1. அகதிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு பேராயர் தொமாசி ஐ.நா.வில் வலியுறுத்தல்
2. சிரியாவில் கலாச்சாரப் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படுவதற்கு அழைப்பு
3. கர்தினால் சாரா : கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்கள் கத்தோலிக்கத் தனித்தன்மையைக் கொண்டிருக்க அழைப்பு
4. அமெரிக்க அரசும் பிறரன்பு நிறுவனங்களும் ஏழ்மையை அகற்றுவதற்கு முயற்சிக்குமாறு நியுயார்க் ஆயர்கள் வேண்டுகோள்
5. கோவா தலத்திருஅவை குறை : அரசில் காந்தியக் கொள்கைகள் மதிக்கப்படுவதில்லை
6. உலகில் ஆயுதங்கள் மௌனப்படுத்தப்படுமாறு முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமெயோ அழைப்பு
7. இலங்கையில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் துவக்கம்
8. இந்தியாவில் 2011ல் 1,35,000 தற்கொலைகள்
9. ஆஸ்திரேலியப் பவழப்பாறைத் தடுப்புக்கு ஆபத்து
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. அகதிகளுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு பேராயர் தொமாசி ஐ.நா.வில் வலியுறுத்தல்
அக்.03,2012. உலகில் தொடங்கியுள்ள அண்மை மோதல்கள் புதிதாக அகதிகளையும் புலம்பெயர்வோரையும் உருவாக்கியுள்ளவேளை, அகதிகளுக்கும்
நாடுகளுக்குள்ளே புலம் பெயர்ந்திருப்பவர்களுக்கும் தோழமையுணர்வு
காட்டப்பட்டு அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படுமாறு பேராயர் சில்வானோ
தொமாசி ஐ.நா.வில் கேட்டுக் கொண்டார்.
UNHCR என்ற ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம் சுவிட்சர்லாந்து நாட்டு ஜெனீவாவில் நடத்தும் 63வது அமர்வில் இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்களுக்கானத் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் தொமாசி இவ்வாறு கூறினார்.
பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு பயனற்ற வன்முறைகள் பயன்படுத்தப்படுவதால், நூறாயிரக்கணக்கான மக்களின், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறாரின் துன்பங்களில் இவற்றின் விளைவுகள் தெளிவாகத் தெரிகின்றன என்றும் பேராயர் கூறினார்.
ஊடகங்களும் அரசியல்ரீதியாக ஆர்வத்தைத் தூண்டும் செய்திகளையே வெளியிட்டு, பெருமளவில் புலம் பெயரும் மக்கள் குறித்துப் பொது மக்களுக்குச் சொல்லத் தவறுகின்றன என்றுரைத்த பேராயர் தொமாசி, அகதிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுமாறு ஐ.நா.வைக் கேட்டுக் கொண்டார்.
2. சிரியாவில் கலாச்சாரப் பாரம்பரிய நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படுவதற்கு அழைப்பு
அக்.03,2012.
சிரியாவிலுள்ள உலக மனிதகுல மற்றும் கலாச்சாரப் பாரம்பரிய
நினைவுச்சின்னங்கள் பாதுகாக்கப்படுவதற்குப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு
அழைப்பு விடுத்துள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.
அலெப்போ
நகரின் வரலாற்று சிறப்புமிக்க மத்தியகாலங்களைச் சேர்ந்த சந்தைகள்
குண்டுவெடிப்பில் அழிக்கப்பட்டுள்ளதையடுத்து சிரியாவின் பல்வேறு கிறிஸ்தவ
சபைகளின் தலைவர்கள், ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனமான யுனெஸ்கோவுக்கும் திருப்பீட கீழைரீதி பேராயத்துக்கும், திருப்பீட கலாச்சார அவைக்கும் விண்ணப்பங்களை விடுத்துள்ளனர்.
சிரியாவின் இராணுவத்துக்கும் எதிர்தரப்பு புரட்சியாளர்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் கடும் சண்டையில், அந்நாட்டின்
வணிகத் தலைநகரமான அலெப்போவில் இப்புதனன்று மூன்று வாகனவெடிகுண்டுத்
தாக்குதல்களில் குறைந்தது 27 பேர் இறந்துள்ளனர் மற்றும் 72 பேர்
படுகாயமடைந்துள்ளனர்.
