Monday, 1 October 2012

Catholic News in Tamil - 28/09/12

1. திருத்தந்தை : புனித Gallenனின் நினைவு ஐரோப்பாவில் நற்செய்தி அறிவிப்பின் அவசரத் தேவையைச் சிந்திக்க அழைக்கின்றது

2. ஓர் அமெரிக்க இயேசு சபை அருள்தந்தைக்கும் ஒரு ப்ரெஞ்சு மெய்யியல் பேராசிரியருக்கும் இராட்சிங்கர் விருது 2012

3. பன்னாட்டு அளவில் பாதுகாக்கப்பட்ட மனிதர்களுக்கு எதிரானக் குற்றங்களுக்குத் தண்டனை மற்றும் அவற்றைத் தடை செய்தல் ஒப்பந்தம்

4. மத்திய ஆப்ரிக்க ஆயர்கள் : காங்கோவில் பொது மக்களின் பாதுகாப்புக்கு அனைத்துலகத் தலையீடு தேவை

5. உருகுவாயில் கருக்கலைப்பு சட்டப்படி அங்கீகரிப்பு

6. தாய்வான் கத்தோலிக்கருக்கு அரசு விருது

7. இலங்கைக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி

8. இலங்கை மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும்

9. உரிய பாதுகாப்பில்லாவிட்டால் அணுஉலையை மூடுவோம்" உச்சநீதிமன்றம்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை : புனித Gallenனின் நினைவு ஐரோப்பாவில் நற்செய்தி அறிவிப்பின் அவசரத் தேவையைச் சிந்திக்க அழைக்கின்றது

செப்.28,2012. புனித Gallenனின் நினைவு ஐரோப்பாவில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியதன் அவசரத் தேவையைச் சிந்தித்துப் பார்ப்பதற்கு அழைக்கின்றது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
நற்செய்தி அறிவிப்பைப் புதிய பாணியில் செய்வது குறித்த அனைத்துலக ஆயர் மாமன்றம் தொடங்கவிருக்கும் வேளையில், புனித Gallenனின் நினைவும் அவரது பணியும், ஐரோப்பாவில் விசுவாசத்துடனும் நம்பிக்கையுடனும் நற்செய்தி அறிவிப்பதற்கு அழைக்கின்றன என்றும் கூறினார் திருத்தந்தை.
CCEE என்ற ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு, சுவிட்சர்லாந்து நாட்டு Sankt Gallenல் நடத்திவரும் கூட்டத்திற்குத் திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே வழியாகக் செய்தி அனுப்பிய திருத்தந்தை, ஐரோப்பாவில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டியதன் அவசரத் தேவையை அக்கண்டத்தின் கிறிஸ்தவர்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்குமாறு கேட்டுள்ளார்.
1978ம் ஆண்டிலிருந்து CCEE அமைப்புச் செயலரின் இடமாக இருந்து வரும் Sankt Gallenக்கு, புனித Gallen வந்ததன் 1,400ம் ஆண்டு நினைவாக இவ்வாண்டின் CCEE அமைப்பின் கூட்டம் Sankt Gallenல் நடைபெற்று வருகிறது. 

2. ஓர் அமெரிக்க இயேசு சபை அருள்தந்தைக்கும் ஒரு ப்ரெஞ்சு மெய்யியல் பேராசிரியருக்கும் இராட்சிங்கர் விருது 2012  

செப்.28,2012. இவ்வாண்டுக்கான இராட்சிங்கர் இறையியல் விருது, அமெரிக்க ஐக்கிய நாட்டு இயேசு சபை அருள்தந்தை  Brian E. Daley, ப்ரெஞ்ச் பேராசிரியர் Rémi Brague ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக இவ்வெள்ளியன்று நிருபர் கூட்டத்தில் அறிவித்தார் கர்தினால் கமிலோ ரூயினி.
இறையியலுக்கும் கலாச்சாரத்துக்கும் இடையே தொடர்பை உருவாக்குவதற்கு அயராது உழைப்பவர்க்கென வழங்கப்படும் இவ்விருது, வருகிற அக்டோபர் 20ம் தேதியன்று திருத்தந்தையால் வழங்கப்படும் எனவும், ஜோசப் இராட்சிங்கர் 16ம் பெனடிக்ட்என்ற வத்திக்கான் அமைப்பின் தலைவர் கர்தினால் ரூயினி அறிவித்தார்.
பிரான்சில் 1947ம் ஆண்டு பிறந்த Rémi Brague 4 குழந்தைகளுக்குத் தந்தையாவார். இவர் ஒரு மெய்யியல் பேராசிரியர்.  இயேசு சபை அருள்தந்தை  Brian E. Daley இறையியல் பேராசிரியர்.
நொபெல் இறையியல் விருதுஎன அழைக்கப்படும் இவ்விருது, “ஜோசப் இராட்சிங்கர் – 16ம் பெனடிக்ட்என்ற நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.
நூல்களை வெளியிடுவதிலும் அறிவியல் ஆய்வுகளிலும் சிறப்பாகப் பங்காற்றி வரும் வல்லுனர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இது 87 ஆயிரம் டாலர் ரொக்கப் பரிசைக் கொண்டது. இவ்விருது கடந்த ஆண்டில் முதன்முறையாக வழங்கப்பட்டது.
வருகிற அக்டோபர் 7ம் தேதி முதல் 28ம் தேதி வரை நற்செய்தி அறிவிப்பைப் புதிய பாணியில் செய்வது குறித்த 13வது உலக ஆயர்கள் மாமன்றம்  வத்திக்கானில் நடைபெறவுள்ளது.

