Tuesday, 6 November 2012

Catholic News in amil - 05/11/12

1. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் புதிய தலைவருக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

2. காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் 118வது தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

3. திருத்தந்தையின் மூவேளை செப உரை

4. மறைபரப்புப் பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவர் ஆப்ரிக்காவில் மேய்ப்புப்பணி பயணம்

5. நீதிக்கான ஏக்கமே ஆசிய மக்களிடம் மிகப்பெரும் ஒன்றாக உள்ளது

6. வெனெசுவேலா நாட்டில் அரசியல் கைதிகள் நடுநிலையுடன் தீர்மானிக்கப்பட வேண்டும் - கர்தினால் Savino

7. அச்சுறுத்தலுக்குப்பின் இந்தோனேசிய கிறிஸ்தவ கோவில் செபவழிபாடு இரத்து

8. புனித பூமியில் உள்ள புனித கல்லறைக் கோவில் நிதி நெருக்கடி காரணமாக மூடப்படும் ஆபத்து

9. தமிழகத்தில் 11.50 இலட்சம் வழக்குகள் நிலுவை,  நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தகவல்

------------------------------------------------------------------------------------------------------

1. காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் புதிய தலைவருக்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி

நவ.05,2012. காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் புதியத் தலைவராக ஆயர் Tawadraus தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு தன் வாழ்த்துக்களையும் செப உறுதியையும் வெளியிட்டு செய்தி அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
முந்தைய காப்டிக் போப் மூன்றாம் Shenouda போல் இவரும் காப்டிக் கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தந்தையாகவும், அனைத்துக் குடிமக்களுடன் இணைந்து புதிய எகிப்தைக் கட்டியெழுப்புபவராகவும், மத்தியக்கிழக்குப் பகுதியின் பொதுநலனுக்காக உழைப்பவராகவும் செயல்படுவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.
காப்டிக் கிறிஸ்தவ சபைக்கும் கத்தோலிக்க திருச்சபைக்கும் இடையேயான நெருங்கிய உறவுக்கு முந்தைய காப்டிக் முதுபெரும் தலைவர் ஆற்றியுள்ள பணிகளை தன் செய்தியில் பாராட்டியுள்ள திருத்தந்தை, இத்தகைய உறவுகள் தொடர்ந்து பலம்பெறும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார்.


2. காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் திருஅவையின் 118வது தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்

நவ.05,2012. எகிப்தில் உள்ள காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் 118வது தலைவராக Behayraவின் ஆயர் Amba Tawadraus இஞ்ஞாயிறன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பொறுப்பில் உள்ளவர்கள் 'அலெக்சாந்திரியாவின் திருத்தந்தை' என்று பொதுவாக அழைக்கப்படுகின்றனர்.
இவ்வாண்டு மார்ச் மாதம் 17ம் தேதி இறையடி சேர்ந்த 'அலெக்சாந்திரியாவின் திருத்தந்தை' மூன்றாம் Shenoudaவின் மறைவிற்குப்பின், இஞ்ஞாயிறன்று கெய்ரோ நகரில் நடைபெற்ற ஒரு தேர்தலில் ஆயர் Tawadraus தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1952ம்  ஆண்டு நவம்பர் 4ம்  தேதி பிறந்த ஆயர் Tawadraus, தனது 60வது பிறந்தநாளன்று காப்டிக் ரீதி திருஅவையின் தலைமைப் பணிக்குத் தெரிவு செய்யப்பட்டார்.
WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் அளித்த மானியத்துடன் மருத்துவத் துறையில் கல்வி பயின்ற Amba Tawadraus, தனது 31வது வயதில் துறவு வாழ்வை மேற்கொண்டு, 34வது வயதில் குருவாகவும், 1997ம் ஆண்டு தனது 45வது வயதில் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஆயர் Tawadraus அவர்களின் தெரிவு கிறிஸ்தவர்கள், மற்றும் இஸ்லாமியர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்று ஊடகங்கள் கூறுகின்றன.
ஆயர் Tawadraus, அலெக்சாந்திரியா, மற்றும் அனைத்து ஆப்ரிக்காவின் காப்டிக் ரீதி திருஅவையின் தலைவராக இம்மாதம் 18ம் தேதி இரண்டாம் Tawadraus என்ற பெயருடன்  பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