அலெப்போவின் பழைய நகர்ப் பகுதியிலுள்ள Palmyra, Apamea போன்ற வரலாற்று மையங்களும், அருங்காட்சியகங்களும் தாக்குதல்களில் சிக்கியுள்ளன என்றுரைக்கும் அத்தலைவர்களின் விண்ணப்ப அறிக்கை, யூதமதத் தொழுகைக்கூடங்கள், ஆலயங்கள், மசூதிகள், பழங்காலத் துறவு இல்லங்கள், திருத்தலங்கள் போன்ற மதம் சார்ந்த இடங்கள் இராணுவத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும்,
சிரியாவில் இடம்பெறும் சண்டையால் அந்நாட்டிலிருந்து மூன்று இலட்சத்துக்கு
மேற்பட்ட மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுள்ளனர் என்று
ஐ.நா.வின் அகதிகள் நிறுவனம் கூறியது.
3. கர்தினால் சாரா : கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்கள் கத்தோலிக்கத் தனித்தன்மையைக் கொண்டிருக்க அழைப்பு
அக்.03,2012. கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்கள் கத்தோலிக்கத் தனித்தன்மையைக் கொண்டிருக்குமாறு திருப்பீட Cor Unum பிறரன்பு அவையின் தலைவர் கர்தினால் இராபெர்ட் சாரா கேட்டுக்கொண்டார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்கள் நடத்திய ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய கர்தினால் சாரா, முந்தைய
தலைமுறைகள் விட்டுச் சென்ற மரபுகள் அச்சுறுத்தப்படும் சவால்களைக்
கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்கள் உட்பட அமெரிக்கத் திருஅவை இக்காலத்தில்
எதிர்கொள்கின்றது என்று கூறினார்.
பொதுவாழ்வில் மதத்தை ஒதுக்கி வைக்கின்ற ஒரு தீவிர உலகாயுதப்போக்கைக் கொண்டுள்ள காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்றுரைத்த அவர், கடவுள் மற்றும் அவரது சட்டங்களில் மனிதர் தங்களது சொந்தக் கருத்துக்கள், தேவைகள், எண்ணங்கள் மற்றும் இன்பங்களைப் புகுத்துவதற்கு இன்றைய உலகாயுதப்போக்கு முனைகின்றது என்றும் தெரிவித்தார்.
உலகாயுதப்போக்கால் பாதிக்கப்படுவதில் கத்தோலிக்கப் பிறரன்பு நிறுவனங்களும் விதிவிலக்கு அல்ல என்பதால், அவைகள் தாங்கள் பாரம்பரியமாகப் பெற்றுள்ள கத்தோலிக்கத் தனித்தன்மையைக் காத்துக்கொள்ளுமாறு பரிந்துரைத்தார் கர்தினால் சாரா.
4. அமெரிக்க அரசும் பிறரன்பு நிறுவனங்களும் ஏழ்மையை அகற்றுவதற்கு முயற்சிக்குமாறு நியுயார்க் ஆயர்கள் வேண்டுகோள்
அக்.03,2012.
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசும் அந்நாட்டின் அரசு-சாரா பிறரன்பு
நிறுவனங்களும் அந்நாட்டில் நிலவும் கடும் ஏழ்மையை அகற்றுவதற்குத் தொடர்ந்து
முயற்சிக்குமாறும், இம்முயற்சியில் ஏழைகளின் மனித மாண்பு மதிக்கப்படுமாறும் நியுயார்க் தலத்திருஅவைத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நியுயார்க் கர்தினால் திமோத்தி டோலன், புரூக்ளின் ஆயர் நிக்கோலாஸ் திமார்சியோ ஆகிய இருவரும் புனித வின்சென்ட் தெ பவுல் விழாவையொட்டி இணைந்து வெளியிட்ட அறிக்கையில், ஏழைகள் தங்கள் வாழ்க்கையின் அடிப்படை வசதிகளைப் பெறுவதில் பிறரன்பு நிறுவனங்கள் கவனமுடன் செயல்படுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
17ம் நூற்றாண்டுப் புனிதராகிய வின்சென்ட் தெ பவுல், ஏழைகள்மீது மிகுந்த கவனம் செலுத்தியவர். அவர் பெயரால் திருஅவையில் தொடர்ந்து பிறரன்புப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
5. கோவா தலத்திருஅவை குறை : அரசில் காந்தியக் கொள்கைகள் மதிக்கப்படுவதில்லை
அக்.03,2012.