3. பன்னாட்டு அளவில் பாதுகாக்கப்பட்ட மனிதர்களுக்கு எதிரானக் குற்றங்களுக்குத் தண்டனை மற்றும் அவற்றைத் தடை செய்தல் ஒப்பந்தம்

செப்.28,2012. தூதரக அதிகாரிகள் உட்பட பன்னாட்டு அளவில் பாதுகாக்கப்பட்ட மனிதர்களுக்கு எதிரானக் குற்றங்களுக்குத் தண்டனை மற்றும் அக்குற்றங்களைத் தடை செய்தல் குறித்த ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 1973ம் ஆண்டின் ஒப்பந்தத்தைத் திருப்பீடம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தைத் திருப்பீடம் ஏற்றுக்கொண்டது குறித்த நிகழ்வு, இப்புதனன்று நியுயார்க் ஐ.நா.தலைமையகத்தில், திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பர்த்தி மற்றும் ஐநா.பொதுச்செயலர் பான் கி மூன் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், தூதரக அதிகாரிகள் உட்பட பன்னாட்டு அளவில் பாதுகாக்கப்பட்ட மனிதர்களுக்கு எதிரானக் குற்றங்களுக்குத் தண்டனை மற்றும் அக்குற்றங்களைத் தடைசெய்யும் நடவடிக்கைகளிலும், அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் செயல்களிலும் திருப்பீடம் ஆதரவாக இருக்கும் என்று தெரியவருகிறது.
வத்திக்கான் நாட்டின் பெயரிலும் அதன் சார்பாகவும் திருப்பீடம் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. ஐ.நா.வில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான 30 நாள்களுக்குப் பின்னர் வத்திக்கானும் திருப்பீடமும் இதனை அமல்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

4. மத்திய ஆப்ரிக்க ஆயர்கள் : காங்கோவில் பொது மக்களின் பாதுகாப்புக்கு அனைத்துலகத் தலையீடு தேவை 

செப்.28,2012. காங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பகுதியில் இடம்பெறும் கடும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதேவேளை, பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு ஆதரவளிப்பதில் அனைத்துலகச் சமுதாயத்தின் தலையீடு தேவை என்று மத்திய ஆப்ரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
கொலைகள், பாலியல் வன்செயல்கள், பல்வேறு ஆயுதம் தாங்கிய குழுக்களில் சிறார் சேர்க்கப்படுதல், மக்களின் கட்டாயப் புலம் பெயர்வு, வரவேற்பில்லாத அகதிகள் முகாம்கள், சட்டத்துக்குப் புறம்பே கனிமவளங்கள் சுரண்டப்படுதல் என காங்கோ சனநாயகக் குடியரசின் தற்போதைய நிலைமைகளையும் ஆயர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அண்மையில் ஆண்டுக் கூட்டத்தை முடித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய ஆப்ரிக்க ஆயர்கள், காங்கோ சனநாயகக் குடியரசில், குறிப்பாக வட கிவு பகுதியில் செயல்பட்டுவரும் எனண்ணற்ற ஆயுதம் தாங்கிய குழுக்களால் நடத்தப்படும் கடும் மனித உரிமை மீறல்கள் குறித்தத் தங்களது கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர்.
காங்கோ சனநாயகக் குடியரசின் வட கிவு பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் மீண்டும் தொடங்கியுள்ள வன்முறையால் குறைந்தது 3 இலட்சத்து 90 ஆயிரம் பேர் நாட்டுக்குள்ளே புலம் பெயர்ந்துள்ளனர் மற்றும் அறுபதாயிரம் பேர் உகாண்டா மற்றும் ருவாண்டா நாடுகளில் புகலிடம் தேடியுள்ளனர். 