3. திருத்தந்தையின் மூவேளை செப உரை

நவ.05,2012. இறைவன் மீதான அன்பும் அடுத்திருப்பவர் மீதான அன்பும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை மற்றும் ஒன்றுக்கொன்று உறவுடையவை என இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
மற்றவர்களுக்காக நாம் நம்மை திறக்கும்போது, கடவுளை அறிவதற்காகவும் நம்மை நாம் திறக்கிறோம் என்று கூறிய திருத்தந்தை, கட்டளைகளுள் எல்லாம் மிகப்பெரியதாக இறைவன் மீதான அன்பையும் அயலார் மீதான அன்பையும் இயேசு சுட்டிக்காட்டியதை இங்கு எடுத்துரைத்தார்.
பெய்து கொண்டிருந்த மழையையும் பொருட்படுத்தாமல் உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த ஏறத்தாழ 50 ஆயிரம் பேருக்கு இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து தன் செய்தியை வழங்கினார் திருத்தந்தை.
எவ்வாறு ஒரு குழந்தை தன் தாய் தந்தையுடனான நல் உறவிலிருந்து அன்புகூரக் கற்றுக்கொள்கின்றதோ, அதுபோல் நாமும் இறைவனுடன் கொள்ளும் ஆழமான உறவிலிருந்து பெறப்பட்ட அன்பெனும் கட்டளையை முற்றிலுமாக நடைமுறைக்குக் கொணரவேண்டியது அவசியம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை.
ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருக்கும் அன்பை, திருப்பலியின்போது இயேசு நமக்கும் வழங்குவதைப் பெற்று அத்திருஉணவால் ஊட்டம்பெற்றவர்களாக, இயேசு நம்மை அன்பு கூர்வதுபோல் நாமும் ஒருவரை ஒருவர் அன்புகூர்கிறாம் என மேலும் கூறினார் திருத்தந்தை.


4. மறைபரப்புப் பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவர் ஆப்ரிக்காவில் மேய்ப்புப்பணி பயணம்

நவ.05,2012. மறைபரப்புப் பணி திருப்பீடப் பேராயத்தின் தலைவர் கர்தினால் Fernando Filoni, நவம்பர் 6, இச்செவ்வாய் முதல், நவம்பர் 10 இச்சனிக்கிழமை முடிய தென்கிழக்கு ஆப்ரிக்காவின் Owerri பகுதியில் மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்காவின் Owerri பகுதியில் 1912ம் ஆண்டு போர்த்துகல் நாட்டின் மறைபரப்புப் பணியாளர்கள் கத்தோலிக்க மறையை விதைத்ததன் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாட கர்தினால் Filoni அங்கு சென்றுள்ளார்.
இச்செவ்வாயன்று Owerriயைச் சென்றடைந்த கர்தினால் Filoni, Imo மாநிலத் தலைவர் Rochas Okorochaவைச் சந்தித்தார். இப்புதனன்று குழந்தைகளுக்கும், இளையோருக்கும் ஒரு சிறப்புத் திருப்பலியை அப்பகுதி ஆயர்களுடன் இணைந்து நிறைவேற்றுவார்.
இச்சனிக்கிழமை முடிய பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் கர்தினால் Filoni, நவம்பர் 11 வருகிற ஞாயிறன்று வத்திக்கான் திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


5. நீதிக்கான ஏக்கமே ஆசிய மக்களிடம் மிகப்பெரும் ஒன்றாக உள்ளது

நவ.05,2012. நீதிக்கான ஏக்கமே ஆசிய மக்களிடம் மிகப்பெரும் ஒன்றாக உள்ளது என இந்தியாவில் மாணவர்களுக்காக உழைக்கும் கிறிஸ்தவ இயக்கம் ஒன்று அறிவித்துள்ளது.
பெங்களூருவில் இடம்பெற்ற மூன்று நாள் தேசிய கருத்தரங்கின் இறுதியில் செய்தி வெளியிட்ட இந்திய கிறிஸ்தவ மாணவர் இயக்கம், மாணவர்களின் அர்ப்பணம் ஒவ்வொன்றும் வாழ்வு, நீதி மற்றும் அமைதியின் கடவுளை வெளிப்படுத்தும் இயேசுவின் படிப்பினைகளைச் சுற்றி அமையவேண்டும் என்ற உறுதிப்பாட்டை அதில் தெரிவித்துள்ளது.
அநீதி எந்த வடிவத்தில் இருந்தாலும் அது வாழ்வின் கடவுளுக்கு எதிராகச் செல்வதேயாகும் என இக்கருத்தரங்கில் பங்குபெற்ற மாணவர்கள் தெரிவித்தனர். கிறிஸ்தவ மாணவர் இயக்கம் தங்கள் பணிகளை கிறிஸ்தவர்களூக்கு என மட்டும் சுருக்கிக் கொள்ளாமல் அனைத்து மதத்தினருக்கும் சேவையாற்றுவதாக இருக்கவேண்ண்டும் எனவும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டோர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.