இந்தியாவின் கோவா மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும்
மகாத்மா காந்தியின் கருத்துக்கோட்பாடுகளைப் பின்னோக்கித் தள்ளுகின்றனர்
என்று கோவா தலத்திருஅவை குறை கூறியது.
இச்செவ்வாயன்று
மகாத்மா காந்தியின் 143வது பிறந்தநாள் சிறப்பிக்கப்பட்ட நிகழ்ச்சியில்
பேசிய கோவா மறைமாவட்டத்தின் சமூகநீதி மற்றும் அமைதிப் பணிக்குழுவின் செயலர்
அருள்பணி சாவியோ ஃபெர்னாடெஸ், கிராமப்
பஞ்சாயத்துக்கள் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர்களால் அநீதியான முறையில்
தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன எனக் கூறினார்.
பாரதிய
ஜனதா கட்சியின் தலைமையில் கோவா மாநிலத்தை ஆளும் கூட்டணி அரசு
அதிகாரப்பகிர்வுக் கொள்கையைப் பின்பற்றுவதில்லை என்றும் அக்குரு கூறினார்.
6. உலகில் ஆயுதங்கள் மௌனப்படுத்தப்படுமாறு முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமெயோ அழைப்பு
அக்.03,2012.
உலகில் ஆயுதங்கள் மௌனப்படுத்தப்படுமாறு கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ
ஒன்றிப்பு முதுபெரும் தலைவர் முதலாம் பர்த்தலோமெயோ இப்புதனன்று வெளியிட்ட
அறிக்கை அழைப்பு விடுக்கிறது.
மத வேறுபாடுகளை மதிக்கவும் வன்முறையை நிறுத்தவும் கேட்டுக் கொண்ட முதுபெரும் தலைவர் பர்த்தலோமெயோ, மனித சமுதாயம் ஒரு குழப்பமான மற்றும் உறுதியற்ற தன்மையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ளார்.
சமய முற்சார்பு எண்ணங்கள் அல்லது சமயத்தின் பெயரால் வன்முறையில் இறங்கும்போது, காழ்ப்புணர்வு, வெறுப்பு, நம்பிக்கையின்மை
ஆகிய சூழல்களை உருவாக்கி நாம் நமது வாழ்வையும் நமது விசுவாசத்தையும்
ஆபத்தில் வைக்கிறோம் என்றும் முதுபெரும் தலைவரின் அறிக்கை கூறுகிறது.
கடந்த
சில வாரங்களாக உலகில் இடம்பெற்றுள்ள வன்முறைகளைப் பார்க்கும்போது மனித
சமுதாயத்தின் அமைதியும் உறுதியான தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளன, எனவே உலகில் ஆயுதங்கள் மௌனப்படுத்தப்படுமாறு வலியுறுத்தியுள்ளார் கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும் தலைவர்.
7. இலங்கையில் இந்திய வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் துவக்கம்
அக்.03,2012. இலங்கையில் போர் இடம்பெற்ற வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இந்திய அரசின் நிதியுதவியில் ஐம்பதாயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் வட மாநிலத்தில் மன்னார் உட்பட ஐந்து மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளன.
மகாத்மா
காந்தியின் 143வது பிறந்தநாளாகிய இச்செவ்வாயன்று மகாத்மாவின் சிலைக்கு
மலர்மாலைகள் சூட்டி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் பொருளாதார முன்னேற்ற
அமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக் கே.காந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய இலங்கைக்கான இந்தியத் தூதர் அசோக், இரண்டாம் கட்ட வீடமைப்பில் 43 ஆயிரம் வீடுகள் கட்டப்படவுள்ளதாக அறிவித்தார். மேலும், இத்திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளுக்கான காசோலையையும் வழங்கினார்.