5. உருகுவாயில் கருக்கலைப்பு சட்டப்படி அங்கீகரிப்பு
செப்.28,2012. உருகுவாய் நாட்டு காங்கிரஸ் அவையில் கருக்கலைப்பு சட்டமாக  அங்கீகரிக்கப்பட்டுள்ளவேளை, அந்நாட்டு ஆயர்கள் அதற்குத் தங்களது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இச்செவ்வாய் இரவு 14 மணி நேரம் இடம்பெற்ற அமர்வில் 50 பேர் கருக்கலைப்புக்கு ஆதரவாகவும் 49 பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்துள்ளனர்.
இந்த வாக்கெடுப்பு மூலம், ஒரு பெண் கருவுற்ற 12 வாரங்களுக்குள் கருக்கலைப்புச் செய்வதற்குச் சட்டப்படி அனுமதியளிக்கப்படுகிறது.
ஏறக்குறைய 33 இலட்சம் மக்கள் வாழும் தென் அமெரிக்க நாடான உருகுவாயில் ஆண்டுக்கு ஏறக்குறைய முப்பதாயிரம் கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக அரசு-சாரா குழுக்கள் கூறுகின்றன. 

6. தாய்வான் கத்தோலிக்கருக்கு அரசு விருது

செப்.28,2012. தாய்வானில் பொது நலனுக்காக உழைத்துவரும் கத்தோலிக்கரின் அரும்பணியைப் பாராட்டி தாய்பேய் உயர்மறைமாவட்டத்துக்கு விருது அளித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர்.
பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் பல்வேறு மதங்களையும் ஒன்றிணைத்துச் செயல்படுவதில் கத்தோலிக்கர் எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றனர் மற்றும் இவர்களது நடவடிக்கைகள் நாட்டின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தியுள்ளன என்று இவ்விருது வழங்கும் நிகழ்வில் பேசியுள்ளார் பிரதமர் Chén Chōng.
இம்மாதத்தில் தாய்பேய் அரசு அங்கீகரித்துப் பாராட்டியுள்ள பல சமய நிறுவனங்களில் 7, கத்தோலிக்க  நிறுவனங்களாகும்.

7. இலங்கைக்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி

செப்.28,2012. இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் மின்விநியோகத்தின் தரத்தை உயர்த்துவதற்கும், மின்விநியோகம் செய்யும் பகுதிகளின் அளவை அதிகரிக்கவுமென ஆசிய வளர்ச்சி வங்கி அந்நாட்டுக்கு 13 கோடி டாலரைக் கடனாக வழங்கியுள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கியின் இக்கடன் உதவி, இலங்கையின் பிற பகுதிகளிலும் மின்விநியோகத் திறனை மேம்படுத்த உதவும் என்று அவ்வங்கியின் நிர்வாக அமைப்பு அறிவித்தது.
ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியினால் செய்யப்படும் இத்திட்டம் 2016ம் ஆண்டு டிசம்பரில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8. இலங்கை மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும்

செப்.28,2012. இலங்கையில் இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் இடையில் நடந்த இறுதிப் போரின்போது நடந்ததாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் போன்றவற்றுக்கு உரியவர்களைப் பொறுப்பாக்குவது மற்றும் போருக்குப்பிறகு நல்லிணக்கத்தை உருவாக்குவது ஆகியவை தொடர்பில் இலங்கை அரசு மீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் செலுத்தவேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று கோரிக்கை விடுத்திருக்கிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹில்லாரி கிளிண்டனுக்கு 31 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள மனுவில் இவ்வாறு கேட்கப்பட்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு உரியவர்களைப் பொறுப்பாக்குவதிலும், போர் முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் அங்கே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் இலங்கை அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை;  மாறாக காலம் கடத்துவதற்கான காரணங்களை மட்டுமே அது தேடிக்கொண்டிருக்கிறது; எனவே, அமெரிக்கா தொடர்ந்து இலங்கை மீது அழுத்தம் செலுத்தவேண்டும் என்று அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

9. உரிய பாதுகாப்பில்லாவிட்டால் அணுஉலையை மூடுவோம்" உச்சநீதிமன்றம்

செப்.28,2012.  கூடங்குளம் அணுமின் நிலையத்தில், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஏற்பாடுகள் திருப்தியாக இல்லாவிட்டால், அதன் உரிமத்தை இரத்து செய்வதற்கும் தயங்கமாட்டோம் என்று இந்திய உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்கு எவ்வளவு கோடி முதலீடு செய்திருந்தாலும் கவலையில்லை, மக்களின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல்தான் முக்கியமானது, பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்தத் தவறினால் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட நேரிடும் என்றும் இந்திய மத்திய அரசை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரித்தனர்.
அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் அளித்த 17 பரிந்துரைகளில் இன்னும் 11 பரி்ந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை, முறையான சுற்றுச்சூழல் அனுமதியில்லை என்ற அம்சங்களின் அடிப்படையிலும், அணு உலை விபத்து ஏற்பட்டால் வழங்கப்பட வேண்டிய இழப்பீடு தொடர்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கெனவே, சென்னை உயர்நீதிமன்றம் அந்த அணுமின் நிலையத்துக்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கியது என்று நீதிமன்றம் ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்குப் பதிலளிக்க மேலும் ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை அக்டோபர் 4ம் தேதி நடைபெற உள்ளது.
இன்னும், பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்ட அளவின்படி காவிரிநதி நீரைத் தமிழகத்துக்குத் திறந்து விடுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...