6. வெனெசுவேலா நாட்டில் அரசியல் கைதிகள் நடுநிலையுடன் தீர்மானிக்கப்பட வேண்டும் - கர்தினால் Savino

நவ.05,2012. வெனெசுவேலா நாட்டில் அரசியல் காரணங்களுக்காகச் சிறைபடுத்தப்பட்டுள்லோர் சார்ந்த வழக்குகள்  முற்சார்பு எண்ணங்கள் இன்றி, நடுநிலையுடன் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று Caracas பேராயர் கர்தினால் Jorge Urosa Savino, கூறியுள்ளார்.
திருத்தந்தை அறிவித்திருக்கும் நம்பிக்கை ஆண்டு துவக்கத் திருப்பலியை வெனெசுவேலா தலைநகரில் உள்ள பேராலயத்தில் இச்சனிக்கிழமையன்று நிறைவேற்றிய கர்தினால் Savino, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
பொது மன்னிப்பைக் கோரும் அனைத்துலக Amnesty அமைப்புடன் இணைந்து, அரசியல் கைதிகளுக்காக தானும் அரசிடம் விண்ணப்பம் செய்வதாக கர்தினால் கூறினார்.
திருத்தந்தை அறிவித்திருக்கும் நம்பிக்கை ஆண்டின் காலத்தில் ven நாட்டில் அண்மைக் காலங்களில் கொலைக் குற்றங்கள் கூடுதலாகி வருவதற்குத் தன் ஆழ்ந்த வருத்தத்தையும் Caracas பேராயர் கர்தினால் Savino தெரிவித்தார்.


7. அச்சுறுத்தலுக்குப்பின் இந்தோனேசிய கிறிஸ்தவ கோவில் செபவழிபாடு இரத்து

நவ.05,2012. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவிலுள்ள கிறிஸ்தவக் கோவில் ஒன்றில் இடம்பெறவிருந்த செபவழிபாட்டைத் தடைச்செய்துள்ளனர் அப்பகுதி இஸ்லாமிய ஆர்ப்பாட்டக்காரர்கள்.
மேற்கு ஜாவாவின் பெகாசி மாவட்டத்தின் Protestant கிறிஸ்தவ சபை கோவிலுக்கு முன் வந்த சில இஸ்லாமிய ஆர்ப்பாட்டக்காரர்கள், ஒலிபெருக்கிகள் மூலம் செபவழிபாடு தொடரமுடியாமல் இடையூறு செய்ததோடு, கிறிஸ்தவர்களை அச்சுறுத்தியும் உள்ளனர். வன்முறைகள் இடம்பெறாமல் தடுக்க வேண்டுமெனில் கிறிஸ்தவ வழிபாடுகள் நிறுத்தப்படவேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியது குறித்து தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார் கிறிஸ்தவ சபை அருள்தந்தை Palti Panjaitan.


8. புனித பூமியில் உள்ள புனித கல்லறைக் கோவில் நிதி நெருக்கடி காரணமாக மூடப்படும் ஆபத்து

நவ.05,2012. புனித பூமியில் உள்ள புனிதக் கல்லறைக் கோவில் நிதி நெருக்கடி காரணமாக மூடப்பட வேண்டியிருக்கும் என்று கோவில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புனிதக் கல்லறைக் கோவிலில் பயன்படுத்தப்பட்டு வரும் தண்ணீர் வசதிக்கு, கோவில் நிர்வாகம் கடந்த 15 ஆண்டுகள் பணம் செலுத்தவில்லை என்ற காரணம் காட்டி, நிர்வாகத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
தொன்றுதொட்டு, இக்கோவிலின் தண்ணீர் பயன்பாட்டுக்கு வரிகள் செலுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. 1990ம் ஆண்டு தண்ணீர் விநியோகத்தை Hagihon என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டபின், இந்நிறுவனத்திற்குக் கோவில் நிர்வாகம் பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவானது என்றும் சொல்லப்படுகிறது.
கடந்த 15 ஆண்டுகள் இக்கோவில் செலுத்தவேண்டிய தொகை 1.4 மில்லியன் பவுண்டுகள் - அதாவது, 9 கோடியே 80 இலட்சம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கோவிலின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால், அங்கு பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட குருக்கள், 2000க்கும் அதிகமான ஆசிரியர்கள் ஆகியோருக்குத் தரவேண்டிய சம்பளம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


9. தமிழகத்தில் 11.50 இலட்சம் வழக்குகள் நிலுவை,  நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தகவல்

நவ.05,2012. தமிழக நீதிமன்றங்களில், 11 லட்சத்து, 50 ஆயிரத்து, 809 குற்றவியல் சாராத மற்றும் குற்றவியல் சார்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன, என, உச்ச நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா கூறினார்.
தமிழ்நாடு நீதித் துறை ஊழியர் சங்கத்தின் 10வது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, குற்றவியல் சாராத மற்றும் குற்றவியல் சார்ந்த்து என, கடந்த, 2006ல் மொத்தம், எட்டு லட்சத்து, 56 ஆயிரத்து, 809 வழக்குகள் இருந்த நிலையில் தற்போது, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 11 லட்சத்து, 83 ஆயிரத்து, 244ஆக அதிகரித்துள்ளன என்றார்.
மக்கள் நீதித்துறை மீது காட்டும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய நிர்ப்பந்ததில் நாம் இருக்கிறோம் என்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, தமிழகத்தில், மொத்தம் 8,051 நீதிமன்றங்கள் உள்ளன என்பதைக் குறிப்பிட்டு, விஞ்ஞான ரீதியாக ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கேற்ப, நீதித் துறையினர் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...