Sunday, 28 October 2012

Catholic News in Tamil - 25/10/12

1. சைப்ரஸ் நாட்டுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

2. சீன ஆயர்களுக்கு 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் அனுப்பியுள்ள கடிதம்
3. புதிய கர்தினால் குறித்து உலகெங்கும் வாழும் சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கர்கள் மகிழ்வு

4. அடுத்த ஆண்டிற்குள் எகிப்து நாட்டில் கத்தோலிக்கத் தொலைகாட்சி நிலையம்
5. Skype எனப்படும் கணணித் தொடர்பின் வழியே செபமாலை செபிக்கும் குழுக்கள்

6. புனித பூமியில் உள்ள இயேசு பிறப்பு பேராலயத்திற்கு பிரான்ஸ் நாடு 200000 யூரோக்கள் நிதி உதவி

7. நமது வாழ்நாட்களுக்குள் உலகிலிருந்து பசியை முற்றிலும் ஒழிக்க உறுதி எடுக்க வேண்டும் - FAOவின் இயக்குனர்

8. அக்டோபர் 24 கடைபிடிக்கப்பட்ட ஐ.நா. நாளையொட்டி ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்ட செய்தி

------------------------------------------------------------------------------------------------------

1. சைப்ரஸ் நாட்டுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

அக்.25,2012. இவ்வியாழன் காலை சைப்ரஸ் நாட்டுத் தலைவர் Demetris Christofias திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
திருப்பீடத்திற்கும், சைப்ரஸ் நாட்டுக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவைக் குறித்து தான் மகிழ்வதாக இச்சந்திப்பின்போது தெரிவித்தார் திருத்தந்தை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பினை சைப்ரஸ் நாடு தற்போது வகித்து வருவதால், ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பல்வேறு சவால்கள் குறித்து இச்சந்திப்பின்போது பேசப்பட்டது.
மேலும், உலக நாடுகளின் முயற்சிகளால் மத்தியகிழக்குப் பகுதியில் நிலையான அமைதி உருவாகும் வழிகளும் இச்சந்திப்பில் பேசப்பட்டன.
இச்சந்திப்பிற்குப் பின், சைப்ரஸ் அரசுத் தலைவர் Christofias, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே மற்றும் நாடுகளுடனான உறவுகள் அவையின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.


2. சீன ஆயர்களுக்கு 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் அனுப்பியுள்ள கடிதம்

சீனாவில் வாழும் கிறிஸ்தவர்களின் செபங்கள், அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள், மகிழ்வுகள் அனைத்தையும் இறைவன் கண்ணோக்குகிறார், அவர்களின் நம்பிக்கை ஏனைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை வளர்க்கிறது என்று 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தந்தையர் கூறியுள்ளனர்.
வத்திக்கானில் தற்போது நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு சீனாவிலிருந்து வர இயலாத ஆயர்களின் சார்பில் Fengxiang மறைமாவட்ட ஆயர் Lucas Li Jingfeng, திருத்தந்தைக்கும், மாமன்றத் தந்தையருக்கும் அனுப்பியிருந்த ஒரு கடிதத்திற்கு இச்செவ்வாயன்று பதில் அனுப்பப்பட்டுள்ளது.
சீன மக்களின் சார்பாக, தாய்வான், ஹாங்காங் ஆகிய பகுதிகளிலிருந்து ஆயர்கள் மாமன்றத்தில் இடம் பெற்று வருகின்றனர் என்பதை சுட்டிக்காட்டும் இந்தப் பதிலுரையில், வருங்காலத்தில் நடைபெறும் மாமன்றங்களில் சீனாவிலிருந்தும் ஆயர்கள் கலந்துகொள்ளும் அருளை இறைவன் வழங்குவார் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


3. புதிய கர்தினால் குறித்து உலகெங்கும் வாழும் சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கர்கள் மகிழ்வு

அக்.25,2012. சீரோ மலங்கரா ரீதி திருஅவைக்கு இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று திருவள்ளா உயர்மறைமாவட்டப் பேராயர் Thomas Mar Coorilos கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று அறிவித்த ஆறு புதிய கர்தினால்களில், இந்திய சீரோ மலங்கரா ரீதி தலைவரான உயர் பேராயர் Catholicos Baselios Mar Cleemisம் ஒருவர்.
இச்செய்தியை Pattomல் உள்ள புனித மரியன்னை பேராலயத்தில் இப்புதன் மாலை அறிவித்த பேராயர் Mar Coorilos, பேராயர் Mar Cleemis அவர்களின் அயராத உழைப்பிற்கு கிடைத்த ஒரு தக்க பரிசு இது என்று கூறினார்.
53 வயதே நிரம்பிய பேராயர் Mar Cleemis, தற்போதைய கர்தினால்கள் குழுவில் மிகவும் இளையவர் என்றும், சீரோ மலங்கரா ரீதியில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள கர்தினால் என்றும் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகெங்கும் வாழும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கர்கள் மகிழ்வுடன் இந்தச் செய்தியை வரவேற்றனர் என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.


