.வில் இலங்கை மனித உரிமை நிலை குறித்த விவாதம்

நவ.02,2012. ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் இவ்வியாழனன்று இலங்கை குறித்த விவாதம் துவக்கப்பட்ட வேளையில், அமைச்சர் மஹிந்த சமரங்க, மனித உரிமைகளை மேம்படுத்த இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்கள் வகுத்தது, போரால் இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றம் செய்தது, வடக்கே மிதி வெடிகளை அப்புறப்படுத்தியது, படிப்பினைகள் ஆணைக்குழுவின் பரிந்துறைகளை அமல்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகள், பெண்கள் மற்றும் சிறார்களின் உரிமைகளை பாதுகாக்க எடுக்கப்படும் முயற்சிகள் போன்ற நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார் அமைச்சர் சமரங்க.
இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் சில சக்திகள் நாட்டைச் சீர் குலைக்க முனைவதாக அவர் குற்றம்சாட்டினார். கடத்தப்பட்டு காணமல் போவோரின் எண்ணிக்கை உயர்வதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்தார்.
இலங்கை அமைச்சரின் உரைக்குப் பிறகு பிற நாட்டுப் பிரதிநிதிகள் பேசினர். வங்கதேசம் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை அரசுக்கு ஆதரவாகப் பேசினாலும், பல மேற்கத்திய நாடுகள் இலங்கை அரிசின் நிலைப்பாட்டை விமர்சித்தன.
இலங்கை அரசின் மீது அதிகாரங்கள் குவிக்கப்படுவது குறித்தும் முன்பு போர் நடந்த இடங்களில் நடக்கும் இராணுவ மயமாக்கல் குறித்தும் தன் கவலையை வெளியிட்ட அமெரிக்கப் பிரதிநிதி, இலங்கை அரசு படிப்பினைக் குழுவின் ஆக்கபூர்வ பரிந்துரைகளை அமல்படுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

Pope prays for global peace and for all victims of religious persecution

  Pope prays for global peace and for all victims of religious persecution Pope Francis calls for peace in conflict zones, solidarity with t...