50 ஆயிரம் வீடுகள் கட்டும் இந்தியத் திட்டத்தின் முதற்கட்டமாக, ஆயிரம் வீடுகள் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இரண்டாம் கட்டத்தில் வடமாநிலத்தில் 40 ஆயிரம் வீடுகளும், கிழக்கு மாநிலத்தில் மூவாயிரம் வீடுகளும் கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாக இந்தியத் தூதர் அசோக் மேலும் கூறினார்.
ஒவ்வொரு
வீட்டுக்கும் ஐந்தரை இலட்சம் ரூபாய் நிதியுதவி அவ்வீட்டைப் பெறுபவரின்
வங்கிக் கணக்கில் நான்கு கட்டங்களில் நேரடியாகச் செலுத்தப்படவுள்ளது.
மேலும், முதற்கட்டமாக குடும்பம் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் 1,500 குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாக இந்தியத் தூதர் அந்நிகழ்வில் தெரிவித்தார்.
8. இந்தியாவில் 2011ல் 1,35,000 தற்கொலைகள்
அக்.03,2012. இந்தியாவில் 2011ம் ஆண்டில் ஒரு இலட்சத்து 35 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர், இவ்வெண்ணிக்கையில் மேற்குவங்காளம் முதலிடத்தில் உள்ளது என அரசு வெளியிட்ட அண்மை புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இவ்வெண்ணிக்கையில் 1.7 விழுக்காட்டுக்கு வறுமையும், 24.3 விழுக்காட்டுக்கு குடும்பப் பிரச்சனைகளும், 19.6 விழுக்காட்டுக்கு நோயும் காரணங்களாகச் சொல்லப்படுகின்றன.
யூனியன் பகுதிகளில் டில்லி இதில் முதலிடத்தில் உள்ளது.
மேலும், இந்தியாவின் பல பகுதிகளைச் சேர்ந்த ஏறக்குறைய அறுபதாயிரம் நிலமற்ற ஏழை மக்கள் புதுடெல்லிக்கு நடைப்பயணம் ஒன்றை மேற்கொண்டனர்.
2011ம்
ஆண்டில் இதேமாதிரியான நடைப்பயணம் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கப்பட்டது.
எண்பதாயிரம் கிலோ மீட்டர் தூரம் கொண்டிருந்த அந்த நடைப்பயணத்தின்போது 352
மாவட்டங்களில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
9. ஆஸ்திரேலியப் பவழப்பாறைத் தடுப்புக்கு ஆபத்து
அக்.03,2012. ஆஸ்திரேலியாவின் வடகிழக்குக் கடற்பரப்பில் இருக்கும் "பெரும் பவழப்பாறைத் தடுப்பு" என்ற இயற்கையான அமைப்பு இன்னும் 30 ஆண்டுகளில் அழிந்துவிடும் ஆபத்தை எதிர்கொள்வதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தப் பவழப்பாறைத் தடுப்பு, 1985ம் ஆண்டிலிருந்து அதன் பவழப்பாறைகளில் பாதியை இழந்துவிட்டது என்று அவ்வாய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த
பவழப்பாறைத் தடுப்பு இன்னும் பத்து ஆண்டுகளில் அதன் பவழப்பாறை வளத்தில்
கால்பங்குக்கும் குறைவான அளவையே பெற்றிருக்கும் என்றும் அவர்கள்
கூறுகின்றனர்.
உலகின்
மிகப்பெரும் பவழப்பாறைத் தொடரான இந்த அமைப்பிற்கு ஏற்பட்டுவரும் சேதத்தின்
வேகம் 2006ம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாகவும் ஆஸ்திரேலிய
கடற்கல்விக் கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.
மிகவும் கடுமையான புயற்காற்றுகள், நட்சத்திர மீன்களின் தாக்குதல்கள் ஆகியவற்றாலேயே பெரும்பாலான சேதம் விளைந்திருப்பதாகக் கூறும் இந்த ஆய்வு, கடல் வெப்பநிலை அதிகரித்திருப்பதும் இந்த பவழப்பாறைகள் அரிக்கப்பட ஒரு காரணமாக இருந்திருப்பதாகக் கூறுகிறது.
No comments:
Post a Comment