4. அடுத்த ஆண்டிற்குள் எகிப்து நாட்டில் கத்தோலிக்கத் தொலைகாட்சி நிலையம்

அக்.25,2012. அமைதி என்ற பொருள் கொண்ட 'Salam' என்ற பெயரில் எகிப்து நாட்டில் கத்தோலிக்கத் தொலைகாட்சி நிலையம் அடுத்த ஆண்டிற்குள் இயங்க ஆரம்பிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Alexandriaவின் அப்போஸ்தலிக்க நிர்வாகி, ஆயர் Adel Zaki இது குறித்து Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், எகிப்தில் இயங்கிவரும் ஏழு கத்தோலிக்க ரீதியினரின் ஒப்புதலுடன் இந்தத் தொலைகாட்சி நிலையம் இயங்கும் என்று கூறினார்.
இத்தாலி, ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடு ஆகிய நாடுகளில் உள்ள ஆயர் பேரவைகள் வழங்கும் நிதி உதவியுடன் ஆரம்பமாகவிருக்கும் இத்தொலைக்காட்சி நிலையம் உள்நாட்டு கத்தோலிக்கர்களின் ஆதரவுடன் நடைபெறும் என்று எடுத்துரைத்தார்.
காப்டிக் ரீதியினர் மத்தியிலும், ஏனைய கிறிஸ்தவர்கள் மத்தியிலும் ஊடகங்கள் வளர்ந்துள்ள வேளையில், தற்போது நிறுவப்படவிருக்கும் 'Salam' தொலைக்காட்சி நிலையம் கத்தோலிக்கப் பார்வையை எகிப்தில் நிலைநிறுத்தும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார் ஆயர் Zaki.


5. Skype எனப்படும் கணணித் தொடர்பின் வழியே செபமாலை செபிக்கும் குழுக்கள்

அக்.25,2012. Skype எனப்படும் கணணித் தொடர்பின் வழியே செபமாலை செபிக்கும் குழுக்கள் அண்மையில் உலகில் துவக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட நேரத்தில் Skype வசதி கொண்டவர்கள் 8 முதல் 10 பேர் என்ற அளவில் கணணி வழியே தொடர்பு கொண்டு, செபமாலையை செபிக்கின்றனர் என்று இவ்வசதியை ஒருங்கிணைக்கும் Kinga Sólyomné Székely, ICN கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
செபத்தில் ஈடுபடுவோர் வழியாகவே இவ்வுலகின் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்று அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் கூறியதை விருதுவாக்காகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
'செபமாலையின் திருத்தூதர்' என்று அழைக்கப்படும் மறைந்த அருள்தந்தை Petrusz Pavlicek, செபமாலையின்  மணிகள் ஒரு சேர இணைக்கப்பட்டிருப்பதுபோல, உலகின் வடதுருவம் முதல் தென் துருவம் வரை மக்கள் செபத்தால் இணைவதற்கு செபமாலையே சிறந்த வழி என்று கூறியுள்ளதை நனவாக்க இம்முயற்சி என்று அமைப்பாளர் Székely கூறினார்.
இம்முயற்சியில் ஈடுபட விழைவோர் theholyrosaryprayer@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் மேலும் விவரங்களைப் பெற முடியும்.


6. புனித பூமியில் உள்ள இயேசு பிறப்பு பேராலயத்திற்கு பிரான்ஸ் நாடு 200000 யூரோக்கள் நிதி உதவி

அக்.25,2012. புனித பூமியில் உள்ள இயேசு பிறப்பு பேராலயத்திற்கு பிரான்ஸ் நாடு 200000 யூரோக்கள் நிதி உதவி வழங்கியுள்ளது.
உலகின் மிகப் பழமையான கோவில் என்று கருதப்படும் இயேசு பிறப்புப் பேராலயம் அழியும் ஆபத்துள்ள உலக நினைவுச் சின்னங்களில் ஒன்று என்று UNESCO வால் அறிவிக்கப்பட்ட ஒரு கோவில்.
இக்கோவிலின் கூரைப்பகுதியை சீர் செய்யும் பணிக்கென பிரான்ஸ் பாராளுமன்றம் இந்த நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
புனித பூமியில் உள்ள கோவில்களுக்கும், பிரான்ஸ் நாட்டுக்கும் உள்ள உறைவை வெளிப்படுத்தும் ஓர் அடையாளமே இந்த நிதி உதவி என்று எருசலேமில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதர் Frédéric Desagneaux கூறினார்.


7. நமது வாழ்நாட்களுக்குள் உலகிலிருந்து பசியை முற்றிலும் ஒழிக்க உறுதி எடுக்க வேண்டும் - FAOவின் இயக்குனர்

அக்.25,2012. நமது வாழ்நாட்களுக்குள் உலகிலிருந்து பசியை முற்றிலும் ஒழிக்க அனைத்து நாட்டு அரசுகளும், உணவு உற்பத்தி நிறுவனங்களும் உறுதி எடுக்க வேண்டும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் இயக்குனர் José Graziano da Silva கூறினார்.
Slow Food International என்ற அமைப்பினரால் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் கருத்தரங்கு, இத்தாலியின் Turin நகரில் இவ்வியாழன் முதல் வருகிற திங்கள் முடிய நடைபெறுகிறது. இக்கருத்தரங்கின் துவக்க அமர்வில் உரையாற்றிய Graziano da Silva, பட்டினியால் வாடும் குழந்தைகளைக் காப்பது நமது தலைமுறையினரின் அவசரமான சவால் என்று கூறினார்.
உலகில் 50 கோடி மக்கள் பசியால் வாடும்போது, ஒவ்வோர் ஆண்டும் உலகில் உற்பத்தியாகும் உணவில் மூன்றில் ஒரு பகுதி வீணாக்கப்படுகிறது என்பதை FAO இயக்குனர் சுட்டிக்காட்டினார்.
உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை பூஜ்யமாவது நமது கையில் உள்ளது என்பதை ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் வலியுறுத்திக் கூறினார்.

Slow Food International என்ற அமைப்பில் 130 நாடுகளைச் சேர்ந்த 1,00,000க்கும் அதிகமானோர் உறுப்பினர்களாய் உள்ளனர். இயற்கை சார்ந்த வேளாண்மை முறைகளில் உணவு தயாரிக்கப்படும் முறைகளை இவ்வுறுப்பினர்கள் உலகெங்கும் தெளிவாக்கி வருகின்றனர்.


8. அக்டோபர் 24 கடைபிடிக்கப்பட்ட ஐ.நா. நாளையொட்டி ஐ.நா. பொதுச் செயலர் வெளியிட்ட செய்தி

அக்.25,2012. நாம் வாழும் இன்றைய உலகில் அமைதியைக் குலைக்கும் பல முயற்சிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அமைதியையும், மனித உரிமைகளையும் மீண்டும் நிலைநிறுத்தும் முயற்சிகளும் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
அக்டோபர் 24 இப்புதனன்று கடைபிடிக்கப்பட்ட ஐ.நா. நாளையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா. பொதுச் செயலர், சிறந்ததோர் உலகை உருவாக்க தனி மனிதர்களும், உலக நிறுவனங்களும் இணைந்து உழைக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளார்.
1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி ஐ.நா. அமைப்பின் கொள்கைகள் உலக அரங்கில் உறுதி செய்யப்பட்டதென்பதை நினைவுகூறும் வழியில், 1948ம் ஆண்டிலிருந்து அக்டோபர் 24ம் தேதி ஐ.நா. நாளென்று கடைபிடிக்கப்படுகிறது.
ஐ.நா. என்பது பன்னாட்டு அதிகாரிகள் சந்திக்கும் ஒரு அலுவலகம் மட்டும் அல்ல என்றும், அமைதிக்காக உழைக்கும் வீரர்கள், உடல் நலனை உலகெங்கும் கொண்டு செல்லும் உதவியாளர்கள் என்று பலரையும் உள்ளடக்கியது இந்த அமைப்பு என்றும் பான் கி மூன் தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.
பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நிலவிவரும் தொடர் நெருக்கடிகளைப் பற்றி குறிப்பிட்டுப் பேசிய பான் கி மூன், அங்கு வாழும் மக்களுக்கு கல்வி, நல வாழ்வு அனைத்தும் சமமான முறையில் கிடைப்பதற்கு உலக நாடுகள் அனைத்தும் உழைக்கவேண்டும் என்று எடுத்துரைத்தார்.
ஐ.நா. நாளையொட்டி உலகின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து நியூயார்க்கில் உள்ள ஐ.நா.தலைமையகத்தில் உலக அமைதி என்ற கருத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தினர்.

 

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...